கட்டக்காளை - 8

கட்டக்காளை - 8

குளுந்த காத்தயும், எதமான நெழலையும் குடுக்கிற பெரிய வேப்பமரம், பெருமாளு கோயிலு வாசமின்னாடி கிளவிரிச்சு நிக்கிது.
வேலவெட்டிய முடிச்சுட்டு வார சனம் இங்கதான் தஞ்சம் அடையும். மரத்தடியில ஒக்காந்துக்கிட்டு, ஆளுக்கொரு தெசயில கொம்பான் வெள்ளாடுறதும்... சொட்டாங்கல்லு வெள்ளாடுறதுமின்டு மட்டுமில்லாம ஆம்பள பொம்பள வேத்துமயில்லாம கத பேசிக்கிட்டும் அஞ்சாறு ஆளுக, அங்கென இருக்கும். பெத்துராஜூ வீட்டுக்கு மூணு வீடு தள்ளித்தான், பெருமாளு கோயிலு.
கட்டக்காளை வீட்டுக்கு அடுத்தாப்புடி பெரிய வீடுன்டா… அது, எரமநாயக்கரு வீடுதான். மத்த வீடெல்லாம் தரகம்புல்லு, சோளத்தட்ட, வைக்கப் புல்லுன்டு கெடச்சத வச்சு செவைக்க மேய்ஞ்ச கூரவீடுக தான்.

கெழக்குத் தெருவில நின்டு மேக்காமின்ன பாத்தமின்டா... பெருமாளு கோயிலு வரைக்கும் வருசையா நிக்கிற கூர வீடுக அம்புட்டு ஆசாரமாருக்கும். காத்துக்கும், மழைக்கும் தாக்குப்புடிக்கிறாமாரி கெட்டியா மேஞ்ச கூரைதான்டாலும் எங்கிட்டாச்சும் தீக்... கீ... புடிச்சுச்சு... அம்புட்டுத்தான்; ஊரே எரிஞ்சு போகும்.

இந்த கூரவீடுகளுக்குள்ள ஒண்ணுதான் பெத்துராஜூ வீடும். கூரைக்கி கீழ, காஞ்சு கெடந்த சோளத்தட்டயில கினிக்கட்டிமாயன் பொருத்திப்போட்ட தீ தான், இப்ப கூரையில புடிச்சு எரிஞ்சுக்கிருக்கு…

 “யாத்தே... பெத்துராஜூ வீட்டில தீப்புடிக்கிது...” பெருமாளு கோயிலுக்கிட்ட கொம்பான் வெள்ளாண்டுக்கிருந்த சின்ராஜு சத்தம் போட்டுக்கிட்டே எந்திருச்சு ஓடியார… அங்கெனருந்த மத்தாளுகளும் சேந்து ஓடியாந்தாங்க.

சின்ராஜூ சத்தத்த கேட்டு திரும்பிப்பாத்த கினிங்கட்டி மாயன், ‘நம்ம வச்ச தீ தான்… சிக்குனமின்டா உறுச்சு உப்புக்கண்டம் போட்டுப்புடுவாங்க’ ன்டு பயந்து, கெழக்காமின்ன குண்டோட்டமா ஓடிட்டான்.

நாலு நல்ல மனுஷங்க வாழ்ற ஊருல... காவாலிப்பயலுகளும் இருக்கத்தான் செய்வாங்க. அதுக்காக ஊருக்கு ஒண்ணுன்டா… ஒதுங்கி நின்டு வேடிக்கயா பாக்கமுடியும். உசுரக்குடுக்கிறதுக்கும் ஓசிக்காத சனங்க நெறஞ்சதுதான் ஊரு.

சத்தங்கேட்டு வெளியே வந்த கட்டக்காளைக்குப் பின்னாடியே, பெத்துராஜூம் ஓடியாந்தான். அவன் பொண்டாட்டி பொன்னக்கா “யாத்தே... ஓடியாங்க…. தீப்பிடிக்கதேய்...” ன்டு நெஞ்சிலடிச்சு அழுது சத்தம்போட்டா.

கூரையில புடிச்ச தீப் பொகஞ்சு... ஊருக்கும் மேல கரும்பொகயா வேளியேறி வாரதப்பாத்து காடு கரையில இருந்த சனம், அங்கெனங்கென, அப்பிடியே போட்டுட்டு பதறியடிச்சுக்கு ஓடியாந்துட்டாக.

சுப்பம்மா ஓடிப்போயி தண்ணிச்சாலுல இருந்த பானையத் தூக்கிட்டு வந்து எட்டி ஊத்தி, தீய அமத்திப் பாத்தா... எட்டல. தரையில கெடந்த சோளத்தட்டயில எரிஞ்சுக்கிருந்த தீய, தண்ணிய ஊத்தி அமத்துனா.

வாசத்தளவுக்கு மேல தீப்புடிக்கிது... தோட்டத்துக்குச் செவரு பக்கமிருந்து ஓடியாந்த ஒச்சுக்காளயும், வீரணனும், விரு விருன்டு கூரையில ஏறினாங்க...

தீ மேக்கொண்டு பரவாமிருக்க, எரிஞ்சுக்கிட்டு இருந்த எடத்துக்கு மேல கூரைய பிரிச்செடுத்து கீழ எறிஞ்சான் ஒச்சுக்காளை.
அங்கென வந்த ஆளுக, சிக்குன வீட்டுக்குள்ள நொழஞ்சு, தண்ணிச்சாலு, குளுதாடின்டு, எங்கெங்க தண்ணி இருந்துச்சோ... அதெல்லாம் மோந்துக்காந்து கொடுக்க, அத வாங்கின வீரணன், ஒச்சுக்காளைகிட்ட கைமாத்திவிட... மொகட்டுல இருந்த மேனிக்கெ தீப்புடிக்கிர ரெக்குப்பாத்து தண்ணிய ஊத்துனான் ஒச்சுக்காளை.

ஆளும்பேருமா சேந்து தீ மேக்கொண்டு பரவமா அமத்திப்பிட்டாங்க.
ஒடம்பு பூரா ஒட்டியிருந்த சாம்பலத் தட்டிவிட்டுக்கிட்டே, கூரயிலிருந்து எறங்கி வந்த ஒச்சுக்காளை, “நல்லவேள... காத்து பெலக்கா வீசிருந்துஞ்சின்டா... ஊரே எரிஞ்சு சாம்பலா போயிருக்குமேப்பா..."ன்டு சொன்னான்.

"கூரையில தீப்பட்டுருமிடான்டு அப்பயே கினிங்கட்டி மாயன்கிட்ட கத்துனேன்… செகுடன்மாரி நின்டுக்கிட்டு, எரமநாயக்கருகிட்ட என்னத்தையோ பேசிக்கிருந்தான்… கத்தக் கத்த தீய வச்சுப்புட்டாங்கப்பா…” சின்ராஜூ கோவத்தில சொல்ல, "அப்படியா சமாச்சாரம், கினிங்கட்டி மாயன் செஞ்ச வேலதானா இது…” நக்கலா சொன்னான் சாவடங்கி. “மனுச மக்கள நிம்மதியா வாழ விடமாட்டுறாங்களே…” ஆளாளுக்கு கோவிக்க ஆரம்பிச்சுட்டாங்க...

“ஊருக்குள்ள ஆளுக இல்லாமப் போயிருந்துச்சுன்டா..! வசங்கெட்டுப் போயிருக்குமப்பா... இந்நேரம் அம்புட்டுக்கூரையும் தீப்புடிச்சு ஊருச்சனம் பூரா தெருவிலதான் திரிஞ்சிருக்கணும்...” ன்டான் சொர்ணமுத்து.

“ஏங்கையில மட்டும் கெடைக்கட்டும்… அவென பிதுக்காம விட்டேன்டா, நாம் பொம்பளயில்ல. வரட்டும்…” பெத்துராஜூ பொண்டாட்டி சுப்பம்மா, ஆங்காரம கத்திக்கிட்டே, பிரிச்சுப் போட்ட கூரச் செத்தயக் கூட்டிக் குமிச்சிக்கிருந்தா.
“சின்னச் சின்ன மழையாப் பேஞ்சு சீலய நனச்சுதுமாரி செஞ்சுபுட்டானே… அவென தட்டிக்கொட்டி வைக்கணுமப்பா…”ன்டு செவனாண்டி சொன்னான்.

தீப்புடிச்ச ஆத்திரத்தில ஆளாளுக்கு மனசுல உள்ளதக் கொட்டிக்கிருந்தாங்க.

“சும்மாருங்கப்பா யேய்… வசங்கட்டத்தனமா ஒருத்தங் செஞ்சுப்பிட்டான்றதுக்காக, ஆளாளுக்கு என்னத்தயாச்சும் தூண்டிவிடாதீங்க… ஆத்திரத்தில எடுக்குற முடிவு அம்புட்டு நல்லதில்ல...” அங்கென இருந்த ஆளுகள அமட்டுனான் கட்டக்காளை.
“வசங்கெட்ட நாய கல்லெடுத்து எறிஞ்சா... நம்மளப் பாத்து கொலச்சுக்கிட்டுத்தான் இருக்கும்... விடுங்கப்பா…”ன்டான்.
“அவனவனுக்கு ஆண்டவென் எழுதி வச்சிருப்பான்… அது வரைக்கும் ஆடுறவென் ஆடிட்டுப் போறான்… எத்தன சண்டியரப் பாத்த ஊரு… இதையும் பாத்திட்டுத்தான இருக்கு” கோவத்திலருந்த ஆளுககிட்ட ஆறுதலான வாத்தையச் சொல்லிக்கிட்டே வீட்டுக்கு கெளம்பினான் கட்டக்காளை.

மேச்சலுக்குப் போன ஆடுமாடுக வேண்டா வெறுப்பா... அசந்து போயி வருது. ‘கச்சாம்மூச்சான்டு’ எப்பயும், தெருவில வெள்ளாண்டுக்குத் திரியிற சின்னது நன்னிகளும் இல்லாம, இன்னிக்கு தெருவே வெறிச்சோடிக்கெடக்கு.

துக்க வீடாருந்தாலும்... தீப்புடிச்ச வீடாருந்தாலும்... சோறுதண்ணி ஆக்காம பட்டினியாக் கெடந்து போகக் கூடாதுன்றதுனால பாதிக்கப்பட்ட வீட்டுக்கு ஒண்ணுன்டா, ‘நாங்களும் தொணையா இருக்கோம்… எதையும் நெனச்சு மனசொடஞ்சு போயிறப்பிடாது’ ன்டு, வீட்டு வீட்டுக்கு சோறு தண்ணி ஆக்கிக் கொண்டாந்து சட்டி சட்டியா, எறக்கி வச்சுப்புடுவாங்க.
இன்னிக்கு பெத்துராஜூ வீட்டிலயும், போதும் போதுமின்றளவுக்கு… சட்டி பொட்டியில சோறு கொழம்ப கொண்டுக்காந்து நெப்பிப்பிட்டாங்க.

எங்கிட்டுத் திரும்புனாலும். கினிங்கட்டி மாயன் தீ வச்சதப்பத்தி தான்… ஊரே பேசுது.

காளியாத்தா கோயிலுக்கு முன்னாடி மொளச்சிருந்த அருகம்புல்லு பஞ்சு மெத்தமாரி படந்து கெடக்கு.
வீரணன், இன்ன ரெண்டு மூணாளுக புல்லுத்தரையில துண்ட விரிச்சு மட்ட மல்லாக்கப் படுத்துக்கெடந்தாங்க, அங்கென வந்த ஒச்சுக்காளைகிட்ட , “ஏண்டா ஒச்சு… நாலு குழி வரப்பு வெட்டுனாக்கூட வலிக்காத ஒடம்பு இம்புட்டு அலுப்புத்தட்டுதே… தீய அமத்துனது அடிச்சுப் போட்டமாரி மேலெல்லாம் வலிக்குதடா…” ன்டு சொன்னான் வீரணன்.

“செத்த நேரம் படுத்துக் கெடந்துட்டு போவோம் வா..” ன்டு அவன் சொல்ல, ஒச்சுக்காளையும் துண்ட விரிச்சு அங்கெனயே படுத்துக்கிட்டான்.

மானத்தப் பாத்துக்கிட்டு படுத்திருந்த ஒச்சுக்காளை, "ஏன்டா வீரணா... நெலாவப் பாத்தயா... கோவத்தில செவந்துருக்கத" ஒச்சுக்காளை கேக்க “ஆமாடா… நேத்துக்கூட பளிச்சின்டுருந்துச்சு… இன்னிக்கு செவந்து போயிருக்கே... ஊருள நல்லது நடக்கிறப்ப பளிச்சின்டும்... கெட்டது நடக்கறப்ப கோவத்தில செவந்தும் போயிருமோ..? நக்கலா சொல்லிச் சிரிச்சிக்கிட்டே ரெண்டு பேரும் படுத்துக் கெடந்தாங்க.

நெலாக்குப் பக்கத்தில கூட்டு வெள்ளியும், செத்த தூரத்தில, தார்க்கம்பு வெள்ளியும் பளிப்பளிப்பின்டு மின்னிக்கிட்டு ஒவ்வொண்ணும் ஆயிரங்கதய சொல்லிக்கிருந்துச்சு.

 “தார்க்கம்பு வெள்ளி அம்புட்டுத்தொலவு வந்தப்பறம் தோட்டத்துக்குப் போவாம்”ன்டு மானத்தப் பாத்து வீரணங்கிட்ட அடையாளம் சொன்னான் ஒச்சுக்காளை.

பெத்துராஜூ வீட்டுக்கு வடக்க இருக்கிற வீடுதான் எரம்மநாயக்கருது. வடக்க தானியந் தவசமடிக்கிற களம். அதொட்டுனாமாரி ஓடக்கரை வரைக்கும் பெரிய வீடாருந்தாலும்… எரம்மநாயக்கரு மனசுமாரி பொந்தும் பொடக்காலுமாத்தான் இருக்கும்.

எரமநாயக்கரு அவுக அய்யா காலத்திலருந்தே, ஆளுகளயும்… சொத்தயும் தாங் கைக்குள்ளயே பழக்கி வச்சுக்கிட்டு அனுபவிச்சுக்கிருக்கான். அதுக்கு கட்டுப்பட்டு அடங்கிப்போன ஆம்பளைக, ‘பெரியவுக மின்னாடி நா…எனத்தக் கேக்கிறது’ன்டு எரமநாயக்கரு மின்னாடி தலநிமிந்து பேசத் தெராணியில்லாம இருந்தாங்க. ஆனா, கலியாணம் முடிச்சு வந்த பொம்பளைக… பங்கப்பிரிச்சு விடச்சொல்லி பலநாளா பொறுமிக்கிட்டுருக்காளுக.

சுப்புக்காளை வீட்டு நாயி வடக்க வல்லு வல்லுன்டு கொலைக்கிற சத்தங்கேட்டு படுத்தமேனிக்கே திரும்பிப் பாத்தான் ஒச்சுக்காளை.

குட்டையா ஒரு ஆளு துப்பட்டியப் பொத்திக்கிட்டு, சாலிமரத்து மறப்பக் கடந்து பம்மிப் பம்மி போயிக்கிருந்தான்.
 வீரணன உசுப்புன ஒச்சுக்காளை, “எலேய்… அங்கனக்குள்ள போறது ஆருன்டு பாரு…”ன்னு சொன்னான்
 “கினிக்கட்டிமாயங் கெனக்காத்தான் இருக்கு. அவென் நடையப் பாருவே…” வீரணன் சொல்ல… துண்ட எடுத்து உருமாக்கட்டிக்கிட்டு கினிங்கட்டிமாயன வேவு பாத்துக்கிட்டே ரெண்டு பேரும் பின்னாலயே போனாங்கெ.

பெரியகருப்பன் வீட்டத்தாண்டிப் போறது நெலாவெளிச்சத்தில நல்லாத் தெரியுது. ‘இந்நேரம் இங்க எதுக்குப் போறான்’ன்டு… ஓசிச்சிக்கிட்டே பின்னாளயே போனாங்க. மாட்டுக்கொட்டத்த தாண்டி களத்து மேட்டுப் பக்கமா போனான் கினிங்கட்டி மாயன்.
நெலா வெளிச்சம் பின்னாள வாரத காட்டிக்குடுத்துப்பிடுமின்டு… ஓடக்குள்ள எறங்கின ஒச்சுக்காளையும்,வீரணனும் கருவேலம்பொதற ஒட்டி, குப்ப மேட்டில மறஞ்சு ஒக்காந்து பாத்தாங்க.

எரம்ம நாயக்கரு கட்டில்ல ஒக்காந்து, தெக்காம திரும்பி வெத்தலயப் போட்டு மென்டு துப்பிக்கிருந்தான்.
 அவென் பக்கத்தில கெடந்த கல்லுல ஒக்காந்தான் கினிக்கட்டிமாயன், ரெண்டு பேரும் குசு குசுன்டு பேசுனாங்க. என்னா பேசுனாங்கன்டு சரியாக் கேக்கலன்டாலும், ‘கட்டக்காளை… கட்டக்காளை’ன்ற வாத்த மட்டும் ஒச்சுக்காளை காதுல விழுந்துக் கிட்டிருந்துச்சு.

கட்டக்காளைக்கு எதுறா, எதயோ நடத்த, எரம்மநாயக்கரு திட்டம் போட்டுருக்கான்… அதுக்கு கையாளா கினிங்கட்டிமாயன் சிக்கிருக்கான்டு தெரிஞ்ச ஒச்சுக்காளைக்கும் வீரணனுக்கும் திடுக்கின்டுருச்சு!

 (தொடரும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in