சமயம் வளர்த்த சான்றோர் 08: ராமலிங்க அடிகளார்  

சமயம் வளர்த்த சான்றோர் 08: ராமலிங்க அடிகளார்  

கே.சுந்தரராமன்
sundararaman.k@hindutamil.co.in

திருவருட் பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் சத்திய ஞான சபையை நிறுவி, அதன் மூலம் கடவுள் ஒருவரே என்ற கருத்தை வலியுறுத்தி வந்தவர். ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று பாடி மனிதநேயம் தழைத்தோங்கச் செய்தவர்.

சிதம்பரத்தை அடுத்த திருமருதூரில் ராமையா பிள்ளை என்பவர் வசித்து வந்தார். இவரது மனைவி சின்னம்மை. இறை பக்தியில் சிறந்து விளங்கிய இருவரும் தினமும் சிவனடியார்களைப் போற்றி அமுது படைத்து வந்தனர். இவர்களுக்கு சபாபதி, பரசுராமர் என்ற இரு மகன்களும், சுந்தராம்பாள், உண்ணாமுலை என்ற இரு மகள்களும் உண்டு.

ஒருசமயம் இவர்கள் இல்லத்துக்கு சிவயோகி ஒருவர் வந்தார். அப்போது சின்னம்மை மட்டும் இருந்ததால், அவரை இன்முகத்தோடு வரவேற்று அமுது படைத்தார். அமுது உண்டு மகிழ்ந்த சிவயோகி, கிளம்பும் சமயத்தில், “விரைவில் உங்களுக்கு சிவாம்சம் பொருந்திய மகன் பிறப்பான்” என்று சின்னம்மையிடம் கூறிச் சென்றார். வெளியே சென்று திரும்பிய ராமையா, சிவயோகி வந்த செய்தி கேட்டு அகமகிழ்ந்தார். மேலும் பிறக்கவிருக்கும் ஆண் மகனை நினைத்து நெகிழ்ந்தார்.

சிவயோகி அருளியபடி சின்னம்மை கருவுற்றார். கிபி 1823-ம் ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. மகிழ்ச்சியில் திளைத்த ராமையா – சின்னம்மை தம்பதி, அந்தக் குழந்தைக்கு ‘ராமலிங்கம்’  என்று பெயரிட்டனர்.  
ராமலிங்கம் தெய்வ அருள் பெற்ற குழந்தையாகவே வளர்ந்தார். அதுவரை வறண்ட பூமியாக இருந்த திருமருதூர் பகுதி, அந்த வருடம் பெய்த மழையால் செழித்து காணப்பட்டது, நீர்நிலைகள் நிரம்பின.  

ஒருசமயம் தில்லை நடராஜர் ஆலயத்துக்கு ராமலிங்கத்தை அழைத்துச் சென்றார் ராமையா. அப்போது அம்பலவாணனுக்கு ஆரத்தி காண்பித்த சமயத்தில், அதுவரை பேசாது இருந்த ராமலிங்கம் வாய்விட்டுச் சிரித்தார். (அம்பலக் கூத்தனின்  ஆனந்த நடனம் கண்டு மகிழ்ந்ததாக பின்னாளில் அவரே கூறியுள்ளார்) குழந்தை சிரித்ததை எண்ணி எண்ணி பெற்றோரும் ஊர் மக்களும் மகிழ்ந்தனர். நிச்சயமாக ராமலிங்கம் தெய்வக் குழந்தைதான் என்று பேரானந்தம் கொண்டனர்.

சில காலம் கழித்து ராமையா இறைவனடி சேர்ந்தார். அவரது மூத்த மகனான சபாபதி, தாய், சகோதர சகோதரிகளை அழைத்துக் கொண்டு பொன்னேரி அருகே உள்ள சின்னகாவனத்துக்கு இடம்பெயர்ந்தார். அங்கு தன் தாய்வழிப் பாட்டியின் பாதுகாப்பில் இருந்து கொண்டே காஞ்சிபுரம் சபாபதி முதலியார் என்பவரிடம் தமிழ் பயின்றார் சபாபதி.  சில காலம் கழித்து, பல மாணவர்களுக்கு தமிழ் பயிற்றுவித்தும் புராண சொற்பொழிவு ஆற்றியும் குடும்பத்தை நடத்தி வந்தார் சபாபதி. பிறகு பாப்பம்மாள் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.  

தனது சகோதரர் ராமலிங்கத்துக்கு வித்யாரம்பம் செய்து வைக்க எண்ணிய சபாபதி, தானே ஆசானாக இருந்து அவருக்கு தமிழ் பயிற்றுவித்தார். கல்வியில் ராமலிங்கத்துக்கு நாட்டம் இல்லை என்பதையும் அவருக்கு கந்த கோட்டம் முருகப் பெருமானின் மீதே நாட்டம் இருப்பதையும் அறிந்து கொண்டார்.  

தனது ஆசான்  சபாபதி முதலியாரிடம் கல்வி பயில ராமலிங்கத்தை அனுப்பினார் சபாபதி. அவரிடமும் சரியாக கல்வி பயிலாத ராமலிங்கம், கந்த கோட்டம் முருகப் பெருமான் மீது பல பாமாலைகளை இயற்றிப் பாடி வந்தார்.  

இதை அறிந்த சபாபதி முதலியார், இனி ராமலிங்கத்துக்கு கல்வி பயிற்றுவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற முடிவுக்கு வந்தார்.  இந்நிலையில், ராமலிங்கம் பள்ளிக்குச் செல்லாமல் சுற்றித் திரிவதை அறிந்த சபாபதி, அவருக்கு பல அறிவுரைகள் வழங்கினார். எதையும் பொருட்படுத்தாத ராமலிங்கத்துக்கு இனி உணவு அளிக்க வேண்டாம் என்று தன் அன்னையிடம் கூறுகிறார் சபாபதி. ராமலிங்கம் பசியால் வாடுவதை நினைத்துக் கூட பார்க்கமுடியாத சின்னம்மை மிகுந்த மனவருத்தத்துக்கு ஆளாகிறார்.
தமையனாரின் கட்டளையையும் தாயின் தவிப்பையும் அறிந்த ராமலிங்கம் அன்று முதல் இல்லம் வருவதை தவிர்த்தார். ராமலிங்கம் பசியோடு இருப்பதைக் கண்டு தவித்த பாப்பம்மாள், அவரை இல்லத்தின் பின் வாசல் வழியாக அழைத்து உணவளித்து வந்தார்.  
ஒருசமயம் ராமையாவின் நினைவு நாள் அன்று அனைத்து உறவினர்களையும் அழைத்து உணவு அளித்தார் சபாபதி. அன்றும் தன் தம்பி உணவு அருந்த வரவில்லையே என்று வருந்தினார் சபாபதி.  

அன்று வழக்கம் போல் பின்வாசல் வழியே உணவருந்த வந்த ராமலிங்கத்திடம், “தமையனாரின் சொல் கேட்டு நடந்திருந்தால், இப்படி பின்வாசல் வழியே வந்து உணவு அருந்தத் தேவையில்லையே” என்று தன் வருத்தத்தைத் தெரிவித்தார் பாப்பம்மாள். இதில் மனம் உடைந்த ராமலிங்கம், இனி தமையனார் சொல் கேட்டு நடப்பதாக உறுதி அளித்தார். மேலும், தான் கல்வி கற்க தனக்கு தனி அறை ஒதுக்கித் தருமாறும் தாயிடம் வேண்டினார்.

அதன்படி அன்று முதல் ராமலிங்கம் கல்வி கற்க, தனி அறை ஒதுக்கித் தரப்படுகிறது. தனது அறையில் ஒரு நிலைக் கண்ணாடியைப் பொருத்தி, பூஜைப் பொருட்கள் வாங்கி வந்து, அதற்கு பூஜை செய்து வணங்கி வந்தார் ராமலிங்கம். மேலும், திருத்தணிகை முருகப் பெருமான் மீது பாமாலைகள் இயற்றி பாடினார். ராமலிங்கத்தின் பக்தியில் மகிழ்ந்த முருகப் பெருமான், கண்ணாடியில் தோன்றி அவருக்கு திருக்காட்சி அளித்தார். முருகப் பெருமானின் தரிசனம் கிடைத்ததில் ஆனந்தம் அடைந்தார் ராமலிங்கம்.

இந்த சூழலில் சென்னை முத்தியாலுப் பேட்டையில் சோமு செட்டியார் இல்லத்தில் சமய சொற்பொழிவு ஆற்ற இருந்த சபாபதிக்கு கடுமையான குளிர் காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் அவர் சொற்பொழிவுக்குச் செல்ல முடியாத சூழல் உண்டானது. இதுகுறித்து சபாபதி, தன் மனைவியிடம் கூற, அவர்,  “ராமலிங்கம் சொற்பொழிவு செய்யட்டுமே” என்று ஆலோசனை கூறுகிறார். மனைவியின் ஆலோசனைக்கு சபாபதி சம்மதம் தெரிவிக்கிறார்.

அதன்படி சோமு செட்டியார் இல்லத்துக்குச் சென்று சொற்பொழிவு ஆற்றுகிறார் ராமலிங்கம். இரண்டொரு பாசுரங்களுக்கு மட்டுமே விளக்கம் அளிக்கும்படி கூறப்பட்டிருந்த நிலையில், ராமலிங்கம் பல மணி நேரம் உரையாற்றினார். சொற்பொழிவைக் கேட்டவர்களும் இவரது உரையில் மெய்மறந்து அமர்ந்திருந்தனர்.

மறுநாள் சோமு செட்டியார், ராமலிங்கத்தின் சொற்பொழிவு குறித்து சபாபதியிடம் கூறினார். இதனால் ராமலிங்கத்தின் சொற்பொழிவைக் கேட்க சபாபதி விருப்பம் கொண்டார். பின்னர் மற்றொரு சமயத்தில் ராமலிங்கம் உரையாற்றுவதை மறைந்திருந்து கேட்டார் சபாபதி. ஒவ்வொரு விஷயத்துக்கும் ஒவ்வொரு விளக்கம் அளித்த ராமலிங்கத்தை ஒரு தெய்வப் பிறவியாகவே நினைக்கத் தொடங்கினார் சபாபதி. தனது அனுபவத்தை இல்லம் திரும்பியதும் பாப்பம்மாளிடம் பகிர்ந்து கொண்டார்.  

இப்படியே நாட்கள் நகர்ந்த நிலையில், திருவொற்றியூர் தியாகேசனையும் வடிவுடையம்மனையும் தரிசித்த ராமலிங்கம், ‘மனுமுறை கண்ட வாசகம்’ என்ற தனது உரை நடை நூலை இயற்றினார். பல புலவர் பெருமக்களுடன் உரையாடி, அவர்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்தார்.

ஒருநாள், தொழுதூர் வேலாயுதம் என்ற தமிழ் வித்வான், ராமலிங்கத்தைச் சந்தித்து, தான் இயற்றிய 100 சிலேடைப் பாடல்களை காட்டி, சங்கப் புலவர்களின் பாடல்கள் என்று கூறினார். அவற்றைப் படித்த ராமலிங்கம், இவை ஒரு கற்றுக்குட்டி இயற்றிய பாடல்களே என்று கூறினார். தனது தவறை உணர்ந்த வேலாயுதம் அன்றுமுதல் ராமலிங்கத்தின் மாணாக்கர் ஆனார்.  
அதன்பிறகு நரசிங்கபுரம் வீராசாமி முதலியார், பொன்னேரி சுந்தரம் பிள்ளை, நிவாச வரதாச்சாரியார், ஞானசுந்தர அய்யர், கிரியாயோக சாதகராய பண்டார ஆறுமுகம் போன்றவர்களும் ராமலிங்கத்தின் சீடர்களாகச் சேர்ந்தனர். அருந்தமிழையும் ஆன்மிகத்தையும் உணர்ந்த ராமலிங்கம், தனது சீடர்களுடன் பல இடங்களுக்குச் சென்று பலரது சந்தேகங்களுக்கு விடை கூறினார்.  நகர வாழ்க்கையை வெறுத்த ராமலிங்கம், மணல்மேடுகள், மலைக் குன்றுகளில் அமர்ந்து இறைவனை நினைத்து தியானத்தில் ஆழ்ந்தார். மறக்காமல் மவுனத்தையும் கடைபிடித்தார்.  

ஒருசமயம், கந்தசாமி முதலியார் என்பவர், தனது வறுமை நீங்க, சில ஜமீன்தார்களுக்கு சீட்டுக் கவி இயற்றித் தருமாறு கூறினார். தனது அருட்பெருஞ்சோதி இறைவனையன்றி வேறு யாரையும் பாட இயலாது என்று மறுப்பு தெரிவித்தார் ராமலிங்கம்.  பொருள் மீது பற்றில்லாத ராமலிங்கம், ஒருசமயம் தனது காதுகளில் உள்ள கடுக்கன் இரண்டையும் திருடன் ஒருவனுக்கு அளித்து கருணை காட்டினார்.  

இந்நிலையில் ராமலிங்கத்துக்கு திருமணம் செய்விக்க, அவரது அன்னையும் தமையனும் விரும்பினர். அவர்களது கட்டாயத்தின் பேரில் தனது சகோதரி உண்ணாமுலையின் மகள் தனக்கோடியை மணந்தார் ராமலிங்கம். ஆனால், இல்லறத்தில் விருப்பம் இல்லாத ராமலிங்கம், திருவாசகத்தை மனமூன்றி படித்துக் கொண்டிருந்தார். கணவரது எண்ணத்தை அறிந்த தனக்கோடி, அவரை அவர் போக்கிலேயே விட்டுவிட்டார்.  

தனது அருட்கடாட்சத்தால் அற்புதங்களையும் நிகழ்த்திக் காட்டிய ராமலிங்கம், ஒருமுறை திருவொற்றியூர் பட்டினத்தடிகள் கோயில் அருகே சென்று கொண்டிருந்த போது ஒரு மூதாட்டியை சந்தித்தார். ஒரு பிடி மணலை தன் கையால் அள்ளி மூதாட்டி கையில் வைத்தார். மூதாட்டியை கண்ணை மூடிக் கொள்ளும்படி பணித்தார். மூதாட்டி கண் திறந்து பார்த்தபோது அவரது கையில் உள்ள மணல் அனைத்தும் சிவலிங்கங்களாக மாறியிருந்தன.  தனது சொற்பொழிவை முடித்துவிட்டு இல்லம் திரும்பும் சமயத்தில், அவரது காலைச் சுற்றிய பாம்பிடம், சிறிதும் அச்சம் இன்றி, போகும்படி பணித்தார். அந்த பாம்பும் ராமலிங்கத்தின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு, அவரை விட்டு அகன்றது.  

தனது சொற்பொழிவுகளில், ஆடம்பரமின்மை, உயிர்வதை செய்யாமை, சாதி வேற்றுமையால் பகைமை பாராட்டாமை குறித்து சொல்லிவந்தார் ராமலிங்கம். பல சமயம் சொற்பொழிவு நிகழ்த்திவிட்டு வரும்போது இல்லத்தின் கதவைத் தட்டி யாரையும் தொந்தரவு செய்ய விரும்பாமல், திண்ணையிலேயே படுத்து உறங்குவார். ஒருசமயம் வடிவுடையம்மனே, அவரது அண்ணியாரைப் போல் வந்து அவருக்கு உணவளித்ததாகவும் தகவல் உண்டு.  

சின்னம்மையின் மறைவுக்குப் பிறகு, புதுச்சேரி, சிதம்பரம், மதுரை உள்ளிட்ட தலங்களுக்குச் சென்று  தரிசித்த ராமலிங்கம், கருங்குழியில் உள்ள வேங்கட ரெட்டியார் என்பவரது இல்லத்தில் தங்கினார். அப்போது எண்ணெய் வைத்துக் கொள்ளும் கலயம் உடைந்ததால், மற்றொரு மண் கலயத்தை வாங்கி வைத்த ரெட்டியாரின் மனைவி, அந்தக் கலயம் பழகுவதற்காக தண்ணீரை நிரப்பியிருந்தார். அது எண்ணெய் என்று நினைத்த ராமலிங்கம் அதை ஊற்றி விளக்கெரித்தபோது அந்த விளக்கும் எரிந்தது.  
கூடலூரில் பிரம்ம சமாஜத்தைச் சேர்ந்தவர்கள், விக்கிரக வழிபாட்டை எதிர்த்துப் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது அவர்களை தன்னருகே அழைத்த ராமலிங்கம், “விக்கிரகம் என்பது விசேஷ இடம். தேவதேகங்கள் என்று கூறலாம். தேவதேகங்களாகிய விக்கிரகங்களின் விதிப்படி பக்தியோடு உபாசனை செய்தால், பிரம்மப் பிரகாசம் எளிதில் வெளிப்பட்டு அனுக்கிரகம் செய்யும்” என்று விக்கிரக வழிபாட்டின் சிறப்பை உணர்த்தினார்.  

மக்கள் பசியின்றி வாழவும், ஜீவகாருண்ய மோட்ச வீட்டின் வழியை அறிந்து கொள்ளவும் உதவும் தருமசாலையை நிறுவ எண்ணிய ராமலிங்கம், தனது விருப்பத்தை தமது அன்பர்களிடம் கூறினார். அவர்களும் அதை மகிழ்வுடன் ஏற்று, தருமசாலை நிறுவ பல இடங்களைத் தேர்ந்தெடுத்துக் கூறினர். எதிலும் திருப்தி அடையாத ராமலிங்கம், ஒருநாள் அவர்களை அழைத்துக் கொண்டு, தில்லை, திருவதிகை, திருமுதுகுன்றம், திருப்பாதிரிப்புலியூர் தலங்களை தரிசித்து நிறைவாக வடலூர் வந்தடைந்தார்.  
அந்த இடமே தருமசாலை நிறுவ ஏற்ற இடம் என்று எண்ணினார். ஊர் மக்களே காணி நிலம் வழங்கினர். கட்டிடப் பணிகளும் செவ்வனே நடைபெற்றன. வைகாசித் திங்கள் 11-ம் நாள் 22-05-1867 அன்று வடலூரில் தருமசாலை திறக்கப்பட்டு, தினமும் ஆயிரக் கணக்கானோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்றும் வைகாசித் திங்கள் 11-ம் நாள் ‘ஜீவகாருண்யத் திருநாள்’ என்று வடலூரில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இறைவனை நோக்கி ராமலிங்கம் பாடிய பாடல்கள் அருட்பாக்களாக, அவரது முதல் சீடர் வேலாயுதத்தால் தொகுக்கப்பட்டு, அதே வருடம் அச்சிடப்பட்டு நூலாக வெளிவந்தது. ஆறுமுக நாவலர் போன்றவர்களால், அவை ‘அருட் பாக்களா மருட் பாக்களா’ என்று விவாதத்துக்கு உட்படுத்தப்பட்டன. நிறைவில், அவை அருட் பாக்களாகவே அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இதனால் ‘திருவருட் பிரகாச வள்ளல்’  என்று வேலாயுதத்தால் அழைக்கப்பட்டார் ராமலிங்கம்.  

அனைத்து சமய நல்லிணக்கத்துக்காக சமரச சன்மார்க்க சங்கம் ஒன்றை நிறுவி சத்திய ஞான சபையை அமைத்தார் ராமலிங்கம். சைவநெறியைப் போற்றி வந்த அவர், சமரச சன்மார்க்கம் என்ற நெறியை கடைபிடித்தார். அதன்படி, மனதில் உள்ள திரைகளை விலக்கினால் அருட்பெரும் சோதியான இறைவனை நம் மனதில் காணமுடியும் என்பதை அனைவரையும் உணரச் செய்தார்.  
1873-ம் ஆண்டில் பல நாட்கள் ராமலிங்கம், யாருடனும் உரையாடாமல் தியானத்திலேயே இருந்தார். ஆண்டின் இறுதியில் தனது அன்பர்களிடம் மட்டும் ‘அருட்பெரும் சோதி தனிப் பெருங்கருணை’ என்று கூறிவந்தார். கடவுள் எனப்படுவது அகிலம் – அன்பு. அது உலகில் உள்ள எல்லாவற்றிலும் பரிபூரண சமாதானத்தையும் சமரச நிலையையும்  ஏற்படுத்தி, அவற்றை நிலை நிறுத்துகின்றது என்று போதித்தார்.  

1874-ம் ஆண்டு ஜனவரி 30-ம் நாள் தனது அன்பர்களை அழைத்து தான்,  “அருட்சோதி ஆண்டவரின் ஆணைப்படி  கடையை விரித்தோம் கொள்வாரில்லை… கட்டிவிட்டோம். இனி இரண்டரைக் கடிகை நேரம் தான் யார் கண்ணுக்கும் புலப்பட மாட்டேன்” என்று கூறி தன் அறைக்குச் சென்று கதவை உட்புறமாக தாளிட்டுக் கொண்டு, ஒரு விளக்கை ஏற்றி வைத்துக் கொண்டு அமர்ந்தார் ராமலிங்கம்.  

சரியாக ஒரு வருட காலம் கழித்து, கதவைத் திறந்து பார்த்தபோது, ராமலிங்க வள்ளலார் என்று அழைக்கப்பட்ட ராமலிங்கம், அருட்பெரும் சோதியுடன் கலந்துவிட்டார் என்பது உறுதியாயிற்று.  

ஆண்டு தோறும், வள்ளலார் பிறந்த தினமான  புரட்டாசி மாதம் சித்திரை நட்சத்திர நாள் உலக ஒருமைப்பாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது. அதேபோல் ஒவ்வொரு தைப்பூச பவுர்ணமி தினத்தில் சோதி தரிசனமும் நடைபெற்று வருகிறது. இந்திய அரசு வள்ளலாரின் சேவையைப் பாராட்டி 2007-ம் ஆண்டு அஞ்சல் தலை வெளியிட்டு சிறப்பித்தது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in