சிறகை விரி உலகை அறி - 1: உதயசூரியனின் நிலத்தில் ஒரு பயணம் 

சிறகை விரி உலகை அறி - 1: உதயசூரியனின் நிலத்தில் ஒரு பயணம் 

கனத்த பையை முதுகில் சுமந்தபடி சுற்றுலாத் தலங்களில் வரும் வெளிநாட்டுப் பயணிகளைக் கவனித்திருக்கிறீர்களா? வெளியுலகத்தைத் தரிசிப்பதற்காகவே தனியாகப் பணம் சேமித்து, சந்தர்ப்பம் வாய்த்தவுடன் கிளம்பி உலகின் ஏதோ ஒரு மூலைக்கு வந்து சேருவார்கள். புதுப் புது இடங்களையும் அவற்றின் பண்பாட்டு, கலாச்சார அம்சங்களையும் ரசித்தபடி, தங்கள் செல்போன்களில், கேமராக்களில் பயண அனுபவங்களைக் காட்சிகளாகப் பதிவுசெய்துகொள்வார்கள். அவர்களின் குதூகலத்தைப் பார்க்கும்போது நமக்கும் உற்சாகம் ஊற்றெடுக்கும்.

சுற்றுலா மீது எனக்கும் ஒரு மயக்கம். எந்த நாட்டுக்குச் செல்லலாம் என்று நண்பர்களிடம் சதா ஆலோசித்துக்கொண்டிருப்பேன். “நீயே விரும்பினாலும் தொலைந்துபோக மாட்டாய். ஜப்பானுக்குப் போய் வா” என்றார் ஒரு நண்பர். நண்பரின் வாக்கு நம்பிக்கை விதைத்தது. இணைய உலகம் திட்டமிட உதவியது. ‘உதயசூரியனின் நிலம்’ (Land of the Rising Sun) என்று அழைக்கப்படும் ஜப்பானுக்குத் தனிப் பயணியாக (Solo traveler) புறப்பட்டேன். என் பயண அனுபவங்களை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். சிறகை விரிக்க வாருங்கள்!

புல்லட் ரயிலில் சலுகை

ஒரு ஜனவரி மாதக் குளிர் நாளில், ஜப்பானின் நாரிடா விமான நிலையத்தில் இறங்கினேன். குடியேற்ற அதிகாரியிடம் கடவுச்சீட்டைக் காட்டி விட்டு, பரிசோதனைகள் அனைத்தும் முடிந்து வெளியேறும்போது ஜே.ஆர். பாஸ் (Japan Rail Pass) உதவி மையத்தைத் தேடினேன். ஜே.ஆர். பாஸ் என்பது, வெளிநாட்டுப் பயணிகளுக்கான தொடர்வண்டிச் சலுகை அட்டை. ஒரு வாரத்துக்கு, இரண்டு வாரங்களுக்கு, மூன்று வாரங்களுக்கு என இது கிடைக்கிறது. ஜப்பான் செல்வதற்கு முன்பாகவே இணையம் வழியே இதை வாங்கிவிட வேண்டும். அங்கு சென்ற பிறகு, அதற்கான உதவி மையத்தை அணுகி, சலுகை அட்டையைச் செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். நான் இந்தியாவில் இருக்கும்போதே அதை வாங்கியிருந்தேன்.

இந்தச் சலுகை அட்டையைப் பயன்படுத்தி, செலவில்லாமல், ஜப்பான் முழுவதும் அதிவேக புல்லட் ரயிலில் பயணிக்க முடியும். மேலும், மியாஜிம்மா தீவுக்குப் படகில் செல்வதற்கும், குறிப்பிட்ட சில நகரப் பேருந்துகளில் பயணிப்பதற்கும் இதைப் பயன்படுத்தலாம். புல்லட் ரயிலை ‘ஷிங்கான்சென்’ (Shinkansen) என அழைக்கிறார்கள். மிக அதிவேக புல்லட் ரயிலான ‘நொசோமி’ (Nozomi), ‘மீசுகோ’ (Mizuho) இரண்டிலும் இந்தச் சலுகை அட்டையைப் பயன்படுத்த முடியாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஜே.ஆர். பாஸின் விலை அதிகம் இருக்குமோ என கவலைப்படத் தேவையில்லை. சலுகை அட்டை இல்லாமல் பயணச்சீட்டு வாங்கி, டோக்கியோவிலிருந்து ஹிரோஷிமாவுக்கு அதிவேக புல்லட் ரயிலில் ஒருமுறை சென்று வருவதற்கான தொகையைவிட குறைவான கட்டணத்தில், ஏழு நாட்களுக்கான ஜே.ஆர்.பாஸ் வாங்கிவிடலாம்.

டோக்கியோவின் பிரம்மாண்ட ரயில் நிலையம்

சலுகை அட்டையைச் செயல்பாட்டுக்குக் கொண்டுவந்த பிறகு, விமான நிலையத் தொடர்வண்டி நிலையத்துக்குச் சென்றேன். அங்கிருந்து 66 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது ஜப்பானின் தலைநகரம் டோக்கியோ!

டோக்கியோ மத்திய தொடர்வண்டி நிலையம் பிரம்மாண்டமானது. தரைத் தளத்தில் 20, முதல் கீழ் தளத்தில் 4, இரண்டாம் கீழ் தளத்தில் 4 என மொத்தம் 28 தொடர்வண்டிப் பாதைகள் இருக்கின்றன. ஒரு நாளைக்கு சராசரியாக 5 லட்சம் பயணிகள் இந்த நிலையத்தைப் பயன்படுத்துகிறார்கள். 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொடர்வண்டிகள் தினமும் வந்துபோகின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!

பயணிகள் உள்ளே வருவதற்கும் வெளியே போவதற்கும் எண்ணற்ற வாசல்கள் இருக்கின்றன. மக்கள் கூட்டத்துக்குள் நுழைந்து, நாம் பயணிக்க வேண்டிய வண்டி எந்த நடைமேடையில் நிற்கிறது என அறிந்து விரைந்து செல்வது சவால் மிகுந்ததாகும். புல்லட் ரயிலின் நேரத்தையும் அது நிற்கும் நடைமேடை எண்ணையும் முன்கூட்டியே இணையத்தில் பார்த்துத் திட்டமிடுவதே பாதுகாப்பானது. இதையும் இந்தியாவிலிருந்தபோதே திட்டமிட்டு தட்டச்சு செய்து எடுத்துக்கொண்டேன்.

டோக்கியோ சென்றபோது இரவு மணி 10.30 ஆகிவிட்டது. அங்கிருந்து மாநகரத் தொடர்வண்டியில் ஏறி அடுத்த நிறுத்தத்தில் இறங்கினேன். வெளியேறும் வழி தெரியவில்லை. பணியாளர்கள் யாரும் நிலையத்தில் இல்லை. என்னைக் கவனித்த ஒரு ஜப்பானியப் பெண், பயணச்சீட்டு விற்கப்படும் இடத்துக்கு அருகில் சென்றார். சுவரில் புள்ளி புள்ளியாக இருந்த இடத்துக்கு முன்பாக நின்று ஏதோ சொன்னார். அந்தப் பக்கம் ஒலிவாங்கி இருந்திருக்கிறது. உள்ளிருந்து ஓர் ஆண் குரல் பதில் சொன்னது. ஓரத்தில் உள்ள சிறு கதவைத் திறந்து என்னை வெளியே வரவழைத்த அந்தப் பெண், நான் தங்குமிடத்தின் முகவரியையும் தன் அலைபேசியில் உள்ள வரைபடத்தில் பார்த்து வழி சொன்னார்.

ஜப்பானியர்களின் தொழில்நுட்பத்தையும், பண்பையும் வியந்தபடி படியேறி சாலைக்கு வந்தேன்.

பொருட்காட்சியில் பல்வேறு வண்ணங்களில் கவனம் ஈர்க்கும் அரங்கங்களை ஆச்சரியத்துடன் பார்க்கும் சிறுவனைப்போல, ஜப்பான் சாலைகளைப் பார்த்தபடி நடந்தேன். அலை கழுவிய கரை போல் சாலைகள் பளிச்சென்று இருந்தன. ஒவ்வொரு சாலையின் சந்திப்பிலும் நின்று கவனித்துச் செல்ல தானியங்கி விளக்குகள் எரிந்தன. சாலை விதிகளைக் கடைபிடிப்பது சுவாசம் போல ஜப்பானியர்களுக்கு இயல்பாய் இருப்பது நாம் கவனிக்க வேண்டிய விஷயம்.

வழிகாட்டிய ஜப்பானியர்

சரியான வீதிக்குள் சென்ற பிறகும், தங்குமிடத்தின் பெயரை என்னால் கண்டுபிடிக்க இயலவில்லை. பாத்திரங்களைக் கழுவிக்கொண்டிருந்த ஒருவரிடம் முகவரியைக் காட்டி விசாரித்தேன். அவருக்கு ஆங்கிலம் தெரியாது, எனக்கு ஜப்பானிய மொழி தெரியாது. மொழிச் சிக்கல் எங்கள் விழிகளில் விரிந்தது. செய்வதறியாது அவர் திகைப்பது உடல் மொழியில் வழிந்தது. அனைத்தையும் அப்படியே போட்டுவிட்டு என்னை அழைத்துக்கொண்டு நடந்து, நான்கு கடைகளைக் கடந்து தங்குமிடத்தைக் காட்டிவிட்டு வணங்கி விடைபெற்றுக்கொண்டார் அந்த ஜப்பானியர்.

தங்குமிடத்தில் ஓர் உணவகம் இருந்தது. ஒரு படத்தைக் காட்டி, “அது வேண்டும்” என்றேன். அடுத்த ஐந்து நிமிடத்தில் ஒனிகிரி (Onigiri) எனப்படும் அரிசிப் பந்துகளும், மிசோ சூப்பும், தண்ணீரும் என இரவு உணவு ஒரு தட்டில் வந்தது. சாப்பிட்டுவிட்டு நிம்மதியாக உறங்கினேன்.

தொடங்கியது சுற்றுலா

அதிகாலை 5 மணிக்கு கிளம்பி டோக்கியோ மத்தியத் தொடர்வண்டி நிலையத்துக்குச் சென்றேன். நான் பயணிக்க வேண்டிய புல்லட் ரயில் நின்ற நடைமேடைக்கு அருகில் சென்று, ஜே.ஆர்.பாஸ் உதவி மையத்தை நாடி சலுகை அட்டையைக் காட்டினேன். பயணச்சீட்டு கொடுத்தார்கள். அதில்தான் வண்டி எண், புறப்படும் நேரம், பெட்டி எண், இருக்கை எண் போன்றவை இருந்தன.

பயணச்சீட்டைத் தானியங்கி வாசலில் காட்டினேன். கதவு திறந்தது. உள்ளே சென்று புல்லட் ரயிலுக்குள் அமர்ந்தேன். தூய்மை, நறுமணம், அமைதி… பன்னாட்டு விமானத்தினுள் இருப்பது போன்றிருந்தது. மிகச் சரியான நேரத்தில் வண்டி புறப்பட்டது. 500 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தை மூன்று மணி நேரத்தில் கடந்து ஒசாகா நகரத்தில் இறங்கினேன்.

1583-ல் பேரரசர் டொயோடோமி கிடயோஷியால் கட்டப்பட்டது ஒசாகா கோட்டை. ஒருங்கிணைந்த ஜப்பானின் மையமாக இவ்விடம் இருக்க வேண்டும் என அவர் விரும்பினார். இது, அவர் காலத்தில் இருந்த மிகப் பெரிய கோட்டையாகும். பல்வேறு போர்களால் ஏற்பட்ட விழுப்புண்களாலும், 1655-ல் நிகழ்ந்த மின்னல் தாக்குதலாலும் சிதைவுற்ற இக்கோட்டை 1997-ல் முழுமையாகப் புதுப்பிக்கப்பட்டது. கோட்டையின் கோபுரத்திற்குச் சென்றேன். கோட்டையின் வரலாறும், பேரரசர் டொயோடோமி கிடயோஷியின் வரலாறும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கனமான பையை முதுகில் சுமந்து, முகம் மலர்ந்து ஒசாகா கோட்டையை வலம் வரத் தொடங்கினேன்.

சறுக்கல்களைத் தாண்டி சாதித்த பேரரசன்!

கிடயோஷி, அரச பாரம்பரியத்தில் வந்தவரல்ல... சாதாரண விவசாயியின் மகன்; கற்றுத் தேர்ந்தவரல்ல… சிறு வயதிலேயே வீட்டைவிட்டு ஓடியவர்; சுவையாக உண்டு உறங்கியவரல்ல… ஊசி விற்பவராகவும் விறகு பொறுக்குகிறவராகவும் திரிந்தவர்; ஒழுக்க சீலரும் அல்ல… புகழ்பெற்ற திருடனுக்குக் கீழே வேலை செய்தவர். அனுபவங்களால் செதுக்கப்பட்டு ஊர் திரும்பிய கிடயோஷி, பேரரசர் ஓடா நொபுநாகாவின் காலாட்படை வீரரானார். ஒருங்கிணைந்த ஜப்பானை ஆள விரும்பிய தம் பேரரசரின் கனவுக்காகத் தீரமுடன் போரிட்டார். தன்னுடைய மலர்ந்த முகம், போர் நுணுக்கம், மற்றும் அறிவுத்திறனால் படைத் தலைவராக உயர்ந்தார்.

போரில் தோற்று நொபுநாகா இறந்த பிறகு, வெகுண்டெழுந்த கிடயோஷி எதிரிகளைத் துவம்சம் செய்தார். தொடர்ந்து வெற்றி பெற்று, நொபுநாகாவின் கனவை நிறைவேற்றி, 1585-ல் ஒருங்கிணைந்த ஜப்பானை ஆளத் தொடங்கினார். விடலைப் பருவத்தில் தடுமாற்றங்கள் பல வரும். தடுமாறியவர்களும், தடம் மாறியவர்களும் நம் மத்தியில் உண்டு. ஆனாலும், மீள முடியும், சிறப்பாக வாழ முடியும் எனச் சொல்லும் கிடயோஷியின் வரலாறு!

(பாதை விரியும்)

************

இவரைப்பற்றி...

‘உஷ்… குழந்தைங்க பேசுறாங்க’, ‘திருநங்கைகள் வாழ்வியல் - இறையியல்’, ‘ஈழ யுத்தத்தின் சாட்சிகள்’ உள்ளிட்ட 17 நூல்களின் ஆசிரியர் சூ.ம.ஜெயசீலன். இவரின் மொழிபெயர்ப்பில், ‘என் அன்புக்குரிய குழந்தைகளை விட்டுவிட்டு..’ நூல் அண்மையில் வெளியானது. 2017-ல் 
சென்னை புத்தகத் திருவிழாவில் சிறந்த கல்வி நூல் விருதுபெற்ற இவரின், 'இது நம் குழந்தைகளின் வகுப்பறை' நூல் கல்வியியல் பாடத்திட்டத்திலும் இடம் பெற்றுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in