கோவணத்துலருந்து கோட்டு... கோட்டுலருந்து கோவணம்!- ஓய்வுபெற்ற நீதியரசரின் சத்திய வாக்கு

கோவணத்துலருந்து கோட்டு... கோட்டுலருந்து கோவணம்!- ஓய்வுபெற்ற நீதியரசரின் சத்திய வாக்கு

கரு.முத்து
muthu.k@kamadenu.in

கடந்த 15-ம் தேதி நடந்த கல்யாணம் அது. அதற்காக அச்சடிக்கப்பட்ட மிக எளிமையான பத்திரிகை ஒன்றை எனக்கு வாட்ஸ் -அப்பில் அனுப்பிய ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரி ஒருவர், “ஓய்வுபெற்ற நீதியரசர் ஆ.செல்வத்தின் மகனுக்குத் திருமணம். அவ்வளவு பெரிய மனிதர் எத்தனை எளிமையாக பத்திரிகை அடித்திருக்கிறார் பார்த்தீர்களா?” என்று கேட்டதுடன், “ஊருக்குப் போய் பாருங்க... சம்சாரி கணக்கா விவசாயம் பாத்துட்டு இருக்கார் அந்த மனிதர்” என்ற உபரித் தகவலையும் சொன்னார்.

இதைக் கேட்டதும் எனக்கு இருப்புக் கொள்ளவில்லை. அந்த எளிய மனிதரைச் சந்திக்க பொன்னமராவதி அருகிலுள்ள பூலாங்குறிச்சிக்குப் புறப்பட்டேன். ஊருக்குள் விசாரித்து காஞ்சாத்துமலை அடிவாரத்தில் இருக்கும் அமைதி தவழும் அந்த வீட்டின் வாசலில் போய் நின்றேன். வீட்டின் கதவுகள் உள்பக்கமாய் பூட்டப்பட்டிருக்க, ஆறுமுகம் என்பவர் உள்ளே இருந்து எட்டிப்பார்த்தார். அவர்தான் நீதியரசருக்கு உதவியாளராம். “ஐயாவைப் பார்க்க வந்திருக்கிறோம்” என்றதும் கதவைத் திறந்து உள்ளே அழைத்தார். அப்போது தூரத்தில் அரைக்கால் சட்டை அணிந்த ஒருவர் வலது தோளில் டி-ஷர்ட்டும், இடது தோளில் துண்டும் போட்டுக்கொண்டு, காலில் சாதாரண செருப்புடன் நடந்து வந்து கொண்டிருந்தார். “இந்தா... அய்யாவே வராக” என்று ஆறுமுகம் சொல்ல எனக்கு தூக்கிவாரிப் போட்டது.

தமிழகம் முழுவதும் கருவேல மரங்களை அகற்ற பல உத்தரவுகளைப் பிறப்பித்தது, பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் மரங்களை அகற்றியதை நேரில் ஆய்வு செய்தது, கோவை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றச்சாட்டுப் பதிவு செய்தது எனப் பல்வேறு முக்கிய வழக்குகளைக் கையாண்டவர். மூன்று ஆண்டுகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதியரசராக இருந்தவர். தொடர்ந்து 31 ஆண்டுகள் நீதி பரிபாலனம் செய்துவந்த நீதிமானா இத்தனை எளிமையாய் இருக்கிறார் என எனக்கு நானே கேட்டுக் கொண்டேன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in