சிறகை விரி உலகை அறி 05: இயற்கை எனும் பெருங்கவிதை!

சிறகை விரி உலகை அறி 05: இயற்கை எனும் பெருங்கவிதை!

நீங்கள் மலைக்குச் சென்றிருக்கிறீர்களா? கைகளை இறுகக் கட்டிக்கொண்டு, வெள்ளைப் புறாக்களாய் மூச்சுக் காற்று வாயிலிருந்து பறக்க மலையில் நடந்திருக்கிறீர்களா? பற்கள் தடதடவென காற்றை மெல்லும் அதிசயம் அனுபவித்திருக்கிறீர்களா? மலை வியப்புக்குரியது. அதில் நீங்கள் பயணிக்கும் ஒவ்வொரு பயணமும் கவித்துவமானது. அப்படியான அனுபவத்தை எனக்கு மியாஜிம்மா (Miyajima) வழங்கியது.

மலைத் தீவு

மென் காற்றில் கலந்த துயரக் குரல்களைச் சேகரித்துக்கொண்டு, ஹிரோஷிமா அமைதி நினைவுப் பூங்காவிலிருந்து வெளியேறினேன். நெஞ்சம் தொலைத்த அமைதியைச் சமன்செய்ய இயற்கையின் பேரமைதி தேவைப்பட்டதால், மியாஜிம்மா தீவுக்குக் கிளம்பினேன்.

ஷின்டோ மதத்தின் புனித இடங்களில் ஒன்றான மியாஜிம்மா, மலைகளும் பழங்காலத்திய கோயில்களும் காடுகளும் நிறைந்த தீவு. சுற்றிலும் கடல், கடலுக்கு நடுவே மலை. மலைத் தீவு என்றாலும் தவறாகாது. ஜப்பானிய மொழியில், மியாஜிம்மா என்றால் தீவுத் திருத்தலம்.

ஜப்பானில் பார்க்க வேண்டிய முக்கியமான மூன்று இடங்களுள் ஒன்று என, பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தேர்வு பெற்ற இடம் மியாஜிம்மா. இன்றுவரையும், சுற்றுலாப் பயணிகளின் அகத்தைக் குளிர்விக்கும் அருட்பெருஞ் சோதியாக இவ்விடம் திகழ்கிறது. வருடத்துக்கு 40 லட்சம் மக்கள் வந்துபோகிறார்கள். 1996-ல் யுனெஸ்கோவினால், புராதன சின்னத்துக்கான அங்கீகாரத்தையும் இத்தீவு பெற்றுள்ளது.

தீவுக்குச் செல்ல தீர்வு

அமைதி நினைவுப் பூங்காவிலிருந்து மத்திய தொடர்வண்டி நிலையத்துக்குச் சென்றால், அங்கே சான்யோ தடத்தில் (Sanyo line) செல்லும் தொடர்வண்டி நிற்கும். ஜே.ஆர்.பாஸ் உதவியுடன் 25 நிமிடத்தில் மியாஜிம்மாகுச்சி நிலையத்தை அடையலாம். ட்ராம் வசதியும் உண்டு. ஆனால், அதில் ஜே.ஆர்.பாஸைப் பயன்படுத்த இயலாது.

மியாஜிம்மாகுச்சி நிலையத்திலிருந்து சிறிது தூரம் நடந்தால், படகுத் துறையைக் காணலாம். மட்சுடாய் மற்றும் ஜே.ஆர் என இரண்டு நிறுவனங்கள் இங்கிருந்து படகுகளை இயக்குகின்றன. ஜே.ஆர்.பாஸ் வைத்திருப்பவர்கள் ஜே.ஆர்.மியாஜிம்மா படகில் கூடுதல் கட்டணமின்றி பயணிக்கலாம். ஹிரோஷிமா அமைதி நினைவுப் பூங்கா மற்றும் ஹிரோஷிமா துறைமுகத்திலிருந்தும் படகு வழியாக நேரே மியாஜிம்மா தீவுக்குப் போக முடியும். 45 நிமிட பயணம் அது. ஆனால், ஜே.ஆர்.பாஸுக்கு அங்கே வேலை இல்லை.

மியாஜிம்மாகுச்சியில் இறங்கி, படகுத் துறையில் ஜே.ஆர்.பாஸ் காட்டி பயணச்சீட்டு பெற்று படகில் அமர்ந்தேன். படகு புறப்பட்டது. 10 நிமிடப் பயணம். விழிகளைச் சுற்றிச் சுழலவிட்டேன். மேஜைக்குக் கீழே மறைந்துகொண்டு ‘என்னைக் கண்டுபிடி’ என விளையாடும் குழந்தைகள் போல மரங்களின் உள்ளே மறைந்திருந்த மலை என்னை ‘வா வா’ என்றழைத்தது.

புனிதத் தீவில் புலரும் இன்பம்

அதோ, டொரீ வாயில் (Torii gate) தெரிகிறது. ஜப்பான் நாட்டில் ஷின்டோ கோயில்களின் முகப்பில் இத்தகைய வாயில் இருக்கும். இத்தீவில் உள்ள மிக முக்கியமான திருத்தலம் இட்சுகுஷிமா (Itsukushima). மியாஜிம்மா தீவு என அழைக்கப்பட்டாலும் தீவின் உண்மையான பெயர் என்னவோ, இட்சுகுஷிமா என்பதுதான். இக்கோயிலை 593-ல் சாக்கினோ குராமோடோ கட்டியதாக வரலாறு சொன்னாலும், தற்போது உள்ள கோயில் 1168-ல் டாய்ரானோ கியோமோரி என்பவரால் மறுபடியும் கட்டப்பட்டதேயாகும்.

புராதன காலம் தொட்டே தீவு முழுவதும் புனிதமாகக் கருதப்பட்டது. இதனால், இட்சுகுஷிமா திருத்தலத்தை எழுப்பி தீவின் புனிதத்துக்குக் களங்கம் ஏற்படுத்திவிடக் கூடாது என்று எண்ணி, கரையோரத்தில் தண்ணீருக்குள் கோயிலைக் கட்டியுள்ளார்கள். கோயிலுக்கான டொரீவாயிலை, ஏறக்குறைய 100 மீட்டர் தூரத்தில் தண்ணீருக் குள்ளே செடோ உள்நாட்டுக் கடல் பகுதியில் நிறுத்தி யுள்ளார்கள். கடலும் படகும் இல்லாதிருந்தால், கோயிலுக்கு இவ்வாயில் வழியாகத்தான் நாம் நுழைந் திருக்க வேண்டும். படகில் செல்வதால், படகுத் துறையில் இறங்கி நடந்து வாயிலுக்கு உள்ளிருந்து வருகிறோம்.

நீரோட்டம் அதிகமான காலங்களில் அருகில் செல்ல இயலாது. கோயில் மற்றும் வாயில் இரண்டையும் தண்ணீர் சூழ்ந்துகொள்ளும். நீரோட்டம் குறைவான நேரத்தில் நான் சென்றதால், டொரீ வாயிலின் அருகில் சென்றேன். தொட்டு உணர்ந்து பரவசம் கொண்டேன்.
ஷின்டோ மத நம்பிக்கையில் மான், கடவுளின் தூதுவர் என்பதால், நிறைய சிகா மான்கள் (Sika Deer) தீவில் துள்ளி விளையாடுகின்றன. ‘மான்களைச் சீண்டவோ, உணவளிக்கவோ, தண்ணீர் கொடுக்கவோ கூடாது’ என அறிவிப்புகள் ஆங்காங்கே இருக்கின்றன.

பச்சை மாமலை மேல் மன ஓடம்

மலையுச்சிக்கு அழைத்துச் செல்ல வடவூர்தி (Ropeway)உள்ளது. அது இருக்கும் இடத்துக்குச் செல்ல சிற்றுந்துவசதியும் உண்டு. மாலை நேரமாகிவிட்டதால் சிற்றுந்துக்குக்காத்திருக்காமல் வேகமாக மலையேறினேன். பதினைந்து நிமிடங்களில் வடவூர்தி நிலையம் வந்தது. பயணச்சீட்டு பெற்று அமர்ந்தேன்.

ஜனவரி மாத குளிரில் இலைகள் உதிர்ந்தும் கிளைகள் துளிர்த்தும் இருந்த செர்ரி மரங்களைக் கடந்து, பள்ளத்தாக்குகளைத் தாண்டி வடவூர்தி உயரே சென்றது. ஏறக்குறைய இருபது நிமிட பயணத்துக்குப் பிறகு, ஒரு மலை முகட்டில் என்னை நிறுத்தியது. என்னே பேரானந்தம்! சுத்தமான வெளி, சுகந்தமான காற்று, நெடிது உயர்ந்த மரங்கள், நீண்டு படர்ந்த கடல். கண்களை அகல விரித்து இயற்கையை அருந்தினேன். அடிவயிறு மட்டும் உள்ளிழுத்து மூச்சுக்காற்றில் நுரையீரல் கழுவினேன்.

அங்கு இந்திய முகச்சாயலில் ஒருவரைப் பார்த்தேன். எந்த மாநிலம் என அறிய நானே சென்று பேசினேன். அட! நம்ம தமிழ்நாட்டுக்காரர். தொழில் சார்ந்த கூட்டத்துக்காகக் கோயம்புத்தூரிலிருந்து ஹிரோஷிமா வந்தவர், மலையில் மலர்ந்து நிற்கிறார்.
எனக்கு மலை உச்சிக்குச் செல்ல ஆசை. அதற்கு ‘இன்னும் முப்பது நிமிடங்கள் நடக்க வேண்டும்’ என எழுதியிருந்தது. சூரியன் நடந்த தடம் மறைந்து, இரவின் வருகை தெரியத் தொடங்கிவிட்டது. மணியைப் பார்த்தேன். மணி ஐந்து. வடவூர்தியின் கடைசி பயணம் மணி 5:30-க்கு.

என்ன செய்யலாம்? முடிவெடுக்க நினைக்கும் முன்பே கால்கள் நடந்து ஓடத் தொடங்கின. உற்சாகம் கொப்பளிக்க 15 நிமிடத்தில் மைசன் (Misen) சிகரத்தை அடைந்தேன். வானமும் கடலும் தோள் தழுவும் அழகையும், ஆங்காங்கே மலைப் பூக்களாய் நிற்கும் குன்றுகளையும் பார்த்து கைகளை விரித்து உதடுகள் பிரிக்காமல் புன்னகைத்தேன்.

சிகரத்துக்குப் போகும் வழியிலேயே ரெய்காதோ மண்டபம் இருக்கிறது. இந்த மண்டபத்தில் 1,200 ஆண்டுகளாக அடுப்பு எரிந்துகொண்டே இருக்கிறது. அதன் மேல் உள்ள பெரிய பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்கிறது. அந்த நீரைப் பருகினால் நோய் நீங்கும் என்பது நம்பிக்கை. நானும் பருகினேன். ஹிரோஷிமாவில் உள்ள அமைதி நினைவுப் பூங்காவில் ‘அமைதிச் சுடர்’ ஏற்றுவதற்கு, இங்கிருந்துதான் ஒவ்வோர் ஆண்டும் தீ எடுத்துச் செல்லப்படுகிறது.

நினைவுப் பரிசு

பிறகு, அருகில் இருந்த மேஜைக்குச் சென்றேன். அங்கே ‘தொய்வை முத்திரை’ (Rubber stamp) இருந்தது. ஜப்பானில் அருங்காட்சியகம், நூலகம், கோயில், கோட்டை என எல்லா இடங்களிலும் அதனதன் இலட்சினையைத் தொய்வை முத்திரையாக வைத்திருக்கிறார்கள். சுற்றுலாப்பயணிகள் தாங்கள் வந்ததன் நினைவாக தங்கள் நோட்டுகளிலும் புத்தகங்களிலும் அச்சைப் பதிந்து கொள்கிறார்கள். நானும் அச்சு பதிந்து கொண்டு வேகமாக ஓடத் தொடங்கினேன்.

யாரோ யாரையோ கூப்பிடுவதுபோல கேட்டது. திரும்பிப் பார்த்தேன். என்னை நோக்கி இரண்டு மாணவிகள்
ஓடோடி வந்தார்கள். அவர்கள் கையில் என்னுடைய அலைபேசி. புத்தகத்தில் முத்திரையிட்ட இடத்தில் செல்ஃபி குச்சியோடு மறந்து வைத்துவிட்டு வந்துவிட்டேன். அலைபேசியைக் கொடுத்து வளைந்து வணங்கினார்கள். பேரன்புடன் வணங்கி நன்றியுரைத்தேன்.
ஹிரோஷிமா மத்திய தொடர்வண்டி நிலையத்தில் வைத்துச் சென்ற பையை, நிலவு பூத்த நேரத்தில் எடுத்துக்கொண்டு தங்குமிடம் சென்றேன். தனிப் பயணராக வந்ததால்தான் குறைந்த நேரத்திலும் மியாஜிம்மாவை நிறைவாகப் பார்க்க முடிந்தது எனும் நிம்மதியில் தூங்கினேன். மறுநாள், நாகசாகி போக வேண்டும்.

(பாதை நீளும்)

------------------

குகாய் பற்றவைத்த நெருப்பு

மியாஜிம்மா தீவில் உள்ள உயரமான சிகரத்தின் பெயர் மைசன். கடல் மட்டத்தில் இருந்து 500 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. அடர்ந்த மரங்கள் சூழ்ந்த பகுதியாதலால், ஒருகாலத்தில் பகலும் இருளைப்போல் இருந்தது. இப்பகுதியை வழிபாட்டுத்தலமாகவும், ஆன்மிக ஆற்றல் உலாவும் இடமாகவும் பூர்வகுடி மக்கள் கருதினார்கள்.

புத்த மதத்தின் ஷிங்கோன் (Shingon) பிரிவை ஏற்படுத்திய புத்த துறவி குகாய் (Kukai), ஏறக்குறைய 806-ல் சீனாவிலிருந்து இங்கு வந்தார். ஆன்மிக சக்தி இவ்விடத்தில் இருப்பதை உணர்ந்து, இங்கேயே தங்கி குமோன்ஜி (Gumonji) பயிற்சி செய்தார். குமோன்ஜி என்பது, புத்த கடவுளான கொகுசோ பொசாட்சுவை (Kokuzo Bosatsu) நினைத்து பத்து லட்சம் தடவை மந்திரம் ஜெபிப்பது. அந்நாட்களில் குகாய் பற்றவைத்த நெருப்பு, இப்போதுவரை ரெய்காதோ மண்டபத்தில் எரிந்துகொண்டிருக்கிறது என்பது ஜப்பானியர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in