ஹாட் லீக்ஸ்: தடைகளைத் தகர்ப்பாரா தமிழரசி?

ஹாட் லீக்ஸ்: தடைகளைத் தகர்ப்பாரா தமிழரசி?

வேதரத்தினத்துக்கு வேட்டுவைக்கும் திமுக!

வேதாரண்யம் தொகுதியில், தனக்கென தனித்த செல்வாக்கை வைத்திருப்பதால் தான் பாஜகவுக்கு சென்று திரும்பிய பிறகும் முன்னாள் எம்எல்ஏ-வான வேதரத்தினத்துக்கு மீண்டும் சீட் கொடுத்தது திமுக. ஆனால், இப்போது திமுகவுக்குள் நடக்கும் உள்குத்துகளைப் பார்த்தால் வேதரத்தினத்தின் வெற்றிக்கே வேட்டுவைத்துவிடுவார்கள் போலிருக்கிறது. பாஜகவுக்கு போய்விட்டு திரும்பிய வேதரத்தினத்துக்கு மீண்டும் சீட் கொடுத்தது திமுகவின் சீனியர் தலைகளுக்கே பிடிக்கவில்லை. அவர்களை எல்லாம் சாதுர்யமாக பேசி தனக்குச் சாதகமாக சைலன்டாக்கி விட்டார், இங்கு களத்தில் நிற்கும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன். கடந்தமுறை திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் பி.வி.ராஜேந்திரன் இங்கு போட்டியிட்டார். அப்போது திமுகவினர் சிலரே ஓ.எஸ்.மணியனுக்கு ஆதரவாக நின்று பிவிஆரை பின்னுக்குத் தள்ளினார்கள். கடந்த முறை, பிவிஆரை தோற்கடிக்க திமுகவினரை வளைத்த மணியன் தரப்பு, இம்முறை, திமுகவை வீழ்த்த காங்கிரஸ் முக்கிய தலைகளை சாதிய பாசத்துடன் பேசி வேதரத்தினத்துக்கு வேலைசெய்யவிடாமல் முடக்கிப் போட்டுவிட்டதாம். ஆனாலும், “அனைத்தையும் தாண்டி வேதரத்தினம் தனது சொந்த செல்வாக்கால் நிச்சயம் வெற்றி பெறுவார்” என்கிறார்கள் அவருக்காக களத்தில் நிற்கும் உடன்பிறப்புகள்.

தடைகளைத் தகர்ப்பாரா தமிழரசி?

2011 தேர்தலில், சோழவந்தான் (தனி) தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தார் திமுக முன்னாள் அமைச்சர் தமிழரசி. ஆனால், இவர் வெற்றிபெற்றால் அமைச்சர் பங்கிற்கு வருவார். அதனால் தனக்கு அமைச்சர் வாய்ப்பு தட்டிப் போய்விடும் என்று கணக்குப் போட்ட மாவட்ட திமுக செயலாளர் மூர்த்தி, தமிழரசியை சிவகங்கை மாவட்டம் மானாமதுரை (தனி) தொகுதிக்கு தள்ளிவிட்டார். அங்கேயும் அதே கதை தான். தமிழரசி அமைச்சரானால், தனக்கான வாய்ப்பில் தடை விழலாம் என பதறினார் மாவட்ட திமுக செயலாளர் கே.ஆர்.பெரியகருப்பன். விளைவு... திமுகவினரே தமிழரசியைத் தோற்கடித்தார்கள். அடுத்த தேர்தலிலும் மானாமதுரை தனக்குக் கிடைக்கும் என நினைத்தார் தமிழரசி. ஆனால், அறிமுகம் இல்லாத முன்னாள் அமைச்சர் சமயநல்லூர் செல்வராஜின் மகளைக் கொண்டுவந்து மானாமதுரையில் நிறுத்தினார்கள். விளைவு... மீண்டும் மானாமதுரையை அதிமுகவே தக்கவைத்துக் கொண்டது. இம்முறை, கனிமொழியின் கருணையால் மீண்டும் மானாமதுரையில் நிற்கிறார் தமிழரசி. முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிடும் ராஜ கண்ணப்பன் வென்றால், நிச்சயம் அமைச்சராவார் என்கிறார்கள். அதேபோல் தமிழரசியும் வென்றால் அமைச்சர் பதவி உறுதி என்று பேசப்படுகிறது. யாதவர் கோட்டாவில் ராஜ கண்ணப்பனுக்கும், மாவட்ட கோட்டாவில் தமிழரசிக்கும் அமைச்சர் பதவி உறுதியானால், பெரியகருப்பனுக்கு இம்முறை அமைச்சர் பதவி கிடைப்பது சிரமம் என்கிறார்கள். இந்தப் பேச்சு, யாரைப் பதம்பார்க்கப் போகிறதோ தெரியவில்லை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in