போர்முனை டு தெருமுனை 11: தீ-ண்டும் துன்பம்

போர்முனை டு தெருமுனை 11: தீ-ண்டும் துன்பம்

தீ விபத்துகளில் சிக்கி மாண்டவர்களையும் மீண்டவர்களையும் காணும்போது தீயின் கோரம் நம் நெஞ்சில் உறுத்தும். தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்புத் துறையினர் வாகனங்களோடு வந்து தீயை அணைப்பது வழக்கம்.

பலவித ஆயுதங்களோடும் வெடிகுண்டுகளோடும் புழங்கும் ராணுவ வீரர்களுக்கு தினம் தினம் தீபாவளி. போர்க்காலங்கள் என்பவை தீக்காலங்கள் என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். இப்படிக் காடுகளிலும் பாலைவனங்களிலும் அலைந்துகொண்டிருக்கும் நம் வீரர்கள், தீ விபத்து நேர்ந்தால் தீயணைக்க யாரைக் கூப்பிடுவார்கள். ஒற்றையடிப் பாதைகளில் தீயணைப்பு வாகனங்கள் விரைந்தோட முடியுமா? கடலடியில் 300 மீட்டர் ஆழத்தில் எல்லைகளைக் கண்காணிக்கும் கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டால் யாரை அழைப்பது?

நீர்மமூட்ட தீயணைப்பு

தீயணைப்பு ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள ராணுவ விஞ்ஞானிகள், நமது படைவீரர்களின் பாதுகாப்புக்குப் பல தீயணைப்புக் கருவிகளையும் நுட்பங்களையும் படைத்தளித்துள்ளனர். தண்ணீரைக் குறுந்துளிகளாக மாற்றி வீசித் தீயணைக்கும் தொழில்நுட்பம் அவற்றில் ஒன்று. காற்று அல்லது நைட்ரஜன் வாயுவின் அழுத்தத்தின் மூலம், நீரைக் குறுந்துகள்களாகப் பிரிக்கலாம். இதை நீர்மமூட்ட (Water mist) நுட்பம் என்று சொல்வார்கள். நீர்த் துகளின் சராசரி கனஅளவு விட்டம் (Volume Mean Droplet Diameter) 50 மைக்ரான் அளவுக்கும் குறைவாக இருக்கும். ஏறக்குறைய நம் தலைமுடியின் தடிமன். இந்த நுட்பத்தைப் பயன்படுத்தி, முதுகில் சுமந்தபடி தீயை அணைக்கும் வகையில் இந்தக் கருவியை வடிவமைத்திருக்கிறார்கள் ராணுவ விஞ்ஞானிகள். திட, திரவ மற்றும் மின்சாரத் தீ வகைகளை இதன் மூலம் கட்டுப்படுத்தலாம். இந்தத் தீயணைப்பு நுட்பத்தை ராணுவத்திலும், நீர்மூழ்கிக் கப்பலிலும் பயன்படுத்திவருகின்றனர். ராணுவம் மட்டுமின்றி பொதுமக்களின் பயன்பாட்டிற்கும் இது பேருதவியாக இருக்கிறது.

தீயணைப்பு ஜெல்

தீயணைக்க தண்ணீரைப் பயன்படுத்தும்போது, அது வழிந்தோடுவதால் நீரின் பெரும்பகுதி வீணாகும். இதைத் தடுக்க தீயணைப்புக் கூழ்மத்தை (Fire Suppression Gel) உருவாக்கியிருக்கிறார்கள் டெல்லியில் உள்ள டி.ஆர்.டி.ஓ ஆய்வகமான ஸீஃபீஸ் (CFEES-Center for Fire, Explosive and Environment Safety) விஞ்ஞானிகள். நீரோடு ஜெல்லைக் கலந்து, தீ பற்றிய பொருட்கள் மீது தெளிக்கும்போது, நீர்-ஜெல் கலவை, பொருட்கள் மீது ஒட்டிக்கொள்ளும். இதனால் நீர் வழிந்தோடுவது தடுக்கப்பட்டு, முழுமையாகத் தீயணைக்கப்படும். மேலும், குறைந்த அளவு நீரைப் பயன்படுத்தித் தீயை அணைக்க முடியும். ஏறக்குறைய 50 சதவீத நீர் இதனால் சேமிக்கப்படுகிறது. அது மட்டுமல்ல, தீயை மிக விரைவாக இந்த ஜெல் அணைத்துவிடும். இதை ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளுக்குக் கெடாமல் வைத்திருக்க முடியும்.

ஓசோனும் தீயும்...

தீயணைப்புக் கருவிகளில் ஹேலோன் 1301 (Halon 1301) என்ற வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது. ஓசோன் மண்டலத்தை இந்த வேதிப் பொருள் தாக்குவதால் புவி வெப்ப பாதிப்புகள் ஏற்படுகின்றன. 

இதற்கு மாற்றாக உள்ள ஹெப்டா ஃப்ளூரோ ப்ரோப்பேன் (HFC227ea) என்ற வேதிப்பொருள், ஓசோன் மண்டலத்தைப் பாதிப்பதில்லை. இது மின்சாரம் கடத்தாது, பொருட்களையும் அரிக்காது. ராணுவ விஞ்ஞானிகள் உருவாக்கிய உலோக ஆக்சைட் வினையூக்கி (Catalyst) மூலம் குறைந்த செலவில் இந்தத் தீயணைக்கும் வேதிபொருளைத் தயாரிக்கும் முறை இந்தியாவில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. வணிக ரீதியாக இதைத் தயாரிக்கும் தொழில்நுட்பம் தனியார் துறைக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யாமல் உள்நாட்டிலேயே தயாரிக்கும் நிலை உருவாகியிருக்கிறது.

‘டி-72’ ராணுவ டாங்கில் செய்யப்பட்ட சோதனை முயற்சியில், இந்த வேதிப்பொருள், தீத்தடுப்பில் ஹேலோனைவிட சிறந்தது என்று நிரூபணமாகி யிருக்கிறது. 80 சதவீத தீயணைப்புப் பொருட்கள், ராணுவம் சாராத துறைகளில் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் ஓசோன் பாதிப்பில்லா தீயணைப்பு, பொதுவெளியிலும் சாத்தியமாக்கப்பட்டிருக்கிறது.

தீ அணுகு - தீ அண்மை

தீயணைப்புப் பணியில் தண்ணீர், வேதிப் பொருட்களைப் போல மிக முக்கியமானது தீயணைப்பு வீரர்களின் உடை. 
தீயணைப்பு வீரர்கள் தீ விபத்து ஏற்பட்ட கட்டிடங்களுக்கு உள்ளே நுழைந்து தீப்பிழம்புகளுக்கு மிக அருகில் சென்று உயிர்களைக் காப்பாற்ற இந்த உடைதான் உதவுகிறது. தீயணைப்பு வீரர்கள் பயன்படுத்தும் பாதுகாப்பு உடைகளில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று தீ அணுகு உடை (Fire Approach Suit). அடுத்தது தீ அண்மை உடை (Fire Proximity Suit). இரண்டிற்கும் என்ன வேறுபாடு? அணுகு உடையைவிட, அண்மை உடையணிந்த வீரர்கள் நெருப்புக்கு மிக அருகில் செல்ல முடியும்.

தீயணைப்பு உடை இடைஞ்சல்

தீயணைப்பு உடை, வீரர்களுக்கு மிக முக்கியம். வேகமாக இயங்க வேண்டிய அவசரச் சூழலில் பலஅடுக்குகளைக் கொண்ட எடை அதிகமான உடையை அணிந்துகொண்டு எப்படி உயிர் காப்பது? தடிமனான இந்த உடைகள் கை, கால்களின் அசைவுகளையும் மட்டுப்படுத்தி தீயணைப்பு வீரர்களின் நகர்வுத் தன்மையைப் (manoeuvrability) பாதிக்கும்.

இந்தக் குறைபாட்டைப் போக்கும் வகையில், ராணுவ விஞ்ஞானிகள் எடை குறைந்த தீயணைப்பு உடைகளை உருவாக்கியுள்ளனர். வழக்கமான தீயணைப்பு உடைகள் அலுமினியம் பூசப்பட்ட துணியாலானவை (Aluminised Fabric). ராணுவ விஞ்ஞானிகள் உருவாக்கிய தீ பாதுகாப்பு உடைகள் கலவை இழைகளால் நெய்யப்பட்டவை. (Blended Woven Fabric). இவை வழக்கமான தீயணைப்பு உடைகளைவிட 30 சதவீதம் எடை குறைந்தவை. இதனால் தீயணைப்பு வீரர்களுக்குக் கூடுதல் நகர்வுத் தன்மை கிடைக்கும். மூன்று பாதுகாப்பு அடுக்குகள் உள்ள அணுகு - உடையும், நான்கு பாதுகாப்பு அடுக்குகள் கொண்ட அண்மை - உடையும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ராணுவ வீரர்கள் மட்டுமின்றி பொதுமக்களின் உயிரையும் உடைமைகளையும் காக்கும் தீயணைப்பு வீரர்களின் பணியை இந்தப் பாதுகாப்பு உடைகள் இலகுவாக்குகின்றன.

தப்பிப்பு குழல்வலை

தீ விபத்து ஏற்பட்ட கட்டிடங்களிலிருந்து வெளியேற முடியாமல் புகையை சுவாசிப்பதால் ஏற்படும் மரணங்களும், நெருப்புக்குப் பலியாகாமல் கட்டிடங்களிலிருந்து குதிப்பதால் நிகழும் விபத்துகளும் அதிகம். படிக்கட்டுகளும், மின் தூக்கிகளும் (Lifts) தீயினால் பாதிக்கப்பட்ட நிலையில் அடுக்கு மாடிகளிலிருந்து மக்களைக் காப்பாற்றுவது எப்படி?

ராணுவ விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள ‘அவசரகால தப்பிப்பு குழல்வலை’ (Emergency Escape Chute) ஒரு உயிர் காக்கும் உபகரணம். தீப்பிடிக்காத கெவ்லார் (Kevlar) இழைகளால் பின்னப்பட்ட குழல் வடிவ வலையும், வலையினுள் அமைந்த குறுக்குச்சரிவு வலைகளும், இடையிடையே பொருத்தப்பட்ட அலுமினிய வளையங்களும் சேர்ந்ததே இந்த உபகரணம். இதன் அதிகபட்ச நீளம் (உயரம்!) 50 மீட்டர். அதாவது 16 ஆவது மாடி வரை இதைப் பயன்படுத்தலாம். இது ஏறக்குறைய 5 டன் எடையைத் தாங்கவல்லது. இதைப் பயன்படுத்த எந்தப் பயிற்சியும் தேவையில்லை. கீழிறங்க மட்டுமில்லை, மேலேறவும் இந்த வலை உதவும். ஹெலிகாப்டரில் பொருத்தி, ஆபத்தில் சிக்கியவர்களை மொட்டை மாடிகளிலிருந்து வான் வழியாக மீட்கவும் இதைப் பயன்படுத்தலாம்.

தீ-ண்டுவது துன்பமெனினும், ராணுவ விஞ்ஞானிகளின் தொழில்நுட்பத்தால் மரணங்களும் பாதிப்புகளும் குறைக்கப்படுவது மனதுக்கு இன்பம்.

ஆழம் எவ்வளவு?

2010 ஜூன் மாதத்தில், கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில், ஒரு குறுகலான சாலையில் சென்றுகொண்டிருந்த தண்ணீர் லாரி நிலை தடுமாறி நீர் நிறைந்த பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. ஆகாயத் தாமரைகள் நிரம்பிய அந்தப் பழைய கற்குவாரியிலிருந்து ஓட்டுநரையும் வாகனத்தையும் மீட்க தீயணைப்புத் துறையினர் போராடிக்கொண்டிருந்தனர். தகவல் கேள்விப்பட்ட டி.ஆர்.டி.ஓ நிறுவனம், இரண்டு இளம் விஞ்ஞானிகளை அங்கே அனுப்பிவைத்தது. விபத்து பகுதிக்குச் சென்ற விஞ்ஞானிகள் மீட்பு நிகழ்வுகளை உன்னிப்பாகக் கவனித்தனர். பழைய கற்குவாரி எவ்வளவு ஆழம் என்பதைத் தீயணைப்பு வீரர்களால் அனுமானிக்க முடியாததால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. ஏனெனில் 30 அடிக்கு மேல் ஆழமான பகுதிகளில் கருவிகளின் துணையின்றி நீச்சல் வீரர்களால் இறங்க முடியாது. மேலும், நீரின் அடிப்பகுதி கடினமான தரையா அல்லது ஆழப் புதைவதா என்ற செய்தியும் மீட்புப் பணிகளைத் திட்டமிடுவதற்கு மிக அவசியம்.

கடலின் ஆழத்தை அறிய கப்பல்களில் பயன்படுத்தும் சோனார்களின் ஆய்வில் ஈடுபட்டிருந்த இந்த விஞ்ஞானிகளுக்கு, நீர்நிலைகளின் ஆழங்களை அறிய சுலபமாகப் பயன்படுத்தக்கூடிய ஒரு கருவிக்கான தேவை புரிந்தது. உடனடியாக அதை வடிவமைக்கும் முயற்சியில் இறங்கினர். அடுத்து நடந்தது என்ன?

(பேசுவோம்...)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in