ரஜினி சரிதம் 03: ஆறிலிருந்து எழுபது வரை: தாயை இழந்து தவித்த ரஜினி!

ரஜினி சரிதம் 03: ஆறிலிருந்து எழுபது வரை: தாயை இழந்து தவித்த ரஜினி!

பதினாறாம் நூற்றாண்டில், மராட்டியம் தொடங்கி கர்நாடகம் வரை ஆட்சி செய்தவர் பீஜப்பூர் சுல்தான். அவரிடம் படைத் தலைவராக இருந்தவர் ஷாஜி போன்ஸ்லே. ஷாஜியின் இரண்டாம் மனைவியான ஜிஜா பாய்க்குப் பிறந்தவர்தான் சிவாஜி. பீஜப்பூர் சுல்தானிடமிருந்து மராட்டியத்தை வென்று, கி.பி. 1674-ல் மன்னராக முடிசூட்டிக்கொண்டு, ‘சத்ரபதி’ ஆனார் சிவாஜி. பின்னர் 1676-ல் தென்னிந்தியாவின் மீது படையெடுத்து வந்தார். கர்நாடகம் தொடங்கி பீஜப்பூர் சுல்தானின் ஆதிக்கத்திலிருந்த செஞ்சிக்கோட்டை, வேலூர் கோட்டை ஆகியவற்றையும் கைப்பற்றிய சிவாஜி, கடலூரையும் கைப்பற்றினார்.

பின்னர், தஞ்சைக்கு வடக்கே 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் கரை வரையில் வென்று, அங்கிருக்கும் திருமழபாடி என்ற ஊரில் முகாமிட்டார். அப்போது, தஞ்சையை ஆண்டுவந்த தனது தம்பி ஏகோஜியுடன் (ஷாஜி போன்ஸ்லேயின் முதல் மனைவியான துர்கா பாயின் மகன்தான் ஏகோஜி. சிவாஜியைவிட ஒரு வயது இளையவர்) ஓர் உடன்படிக்கை செய்துகொண்டார் சிவாஜி. தான் வென்ற தஞ்சைப் பகுதிகளைத் தனது படைத் தலைவரான ரகுநாத் பந்த் என்பவரிடம் கொடுத்து ஆட்சி செய்துவரும்படி பணித்தார். தனது படைப்பிரிவுகளில் ஐந்தில் ஒரு பகுதியையும் ரகுநாத் பந்திடம் விட்டுவிட்டு, மராட்டியத் தலைநகருக்கு சிவாஜி திரும்பியதாக தமிழக வரலாறு கூறுகிறது (ஆதாரம்: தமிழ்நாடு அரசுக் கருவூலக் குறிப்பேடுகள், தஞ்சாவூர்).

தமிழகத்திலும் கர்நாடகத்திலும் மராட்டிய ஆட்சியின் நீட்சியானது 19-ம் நூற்றாண்டின் இறுதிவரை நீடித்தது. சிவாஜி தென்னிந்தியா நோக்கிப் படையெடுத்து வந்தபோது, அவரது பெரும் படையில் 30 ஆயிரம் குதிரைப் படை வீரர்களும் 20 ஆயிரம் காலாட்படை வீரர்களும் இருந்தனர். மராட்டியத்தைப் பூர்விகமாகக் கொண்ட பல சமூகத்தவரும் சிவாஜியின் படையில் இருந்தனர். அதில் மராட்டியத்தின் கெய்க்வாட்களும் அடக்கம். பெங்களூரு, வேலூர், கடலூர், செஞ்சி தொடங்கி தஞ்சை வரை ரகுநாத் பந்த்தின் தலைமையிலான படையணிகளில் இருந்த வீரர்கள் குடியேறி வாழ்ந்தனர்.

நாச்சிக்குப்பத்தில் பிறந்த ரானோஜி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பூர்விகத்தைத் தெரிந்துகொள்ள, மராட்டிய ஆட்சியைக் குறித்துக் கொஞ்சம் தெரிந்துகொள்வது நலமாக இருக்கும் என்பதால்தான் இந்த முன்னுரை நமக்கு அவசியமாகிறது. ரஜினியின் அண்ணன் சத்யநாராயண ராவ், தங்களது பூர்விகம் குறித்து அளித்திருக்கும் பல பேட்டிகளில், “எனது அப்பா ரானோஜி ராவ் கெய்க்வாட்டின் மூதாதைகள், மராட்டியப் படையில் பணியாற்றியவர்கள். அன்றைய பீஜப்பூர் சுல்தானியமாக இருந்த, தமிழகத்தின் இன்றைய கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நாச்சிக்குப்பம் என்கிற கிராமத்தில் குடியேறி வாழ்ந்தவர் எனது தாத்தா. எனது அப்பா ரானோஜி ராவ் நாச்சிக்குப்பத்தில் பிறந்தவர்தான். அம்மா ராம் பாயின் பூர்விகம், அன்றைய கோயம்புத்தூர் மாவட்டம் கொள்ளேகால் பக்கத்தில் இருக்கும் நேரலஹட்டி என்ற கிராமம். அப்பாவுக்குக் கர்நாடக மாநிலக் காவல் துறையில் வேலை கிடைத்தது. அதனால் பெங்களூருவின் ஹனுமந்த் நகரில் குடியேறினோம். நான், அக்கா அஸ்வத் பானு பாய், தம்பிகள் நாகேசுவர ராவ், சிவாஜி ராவ் ஆகிய நால்வருமே பெங்களூருவில் பிறந்தோம். தம்பி சிவாஜி ராவ், வாணிவிலாஸ் அரசு மருத்துவமனையில் 12.12.1950 அன்று இரவு 11.55 மணிக்குத் திருவோணம் நட்சத்திரம், மகர ராசியில் பிறந்தார்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

சிவாஜி ராவ் எடை குறைவான குழந்தையாகப் பிறந்ததைக் கண்ட அக்கம் பக்கத்துப் பெண்கள், ‘நோஞ்சான் குழந்தை’ என்று கூறியதை மனதில் ஏந்திக்கொண்ட அம்மா ராம் பாய், குழந்தையைத் தனது வயிற்றுச் சூட்டிலேயே வைத்து வளர்த்துவந்தார். நேர்மையான கான்ஸ்டபிளாக இருந்த ரானோஜி ராவ், தனது சொற்ப ஊதியத்தில் பெரிய குடும்பத்தை நடத்த முடியாமல் அல்லாடினார். தான் பட்டினி கிடந்தாலும், பெற்ற பிள்ளைகளின் வயிறு காயாமல் பார்த்துக்கொண்டார் ராம் பாய். ரானோஜிக்குத் தலைமைக் காவலராகப் பதவி உயர்வு கிடைத்ததும் குடும்பம் வறுமையிலிருந்து கொஞ்சம் மீண்டது. சிவாஜி ராவை நோஞ்சான் குழந்தை என்று சொன்ன பெண்கள், இப்போது ‘ரொம்ப சுட்டிப் பையனா இருக்கான்’ என்று வியக்கும் விதமாக, துறுதுறுப்பான குழந்தையாக வளர்த்தெடுத்தார் ராம் பாய். வீட்டில் தாய்மொழியான மராத்தியைப் பேசினாலும் சிவாஜி ராவைப் பள்ளியில் கன்னட மீடியத்தில் சேர்த்தனர்.

துடித்துப்போன தாய்

இரண்டாம் வகுப்பில் அடியெடுத்து வைத்த சிவாஜி ராவ், ஒருநாள் கடும் காய்ச்சலுடன் வீடு வந்ததைக் கண்டு துடித்துப்போனார் ராம் பாய். மகனைத் தூக்கிக்கொண்டு மருத்துவரிடம் போனபோது அது மஞ்சள் காமாலையால் வந்த கொடுங்காய்ச்சல் என்று தெரிந்தது. அந்த நோய்க்கு அப்போது தடுப்பூசியோ சிகிச்சையோ இல்லை.

மனதைக் கல்லாக்கிக்கொண்டு ஒரு முடிவுக்கு வந்தார். அதன்பிறகு நடந்தவற்றை ரஜினியின் அண்ணன் சத்யநாராயண ராவ் விவரிக்கிறார்:

“அந்தக் காலத்தில் விஷக் காய்ச்சல் எதுவானாலும் சூடு போட்டால் காய்ச்சல் குணமாகி நோயும் நீங்கிவிடும்கிறது நம்பிக்கை. எங்க அம்மா சாமிகிட்ட வேண்டிக்கொண்டு, சிவாஜிக்கு மூக்கின் மேலேயும், இடப்பக்கம் நெற்றிப் பொட்டிலும் சூடு வெச்சாங்க. அதனால் ஏற்பட்ட வலியால் சிவாஜி துடித்ததைவிட, அம்மா அதிகமாகத் துடிச்சாங்க. இப்போதும் என் தம்பியின் முகத்தில் அந்தத் தழும்புகளைப் பார்க்கலாம். அவன் சினிமாவில் ஹீரோவாக நடிக்கத் தொடங்கிபோது, ‘வில்லனுக்குத் தழும்பு இருந்தா பிரச்சினையில்ல... ஆனா, ஹீரோ முகத்தில் தழும்பு இருக்கவே கூடாது. உடனே பிளாஸ்டிக் சர்ஜரி செஞ்சிடுங்க’னு பலர் அறிவுரை சொன்னார்கள். ஆனால், ‘அம்மாவின் நினைவாக அந்தத் தழும்புகள் அப்படியே இருக்கட்டும்’னு தம்பி சொல்லிவிட்டார்” என்கிறார் சத்யநாராயண ராவ்.

தாயின் இழப்பை உணராத ரஜினி

ரஜினி 9 வயதுச் சிறுவனாக இருந்தபோது தனது அம்மாவை இழந்தார். அப்போது அவர் எவ்வளவு விளையாட்டுத்தனமாக இருந்தார் என்பதையும் பதிவு செய்திருக்கிறார் சத்யநாராயணா:

“குடும்பம், பிள்ளைகள், கணவன் தவிர, தன்னுடைய நலத்தைப் பற்றிக் கவலைப்படாதவங்க அம்மா. அவரைப் போல ஓர் உழைப்பாளியைப் பார்க்க முடியாது. அப்படிப்பட்டவங்க திடீரென்று ஒருநாள் படுத்துட்டாங்க. மருத்துவமனையில் சேர்த்தோம். ஆனால், அம்மாவுக்கு உடல்நிலை தேறவேயில்லை. அப்பா ஒடிஞ்சுபோயிட்டார். எனக்கு 15 வயசு இருக்கும். தம்பி சிவாஜி ரொம்ப விளையாட்டுப் பிள்ளையா இருந்தார். அம்மாவைக் காணோம்னு தேட ஆரம்பிச்சுட்டார். அவரைக் கூட்டிக்கொண்டு மருத்துவமனைக்குப் போனேன்.

சிவாஜியைத் தன் பக்கத்துல கூப்பிட்டுத் தலையைக் கோதிவிட்டாங்க அம்மா. அவரோட கையை எடுத்து முத்தம் கொடுத்தாங்க. அதுதான் சிவாஜிக்கு அம்மா கொடுத்த கடைசி முத்தம். மறுநாள் அம்மா எங்களைவிட்டுப் பிரிந்துவிட்டார். அம்மாவின் உடலுக்கு மாலை போட்டு வீட்டின் கூடத்தில் கிடத்தியிருந்தோம். அப்போதுகூட, அம்மா இறந்துவிட்டார் என்ற பிரக்ஞை இல்லாமல் தெருவில் தன் வயதையொத்த பிள்ளைகளுடன் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்தார் சிவாஜி. அம்மா உறங்கிக்கொண்டிருப்பதாகவே எண்ணிக்கொண்டிருந்தார். அம்மா இறந்துவிட்டார் என்பதை அவர் அன்றைய தினம் நம்பவில்லை. அடுத்த நாள் அம்மா வீட்டில் இல்லை என்று தெரிந்ததும், அம்மா இனி வரவே மாட்டார் என்பது புரிந்தததும் சிவாஜி துடித்த துடிப்பு… சொல்லி மாளாது. ‘அம்மாவைப் பார்க்கணும்’ என்று கதறி அழுதார். அன்று தொடங்கி அவரைத் தேற்றி வளர்த்தது என்னுடைய மனைவிதான்” என்று அந்தத் துயர நாட்களின் நினைவுகளைப் பகிர்ந்திருக்கிறார் சத்யநாராயணா.

உடைந்து அழுத ரஜினி

தாய் சொல்லைத் தட்டாத பிள்ளையாகப் பல படங்களில் நடித்திருக்கும் ரஜினி, அம்மா பற்றிய தனது நினைவுகளின் பகிர்வொன்றில், ‘அன்னை ஓர் ஆலயம்’ பட அனுபவம் தன்னால் மறக்க முடியாத ஒன்றாக அமைந்துவிட்டதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். “அம்மா இறந்தபோது அறியாச் சிறுவனாக இருந்தேன். தாயைக் கொண்டாடும் பாக்கியம் எனக்குக் கிடைக்காமல் போய்விட்டது. அதனால், எந்தத் தாயைப் பார்த்தாலும், எனது அம்மாவை நினைத்து ஏங்குகிறேன். ‘அன்னை ஓர் ஆலயம்’ படத்தில் இடம்பெற்ற ‘அம்மா, நீ சுமந்த பிள்ளை... இன்று சிறகொடிந்த கிள்ளை’ பாடல் காட்சியில் நடித்தபோது என் அம்மாவின் நினைவுகள் என் இதயத்தைக் கனமாக்கின. அப்போது அம்மாவை நினைத்து நிஜமாகவே அழுதுவிட்டேன். அந்தப் பாடல் காட்சியைத் தொலைக்காட்சியில் பார்த்தாலும் பாடலைக் கேட்டாலும் என்னையும் மீறி கண்கள் கலங்குவதை என்னால் இன்றுவரை கட்டுப்படுத்த முடியவில்லை” என்று கூறியிருக்கிறார் ரஜினி.

தாயிடம் இழந்த பாசத்தைத் தன்னுடைய அண்ணியிடம் பெற்று வளர்ந்த ரஜினி, பால்யம் கடந்து பதின்ம வயதில் அடியெடுத்து வைத்தபோது செய்த குறும்புகளுக்குக் கணக்கில்லை. ஒருநாள், பள்ளிக்குக் கிளம்ப வேண்டிய நேரத்தில், கண்ணாடியில் பார்த்து மீசை வரைந்து கொண்டிருந்தபோது அவரது முதுகில் மொத்தென்று விழுந்தது ஓர் அடி..!

சுதாரிப்பதற்குள் மேலும் பல அடிகள்..!

(சரிதம் பேசும்)

படங்கள் உதவி: ஞானம்

ஓவியம்: ஏ.பி.ஸ்ரீதர்​​​​​​​

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in