சமயம் வளர்த்த சான்றோர் 03: ஸ்ரீபகவன்நாம போதேந்திர சரஸ்வதி சுவாமிகள்

சமயம் வளர்த்த சான்றோர் 03: ஸ்ரீபகவன்நாம போதேந்திர சரஸ்வதி சுவாமிகள்

கே.சுந்தரராமன் 
sundararaman.k@hindutamil.co.in

காஞ்சி காமகோடி பீடத்தின் 59-வது மடாதிபதியாக விளங்கிய ஸ்ரீபகவன்நாம போதேந்திர சரஸ்வதி சுவாமிகள் 17-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். நாம பஜனை சம்பிரதாயத்தின் முதல் குரு என்று போற்றப்படுபவர்.  

தியானிப்பதாலும் யாகங்கள் செய்வதாலும், அர்ச்சனையாலும் அடையப்படும் பரம்பொருளை, அவனது திருநாமங்களை உச்சரிப்பதால் அடைந்து விடலாம் என்ற எளிய வழிபாட்டை நடைமுறைப்படுத்தியவர் ஸ்ரீபகவன்நாம போதேந்திர சரஸ்வதி சுவாமிகள். இவரது இயற்பெயர் புருஷோத்தமன்.

காஞ்சிபுரத்தில் வாழ்ந்து வந்த கேசவ பாண்டுரங்கன் - சுகுணா தம்பதிக்கு வெகுநாட்களாக குழந்தைப் பேறு இல்லை. அந்த மனவருத்தத்தை நீக்கும்படி, அவர்களது குருநாதர் ஸ்ரீஆத்ம போதேந்திரர் என்று அழைக்கப்படும் ஸ்ரீமத் விஸ்வாதிகேந்திர  சரஸ்வதி சுவாமிகளிடம் (காஞ்சி காமகோடி பீடத்தின் 58-வது மடாதிபதி) வேண்டிக் கொண்டனர். குருவும் அவர்களுக்கு இறையருளால் ஆண் மகன் பிறப்பான் என்று ஆசி வழங்கினார்.

குருவருளாலும் திருவருளாலும் இத்தம்பதிக்கு 1610-ம் ஆண்டு புருஷோத்தமன் பிறந்தார். ஒருநாள் குரு கைங்கர்யத்துக்கு செல்லும் தந்தையை வழிமறித்து, தானும் மடத்துக்கு வருவேன் என்று அடம்பிடித்தார் 5 வயதே ஆன புருஷோத்தமன். சரி என்று ஆமோதித்த தந்தை, மகனை அழைத்துக் கொண்டு மடத்துக்குச் சென்றார்.  

பீடத்தில் இருந்த ஸ்ரீஆத்ம போதேந்திரரைக் கண்டதும், யாரும் சொல்லாமலேயே தானாகவே விழுந்து வணங்கினார் புருஷோத்தமன். தன்முன் கைகட்டி, வாய்பொத்தி பவ்யமுடன் நின்ற புருஷோத்தமனைப் பார்த்து, “நல்லது. இனி, இன்றுமுதல் இவன் மடத்தின் குழந்தையாகவே வளர்வான்” என்று கூறுகிறார்.

இல்லம் திரும்பிய பாண்டுரங்கன், இதுகுறித்து  தன் மனைவியிடம் கூறுகிறார். இதைக்கேட்ட சுகுணா அம்மாள் சிறிதும் கலங்காமல், “பகவானின் விருப்பம், அதுதான் என்றால், அதற்கு நாம் என்ன செய்ய முடியும்” என்று கூறி மகிழ்கிறார்.

மடத்தில் வளர்ந்தாலும் தினமும் தன் பெற்றோரை சந்தித்து, அவர்களை வணங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் புருஷோத்தமன். மடத்தில் சேர்ந்த நாளில் இருந்து அவருக்கு கல்வி பயில ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஏழு வயதில் உபநயனம் செய்விக்கப்பட்டது.  

புருஷோத்தமனும் அவனது நண்பன் ஞானசேகரனும் பதினெட்டாவது வயதுக்குள் உபநிஷத்துகள், சாஸ்திரங்கள், புராண கதைகள் அனைத்தையும் கற்றனர். குருநாதர் அவர்களுக்கு பிரம்மவித்யையை உபதேசிப்பதாக கூறியிருந்தார்.  

அனைத்திலும் உயர்ந்தது நாராயணனின் நாமம் என்று உணர்ந்த புருஷோத்தமன், தினம் ஒரு லட்சத்து எட்டாயிரம் ராம நாமங்களை ஜபிப்பதாக (உச்சரிப்பதாக) ஆச்சாரியன் முன்னர் சங்கல்பம் செய்து கொண்டார்.

இதற்கிடையே புருஷோத்தமனின் பெற்றோர் ஒருவர்பின் ஒருவராக இறைவனடி சேர்ந்தனர்.  

அனைத்து சாஸ்திர சம்பிரதாயங்களைக் கற்றுணர்ந்ததால், ஆச்சாரிய பீடத்தில் அமர்வதற்கு உண்டான அனைத்து தகுதிகளும் புருஷோத்தமனுக்கு இருப்பதை அறிந்த குருநாதர், அதற்கான தருணம் வர உள்ளதை உணர்கிறார்.  

பக்தி மார்க்கத்தைப் பரப்பும் பொருட்டு, தான் காசி யாத்திரை செல்ல இருப்பதாக குருநாதர் புருஷோத்தமனிடம் தெரிவிக்கிறார். சில காலம் கழித்து புருஷோத்தமனையும் ஞானசேகரனையும் காசி வரச்சொல்லிவிட்டு யாத்திரை புறப்படுகிறார்.  

குருநாதரின் உத்தரவின்பேரின் சிறிது காலம் கழித்து, புருஷோத்தமனும் ஞானசேகரனும் காஞ்சியில் இருந்து காசிக்குப் புறப்படுகின்றனர்.  

ஜோதிடம் தெரிந்ததால், பயணத்தின் நடுவே, தான் இறைவனடி சேரப்போவதை உணர்ந்திருந்த ஞானசேகரன், புருஷோத்தமன்தான் தனக்கு இறுதி சடங்குகள் செய்ய வேண்டும் என்று கூறுகிறார். பாதி வழியிலேயே ஞானசேகரன் இறைவனடி சேர்கிறார்.  

காசி சென்று தனது குருநாதரை சந்தித்து இதுகுறித்து கூறி, கங்கையில் தன்னுயிரை மாய்த்துக் கொள்ளப் போவதாகக் கூறுகிறார் புருஷோத்தமன்.  

புருஷோத்தமனை அடுத்த பீடாதிபதியாக நியமிக்க எண்ணம் கொண்டிருந்த குருநாதர்,  இதைக் கேட்டதும், “உயிர் தியாகம் செய்வதற்கு பதில் துறவறம் மேற்கொள்.  அதுவே மறுபிறப்புதான்” என்கிறார்.  

புருஷோத்தமன் குருநாதரின் வாக்கை ஏற்று துறவறம் மேற்கொள்கிறார். சந்நியாசம் ஏற்று, குருநாதருடன் சில காலம் காசியில் தங்கியிருந்து அவரிடம் இருந்து பிரம்மவித்யை உபதேசம் ஏற்கிறார்.  

ஒரு சுபதினத்தில் குருநாதர், புருஷோத்தமனுக்கு பட்டாபிஷேகம் செய்வித்து, அவரை காஞ்சி காமகோடி பீடத்தின் 59-வது மடாதிபதி ஆக்குகிறார்.  அன்று முதல் புருஷோத்தமன், ஸ்ரீ போதேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்று அழைக்கப்படுகிறார்.  

காஞ்சியிலிருந்து பல இடங்களுக்கு யாத்திரை சென்று, நாம பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார் ஸ்ரீ பகவன்நாம போதேந்திர சரஸ்வதி சுவாமிகள். பல இடங்களில் வேதங்களுக்கு விளக்கவுரை அளிக்கிறார். ஏராளமான பாடல்களை இயற்றுகிறார்.  

இவ்வாறு தென்திசை யாத்திரைக்கு  செல்லும்போது,  பூரி சென்று ஸ்ரீலட்சுமிதரர் என்ற மகானை தரிசித்து அவருடைய ‘பகவன்நாம கௌமுதி’ என்ற நாம சித்தாந்த க்ரந்தத்தை (ஓலைச் சுவடி) பெற்றுச் செல்லுமாறு கூறுகிறார் குருநாதர்.  

குருநாதர் ஆணைக்கிணங்க, ஸ்ரீபோதேந்திரர், பூரி சென்று ஸ்ரீலட்சுமிதரர் இல்லத்தை அடைகிறார். ஆனால், அப்போது லட்சுமிதரர் இறைவனடி சேர்ந்திருந்தார். உள்ளே சென்று அச்சமயத்தில் அவரது மகன் ஸ்ரீஜகந்நாத பண்டிதரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று எண்ணி, அவரது இல்ல வாசலில் அமர்ந்து நாம ஜபம் செய்யத் தொடங்குகிறார்.  

அப்போது ஒரு தம்பதி ஜகந்நாத  பண்டிதர் இல்லத்துக்கு வருகின்றனர்.  தன் மனைவி வேற்று மதத்தினரால் கொடுமை செய்யப்பட்டதையும் அவர் அவர்களிடம் இருந்து தப்பி வந்துள்ளார் என்பதையும் பண்டிதரிடம் கூறுகிறார் கணவர். இதைக் கேட்ட பண்டிதர், அவர்களை மூன்று முறை ராம நாமத்தைக் கூறிவிட்டு முன்புபோல் சேர்ந்து வாழலாம் என்கிறார். இதைக் கேட்ட பண்டிதரின் அன்னை, ஒருமுறை ராம நாமம் சொன்னாலே போதுமானது என்கிறார்.

அப்போது அவரது இல்ல வாசலில் பகவன் நாம ஜபம் செய்து கொண்டிருக்கும் ஸ்ரீபோதேந்திரர், அதற்கு ஆதாரம் ஏதேனும் உள்ளதா என்று வினவுகிறார்.

தனது தந்தை எழுதிய பகவன்நாம கௌமுதி க்ரந்தம்தான் அதற்கு ஆதாரம் என்று கூறி, அந்த ஓலைச்சுவடியை ஸ்ரீ போதேந்திரரிடம் அளிக்கிறார் ஸ்ரீஜகந்நாத பண்டிதர். ஸ்ரீபோதேந்திரரும் அந்த நூலைப் படித்து அதன்படியே நடக்க வேண்டும் என்று அந்த தம்பதியிடம் கூறுகிறார்.

அதன்படி இருவரும் நதிக்கரைக்குச் சென்று ராம நாமம் ஜபித்து நதியில் நீராடுகின்றனர். அதன்பின்னர் இருவரும் சேர்ந்து  போதேந்திரரை வணங்கிச் சென்றனர்.  

போதேந்திரர் பல நூல்களை எழுதினார். குருநாதர் காஞ்சி வந்தடைந்ததும், தான் எழுதிய பகவன்நாம ரசோதயம், பகவன்நாம ரஸார்ணவம், பகவன்நாம ரஸாயனம் ஆகியவற்றை தனது குருநாதரிடம் சமர்ப்பிக்கிறார்.  

இதைக் கண்டு மகிழ்ந்த குருநாதர், பகவன்நாம மகிமையை நாடு முழுவதும் சென்று பிரச்சாரம் செய்யும்படி கூறுகிறார். அதன்படி நாம பிரச்சாரம் செய்யக் கிளம்பிய ஸ்ரீபோதேந்திரர் வழியில் திருவிசநல்லூர் ஸ்ரீதர அய்யாவாளை சந்திக்கிறார். இருவரும் சேர்ந்து பகவன்நாம பிரச்சாரம் மேற்கொள்கின்றனர்.

நீடாமங்கலம் அருகே உள்ள பெரம்பூரில் முகாமிட்டிருந்த ஸ்ரீபோதேந்திரர், ஒருவர் இல்லத்தில் உணவருந்தினார். அவர்கள் வீட்டில் உள்ள வாய் பேச, காது கேட்க முடியாத சிறுவன், ஸ்ரீபோதேந்திரர் உணவருந்திய இலையில் சாப்பிட்டதும், இறை நாமங்களை பாடத் தொடங்கினான்.  

ஒருசமயம், ஆற்காடு நவாப் உட்பட சில பேருக்கு ப்ளேக் நோய் பரவியிருந்தது. அதற்கு மருந்தே இல்லாத சமயத்தில், நாம பஜனையே அதற்குத் தீர்வு என்று ஸ்ரீபோதேந்திரர் கூறினார். அதன்படி அவர்களும் நாம பஜனை செய்தனர். இவரை தூற்றிய மக்கள், பின்னர் இவர் மகிமை உணர்ந்து இவரிடம் சரண் புகுந்தனர்.

ஒருநாள், காவிரி நதிக்கரையில் சில குழந்தைகள் மணலில் விளையாடிக் கொண்டிருந்தனர். தனது அவதாரத்தை (பிரஜோத்பத்தி வருடம், புரட்டாசி மாத பவுர்ணமி தினம் – கிபி 1692) நிறைவு செய்து கொள்ள எண்ணிய ஸ்ரீபோதேந்திரர், அக்குழந்தைகளை அழைத்து அவரை மணலால் மூடும்படி கூறுகிறார். விளையாட்டு என்று எண்ணிய குழந்தைகள் அவ்வாறே செய்தனர்.  

மறுநாள் காலை ஸ்ரீபோதேந்திரரைத் தேடிய மக்கள், குழந்தைகள் சொன்ன இடத்தைத் தோண்டினர். அப்போது தாம் அந்த சமாதியில் உள்ளதாக அசரீரி ஒலித்ததாம்.  

பின்னர், நூறு ஆண்டுகள் கழித்து மருதாநல்லூர் சத்குரு சுவாமிகள், போதேந்திரருக்கு அதிஷ்டானம் எழுப்ப எண்ணினார். கோவிந்தபுரம் முழுவதும் அவரது சமாதியைத் தேடியபோது ஓரிடத்தில் இருந்து ‘ராம ராம ராம ராம’ சப்தம் கேட்டதாம்.  

உடனே, தஞ்சாவூரை ஆட்சிபுரிந்த மராட்டிய மன்னரிடம் நிதி பெற்று  பகவன்நாம போதேந்திரருக்கு அதிஷ்டானம் எழுப்பினார் சத்குரு. அன்றைய தினத்தில் இருந்து இங்கு புரட்டாசி மாத பவுர்ணமியில் தொடங்கி மஹாளய அமாவாசை வரை 15 நாட்கள் சிறப்பு ஆராதனை உற்சவம் நடைபெறுகிறது. ஏராளமான பாகவதர்கள் பங்குபெற்று இசை நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம்.  

தினம் அவரது அதிஷ்டானத்தில் காலையில் சுப்ரபாத சேவை, உஞ்சவிருத்தி, ஆஞ்சநேயர் அபிஷேகம், அதிஷ்டான பூஜை, சமாராதனை நடைபெறும். மாலையில் சம்பிரதாய பூஜை, விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், அதிஷ்டான பூஜை, டோலோற்சவம் நடைபெறும்.

கும்பகோணத்தில் இருந்து 12 கிமீ தொலைவில் உள்ள திருவிடைமருதூருக்கு அருகே கோவிந்தபுரத்தில் உள்ளது ஸ்ரீ பகவன்நாம போதேந்திரரின் அதிஷ்டானம்.

தென் பெண்ணை நதிக்கரையில்..!

இதற்கிடையே, தேசம் முழுவதும் யாத்திரை மேற்கொண்ட ஸ்ரீ பகவன்நாம போதேந்திரரின் குருநாதர்  ஸ்ரீ ஆத்ம போதேந்திரர், காசியில் பல காலம் தங்கினார். 1638-ம் ஆண்டு, ஈஸ்வர வருடம் ஐப்பசி மாதம் பவுர்ணமிக்குப் பிறகு வரும் அஷ்டமி தினத்தில் தென்பெண்ணை நதிக்கரையில் (தட்சிண பினாகினி) சித்தியடைந்தார். அவரது அதிஷ்டானம் விழுப்புரம் மாவட்டத்தில் வடவாம்பலத்தில் இருப்பதை அறிந்து மகா பெரியவா (68-வது பீடாதிபதி) 1927-ம் ஆண்டு அதற்கு குடமுழுக்கு செய்வித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in