வனமே உன்னை வணங்குகிறேன்..! 12 - நாகர்ஹோளே: சில வனக்கதைகள்

வனமே உன்னை வணங்குகிறேன்..! 12 - நாகர்ஹோளே: சில வனக்கதைகள்

புலிகள் பாதுகாப்பில் மத்திய பிரதேசம் செலுத்தும் கவனத்துக்கு இணையான கவனத்தைத் தெற்கில் கர்நாடகம் செலுத்துகிறது. கர்நாடக வனப் பகுதிகளில் 524 புலிகள் இருக்கின்றன. மத்திய பிரதேசத்தில் 526 புலிகள் உள்ளன. இவ்விரு மாநிலங்களின் மெனக்கிடலை எடுத்துச்சொல்ல இதைவிட வேறு சான்று தேவையா என்ன?

மத்திய பிரதேசத்தின் பென்ச் கொடுத்த பிரம்மாண்டத்துக்கு சற்றும் குறையாத பிரமிப்பைக் கர்நாடகத்தின் நாகர்ஹோளே புலிகள் காப்பகமும் தரும். அங்கே காணக்கிடைக்கும் யானைகளும், புலிகளும், சிறுத்தைகளும், கருஞ்சிறுத்தைகளும், செந்நாய்களும், பல்வேறு பறவைகளும், ஓடைகளும், சிற்றருவியும், மலைப்பாதைகளும் மனதைக் கவரும்.

எல்லாப் பருவத்துக்கும் ஏற்றது

நீலகிரி உயிர்கோளப் பகுதி மொத்தம் 6.000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்து கிடக்கிறது. இதில் முதுமலை, பந்திப்பூர், வயநாடு, நாகர்ஹோளே என நான்கு புலிகள் காப்பகங்கள் உள்ளன. இவற்றில், கர்நாடக மாநிலத்தின் நாகர்ஹோளே தேசியப் பூங்கா நாட்டின் 37-வது புலிகள் காப்பகமாக 1999-ல் அறிவிக்கப்பட்டது. மைசூரு - குடகு என இரண்டு மாவட்டங்களையும் நாகர்ஹோளே தொட்டுச் செல்கிறது. நாகர்ஹோளேவுக்கு எல்லாப் பருவத்திலும் குடும்பத்துடன் செல்லலாம். வனத்திற்குள் சவாரி செல்ல ஜீப், பேருந்துகளை இயக்குகிறது வனத் துறை. வனத்துறை வழிகாட்டி ஒருவர் உடன் வருவார். பெரும்பாலும் இவர் உள்ளூர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவராகவே இருப்பார்.

அறிவிப்பை மதியுங்கள்

“வனத்துக்குச் செல்லும்போது சில ஒழுக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். புகைப்பதற்கும், போதையில் திளைப்பதற்கும் வழிபாட்டுத் தலத்தை நீங்கள் தேர்வு செய்யமாட்டீர்கள் என்றால் வனத்தையும் அதற்குப் பயன்படுத்தாதீர்கள். விலங்குகளுக்குத் தேவையான எல்லாவற்றையும் வனம் நிறைவாக அளிக்கிறது. எனவே, நீங்கள் வன விலங்குகளுக்கு உணவிட வேண்டாம்.  ‘விலங்குகள் கடந்து செல்லும் இடம்' என்ற அறிவிப்புப் பலகையைப் பார்த்தால் அதை மதித்து நடக்கவும். இதை நான் அனுபவித்திருக்கிறேன். ஓரிடத்தில் சிறுத்தை நடமாடும் பகுதி என்று எழுதியிருந்தது. சற்றுத் தொலைவிலேயே அதை கவனித்த நான் மிகவும் மெதுவாக வாகனத்தை இயக்கினேன். இடது புறத்திலிருந்து ஒரு சிறுத்தை கடந்து சென்றது. ஆய்வுக்குப் பின்னரே வனத் துறை அந்தப் பலகைகளை அங்கு வைத்திருக்கிறது” என்கிறார் வனக் காதலரான ந.செந்தில் குமரன்.
கடந்த வாரம் பென்ச் ‘காலர்வாலி’ புலிக் கதையை நமக்குச் சொன்ன செந்தில் குமரன், இந்த வாரம் நாகர்ஹோளே வனத்தில் நடந்த கதைகளோடு காத்திருக்கிறார்.

அறுந்த காது, தழும்பு முகம், ப்ளாக்கி…

“சராசரியாக வயதுவந்த ஒரு புலி, 40 சதுர கிலோமீட்டர் பகுதியை எல்லையாக நிர்ணயித்து தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்கிறது. இதேபோல், சிறுத்தைகளும், கறுஞ்சிறுத்தைகளும்கூட ஒரு குறிப்பிட்ட பரப்பளவைத் தங்கள் வசம் வைத்துக்கொள்கின்றன.

நாகர்ஹோளேவின் சிறப்புகளில் ஒன்று  ‘டெம்பிள் மேல்' அல்லது ‘கிங் லெப்பர்ட்' என்ற சிறுத்தை. இது மிகவும் பலசாலி. வனத்துக்குள் இருக்கும் பழங்குடி மக்களின் கோயில் மீது அடிக்கடி படுத்துக்கொள்வதால் அதற்கு  ‘டெம்பிள் மேல்' என்ற பெயர் வந்துவிட்டது. டெம்பிள் மேலுக்கும் மற்றொரு சிறுத்தைக்கும் இடையே எல்லைச் சண்டை மூண்டது. இதில் டெம்பிள் மேலின் இடது காது கிழிந்தது. அதன் பின்னர் இதற்கு ‘டார்ன் இயர்’ என்ற பெயரும் வந்தது. எதிர்த்துப் போட்டியிட்ட சிறுத்தைக்கு முகத்தில் தழுப்பு ஏற்பட்டதால் அந்தச் சிறுத்தைக்கு ஸ்கார் ஃபேஸ் என்ற பெயர் வந்தது.

அதேபோல், இந்த வனத்துக்குள் ‘ப்ளாக்கி’, ‘ஃபேன்டம் ஆஃப் கபினி’, ‘கோஸ்ட் ஆஃப் கபினி’ என்றெல்லாம் அழைக்கப்படும் கறுஞ்சிறுத்தை ஒன்று உள்ளது. இது முதுமலையிலிருந்து இடம்பெயர்ந்து வந்து இங்கே தனது எல்லையை நிர்ணயித்துக்கொண்டது. ப்ளாக்கிக்கும் ஸ்கார் ஃபேஸுக்கும் இடையேயும் எல்லைத் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இந்த முறை ஸ்கார்ஃபேஸ் வென்றுவிட்டது. இந்தச் சண்டையில் ப்ளாக்கிக்கு முகத்தில் வலது கண்ணுக்குக் கீழே காயம் ஏற்பட்டது.

உங்களுக்கு நல்வாய்ப்பு அமைந்தால் ப்ளாக்கி, டார்ன் இயர், ஸ்கார் ஃபேஸை இந்த வனத்தில் காண்பீர்கள்” என்கிறார் செந்தில் குமரன்.

நாகர்ஹோளேவின் ‘சூப்பர் மாம்’கள்

பென்ச் வனத்தில் ‘சூப்பர் மாம்’ எனப் பெயர்பெற்ற காலர்வாலியைப் போல நாகர்ஹோளேவில்  ‘ரஸ்ஸல் லைன் ஃபீமேல்' என்றொரு பெண் புலி இருக்கிறது. 10 வயதான இந்தப் புலி 4 முறை தலா 3 குட்டிகள் வீதம் ஈன்றுள்ளது. இதேபோல்  ‘பேக்வாட்டர் ஃபீமேல்' என்றொரு பெண் புலியும் இருக்கிறது. இதற்கு 6-ல் இருந்து 7 வயது இருக்கும். இது இருமுறை குட்டிகளை ஈன்றுள்ளது. முதல்முறை 3 ஆண் குட்டிகள், 2-வது முறையாக 3 குட்டிகளை ஈன்றது. இந்த இரு பெண் புலிகளுமே காலர்வாலியைப் போல குட்டிகளை ஒன்றரை ஆண்டுகளுக்குள் தனியாக இயங்கப் பழக்கப்படுத்தி அடுத்த இணை சேர்க்கைக்குத் தயாராகிவிடுகின்றன. கிட்டத்தட்ட காலர்வாலியைப் போன்ற பழக்கவழக்கம் கொண்டவை என்பதால் இவற்றை நாகர்ஹோளேவின் ‘சூப்பர் மாம்’கள் என்றழைக்கலாம்.

காப்புக் காட்டுக்குள்ளேயும் அத்துமீறல்

காப்புக் காட்டுக்குள்ளேயும்கூட வனவிலங்குகளுக்கு மனிதர்களால் அச்சுறுத்தல் இருக்கிறது என்று வேதனைப்படுகிறார் 
செந்தில்.

“2018 அக்டோபரில் நாகர்ஹோளேவுக்குச் சென்றபோது ஒரு செந்நாய்க் கூட்டத்தைப் படம் பிடித்தேன். அந்தப் படத்தை ‘ஜூம்’ செய்து பார்த்தபோதுதான் அதில் ஒரு நாயின் உடலில் இருந்த காயத்தையும், காயத்தில் இருந்த இரும்புக் கம்பியையும் பார்த்தேன். புலிக்கு வைக்கப்பட்ட கண்ணியில் அந்த நாய் சிக்கித் தப்பித்திருக்க வேண்டும். அந்தப் படத்தை உடனே வாட்ஸ்-அப் குழுமத்தில் பகிர்ந்துகொண்டேன். என்னைப் போன்ற வன உயிரி ஆர்வலர்கள் சிலர் இணைந்து இந்த வாட்ஸ் அப் குரூப்பை இயக்குகிறோம். இதில் வனத் துறை அதிகாரிகளையும் சேர்த்துள்ளோம். படத்தைப் பார்த்த நாகர்ஹோளே வன அதிகாரிகள் அந்த செந்நாயைக் கண்டுபிடித்து அதன் உடலிலிருந்து அந்தக் கண்ணியை அகற்றியதோடு அதன் காயத்தையும் சரி செய்தனர். நான் மீண்டும் 2019 ஜூலையில் நாகர்ஹோளே சென்றபோது அந்த செந்நாய் காயம் ஆறி தழும்புடன் இருந்தது. அதையும் புகைப்படமாகப் பதிவு செய்தேன். என்னால் ஒரு வன உயிர் பாதுகாக்கப்பட்டது என்பதில் எனக்கு அளப்பரிய மகிழ்ச்சி” என்று நெகிழ்கிறார்.

மனிதர்களிடம் மட்டுமல்ல வனத்துக்குள்ளும் இத்தனை கதைகள் இருக்கின்றன. இரவுப் படுக்கையில் குழந்தைகளுக்கு இதுபோன்ற கதைகளைச் சொல்லி வனத்தின் மீதான மரியாதையை விதைக்கலாமே.

அடுத்த வாரம் உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ஜிம் கார்பெட் புலிகள் காப்பகத்துக்குப் பயணப்படுவோம். பிரதமர் மோடி சென்றுவந்த பின்னர் அதீத கவனம் பெற்ற இந்த வனப் பகுதிக்கு விசிட் அடிக்கத் தயாராக இருங்கள்!

(பயணம் தொடரும்…)

படங்கள் உதவி: ந.செந்தில்குமரன்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in