கோலம் போடுறது யாகம்- வாசலுக்கு வண்ணம் சேர்க்கும் மங்களம் மாமி

கோலம் போடுறது யாகம்- வாசலுக்கு வண்ணம் சேர்க்கும் மங்களம் மாமி

கரு.முத்து
muthu.k@kamadenu.in

சாதாரண வண்ணக் கோலப்பொடிதான். அது ஸ்ரீரங்கம் மங்களம் மாமியின் கை விரல்களின் வழியே வாசலில் படர்கையில் அங்கு ஒரு மாயாஜாலமே நிகழ்கிறது. பார்ப்பவர்கள் பயபக்தியுடன் கன்னத்தில் போட்டுக்கொள்ளும் அளவுக்கு, கோலத்திலேயே கடவுள் உருவங்களை வரைகிறார்.

அம்பாள், பெருமாள், தாயார், மற்றும் அம்மன் ஓவியங்களைத் தரையில் தத்ரூபமாக உருவாக்கி அசத்துகிறார் மாமி.
வெளி ஆண்டாள் சன்னிதியில் இவர் போடும் கோலங்களைப் பார்ப்பதற்கு ரங்கமே திரண்டுவிடுகிறது. வீட்டிலும், கோயிலிலும் இவர் கோலம் போடும் காணொலிகள், யூ-டியூபில் லைக்ஸை அள்ளுகின்றன. பெங்களூரு, ஹைதராபாத், திருப்பதி என்று பல்வேறு நகரங்களுக்கும் பறந்து சென்று பக்திப் பரவசமூட்டும் கோலங்களைப் படைக்கிறார். அதுமட்டுமல்ல, சாதாரணக் குடும்பத் தலைவி எனும் எல்லைகளைத் தாண்டி, தனது கலைத்திறனால் மாதம் ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கிறார்.
மங்களம் மாமியைச் சந்திக்கச் சென்றபோது, வண்ணக் கோலங்கள் நிறைந்த வாசலை விட்டு வீட்டுக்குள் செல்லவே மனம் வரவில்லை.“எப்படி இவ்வளவு அழகான கோலங்களை உருவாக்குறீங்க?” என்று கேட்டதும், மெல்லிய புன்னகையுடன் பேசத் தொடங்கினார்.

“சின்ன வயசுல நெய்வேலில இருந்துதான் படிச்சேன். அப்பவே கலை ஆர்வம் வந்துடுச்சு. ரஃப் நோட்டு பூரா சாமி படம் வரைஞ்சு வச்சிருப்பேன். என்னையும் சேர்த்து வீட்ல நாலு பொண்ணுங்க. அதனால் எனக்குன்னு எந்த தனிக் கவனமும் கிடைக்கலை. எந்நேரமும் கிறுக்கிக்கிட்டே இருக்கியேன்னு திட்டுதான் விழும். ஆனா, ரங்கத்துல இருக்கிற எங்க மாமா நான் வரையிற ஓவியங்களைப் பார்த்துட்டு கலர் பென்சில் வாங்கிக்கொடுத்தார். வீட்ல இருக்கிற துளசிமாடத்துல எப்பவும் நான்தான் கோலம் போடுவேன். கோலம் மட்டும் போடாம மணிக்கணக்கா நின்னு கடவுள் உருவங்களையும் அதுல வரைஞ்சு வைப்பேன். எனக்குத் திருப்தியா வர்ற வரைக்கும் அழிச்சு அழிச்சுப் போட்டுகிட்டே யிருப்பேன். சித்திரமும் கைப்பழக்கம்கிறது என் விஷயத்துல உண்மையாச்சு.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in