இனிப்பு தடவிய வலி நிவாரணி

இனிப்பு தடவிய வலி நிவாரணி

கணேசகுமாரன்
ganeshkumar.k@kamadenu.in

கவிஞர் இசையின் 7- வது கவிதைத் தொகுப்பாக வந்திருக்கிறது ‘நாயகன் வில்லன் மற்றும் குணச்சித்திரன்’. வாழ்வின் அவலங்களைத் துயர் மிகும் தருணங்களைப் பகடி செய்வதன் மூலம் அத்துயர் கணத்திலிருந்து மீட்டுக்கொள்ளும் முயற்சியாகத் தொகுப்பு விரிகிறது. அன்றாடக் காட்சிகள் கவிஞர் இசையின் கண்களின் வழி வேறொரு பரிமாணத்தை உருவாக்குகின்றன. அதில் பெரும்பான்மையான வாசகர்கள் ஒத்துப்போவது கவிதைகளின் பலமெனக் கொள்ளலாம்.

அவசரகதியிலான வாழ்வின் நகர்த்தல்களை நின்று நிதானித்து அசைபோடச் செய்கிறார் தனது கவிதைகளில் இசை. கவித்துவம் ததும்புகிறதோ இல்லையோ, கடந்துபோன அற்புதங்களை எண்ணி நீள் பெருமூச்சு ஒன்றைத் தந்து செல்வதில் மாயவித்தைக்காரராய் செயல்படுகிறார் கவிஞர். ஒரு பிரமாதமான கதைசொல்லி போல் கவிதையின் நிகழ்வுகளைச் சொல்லிச்செல்லும் இசை, கண நேரத்தில் அதிர்ச்சிக்குள் தூக்கிப்போடும் வகைமைக் கவிதைகளை வாசகனுக்குத் தந்து திகைக்கச் செய்கிறார். பவிக்குட்டியின் வாழ்வில் திரும்பும் புன்னகைக்கு அதிர அதிர கொண்டாடும் அதே சமயம், புன்னகை பறிபோன நொடியைச் சொல்லி மகிழ்ச்சியை மடை மாற்றுகிறார்.

‘பெருவாழ்வு’ கவிதையின் ஒவ்வொரு வரியிலும் நரைத்த குழந்தை ஒன்று குதித்துக்கொண்டே இருக்கிறது. ஒரு ஜம்ப்... கவிஞனின் எழுத்தில் காலத்தே உறையும் அற்புதம் நிகழ்கிறது. இனி வாசகன் எங்கே செவ்வரளி பறிக்கும்போதும் எட்டு நிமிட அந்தரச் செயல்பாடை நினைத்து நினைத்து ஆனந்தம் கொள்வான். செவ்வரளி என்பது குறியீடானால் எந்த மலரையும் எந்த நட்சத்திரத்தையும் அவ்விடத்தில் பொருத்திக்கொள்ளலாம்.  ‘தெய்வதம்’ கவிதை நம் வாழ்வில் பல நேரங்களில் சந்திக்கும் ஒரு நிகழ்வு. சிவராசண்ணனைப் போலவே அனைவருக்கும் ஒரு மே ஃப்ளவர் மரத்தடி போல் ஒன்று இவ்வுலகில் உண்டல்லவா... அவ்விடத்தைத் தேடி ஓடச் செய்கிறது கவிதை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in