மகா பெரியவா அருளே ஆனந்தம் 40

மகா பெரியவா அருளே ஆனந்தம் 40

பி. சுவாமிநாதன்
swami1964@gmail.com

ஒவ்வொரு மாதமும் வருகிற பிரதோஷ தினத்தின்போது சர்வேஸ்வர சொரூபமாகத் திகழ்கிற மகா பெரியவாளைக் கட்டாயம் தரிசித்தே விட வேண்டும் என்பது பிரதோஷம் மாமாவின் தணியாத வேட்கை.

அது ஒரு சனிப் பிரதோஷ தினம்.

பிரதோஷ தினமே விசேஷம். அதுவும் அது திங்கள், சனிக்கிழமைகளில் அமைந்தால், கூடுதல் சிறப்பு. அன்றைய தினம் எல்லாம் வல்ல ஈஸ்வரனைத் தரிசித்தால், அளவற்ற பலன்களைப் பெறலாம் என்பது நம்பிக்கை.



சர்வேஸ்வர சொரூபமாகத் தான் அனுதினமும் வணங்கி வரும் மகா பெரியவாளை ஒரு சனிப் பிரதோஷ தினத்தில் நேரில் தரிசிக்க பிரதோஷம் மாமா ஆவல் கொண்டார்.
ஆனால், அதற்கான சூழ்நிலைகள் அமையவில்லை. அலுவலகத்தில் பிரதோஷம் மாமாவின் மேலதிகாரி அன்றைக்கென்று பார்த்து விடுப்பு தர மறுத்து விட்டார். காரணம்... ரயில்வே துறை ரீதியிலான முக்கியமான ஒரு ‘இன்ஸ்பெக் ஷனு’க்கு அன்றைக்குச் செல்ல வேண்டும்.

‘‘இன்றைக்கு நடக்கப்போகிற ‘இன்ஸ்பெக் ஷனு’க்குக் கட்டாயம் நீங்கள் வந்தே ஆக வேண்டும்’’ என்று கூறி பிரதோஷம் மாமா விண்ணப்பித்திருந்த விடுப்பை ரத்து செய்து விட்டார் அவருடைய மேலதிகாரி.

கண்கண்ட தெய்வத்தை எப்படியேனும் இந்தப் பிரதோஷ தினத்தில் வணங்க வேண்டும் என்கிற தாபத்தோடு கண்கள் கலங்க அந்த மேலதிகாரியின் முன் போய் நின்றார் பிரதோஷம் மாமா. தன்னுடைய விடுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக என்னென்னவோ சால்ஜாப்புகள் சொல்லிப் பார்த்தார். ஆனால், அதிகாரி மசியவில்லை. ‘‘டியூட்டிதான் ஃபர்ஸ்ட். இன்னிக்கு ‘இன்ஸ்பெக் ஷனு’க்கு நீங்கள்தான் என்னுடன் வர வேண்டும்’’ என்று வேலையில் கறாரான அந்த மேலதிகாரி சொல்லிவிட்டார்.
மேலதிகாரியின் உத்தரவை மீற முடியவில்லை. அதன்பின், பிரதோஷ தினத்தில் இருவரும் ‘இன்ஸ்பெக் ஷனு’க்குப் புறப்பட்டுப் போனார்கள்.

பொறுப்பான ‘இன்ஸ்பெக் ஷனி’ல் புத்தி இருந்தாலும், பிரதோஷம் மாமாவின் மனம் என்னவோ மகேஸ்வர சொரூபமான காஞ்சி மகானிடமே இருந்தது. மேலதிகாரி மீதும் குற்றம் சொல்ல முடியாது. அவரது நம்பிக்கைக்கு உகந்த நேர்மையான ஊழியராக விளங்கினார் பிரதோஷம் மாமா. அன்று தான் செல்லப் போகிற ‘இன்ஸ்பெக் ஷனு’க்குப் பிரதோஷம் மாமா உடன் வருவதை ஒரு பலமாக நினைத்தார் மேலதிகாரி.

முழு மனதோடு தன்னுடன் வராமல் பெயரளவுக்கு உடன் வருகிற பிரதோஷம் மாமாவின் தாபத்தையும் புரிந்து கொண்டார் மேலதிகாரி. எனவே, அவரைச் சாந்தப்படுத்தும் விதமாக அன்றைக்குப் பல பணிகளையும் தன் தலை மேல் போட்டுக் கொண்டு, மாமாவுக்கு அதிக சிரமம் தராமல் வேலைகளைத் தானே விழுந்து விழுந்து செய்தார்.

மனம் முழுக்க மகா பெரியவாளிடம் ஒப்படைத்துவிட்டு, உடலளவில் ‘இன்ஸ்பெக் ஷன்’ செல்கிற பிரதோஷம் மாமாவுக்கு அன்றைக்கு விடை (காளை) வாகனத்தின் மீது சர்வேஸ்வர சொரூபமாக நிச்சயம் தரிசனம் கொடுத்திருப்பார் மகா பெரியவா. அதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

சனிப் பிரதோஷமும் முடிந்தது. ‘இன்ஸ்பெக் ஷனு’ம் சுபமாக முடிந்தது.

அடுத்த பிரதோஷ தினத்தின்போது கர்நாடக மாநிலம் பெல்ஹாமில் முகாம் இருந்தார் மகா பெரியவா. இந்தமுறை மேலதிகாரியிடம் விடுப்புக்கு விண்ணப்பித்து விட்டு, உரிய அனுமதியும் பெற்று விட்டார். ரயிலில் பயணித்து பெல்ஹாமை அடைந்தார்.

தாயைத் தேடி தவழ்ந்து வரும் குழந்தையின் குதூகலத்துடன் முகாமுக்குள் நுழைந்தார். உள்ளே நுழைந்ததும் முதலில் எதிர்பட்டவர் கண்டன்! மகானுக்குக் கைங்கர்யம் செய்து வரும் அத்யந்த தொண்டர். பிரதோஷம் மாமாவைப் பார்த்து சிநேகமாகப் புன்னகைத்தார். அவரது புன்னகையையும் கண்டுகொள்ளாமல், தான் வணங்கும் சர்வேஸ்வர சொரூபம் எங்கே அமர்ந்து தரிசனம் தந்து கொண்டிருக்கிறது என்று நாலாப் பக்கமும் பார்வையைச் சுழற்றினார் பிரதோஷம் மாமா.

பக்தனின் ஏக்கத்தைப் புரிந்துகொண்டு விட்டார் கண்டன். ஆனாலும் விடவில்லை. ‘‘என்ன மாமா... இப்படிப் பண்ணிட்டேள்?’’ என்று பட்டும்படாமல் கேட்டார்.
கேள்விக்குப் பதில் சொல்லும் விதமாகத் தேடுதலை விடுத்து கண்டனிடம் பார்வையைச் செலுத்தினார். ‘‘என்ன பண்ணிட்டேன்?’’ முகம் நிறைய பதற்றமாக பிரதோஷம் மாமா கேட்டார்.

‘‘பதற்றப்படாதீங்கோ... போன பிரதோஷத்துக்கு உங்களைக் காணோமே... சாயங்காலம் பிரதோஷ பூஜையை முடிச்சுட்டு, பெரியவா வெளில வந்தா... இங்குமங்கும் கண்களை ஓட்டி உங்களைத் தேடினா... கன்னுக்குட்டியைத் தேடி பசுவே ‘ரோட்டு’க்கு வந்து நாலாப் பக்கமும் பாக்கறது மாதிரி இருந்தது பெரியவாளோட கார்யம்’’ என்றார் கண்டன் உருக்கமாக.

அவ்வளவுதான்... இந்த வார்த்தைகளைக் கேட்ட மாத்திரத்தில் பிரதோஷம் மாமாவின் கண்கள் குளமானது.

‘பெரியவாளே வெளியில் வந்து என்னைத் தேடினாரா?

வாழ்க்கையில் இதை விட பேறு ஏதேனும் இருக்கிறதா? கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும், கிடைக்கக்கூடியபாக்கியமா இது? யாருக்கு இத்தகைய அனுக்ரஹம்
வாய்க்கும்? நான் எத்தனை கொடுத்து வைத்திருக்கிறேன்...’ நினைத்துப் பார்த்த பிரதோஷம் மாமாவால் தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

பிரதோஷ வேளையில் தன்னைத் தரிசிக்க எத்தனையோ பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்தும், குறிப்பிட்ட ஒரு பக்தனைத் தேடி வாசலுக்கே வந்து எட்டிப் பார்க்கிறது இந்தப் பரப்பிரம்மம் என்றால், அந்த பாக்கியத்தை என்னவென்று சொல்வது?

பாசமா, கருணையா, அன்பா? அத்தனையும் சேர்ந்ததுதான் இந்தப் பரப்பிரம்மம். தன் அத்யந்த பக்தர்களிடம் அவ்வப்போது இத்தகைய உணர்வுகளை வெளிப்படுத்த மறந்ததில்லை மகான்!

தன் மீது நம்பிக்கை வைத்த பக்தனை மகான்களும், தெய்வங்களும் எந்த ஒரு பொழுதிலும் கைவிட்டதில்லை.

தாயைப் போல சேயின் கைப்பிடித்துத் தங்கள் பக்தனை அழைத்துச் செல்வார்கள். அது கண்களுக்குத் தெரியாதே தவிர, உண்மையான பக்தர்கள் மனதால் உணரலாம்.
கண்டனின் முகம் பார்த்துப் பேச முயன்ற பிரதோஷம் மாமாவின் குரல் தேம்பியது.

‘என்னைத் தேடினாரா... இந்த மானுடனை அந்த மகாத்மா தேடினாரா? அவரைத் தரிசிக்க வருகிற எத்தனையோ ஆயிரக்கணக்கான பக்தர்களில் நானும் ஒரு சாமானியன்தானே... எனக்கு இத்தனை பெரிய அங்கீகாரமா?’ என்று அவரது கண்களில் ஒரு பெருமிதம்... பூரிப்பு!

கண்டன் நடக்க... தாய்ப் பசுவைத் தேடிச் செல்லும் கன்றுக்குட்டிபோல் அவர் பின்னால் குடுகுடுவென்று ஓட்டமும் நடையுமாகச் சென்றார் பிரதோஷம் மாமா!
ஒரு கொட்டகைக்குள் சாதாரணமான மண் தரையில் ரொம்ப விஸ்ராந்தியாக வீற்றிருந்தார் பெரியவா.

தண்டம் சுமந்த அந்த தயாபரனின் திருமுக தரிசனம் கண்ட பின், நா தழுதழுக்க... உடல் சிலிர்க்க... வேரறுந்த மரம் போல் மகானின் திருவுரு முன் விழுந்தார். நமஸ்காரம் செய்து கொண்டே இருந்தார்.

எந்தவிதமான ‘ரியாக் ஷனு’ம் இல்லாமல் கட்டைபோல் இருந்தார் மகா பெரியவா. பார்வை மட்டும் ஒரு கணம் பிரதோஷம் மாமாவின் மீது விழுந்துவிட்டு வேறெங்கோ போனது. ஆனாலும், முகத்தில் எந்த ஒரு குறிப்பும் வெளிப்படவில்லை.

பெரியவாளுக்கு அருகே இருந்த இன்னொரு கைங்கர்யத் தொண்டர் திருச்சந்நிதியில் நமஸ்கரித்துவிட்டு, ‘‘போன பிரதோஷத்துக்கு இவருக்கு (மாமா) ‘லீவு’ கெடைக்
கலியாம். அதனால, தரிசனத்துக்கு வரமுடியலை. இனி, ஒவ்வொரு பிரதோஷத்துக்கும் பெரியவாளோட தடை இல்லா தரிசனம் வேணும்னு பிரார்த்தனை பண்றார்’’ என்று மகா ஸ்வாமிகளின் திருமுகம் பார்த்து மாமா சார்பில் பிரார்த்தித்துக் கொண்டார்.

மகானைத் தரிசிக்க வரும் பக்தர்களின் உள்ளத்தில் இருக்கும் ஆசையை, எண்ணங்களை அப்படியே படித்துவிட்டு, இதுபோல் பெரியவா திருச்சந்நிதியில் தெரிவிப்பது கைங்கர்யம் செய்பவர்களின் இயல்பு.

பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும்தானே! மகானுக்குப் பணிவிடை செய்வதில் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட இந்தச் சிப்பந்திகளின் வார்த்தைகளும் தடம் புரளாது.
கைங்கர்யம் செய்பவர் சொன்ன கூற்றை அப்படியே ஆமோதிப்பதுபோல் தன் இரு கரங்களையும் தலைக்கு மேலே கூப்பி வணங்கினார் மாமா.

பரப்பிரம்மத்திடம் இருந்து எந்தவிதமான வெளிப்பாடும் இல்லை. காரணம் அன்று காஷ்ட மவுனம்.

விழிகள் இடமும் வலமும் உருளவில்லை. விரலசைவோ, கையசைவோ இல்லை. தலையாட்டல் இல்லை. ஜாடை பரிமாற்றம் இல்லை.

இதுதான் காஷ்ட மவுனம். மவுனத்தில் பலவகை உண்டு. அவற்றுள் மூன்று வித மவுனம் பிரதானம்.

மனிதர்களின் நலனுக்காக மகான்கள் இதுபோல மவுன விரதம் இருந்தார்கள். அதுவும், மகா பெரியவா மவுன விரதம் என்றால், மலையே பெயர்ந்தாலும், உடலில் அசைவு இருக்காது.

மவுனத்தைப் பற்றி இந்த வேளையில் ஓரளவு தெரிந்து கொள்வது நம் அனைவருக்குமே பலன் தரும்!

(ஆனந்தம் தொடரும்...)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in