உலகம் சுற்றும் சினிமா - 19: உலகின் நையாண்டி வரலாறு

‘ஹிஸ்டரி ஆஃப் தி வேர்ல்ட்: பார்ட் 1’ (1981)
உலகம் சுற்றும் சினிமா - 19: உலகின் நையாண்டி வரலாறு

எந்த ஒரு விஷயமும் புனிதப்படுத்தப்படும்போது, அங்கே தவறுகள் பிறக்கின்றன. புனிதப்படுத்துதல் என்பது, அவ்விஷயத்தைக் கேள்விகளுக்கு அப்பாற்பட்டதாக்கிவிடுகிறது. கேள்விகளும், விமர்சனங்களும் இல்லாத இடத்தில் யதேச்சதிகாரமும், அநீதியும் பல்கிப் பெருகுகின்றன. இது போன்ற அநீதிகளை எதிர்த்துக்
கேள்வி கேட்பதே கலைத் துறையினரின் தலையாயக் கடமை.

பகடி சினிமா

ஹாலிவுட் சினிமாவில், ‘எதிர் கலாச்சார’த்தின் (Counter Culture) பங்கு மிகப் பெரியது. எதிர் கலாச்சாரத்தின் ஒரு பகுதியான பகடி சினிமாக்கள் (Parody Films) மூலம் ஹாலிவுட் படைப்பாளிகள் தங்கள் கலாச்சாரம், பழக்கவழக்கங்கள், ரசனைகள் என்று சகலத்தையும் விமர்சித்து சுயபரிசோதனை செய்துகொள்கின்றனர்.

ஹாலிவுட்டின் பகடி மன்னனான மெல் ப்ரூக்ஸ் 1981-ல், இயக்கி நடித்த ‘ஹிஸ்டரி ஆஃப் தி வேர்ல்ட் : பார்ட் 1’ படம் பகடி சினிமா வரலாற்றில் ஒரு மாபெரும் முயற்சி. ‘சைலன்ட் மூவி’(1976), ‘ஹை ஆன்சைக்டி’(1977), ‘ஸ்பேஸ் பால்ஸ்’(1987), ‘ராபின்ஹூட்: மென் இன் டைட்ஸ்’ (1993) போன்ற படங்களை இயக்கிய மெல் ப்ரூக்ஸ் ‘சிரிக்கச் சிந்திக்க’ சினிமா எடுத்துத்தள்ளிய மேதை.

‘ஹிஸ்டரி ஆஃப் தி வேர்ல்ட்: பார்ட் 1’ படத்தில், வரலாற்றில் நாம் பெரிதாக மதிக்கும் அனைத்தையும், அனைவரையும் சரமாரியாகக் கலாய்த்துத் தள்ளியிருப்பார் மெல் ப்ரூக்ஸ். கற்காலத்தைக் கடந்து மனிதன் நவ நாகரிகமானவனாக மாறினாலும் தன்னிடம் உள்ள முரணையும், முட்டாள்தனத்தையும் அவன் விட்டொழிக்கவில்லை என்பதை நக்கலும் நையாண்டியுமாக இந்தப் படத்தில் சொல்லியிருப்பார். ஏசு கிறிஸ்துவின் வாழ்வின் முக்கிய நிகழ்வான ‘இறுதி இரவுணவு’ (Last Supper), மோசஸ் கடலை இரண்டாகப் பிரித்து நடுவில் பாதை உருவாக்கியது போன்ற மத நிகழ்வுகளையும் ரசமாகப் பகடி செய்திருப்பார்.

‘பார்ட்-2’ பகடி

படத்தின் தலைப்பில் ‘பார்ட்-1’ என்றிருந்தாலும், இந்தப் படத்துக்குப் பார்ட்-2 இல்லை. தலைப்பில் உள்ள ‘பார்ட்-1’ என்ற விஷயமே ஒரு கிண்டல் சமாச்சாரம்தான். இங்கிலாந்தில் 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த சர் வால்டர் ரேலி (Sir Walter Raleigh) என்னும் ஆய்வாளர் தேசத்துரோக வழக்கில் கைதாகிச் சிறையில் இருந்தபோது ‘உலக வரலாறு: பாகம் ஒன்று’ எனும் புத்தகத்தை எழுதினார். விடுதலையான பிறகு இரண்டாம் பாகம் எழுதலாம் எனும் யோசனையிலிருந்தவரின் தலை, இங்கிலாந்தின் மன்னர் ஜேம்ஸின் கட்டளையின்பேரில் வெட்டி எறியப்பட்டது. அவரது புத்தகமே இப்படம் எடுக்கும் யோசனையை மெல் ப்ரூக்ஸுக்குக் கொடுத்ததாம். படத்தின் இறுதியில், இரண்டாம் பாகத்தில் வரப் போகும் காட்சிகள் என்று காட்டப்படுவதும் மெல் ப்ரூக்ஸின் குறும்புதான்!

கற்காலம் டு பிரஞ்சுப் புரட்சி

வரலாற்றின் பல காலகட்டங்களைப் பிரதிபலிக்கும் பல கதைகளின் கூட்டான ஆந்தாலஜி வகைப் படம்தான் இது.

கற்காலத்தில் மனிதன் நான்கு கால்களில் இருந்து இரண்டு கால்களில் நிமிர்ந்து நிற்கும் காட்சியில் தொடங்குகிறது கதை. இக்காட்சியில், புகழ்பெற்ற ‘2001: எ ஸ்பேஸ் ஒடிசி’ படத்தைக் கலாய்த்திருப்பார். கற்காலத்தில் திருமணம், இறுதிச் சடங்கு, ஓவியம், நகைச்சுவை உணர்வு, இசை எல்லாம் எப்படி பிறந்திருக்கும் என்று நையாண்டியாக விவரிக்கும் படம், அடுத்ததாக விவிலியத்தில் குறிப்பிடப்படும் ‘பத்துக் கட்டளைக’ளையும் பகடி செய்கிறது.



பிறகு, ரோமப் பேரரசர் சீசரின் ஆட்சிக்காலத்துக்கு நகரும் படம், உலகம் வியக்கும் ரோமானியக் கலாச்சாரத்தில் இருந்த முரண்களைச் சமரசமின்றி விமர்சிக்கிறது. ரோமானியக் காலத்துக்குப் பிறகு ஸ்பானிய மதமாற்றக் கொடுமைகளை நோக்கி நகரும் படம், ஸ்பானிய மதமாற்றத்தின்போது யூதர்கள் அனுபவித்த சித்ரவதைகளையும் நகைச்சுவை கலந்தே பேசுகிறது. இறுதியாக, கிங் லூயிக்கு எதிராக வெடித்த பிரெஞ்சுப் புரட்சியில் வந்து திரைப்படம் நிறைவுபெறுகிறது.

கற்காலக் கதையைத் தவிர்த்து மீதி அனைத்துக் கதைகளிலும் மெல் ப்ரூக்ஸ் நடித்திருப்பார். வரலாற்று நிகழ்வுகளைச் சிதைக்காமல், அந்நிகழ்வுகளுக்குள்ளேயே கதாபாத்திரங்களைப் பொருத்தி, அந்தக் கதாபாத்திரங்கள் வாயிலாகவே அவற்றைப் பகடி செய்திருப்பார் மெல் ப்ரூக்ஸ்.

வரலாறும் சமகாலமும்

சமகாலத்தில் உள்ள விஷயங்களை வரலாற்றுத் திரைக்கதையுடன் கோத்த விதத்திலும் மெல் ப்ரூக்ஸின் சாமர்த்தியம் வெளிப்பட்டிருக்கும். உதாரணமாக, லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் இருக்கும் உலகப் புகழ்பெற்ற ‘சீசர் பேலஸ்’ ஹோட்டலை ரோம் நகரில் சீசரின் அரண்மனையாகக் காட்டுவது, பிரெஞ்சுப் புரட்சியின் இறுதியில் மரண தண்டனை விதிக்கப்படும் கிங் லூயி கடைசி ஆசையாக ‘நோவாகெய்ன்’ எனும் அனஸ்தீஸியா மருந்து வேண்டும் என்று கேட்கும்போது, “மருத்துவ உலகில் அப்படி ஒரு மருந்தே இல்லை” என்று சொல்வார்கள். “அப்படியானால், அந்த மருந்தைக் கண்டுபிடிக்கும் வரை நான் காத்திருக்கத் தயார்” என்று கூறுவார் கிங் லூயி.

பிரஞ்சுப் புரட்சிக்குப் பிறகு 115 வருடங்கள் கழித்து நோவாகெய்ன் கண்டுபிடிக்கப்பட்டு மருத்துவ உலகில் பெரும் புரட்சியை உண்டு பண்ணியது. இப்படி சமகாலத்தையும் வரலாற்றையும் பின்னிப் பிணைந்து ஜாலியான திரைக்கதையை உருவாகியதற்காக மெல் ப்ரூக்ஸ் ஹாலிவுட் வரலாற்றில் நீங்காத இடம் பெற்றார்.

மனிதனுக்குள் இருக்கும் பாலியல் வக்கிரம், மத வெறி, அதிகார வெறி என்று சகலத்தையும் பற்றி விமர்சிப்பதால் இத்திரைப்படத்துக்கு தணிக்கை குழு ‘R’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இத்திரைப்படத்தில் வரும் நகைச்சுவை அனைத்தும் வயது வந்தவர்களுக்கான நகைச்சுவை மட்டுமே. தான் சார்ந்து இயங்கும் சமூகத்தின் வரலாற்றுக் குறைகளையும், சமகால நிகழ்வுகளையும் சமரசமின்றி பகடி செய்த மெல் ப்ரூக்ஸின் மற்ற படங்களிலும் நகைச்சுவைக்குக் குறைவிருக்காது.

மெல் ப்ரூக்ஸ் பாணி என்றே ஹாலிவுட்டில் ஒரு பதம் இருக்கிறது. சமூகத்தை நோக்கி தன் படைப்புகள் மூலம் நையாண்டித்தனத்துடனே கேள்வி எழுப்பி வந்தார் மெல் ப்ரூக்ஸ். அமெரிக்காவின் எதிர் கலாச்சாரத்தின் பாதையில் பின்னோக்கிப் பயணித்தால், அந்தப் பாதையில் மெல் ப்ரூக்ஸ் ஒரு பெரும் மைல் கல்லாக இருப்பார்.

கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனியைப் பிரித்த பெர்லின் சுவருக்கு அருகில் வாழ்ந்த இளைஞர்களின் கொண்டாட்டமான வாழ்க்கை
யைப் பற்றிப் பேசும் ஜெர்மானிய படத்தைப் பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in