போர்முனை டு தெருமுனை - 15: வான் குடை போற்றுதும்... வான் குடை போற்றுதும்!

போர்முனை டு தெருமுனை - 15: வான் குடை போற்றுதும்... வான் குடை போற்றுதும்!

ஆபத்துக் காலத்தில் விமானத்திலிருந்து பயணிகள் தப்பிக்க பாராசூட் உதவுவது பரவலாகப் பொதுவெளியில் தெரிந்த செய்தி. ஆனால், இந்த வான் குடை (அட, பாராசூட் தான்!) போர்த் தொழிலிலும் பெரும்பங்கு வகிக்கிறது. தாக்குதலில் ஈடுபடும் ராணுவ வீரர்கள் விமானத்திலிருந்து குதித்துத் தரையிறங்கவும், வீரர்களுக்குத் தேவையான ஆயுதங்களையும் தளவாடங்களையும் போர்முனையில் பத்திரமாகத் தரையிறக்கவும் வான் குடை தேவை. தாக்குதலுக்கு உள்ளான போர் விமானத்திலிருந்து தப்பிக்க, விமானி இருக்கையோடு தூக்கி வீசப்படுவார். அவர் பாதுகாப்பாகத் தரையிறங்க வான் குடை தேவை. நம் ‘விங் கமாண்டர்’ அபிநந்தன் உயிர் தப்புவதற்கு இந்த வான் குடைதான் உதவியது.

விரியும் வான் குடை

எப்படி வான் குடை வேலை செய்கிறது? சாலைமார்க்கமாகச் செல்ல முடியாத இடங்களுக்கு அல்லது ரகசியத் தாக்குதல் முறைகளைக் கையாள வேண்டிய நேரத்தில் வான் வழியே போர் வீரர்களை அனுப்ப நேரிடும். விமானத்திலிருந்து வான் குடை வீரர்கள் (Paratroopers) ஒவ்வொருவராகக் குதிப்பார்கள். அவர்கள் முதுகில் வான் குடைப் பையை அணிந்திருப்பார்கள். விமானத்திலிருந்து குதிக்கும் வீரர்களைச் சமநிலைப்படுத்த, சமநிலை வான் குடை(Stabiliser Parachute) உண்டு. இது அளவில் சிறியதாக இருக்கும். இது தவிர முதன்மை வான் குடை (Main Parachute) என்ற ஒன்று உண்டு. இது அளவில் பெரியது. இது
தான் வீரரைப் பத்திரமாகத் தரையிறக்கும்.

வான் குடைகள் நைலான் துணியினால் தைக்கப்பட்டவை. இந்தக் குடைகள் விரிவதற்கு ஏதுவாக நேர்த்தியாக மடிக்கப்பட்டு தனித்தனி உறைகளில் (Deployment Bags) வைக்கப்பட்டிருக்கும். விமானத்தில் ஒரு கயிறு (Static Line) கட்டப்பட்டிருக்கும். கயிற்றின் மறுமுனையானது சமநிலை வான் குடை மடித்து 
வைக்கப்பட்டுள்ள உறையில் கட்டப்பட்டிருக்கும். இப்படி ஒவ்வொரு வீரரும் தனித்தனியாக விமானத்தோடும் தனது முதுகுப் பையிலுள்ள வான் குடை உறையோடும் கயிற்றால் இணைக்கப்பட்டிருப்பார்.

வீரர்கள் ஒவ்வொருவராகக் குதிக்கும்போது, விமானத்தில் கட்டப்பட்டுள்ள கயிறு சமநிலை வான் குடையின் உறையை  உருவி எடுக்கும். இதனால் சமநிலை வான் குடை விரிந்து வீரரை நிலைப்படுத்தும். கயிறும் உறையும் விமானத்தோடு இணைந்திருக்கும். பிறகு அவற்றை விமானத்தின் உள்ளே இழுத்துக்கொள்வார்கள்.

திசுத்தாளும் வான் குடையும்

குதித்த வீரர் இறங்கியபடி இருப்பார். ஒரு குறிப்பிட்ட உயரத்தை அடைந்தவுடன் முதன்மை வான் குடை விரிய வேண்டும். எப்படி விரிப்பது? உணவகங்களில் திசுத்தாள் பெட்டி வைத்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள். ஒரு திசுத்தாளை உருவியதும் அது அடுத்த திசுத்தாளைக் கிளப்பிவிடும். அதைப் 
போலவே இங்கும் நடக்கிறது. சமநிலை வான் குடை கழற்றிவிடப்படும். கழற்றிவிடப்பட்ட வான் குடை, முதன்மை வான் குடையின் உறையை உருவிச் செல்லும். உயரத்தை வைத்தோ அல்லது நேரத்தை வைத்தோ தானியங்கி இயக்குக் கருவி (Automatic Activation Device) இப்படி வான் குடையை விரிக்கும்.
வான் குடை விரியவில்லை என்றால்? அதற்கும் வழியிருக்கிறது. அவசர காலத்தில் பயன்படுத்த நான்கு சக்கர வாகனங்களில் ஒரு கூடுதல் சக்கரம் வைக்கப்பட்டிருப்பது போல, வீரரின் முதுகுப் பையில் கூடுதல் வான் குடையும் (Reserve Parachute) உண்டு. இதற்கென்றே ஒரு கைப்பிடியும் (Ripcord) கொடுக்கப்பட்டிருக்கும். இந்தக் கைப்பிடியை இழுத்து அதை விரிக்கலாம். ஆக, விமானத்திலிருந்து குதிக்கும் வீரர் மூன்று வான் குடைகளோடு குதிக்க வேண்டும். இதன் எடை ஏறக்குறைய 25 கிலோ. ஒவ்வொரு வீரரும் 50 கிலோ எடையுள்ள ஆயுதங்களைச் சுமந்திருப்பார்கள். அது மட்டுமல்ல, மணிக்கு 400 கிலோமீட்டர் வேகத்தில் செல்கிற விமானத்திலிருந்து குதித்து ஆயுதங்களோடும் வான் குடைப் பையோடும் கீழ் நோக்கி வந்துகொண்டிருக்கும் வீரர், சடுதியில் வான் குடை விரிவதால் ஏற்படும் மேல் நோக்கிய விசையையும் அதனால் ஏற்படும் உடல் அதிர்ச்சியையும் தாங்க வேண்டும். இவற்றையெல்லாம் கடந்து தரையிறங்கினாலும் ஓய்வெடுக்க முடியாது. காத்திருக்கும் எதிரிகளோடு உடனடியாகப் போரிட வேண்டும். நமது வான் குடை வீரர்களை எவ்வளவு வாழ்த்தினாலும் தகும்!



ஆக்ராவில் ஆராய்ச்சி

மேலே சொல்லப்பட்டவை கதையல்ல நிஜம். இந்த வான் குடைக்கு ‘அதிவேகத் தந்திரத் தாக்குதல் வான் குடை’ (High Speed Tactical Assault Parachute) என்று பெயர். இதை வடிவமைத்து உருவாக்கியவர்கள் ஆக்ராவிலுள்ள டி.ஆர்.டி.ஓ நிறுவனத்தின் ‘வான்வழி வழங்கல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன’ (Aerial Delivery Research and Development Establishment -ADRDE) விஞ்ஞானிகள். விமானத்திலிருந்து ராணுவத் தளவாடங்களை வான் குடை மூலமாகத் தரையிறக்கும் தொழில்நுட்பத்தைக் கைவரப்பெற்றிருக்கிறார்கள் நமது ராணுவ விஞ்ஞானிகள்.

தரையிறங்கிய ராணுவ டாங்க்

ராணுவ வீரர்கள் வான் குடை மூலம் தரையிறங்குவதோடு, அவர்களுக்குத் தேவையான தளவாடங்களும் வான் குடையின் மூலம் பத்திரமாகத் தரையிறக்கப்படுகின்றன. விமானத்திலிருந்து ஒரு பேருந்து கீழே வீசப்பட்டு பத்திரமாகத் தரையிறங்கி மறுபடியும் நாம் அதில் பயணித்தால் எப்படியிருக்கும்? கற்பனை செய்துபாருங்கள். பேருந்தின் எடை 4 டன் தான். 13 டன் எடையுள்ள இலகுரக ராணுவ டாங்க் வாகனமே விமானத்திலிருந்து வீசப்பட்டுத் தரையிறக்கப்பட்டுள்ளது. அதுவும் மணிக்கு 400 கிலோமீட்டர் வேகத்தில் 4 கிலோமீட்டர் உயரத்தில் பறக்கிற விமானத்திலிருந்து!

இப்படி 15 டன் எடையுள்ள ராணுவத் தளவாடங்களைப் பாலைவனத்தில், சமவெளிகளில், அதி உயரமான பகுதிகளில் தரையிறக்கி சாதித்திருக்கிறார்கள் நமது ராணுவ விஞ்ஞானிகள். இந்தத் தொழில்நுட்பம் இந்திய ராணுவத்தின் வீச்செல்லைகளை விரிவுபடுத்தியிருக்கிறது. இந்தியக் குடிமக்களின் பாதுகாப்பைப் பலப்படுத்தியிருக்கிறது.



விமானத்தை நிறுத்த…

விமானத்தின் பயணத்தில் மிக முக்கியமான கட்டம், தரையிறக்கம். இது ஆபத்தானதும்கூட. விமானத்தைத் தரையிறக்க, படிப்படியாக உயரத்தைக் குறைப்பார் விமானி. படிப்படியாகக் கீழிறங்கும் விமானம் ஓடுபாதையைத் தொட்ட பிறகும் வேகமாகவே ஓடும். மிதிவண்டியின் பின் இருக்கையில் உட்கார்ந்து பயணம் செய்யும் ஒருவர், ஓடும் மிதிவண்டியிலிருந்து தொப்பென்று குதிக்காமல் ஓடியபடி இறங்குவார் அல்லவா? அதைப் போல, படிப்படியாக வேகத்தை விமானி குறைப்பார். அப்போதுதான் பயணிகளுக்குப் பாதிப்பில்லாமல் பயணம் அமையும்.

சாலையில் வாகனங்கள் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் சென்றால் அதுவே அதிவேகம்தான். ஆனால், பயணிகள் விமானத்தின் வேகம் எவ்வளவு தெரியுமா? ஏறக்குறைய மணிக்கு 1,000 கிலோமீட்டர். நவீன போர்விமானத்தின் குறைந்தபட்ச வேகம் ஏறக்குறைய மணிக்கு 1,200 கிலோமீட்டர். இவ்வளவு வேகத்தில் பறக்கும் விமானத்தில் பயண தூரத்தை சீக்கிரம் கடக்க முடியுமென்றாலும் தரையிறக்கும்போதுதான் சிக்கல். இதனால்தான் நீண்ட ஓடுபாதை தேவைப்படுகிறது.

மலைத்தொடர்கள் உள்ளிட்ட இயற்கைச் சூழலால், எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள விமானப்படைத் தளங்களில் நீண்ட ஓடுபாதை அமைப்பதற்கு வாய்ப்புகள் இருக்காது. இந்த நிலையில் எப்படிப் போர் விமானத்தைக் குறைந்த தூரத்தில் நிறுத்துவது?

வாலில் குடை

வானத்திலிருந்து தரைக்குச் செங்குத்தாக மட்டுமன்றி தரையில் கிடைமட்டமாகவும் வான் குடையைப் பயன்படுத்தலாம். வான் குடை எதிர்விசையை அதிகரித்து நிதானமாக வீரர்கள் தரையிறங்க உதவுகிறது. இந்த நுட்பத்தைப் பயன்படுத்தி, எதிர்ப்பு விசையை அதிகரிக்க வான் குடையை விமானத்தின் வால் பகுதியில் பொருத்துவார்கள். விமானம் ஓடுபாதையைத் தொட்ட பிறகு, விமானி வால் குடையை விரிப்பார். விரிந்த வால் குடை விமானத்தைப் பின்னோக்கி இழுக்கும். இதனால் விமானத்தின் வேகம் சீக்கிரம் குறைந்து, சிறிய ஓடுபாதையிலும் எல்லை மீறாமல் அதை நிறுத்த முடியும்.

ஒரு போர் விமானம் தரையிறங்க ஏறக்குறைய 1.5 கிலோமீட்டர் நீளமுள்ள ஓடுபாதை தேவை. வால் குடை மூலம் பாதி தூரத்திலேயே (0.75 கிலோமீட்டர்) விமானத்தை நிறுத்தலாம். வால் குடையின் தொழில்நுட்பப் பெயர், எதிர்விசை அல்லது நிறுத்தல் குடை (Drag or Brake Parachute). தேஜஸ், சுகோய்-30 உள்ளிட்ட விமானங்களின் நிறுத்தல் குடைகளை வடிவமைத்துள்ளனர் ராணுவ விஞ்ஞானிகள்.

ஆபத்து நேரத்தில் அபிநந்தன் போல போர் விமானிகள் தமது இருக்கையோடு தூக்கி வீசப்பட்டுத் தப்பிப்பார்கள் என்று பார்த்தோம். எப்படி?

(பேசுவோம்...)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in