நம்பிக்கை - சிறுகதை

நம்பிக்கை -  சிறுகதை

துடுப்பதி ரகுநாதன்
tsragu123@gmail.com

காட்சி 1:
காலை பத்து மணி இருக்கும். லோட்டஸ் அபார்ட்மென்ட்டில் வசிக்கும் ஆசிரியை தமிழ்ச்செல்வியின் வீட்டின் முன் நின்றுகொண்டு காலிங் பெல்லை அடித்தாள் ஸ்வேதா. ப்ளஸ் டூ மாணவி. தமிழ்ச்செல்வியிடம்தான் கணக்கு டியூஷன் படிக்கிறாள். அருகில் ஸ்வேதாவின் அம்மா.

கதவைத் திறந்த அழகேசனுக்கு அறுபத்தி ஐந்து வயதிருக்கும். அவர்தான் தமிழ்ச்செல்வியின் அப்பா.

“தாத்தா…டீச்சர் இருக்காங்களா?”

“என்ன ஸ்வேதா ஸ்கூலுக்குப் போகலையா? உனக்கு டியூஷன் மாலை ஆறு மணிக்குத்தானே?”

“ரெண்டு நாள்ல மேத்ஸ் எக்ஸாம் இருக்கு. அதான் லீவ் போட்டுப் படிச்சிட்டு இருக்கேன். ஒரு ஸம்ல டவுட்... புரியவே மாட்டேன்கிறது” என்றாள் ஸ்வேதா.

“உங்க மேடம் காய்கறி வாங்க கடைவீதிக்குப் போயிருக்காங்க. ஒரு பத்து நிமிஷத்துல வந்துடுவாங்க. நீ டியூஷன் ஹால்ல வெயிட் பண்ணும்மா” என்று சொன்ன அழகேசன் ‘சிட் அவுட்’டில் இருந்த சேரில் உட்கார்ந்துகொண்டு கையில் இருந்த பகவத் கீதையைப் பிரித்தார்.

ஸ்வேதா வழக்கமாக டியூஷன் நடக்கும் ஹாலுக்குப் போனாள். கூடவே அவள் தாயும் போய் அவள் பக்கத்தில் இன்னொரு சேரில் உட்கார்ந்துகொண்டாள்.
“அம்மா நீ வீட்டுக்குப் போ. டீச்சர் வந்ததும் டவுட்டைக் கிளியர் பண்ணிட்டு நானே வீட்டுக்கு வந்திடறேன்.”

“தனியா இருந்தா உனக்குப் பயமா இருக்காதா?”

“அதுதான் தாத்தா இருக்காரே...அப்புறம் என்ன பயம்?”

“அதுதாண்டி என் பயமே…”

காட்சி 2:

பிரேக்கிங் நியூஸாக சேனல்களில் அந்தச் செய்தி ஓடிக்கொண்டிருந்தது.

‘5,000 கோடி ரூபாய் ஊழல் வழக்கில் ஐ.நா.க கட்சித் தலைவர் நாகப்ப நல்லன் கைது’

‘கட்சித் தொண்டர்கள் கண்ணில் படும் கடைகள் மேல் எல்லாம் கல் வீசித் தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். தமிழகமெங்கும் கலவரம்’ சென்னை திருவான்மியூரில் உள்ள அந்த வீட்டில் டிவி பார்த்துக்கொண்டிருந்த லட்சுமியின் கண்ணில் பிரேக்கிங் நியூஸ் பட்டதும் அவளுக்குப் பதற்றம் தொற்றிக்கொண்டது. அவள் மகள் வனிதா கல்லூரிக்குப் புறப்பட்டுச் சென்று ஒரு மணி நேரம்கூட ஆகவில்லை. “கடவுளே எங்க மாட்டிட்டு இருக்காளோ” என்று மகளை நினைத்துப் பதறினாள்.

நினைத்ததுபோலவே, மவுன்ட் ரோடில் ஒரு கடைக்கு முன்னால் நடுங்கியபடி நின்றுகொண்டிருந்தாள் வனிதா. தெருவில் வாகனங்களே இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில கார்கள் படுவேகத்தில் விரைந்து சென்றன. சற்று முன்னர்தான் இந்தப் பகுதியில் கலவரம் நடத்திவிட்டுப் போயிருந்தது ஐ.நா.க தொண்டர் படை. தன்னைத் தவிர அந்தப் பிராந்தியத்திலேயே யாரும் இல்லையோ என்று தவித்துக்கொண்டிருந்தாள் வனிதா.

“டவுன் பஸ்ஸும் இல்லை.. இனி ஆட்டோவும் வராது” என்று தனக்குள் புலம்பிக்கொண்டிருந்த வனிதாவின் முன், ஒரு கார் வந்து நின்றது. பின் சீட்டிலிருந்து எட்டிப்பார்த்தது வனிதாவின் தோழிதான் - ஜெய.

“வா வனிதா… சீக்கிரம் ஏறிக்கோ. இப்போதைக்கு எந்த வண்டியும் வராது. எங்க வீட்டுக்கு வந்துடு. நிலைமை சரியானதும் எங்க அண்ணனை டூவீலர்ல உன்னை உங்க வீட்டுக்குக் கொண்டுபோய் விடச் சொல்றேன்” என்றாள் ஜெய.

அதுதான் சரி என்று பட்டது வனிதாவுக்கு. ஒன்றும் பேசாமல் ஜெயயின் காரில் ஏறிக்கொண்டாள். ராயப்பேட்டையில் இருக்கும் ஜெயயின் வீட்டில் போய் இறங்கியவுடன், செல்போனில் தாய் லட்சுமியைக் கூப்பிட்ட வனிதா, தான் பத்திரமாக ஜெய வீட்டில் இருப்பதாகத் தகவல் கொடுத்துவிட்டாள். அதற்குப் பிறகுதான் லட்சுமிக்கு உயிரே வந்ததுபோல் இருந்தது. விஷயத்தைக் கணவன் சுந்தரத்திடம் சொன்னாள்.

மாலை ஐந்து மணிக்கு நிலைமை கட்டுக்குள் வந்துவிட்டது. தனியார் கார்கள், பைக்குகள் சாலையில் சகஜமாகப் போகத் தொடங்கின.

வனிதா செல்போனில் லட்சுமியைக் கூப்பிட்டுச் சொன்னாள்.

“அம்மா! நான் இன்னும் அஞ்சு நிமிசத்துல இங்கேருந்து கிளம்பிடுவேன். ஜெய அண்ணன் அருண் என்னை பைக்ல கொண்டுவந்து விடறதா சொல்லியிருக்கார்” என்று வனிதா சொன்னதைக் கேட்டு, ஒரு நிமிடம் அமைதியான லட்சுமி, “அவங்களுக்கு எதுக்கும்மா சிரமம். அப்பாவே கிளம்பி அங்கே வந்துட்டு இருக்கார். ஒரு பத்து நிமிஷத்துல ரீச் ஆயிடுவார்” என்றாள். லட்சுமி சொன்னதைக் கேட்டதும் பக்கத்தில் உட்கார்ந்து காப்பி குடித்துக்கொண்டிருந்த சுந்தரத்திற்கு ஒன்றுமே புரியவில்லை.

லட்சுமி போனை வைத்தவுடன், “ஏண்டி அப்படிச் சொன்னே? நான் இன்னும் கிளம்பவே இல்லையே?” என்றார் குழப்பத்துடன்.

“எல்லாம் காரணமாத்தான். ஜெயயோட அண்ணன் பைக்ல கூட்டிட்டு வர்றதா வனிதா சொன்னா. என்ன இருந்தாலும் வயசுப் பையன். அவன்கூட பைக்ல நம்ம பொண்ணு வர்றது நல்லாவா இருக்கும்? அதான் அப்படிச் சொன்னேன். மசமசன்னு நிக்காம முதல்ல கிளம்புங்க…” என்று சுந்தரத்தை விரட்டினாள் லட்சுமி.

காட்சி 3:

ஐஸ்வர்யாவுக்கு வரும் வாரம் பிறந்தநாள். அவளுக்குப் புத்தாடை எடுக்க அவளைக் கடைவீதிக்கு அழைத்துச் சென்றாள் அவள் அம்மா சுமதி.

ஐஸ்வர்யா ப்ளஸ் டூ போய்விட்டாள். இன்னும் சின்னக் குழந்தை அல்ல. எனினும், ‘பர்த் டே’ கேக் முதல் பிங்க் கலர் டாப்ஸ் வரை எல்லாமும் வேண்டும் என்கிறாள். வயதுக்கே உரிய பிடிவாதம். வேறு  வழியில்லாமல்தான் ஐஸ்வர்யாவைக் கடை வீதிக்குக் கூட்டிக்கொண்டுபோனாள் சுமதி!

அவள் போட்ட ஒரே கண்டிஷன் இதுதான் - “ட்ரையல் ரூம்ல போய் டிரெஸ் மாட்டிப் பார்க்கும் வேலையே கூடாது. சைஸ் சொல்லி டிரெஸ் வாங்கிட்டு வந்துடணும். சைஸ் சரியா இல்லைன்னா இன்னொரு தடவை போய் மாத்திக்கலாம்.”

“ஏம்மா, ட்ரையல் ரூம்ல போட்டுப் பார்த்தாதானே ஃபிட்டா இருக்கா இல்லையான்னு தெரியும்?” என்று சந்தேகத்தோடு கேட்ட ஐஸ்வர்யாவை, “அதெல்லாம் எனக்குத் தெரியும்” என்று அதட்டி அடக்கிவிட்டாள் சுமதி.

ஐஸ்வர்யாவுக்குப் பதினேழு வயது. வயதுக்கே உரிய வளர்ச்சி உடலில் தெரிகிறது. தெருவில் நடந்தால் ஆண்களின் கண்கள் ஐஸ்வர்யாவையே மேய்வதுபோல் இருக்கும். சுமதிக்கு எரிச்சலாக இருக்கும்.

இந்த லட்சணத்தில் எந்த ஜவுளிக் கடைக்குப் போனாலும், “என்ன வேணும்?” என்று ஐஸ்வர்யா மீது பார்வையைச் செலுத்திக்கொண்டே கேட்பவர்களைப் பார்க்க சுமதிக்குள் கோபம் எழும்.

போதாக்குறைக்கு ஹோட்டல் பாத்ரூம், ஜவுளிக் கடை ட்ரையல் ரூம் என்று எல்லா இடங்களிலும் ரகசிய கேமராக்களை வைத்திருக்கிறார்களாம். இந்த ஆண்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்?

“எல்லா ஆம்பளை நாய்களும் அக்கா தங்கச்சியோடதானே பிறக்குது…. அப்புறம்ஏன் இந்த ஈனப் புத்தி? வயசுப் பெண்களுக்கு அம்மாவா இருக்கிறதைவிட, ஒரு பெரிய பொறுப்பு இந்த உலகத்துல வேறு எதுவுமே கிடையாது” சலித்துக்கொண்டே ஐஸ்வர்யாவுடன் ஒரு ஜவுளிக் கடைக்குள் நுழைந்தாள் சுமதி.

காட்சி 4:

சொர்ணலதா அபார்ட்மென்ட்ஸ். ஏ 7- ல் குடியிருக்கும் கோகிலாவின் வீடு. வேலைக்காரி மீனாட்சி பரபரப்புடன் உள்ளே நுழைந்து வீட்டு வேலைகளைத் தொடங்கினாள். முப்பத்தி ஐந்து வயது இருக்கும். ஓயாத உழைப்பின் காரணமாக, சதை போடாத தேகம். எல்லா ஆண்களும் அவளைத் திரும்பிப் பார்க்காமல் போக மாட்டார்கள்.

வாசல் பெருக்கிக் கோலம் போடுவதிலிருந்து காலை டிபன், மத்தியானம் சமையல் செய்வது வரை எல்லா வேலைகளையும் செய்வாள் மீனாட்சி. பின்னர் பாத்திரங்களைக் கழுவி அடுக்கிவைப்பது வரை அவள் பொறுப்புதான். தினசரி முகம் சுளிக்காமல் வேலை செய்துவிட்டுப்போவாள்.

கோகிலாவும், அவள் கணவன் சூர்யாவும் மீனாட்சியை ஒரு நாளும் வேலைக்காரியாக நினைத்ததில்லை. கூடப் பிறந்த சகோதரியாகவே நடத்தினார்கள். மீனாட்சி
யும் அந்தக் குடும்பத்தில் ஒருத்தியாகவே இருந்துவந்தாள்.

கோகிலாவுக்கும், சூர்யாவுக்கும் திருமணமாகிப் பத்து வருடங்களாகியும் குழந்தை இல்லாமல் கஷ்டப்பட்டவர்கள். ஐந்து மாதங்களுக்கு முன்னர்தான் கோகிலா கர்ப்பமானாள். அடுத்த வாரம், மதுரையில் இருக்கும் தன் தாய் வீட்டுக்குப் போகப்போகிறாள். நாளை இங்கேயே ஒரு மண்டபத்தில் வளைகாப்பு.

இரண்டு நாட்களுக்கு முன்னர் கோகிலாவிடம் பேசியது மீனாட்சிக்கு நினைவுக்கு வந்தது. “அவருக்கு ஆபிஸ் வேலையைத் தவிர ஒண்ணுமே தெரியாது. ஒரு காபி கூட போடத் தெரியாது. படுத்த படுக்கையை ஒழுங்கா எடுத்து வைக்கத் தெரியாது. இந்தப் பத்து வருஷமா சின்னக் குழந்தைக்குச் செய்றதுபோல பார்த்துப் பார்த்து நான்தான் எல்லாம் செய்றேன். வளைகாப்பு முடிஞ்சு என்னை மதுரைக்குக் கூட்டிட்டுப் போய்ட்டாங்கன்னா நான் வர்றதுக்கு ஆறேழு மாசம் ஆகிடும். அவரை யார் கவனிச்சுக்குவாங்கன்னுதான் கவலையா இருக்கு” என்றாள் சோகமாக.

“என்னம்மா இது… நான் இருக்குறப்ப என்ன கவலை. சாப்பாடை மட்டும் சார் வெளியில பார்த்துக்கட்டும். நான் வழக்கம்போல காலை ஏழு மணிக்கு வந்து வீட்டைச் சுத்தம் செஞ்சு வச்சிட்டுப் போய்டறேன். துணிகளையும் துவைச்சிடறேன். நீங்க போய் நல்லபடியா புள்ளையைப் பெத்திட்டு வாங்கம்மா” என்று கோகிலாவின் கையைப் பிடித்துகொண்டு சொன்னாள் மீனாட்சி.

மறுநாள் வளைகாப்பு நிகழ்ச்சி மண்டபத்தில் நட்பு சுற்றம் சூழ மிகச் சிறப்பாக நடந்தது. மீனாட்சி தன் கணவன் கோவிந்தசாமியுடன் சென்று கலந்துகொண்டாள்.
மறுநாள் காலை வழக்கம் போல் மீனாட்சி வேலைக்குப் புறப்பட்டாள். கோவிந்தசாமிக்கு ஆச்சரியம்.

“எங்கே மீனாட்சி கிளம்பிட்டே?”

“ஏன் இப்படிக் கேட்கிறீங்க? வழக்கம்போல கோகிலாம்மா வீட்டுக்குத்தான்.”

“ஏண்டி அந்தம்மாதான் ஊருக்குப் போயிட்டாங்களே… அங்கே போய் நீ என்ன செய்யப்போறே?”

“ஐயா இருப்பாங்க… சாமான்களை எடுத்து சுத்தம் செஞ்சு, வீட்டைப் பெருக்கி சின்னச் சின்ன வேலைகளை எல்லாம் செஞ்சு கொடுத்திட்டு வந்திடறேன்.”

“அதெல்லாம் ஒண்ணும் வேணாம். அந்தம்மா ஊர்ல இருந்து குழந்தையோட வரட்டும். அப்புறமா அங்கே வேலைக்குப் போய்க்கலாம்.”

“என்னங்க இப்படிச் சொல்றீங்க? அந்த ஐயா தங்கமானவருங்க…நீங்க இப்படி நினைக்கிறதே தப்பு.”

“சரிடி…வாயை மூடு! இவ ரொம்பக் கண்டவ. அவனவன் எப்படா சந்தர்ப்பம் கிடைக்குமென்று நாயா அலையறான் இந்தக் காலத்திலே… குழந்தைகளைக்கூட விடறது இல்லே. இந்த லட்சணத்துல அந்த ஆள் தனியா இருக்கும்போது நீ அங்கே போய் வேலை பார்க்கிறது சரியில்லை. குனிஞ்சு நிமிர்ந்து நீ வேலை பார்க்கும்போது அந்த ஆள் அங்கே இருக்கிறது நல்லாவா இருக்கும்? நல்லவன்கூட கெட்டுப்போறதுக்கு நாமே சந்தர்ப்பம் கொடுத்த மாதிரி ஆயிடும். ஆம்பளைங்களைப் பத்தி உனக்கு என்னடி தெரியும்? சந்தர்ப்பம் கிடைக்காத வரைக்கும் எல்லா ஆம்பளைங்களும் நல்லவங்கதான். ஆனா…” என்று பேசிக்கொண்டே போனவனைக் கோபமாக இடைமறித்தாள் மீனாட்சி.

“போதும் நிறுத்துங்க.”

அவளது குரலில் அப்படியொரு உறுதியை அவன் இதுவரை பார்த்ததில்லை.

“மனுசங்க ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வார்ப்புங்க. நாம பார்க்கிற, கேள்விப்படற சில மனுசங்களையும் ஒரு சில ஆம்பளைங்களையும் வச்சு எல்லா ஆம்பளைங்களையும் எடைபோடக் கூடாதுங்க. சந்தர்ப்பம் கிடைக்கற வரைக்கும் நல்லவனா இருக்கிறவனும் உண்டு. சந்தர்ப்பம் கிடைச்சாலும் கெட்டவனா நடந்துக்காதவனும் உண்டு. எங்க ஐயாவைப் பத்தி எனக்கு நல்லா தெரியுங்க. அதுவுமில்லாம, அம்மா இல்லாத நேரத்துல, நான் வீட்டுப் பக்கம் வர யோசிக்கிறேன்னு தெரிஞ்சாலே அம்மா - ஐயா ரெண்டு பேருமே சங்கடப்படுவாங்க. நான் போறதுதாங்க முறை…” என்றாள் தீர்க்கமாக.

கோவிந்தசாமிக்கு மெல்ல புரியத் தொடங்கியது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in