Published On : 30 Nov 2019

நிழற்சாலை

kavithaigal-nizharsaalai

குருவிகளின் சிவப்பு வானம்

அடர்த்தியான கருவேல மரம்
பசுமையான வயல்வெளியில்
பரந்து விரிந்த தோற்றத்துடன்
வருவோர் போவோர்க்கெல்லாம்
இலவசப் பல்குச்சி அளித்தபடி
காட்சி தருகிறது
கம்பீரமாய்.
வயல்களில் நீர் நிரப்பி
விதைக்கும் தருணம் பார்த்து வந்துசேர்ந்தன
தூக்கணாங்குருவிகள்.
இரண்டு மாதங்களுக்கு மேல்
கட்டிய கூடுகளில்
இப்போது குஞ்சுகள்.
முள் நிறைந்த மரத்தில்
விடாமுயற்சியுடன்
தூக்கணாங்குருவிகள்
பின்னிக்கொண்டிருக்கின்றன
வாழ்தலுக்கான உயிர்ச் சூழலை!

- கா.ந.கல்யாணசுந்தரம்

தனிமை இருள்

இருள் கவ்விய
நீண்ட இரவு நேரங்களில்
ரயில் வரும் வரை காத்திருந்து
யாரும் கடந்துபோகாத
ரயில்வே குறுக்கு கேட்டை
மூடித் திறந்து
பெருமூச்சுவிடும்
அந்தத் தனிமைக் காவலாளியின்
வெம்மை தாங்காமல்
கூடுதல் வேகமெடுத்து
பயணிக்கிறது
ஆயிரம் பேர்
அடங்கிய
அதிவிரைவு ரயில்!

-கோவை.நா.கி.பிரசாத்

ஒரு குளத்தின் கதை
வற்றாத குளத்தில்
எருமை மாடுகளோடும்
காலுக்கடியில் நீந்தும்
தவளைகளோடும்
காணாமல் போயின
தண்ணீர் காலங்கள்.
இங்கு குளம் இருந்தது
இந்தக் காட்டுக்கு 
மயில் வரும்
இது கிணறு இருந்த இடம்
இங்கு ஒரு மரம் கிளை விரித்திருந்ததென
சொல்லித்தருகிறோம்
குழந்தைகளுக்கு இப்போது.
வருஷம் முழுக்கத் தளும்பும் குளம்
அடுத்த ஆவணி வரைக்கும்
ஊருக்கே சோறு போட்ட கதையை
பாடப் புத்தகத்தில் படிக்கிறோம்.
அயிரை கெண்டை கெளுத்தி
மீசை வைத்த கெளூரு
பெருத்த விரால் என
வைட்டமின் புதையல்களை
அள்ளித் தரும் குளத்து நீர்
இப்போதெல்லாம்
தளும்புவது நினைவில் மட்டுமே!
வற்றாத குளம் பார்த்த நிமிடங்கள்
காலங்களின் மீனாகத் துள்ள
காதுக்குள் கேட்கின்றன
தவளைகளின் முணுமுணுப்பு!

- வீரசோழன் க.சோ.திருமாவளவன்

உயிர் கொள்ளும் படம்

நகர்தலின் ஒரு துளி வசீகரத்தை
ஒரு மகரந்த விநாடியில்
நிறுத்திக்காட்டுகிறது நிழற்படக் கருவி.
அசைவுகளின் உயிரினின்றும்
ஒரு துகள்தனைப் பிடுங்கி
அசைவற்றதாக்கி
உறையச் செய்யும் வித்தை
வசீகரமானதாக இருக்கிறது.
உள்ளங்கைகளில் ஏந்தி
விரல்களால்
தொட்டு நீவும் தருணங்களில்
கலவி கொள்கின்றன
கண்களும் நினைவுகளும்.
உயிர் பெற்றுக்கொள்கிறது
காலத்தின் ஒரு துகளான
ஒரு புகைப்படம்.

- நிவாஸ் பிரபு

புதைந்துபோன நிலம்

ஒவ்வொரு வருடமாய் 
காணாமல் போன
தாவணிப் பெண்களைப் போல
குச்சி ஐஸ்காரனைப் போல
பஞ்சு மிட்டாய்க்காரனைப் போல
பூம்பூம் மாட்டுக்காரனைப் போல
கண்ணாடி வளையல்காரனைப் போல
கம்மர்கட் தாத்தாவைப் போல
முந்திரிப்பழக் கடை விரித்த
முனியாண்டி அண்ணனைப் போல
மரவள்ளிக் கிழங்கு விற்ற
பெருமாப் பாட்டியைப் போல
இந்த வருடத் திருவிழாவிலும்
காணாமல் போயிருந்தது
திருவிழா நடந்த 
கோயில் நிலமொன்று.

- திருவெங்கட்

கனக்கும் சித்திரம்

மெல்லியக் கித்தானில்
கவனித்து வரையப்பட்ட
காட்டு யானையின்
சிறிய ஓவியம் அது.
காதுமடல்களின் கிழிசல் தொடங்கி
வாலின் முடிகள் வரை
தத்ரூபமாய் இருந்தன.
அறையெங்கும்
பச்சை வாசனை வீசும்படி
பசுந்தழைகளைத்
தின்றுகொண்டிருந்தது அது.
சிறு கண்களில் ஆகாயத்தைப்
பிரதிபலித்துக்கொண்டிருந்தது.
எடையற்ற அந்த ஓவியத்தைக்
கையில் எடுத்துப் பார்க்கையில்
ரயில் மோதி அந்த யானை
இறந்ததன் நினைவாக
அதை வரைந்ததாகச்
சொன்னார் ஓவியர்.
இப்போது கைகளில் ஏந்திப்
பிடிக்க முடியாதபடி
யானை கனம் கனத்தது ஓவியம்!

- கீர்த்தி

மனிதனை எழுதும் நதி

பேரமைதியோடு ஓடிக்கொண்டிருக்கும்
இந்நதியின் மீது
காலம் வீசிப் போகிறது
பெருங்கற்களை.
மிகவும் ரணமானது
நதியின் வாழ்வு
அது விடும் குருதிக் கசிவைக் கூட
புதுப் புனல் என்று
கொண்டாடவைக்கிறது நம்மை.
காலத்தின் பெரும் பகுதி
வறட்சியானது
நதிகளுக்கும் தெரியும்
அவ்வேதனைக் கொடுமை.
நதி விடும் கண்ணீர்
நமக்குத் தெரியாது
அது நீரோடு கலந்து
உவர் நீராகிவிடுகிறது.
கந்தகத்தை வீசாமல்
காருண்யத்தை வீசினால்
குழைந்துபோகும் நதி
நீரற்ற காலத்தை
நமக்கு வழங்காது
ஒருபோதும்!

- சூர்யநிலா

உங்கள் கற்பனை வளத்துக்குக் களம் அமைக்கும் பகுதி இது. நீங்களும் இங்கே கவிபாட வேண்டுமா...
உடனே, உங்கள் கவிதைகளை kavithai@kamadenu.in என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தட்டிவிடுங்கள். கூடவே, ‘எனது இந்தக் கவிதை இதுவரை வேறெங்கும் பிரசுரமாகவில்லை’ என்ற உறுதிமொழியையும் இணைத்து அனுப்ப வேண்டும்.

You May Like

More From This Category

nizharsalai

நிழற்சாலை

கவிதைகள்
nizharsalai

நிழற்சாலை

கவிதைகள்
nizharsalai

நிழற்சாலை

கவிதைகள்
nizharsalai

நிழற்சாலை

கவிதைகள்

More From this Author


More From The Hindu - Tamil