பேசிக்கிட்டாங்க...

பேசிக்கிட்டாங்க...

அரூர்

மண்பானை கடையில்...

``அம்மா... இந்தப் பானை எவ்வளவு..?''

``ஐம்பது ரூபாய் தம்பி..!''

``பார்க்குறதுக்கு சின்னதா இருக்கு. இதுக்குப் போய் இவ்வளவு விலை சொல்றீங்களே..?''

``ஆமா தம்பி... உன் வயித்துக்குப் பக்கத்துல வச்சிப் பார்த்தா சின்னதாத்தான் தெரியும்...''

``ஆமா... நீங்க விக்கிற பானையை வாங்கறதுக்காக சிக்ஸ் பேக் வச்சுகிட்டா வர முடியும். ஆனாலும் நக்கல் ஜாஸ்திதான்!''

- அரூர், வெ.சென்னப்பன்.


தஞ்சாவூர்

டீக்கடையில் இருவர்...

``இஞ்சி டீ ன்னீங்க... இஞ்சி வாசமே காணோமே!''

``அண்ணன் போடுற டீயே மூணு இஞ்ச் அளவுதானே இருக்கு! அதைச் சொல்லியிருப்பாரு!''

(டீக்கடைக்காரர் குறுக்கிட்டு)

``என்னப்பா லந்தா..? வெந்நீரை ரொப்பி கிளாஸ் முழுக்கத் தரவா... கச்சிதமா டீ போட்டுத் தந்தா... இஞ்சி... இஞ்ச்னு பன்ச் பேசறீங்க!''

``எல்லாம் உங்க இஞ்சி டீ குடிச்சுதான் பன்ச்சே வருதுண்ணே... சூப்பர்!''

- தஞ்சாவூர், தே.ராஜாசிங்ஜெயக்குமார்

சீர்காழி

மொபைல் சர்வீஸ் சென்டரில்...

``மொபைல் சார்ஜே நிக்க மாட்டேங்கறது... என்னன்னு பாருங்க சார்...''

``பேட்டரி வீக் ஆகி உப்பிப் போயிடுச்சி... புது பேட்டரிதான் மாத்தணும் தம்பி...''

``வாங்கி ஆறு மாசம்தான் சார் ஆகுது... அதுக்குள்ள பேட்டரி மாத்தணும்னு சொல்றீங்க... கையில பணம் வேற இல்லே?''

``சைனா மொபைல்னா இப்படித்தான் தம்பி... வாரன்ட்டி பில்லை எடுத்துக்கிட்டுப் போயி மொபைல் வாங்கின கடையில கேளுங்க... இல்லேன்னா அடுத்த முறை சீன அதிபர் இந்தியா வரும்போது அவர்கிட்ட புகார் பண்ணுங்க. வேற வழியில்லே...''

- சீர்காழி, வி.அனுசுயா

திருப்பூர்

காங்கயம் ரோட்டில் இருவர்...

``என்னப்பா...நேத்தைக்கு பார்க்குறப்ப இது காலி இடமா கெடந்துச்சி... ராவோட ராவா, மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைச்ச மாதிரி, நைட்டு செட்ட போட்டு காலையில் ஒர்க் ஷாப் திறந்துட்டீங்க!?''

``என்ன சார் பண்றது... நானும் பலமுறை டிஎன்பிஎஸ்சி. தேர்வு எழுதி அரசாங்க வேலைக்குப் போயிடலாம்னு பார்த்தேன். நடக்கல. அதான் இப்படி!''

``சூப்பர்... ஆனா எவனாச்சும் கோர்ட்டுக்குப் போயி, போட்ட வேகத்துலயே உன் டேராவைத் தூக்கிடப் போறான், பார்த்துக்க!’’

- கோயம்புத்தூர், டி,ஜெய்சிங்

வைகுண்டம்

டீக்கடையில் இரு நண்பர்கள்...

``வரவர எனக்கு சோம்பேறித்தனம் கூடிட்டே போகுது! காலையில் 9 மணிக்கு வேலைக்குப் போகணுமேன்னு 8 மணிக்கு வேண்டாவெறுப்பா முழிக்க வேண்டியிருக்கு!’’

``இப்பவே இப்படின்னா, கல்யாணம் ஆகி புள்ளை குட்டின்னு ஆனா என்ன செய்வே? மகாராஷ்டிரால பாரு! உன் தாத்தா வயசுல இருக்குற ஆளுநரு அர்த்த ராத்திரியிலேயும் தூங்காம முழிச்சிருந்து பொறுப்போடு பட்னாவிசுக்கு பதவிப்பிரமாணம் செஞ்சு வச்சிருக்காரு! அவரும் உன்னை மாதிரி சோம்பல் பட்டிருந்தா காரியம் கெட்டிருக்காது?’’

``மாப்ளே! நீ எனக்கு அட்வைஸ் பண்றியா... இல்ல அந்தப் பெரியவரை நக்கல் பண்றியா.. ?’’

- சூழவாய்க்கால், எ.முகமது
 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in