மதுர குலுங்க குலுங்க...

மதுர குலுங்க குலுங்க...

கணேசகுமாரன்
ganeshkumar.k@kamadenu.in

வருடத்தின் 364 நாட்களில் 284 நாட்கள் விழாக்களால் நிறையும் மதுரை மற்றும் அதன் சுற்றுப்புற ஊர்களின் திருவிழாக்கள் குறித்த வண்ணமயமான பார்வையை வழங்கியிருக்கிறார் ஆசிரியர். செவி வழித் தகவல்களாலோ வாசித்த விபரத்தைப் பகிரும் ஒன்றாகவோ இல்லாமல் நேரில் இருந்து கண்டு வியந்து ரசித்த அனுபவத்தை வாசகருக்கு  சுய அனுபவமாகத் தந்திருக்கிறார். ஆன் தி ஸ்பாட் நேரலையாக எழுத்து இருப்பதால் வாசகரும் திருவிழாவில் பங்கு கொள்வதைத் தவிர்க்கவே முடியாது. 

‘பாண்டியன் ஹோட்டல் வாசலிலிருந்து வெளியேறி அழகர் வந்ததும் அந்த இடத்தில் நிறுத்தி அழகரை மூன்று சுற்று சுற்றிவிட்டு ஓடுகிறார்கள். அந்த இடத்தில் அழகருக்கு விடை கொடுக்கிறார்கள்’ என்று வாசிக்கையிலேயே பாண்டியன் ஹோட்டல் வாசலில் வீற்றிருக்கும் அழகர் கண் முன் தெரிகிறார். அதே போல் ஓர் இடத்தை விவரிக்கையில் எவ்வித கேள்விக்கும் இடம் தராமல் ஆசிரியர் கூறிச் செல்லும் வர்ணனை அபாரம். ‘ அழகாபுரிக்கோட்டைக்குள் நுழைந்து இரணியன் வாயிலை நோக்கி நடக்க இருபுறமும் விதவிதமான கடைகள். பீமபுஷ்டி அல்வாக்கடைகள், பலகாரக் கடைகள், சர்பத் கடைகள், சொளகு மற்றும் ஓலைக்கொட்டான் விற்பவர்கள், பேரிக்காய், கொய்யாப்பழம், நவாப்பழம்( நாவற்பழம்) விற்பவர்கள், சட்டிபாத்திரம் விற்கும் பாத்திரக்காரர்கள், சாமி படங்கள் மற்றும் திரைப்பட நடிகர்களின் படங்கள், அழகர் வர்ணிப்பு புத்தகம் விற்பவர்கள், கன்றுக்குட்டிகளுக்கான மா லாடு விற்கும் வயதான பெரியவர்கள், ஊக்கு முள்வாங்கி விற்பவர்கள்... என முடிவில்லாமல் நீண்டுகொண்டே போகும் வர்ணிப்பு அழகர் கோயில் ஆடித்தேரோட்டம் பகுதியில் வருகிறது. 

திருப்பரங்குன்றத்து பங்குனித் தேரோட்டம் கட்டுரைப் பகுதியில் ஒரு வரி வருகிறது. ‘ தேருக்கு கண்ணேறு பட்டுவிடக்கூடாதென ஆங்காங்கே பாலியல் சிற்பங்களையும் செய்து வைத்திருந்தார்கள்’ அட... இதற்கு இப்படி ஒரு நோக்கம் இருக்கிறதாவென ஆச்சரியம் கொள்ளாமல் இருக்க முடியவில்லை. கீழவாசல் மரியன்னை தேர்பவனி திருவிழா விவரிப்பில் வரும் தின்பண்டக் காட்சிகளை நாவில் எச்சில் ஊறாமல் வாசித்துவிட முடியாது. தெப்பத்திருவிழா குறித்து வேதனைப் பதிவாக தொ. பரமசிவன் சொன்னதையும் ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறார். மனம் பாரமாகிப் போகிறது வாசிக்கையில். ‘ மதுரைல இருக்கிற நிறைய குளங்கள தொலைச்சிட்டோம். எழுகடல் தெப்பக்குளம், கிருஷ்ணராயர் தெப்பக்குளம் இதுலயெல்லாம் தண்ணியிருந்து பார்த்தவங்க கம்மி. மீனாட்சி தெப்பமாட வருதுன்னா வைகையாத்துல இருந்து சாக்கடை நீரை அதுல தேக்குறாங்க. இரத்தக் கண்ணீர் வருது’ கொண்டாட்ட திருவிழா சூழலில் நாம் இழந்தவற்றை எண்ணும்போது  நிஜமாகவே இரத்தக் கண்ணீர்தான் வருகிறது. புட்டுத் திருவிழா, கதிரறுப்புத் திருவிழா எனப் பலரும் அறிந்திராத விஷேசங்கள் இந்நூலில் இடம் பெற்றிருப்பது இப்புத்தகத்துக்கான நியாயத்தைச் செய்திருக்கிறது. இப்போதுள்ள நவீன தமிழ் இலக்கியம் மதுரைத் திருவிழா குறித்து எவ்வாறு பதிந்திருக்கிறது என்பதையும் குறிப்பிட்டிருப்பது நன்று. டிராஸ்கி மருது  பிறந்த ஊர் என்ற குறிப்பு முதற்கொண்டு ஒரு திருவிழா பத்தியில் வருகிறது. ஆனால், இத்தனை கொண்டாட்டப் பதிவான நூலில்  இடம் பெற்றிருக்கும் புகைப்படங்கள் அனைத்தும் கருப்பு வெள்ளையாய் இடம் பெற்றிருப்பது மிகப் பெரிய குறையன்றி வேறில்லை. 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in