ரோஜாவின் புதிய முள்பாதை-  கேரக்டர் மாறுவாரா கேம் சேஞ்சர்?

ரோஜாவின் புதிய முள்பாதை-  கேரக்டர் மாறுவாரா கேம் சேஞ்சர்?

எஸ்.எஸ்.லெனின்
readers@kamadenu.in

2014 ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் தனக்கு சீட் கிடைத்ததும், அங்கிருந்து தமிழ்நாட்டுக்கே ஓடோடி வந்தார் ரோஜா. நெய்வேலியில் பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக இருந்த ஜெயலலி்தாவைச் சந்தித்து ஆசிபெற்ற பிறகே, ஆந்திராவுக்குத் திரும்பி பிரச்சாரத்தைத் தொடங்கினார். அந்தத் தேர்தலில் வென்று சட்டப்பேரவையில் ரோஜா புயலைக் கிளப்பியபோதெல்லாம், ஆளுங்கட்சி எம்எல்ஏ-க்கள் அவரது சினிமா பின்னணியை வைத்துக் கொச்சைப்படுத்தி தனிநபர் தாக்குதலில் இறங்கினார்கள். அப்போதெல்லாம், ஜெயலலிதா எதிர்கொண்ட தனிநபர் தாக்குதல்களுடன் ஒப்பிட்டு ஜெயலலிதாவைப் போலவே, ரோஜாவின் அரசியல் எழுச்சியும் அமையும் என ஆந்திர ஊடகங்கள் வர்ணித்தன.

அதன் பின்னரான ரோஜாவின் அரசியல் பயணத்தின் ஒவ்வொரு திருப்பத்திலும், அவரது அபிமான அரசியல் தலைவரான ஜெயலலிதாவுடனான ஒப்பீடு தொடர்கிறது. சமீபத்தில், தொழிற்சாலைகள் உட்கட்டமைப்பு வாரியத் தலைவர் பதவியை ரோஜாவிடமிருந்து முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பறித்தபோதும் அது வெளிப்பட்டது. ரோஜா கடந்து வந்த அரசியல் முட்பாதையைக் கவனித்தால், அவரது பயணத்தின் அடுத்த திசையும் பிடிபடும்.

தெலுங்கு தேசத்தில் வலதுகால்

தொண்ணூறுகளில், தமிழ் மற்றும் தெலுங்கின் உச்ச நட்சத்திரங்களின் ஜோடியாக சினிமாவில் ஜொலித்தவர் நடிகை ரோஜா. ‘செம்பருத்தி’ மூலம் தமிழில் அறிமுகமாகி, பின்னர் அதன் இயக்குநர் ஆர்.கே.செல்வமணியின் மனைவியாகவும் தமிழகத்தின் மருமகளாகவும் வளர்ந்த ரோஜாவுக்கு ஆந்திர மாநிலம்தான் தாய் வீடு.

தேர்தல் பிரச்சாரங்களில் கூட்டம் சேர்க்கும் நடிகைகளுக்கான வழக்கமான அழைப்பொன்றில், தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் ரோஜா முதல்முறையாக அரசியல் மேடையேறினார். அந்த பிரச்சாரப் பயணங்களில் தனக்கான மக்கள் வரவேற்பைக் கண்டுகொண்டார். அதிலிருந்து அரசியல் மீதான பிடிப்பும் அவருக்கு அதிகரித்தது. ஆந்திர அரசியலும் அவரை விரைவில் உள்ளிழுத்துக் கொண்டது. மாமனார் என்டிஆர் அளவுக்கு மக்களை வசீகரிக்கும் கலை வாய்க்கப்பெறாத சந்திரபாபு நாயுடுவுக்கும் ரோஜா போன்றவர்களின் தயவு தேவைப்பட்டது. தெலுங்கு தேசம் கட்சியின் மகளிரணித் தலைவியாக ரோஜாவின் அரசியல் ராஜபாட்டை தொடங்கியது.

ரோஜாவின் சபதம்

கட்சித் தொண்டர்கள் முதல் பொதுமக்கள்வரை ரோஜாவின் பழகும் லாவகம் அலாதியானது. ஆளும்கட்சிக்காரராக இருந்தபோதும் தெருவில் இறங்கி மக்களோடு மக்களாக நின்று போராடுவது, பொதுப் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுப்பது என அபிமானிகளை அதிகம் சேர்த்தார் ரோஜா. அதை மேலிடம் ரசிக்கவில்லை. பத்து வருட கட்சிப் பணியில் கரைந்திருந்த ரோஜா, 2009 ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலை ஆவலோடு எதிர்பார்த்திருந்தார். ஆனால், அவருக்குக் கிஞ்சித்தும் வெற்றி வாய்ப்பில்லாத சந்திரகிரி தொகுதி ஒதுக்கப்பட்டதில் சோர்ந்து போனார். சொந்தக் கட்சியினரின் உள்ளடிகளும் சேர்ந்துகொள்ள பரிதாபமாய் தோற்றும் போனார் ரோஜா. சந்திரபாபு மகன் லோகேஷின் நிழல் தலைமையைப் பொருட்படுத்தாது செயல்பட்டதும், ரோஜாவுக்கு அப்போது உட்கட்சி எதிரிகளை அதிகமாக்கியது.

தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாய் பொதுவெளியில் புலம்பிய ரோஜாவை சந்திரபாபு கண்டுகொள்ளவில்லை. ஆனால், ரோஜா எதிர்த்துக் களமாடிய ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியிடமிருந்து அழைப்பும், அரசியல் ஆறுதலும் கிடைத்தன. அதன்படி கட்சி மாறத் தயாரானார். எனினும், அந்த நேரத்தில் நிகழ்ந்த ஒய்.எஸ்.ஆரின் எதிர்பாரா மரணம், ரோஜாவின் அரசியல் பயணத்தில் முடக்கத்தை ஏற்படுத்தியது. திரிசங்கு நிலையில் சிக்கிய ரோஜாவின் அரசியல் வாழ்க்கை இனி அவ்வளவு தான் என்றார்கள் அரசியல் பார்வையாளர்கள். ஆனால், ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸில் இணைந்த ரோஜா, “எனது அரசியல் வாழ்க்கை இனிமேல்தான் ஆரம்பம்” என்றார். “சந்திரபாபுவை வீழ்த்திக் காட்டுகிறேன்” என்று சபதமும் போட்டார்.

ஜெகன்மோகன் ராஜ்ஜியத்தில் ரோஜா

தனது சித்தப்பா உட்பட பலரும் தெலுங்கு தேசத்துக்குக் கூண்டோடு தாவியதில் சோர்ந்திருந்த ஜெகன்மோகன் ரெட்டி, அந்தக் கட்சியிலிருந்து அணிமாறிவந்த ரோஜா மூலம் பதிலடி அரசியலைத் தொடங்கினார். அடுத்து வந்த சட்டப்பேரவைத் தேர்தலில், ரோஜா எதிர்பார்த்த நகரி தொகுதியை அவருக்கு ஜெகன்மோகன் ஒதுக்கினார். அதன்பின் ஒரு எம்எல்ஏ-வாக ரோஜா மேற்கொண்ட அதகளம், அதுவரை ஆந்திர அரசியல் பார்க்காதது. ஜெகன்மோகனே ஆச்சரியப்படும் வகையில், சந்திரபாபு சகாக்களுக்கு எதிரான விதான் சௌதா கோதாவில் ரோஜா ரௌத்ரம் காட்டினார்.

தனிப்பட்ட தாக்குதலில் இறங்கியவர்களைச் சட்டப்பேரவைக்கு உள்ளேயும் வெளியேயும் வெளுத்து வாங்கினார். அதன் உச்சமாய் ‘கால் மணி’ விவகாரத்தை கையிலெடுத்தார். பெண்களுக்குக் கடன் தரும் போர்வையில், பாலியல் அத்துமீறல்களை நடத்திய ‘கால் மணி’யின் ஆளுங்கட்சினர் தொடர்புகளை அம்பலப்படுத்தினார். ரோஜாவின் அதிரடிக்குத் தாக்குபிடிக்காதவர்கள், அவரை ஒரு வருடத்துக்கு சஸ்பெண்ட் செய்த பிறகே ஆசுவாசமானார்கள். ஆந்திர அரசியலில் அதற்கு முன்னரும் பின்னரும், இவ்வாறு சட்டப்பேரவைத் தடைக்கு ஆளான சாதனை ரோஜாவையே சாரும்.

இக்கட்டின் இறுதிக் கட்டம்

அடுத்து வந்த தேர்தலில், சந்திரபாபுவின் நாற்காலி கனவு ரோஜாவின் சபதப்படியே பறிபோனது. ஜெகன்மோகன் முதல்வரானதும் அவருக்கு வலதுகரமாக வளர்ந்திருந்த ரோஜாவுக்கான அங்கீகாரமாக, துணை முதல்வர் தொடங்கி மின் துறை அமைச்சர் பொறுப்பு வரை ஆரூடங்கள் பறந்தன. ஆனால், 5 துணை முதல்வர், 25 அமைச்சர்கள் என எந்தப் பட்டியலிலும் ரோஜாவின் பெயர் இல்லை. எனினும் ரோஜா அமைதிகாத்தார். ஆதரவாளர்கள் வெளிப்படையாக ஆதங்கம் தெரிவித்ததும், சமூக ஊடகங்களில் சர்ச்சையானதும் ரோஜாவுக்குத் தொழிற்சாலைகள் உட்கட்டமைப்பு வாரியத்தைக் கையளிக்கச் செய்தது. அந்தப் பதவிதான் தற்போது ரோஜாவிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது.

விரைவில் மாற்றியமைக்கப்பட விருக்கும் அமைச்சரவையில் ரோஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்கிறார்கள். ஆனால், தமிழகத்தில் மறைமுகமாக அரங்கேறும் சாதி அடிப்படையிலான அரசியல் பங்கீடு, ஆந்திர அரசியலில் வெளிப்படையாகவே நடக்கும். அந்த வகையில், இரண்டரை ஆண்டுகள் கழித்து உத்தேசிக்கப்பட்ட அமைச்சரவை மாற்றத்திலும் ரோஜா இடம்பெறுவது ஐயமே. தெலுங்கு தேசம் போலவே, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸிலும் இக்கட்டின் இறுதிக் கட்டத்துக்கு நெட்டித் தள்ளப்பட்டுள்ளார் ரோஜா.

‘கேம் சேஞ்சரி’ன் அடுத்த நகர்வு?

சாதி போலவே ஆந்திர அரசியலில் துரோகத்தின் வீரியமும் அதிகம். என்.டி.ஆர் மறைந்ததும் அவரது இரண்டாவது மனைவி பார்வதியின் பிடியிலிருந்து தெலுங்கு தேசம் கட்சியை சந்திரபாபு நாயுடு வளைத்தது, ராஜசேகர ரெட்டி இறந்ததும் காங்கிரஸ் தலைமை ஜெகன்மோகனை ஓரம்கட்டி ரோசய்யா, கிரண்குமார் ரெட்டி ஆகியோரை முதல்வராக்கியது, ஜெகனின் உறவினர்கள் இரண்டாம் கட்டத்தலைவர்கள் உள்ளிட்ட எம்எல்ஏ-க்கள் கட்சி தாவி சந்திரபாபு நாயுடுவிடம் விலைபோனது... என துரோகங்கள் ஏராளம். இந்தத் துரோக நிழல் ரோஜாவையும் துரத்துவதாக அவரது அபிமானிகள் கொதிக்கிறார்கள். தெலுங்கு தேசம் கட்சியின் மகளிர் முகமாக வளர்ந்திருந்த ரோஜா, அங்கிருந்து அநீதி இழைக்கப்பட்டதாய் வெளியேறினார். எதிர்க்கட்சி ஆளும்கட்சி என இரு தவணைகளில் ஜெகன்மோகனுக்கு ஆதரவாக நின்றிருக்கிறார். ஆனால், இங்கேயும் தனது அரசியல் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை தொடரும்போது, தனிக்கட்சி மட்டுமே அவரது அடுத்த நகர்வாக இருக்க முடியும் என்கிறார்கள்.

சந்திரபாபுவை வீழ்த்தி ஜெகன்மோகனை அரியணை யேற்றியதில், ‘கேம் சேஞ்சர்’ என புகழப்பட்ட ரோஜாவின் அப்படியான அடுத்த ஆட்ட நகர்வு என்ன என்பதை அறிந்துகொள்ள ஆந்திராவே கார மிளகாயைக் கடித்தது போல காத்திருக்கிறது! 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in