வரதட்சணை வாங்கினால் வேலை காலி!- அரசு ஊழியர்களுக்குக் கடிவாளம் போடும் கேரளம்

வரதட்சணை வாங்கினால் வேலை காலி!- அரசு ஊழியர்களுக்குக் கடிவாளம் போடும் கேரளம்

என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

அரசுப் பணியில் இருக்கும் ஆண்கள், தங்கள் திருமணத்தின்போது இனி வரதட்சணை மறுப்பு சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என கேரள அரசு பிறப்பித்திருக்கும் உத்தரவு, பல தரப்பிலும் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. கூடவே, இவ்விஷயத்தில் இடதுசாரி அரசை விமர்சித்துவந்த எதிர்க்கட்சிகளுக்கும் வாய்ப்பூட்டு போட்டிருக்கிறார் முதல்வர் பினராயி விஜயன்.

இன்னமும் விலகாத மாயத்திரை

வரதட்சணை எனும் வழக்கம் இந்தியச் சமூகத்தில் ஏற்படுத்திவரும் பாதிப்பு காலம்காலமாகத் தொடர்கிறது. வரதட்சணை வாங்குவது குற்றம் எனும் பார்வையை, ‘சமூக அந்தஸ்து’ எனும் மாயத்திரை மறைத்துவிடுகிறது. வரதட்சணை வாங்குவதும் கொடுப்பதும் குற்றம் என்றாலும் வரன் பார்க்கும்போதே, “பொண்ணுக்கு என்ன போடுவீங்க?” என சபையிலேயே கூசாமல் கேட்டுவிடும் கலாச்சாரம் இன்னமும் ஓய்ந்தபாடில்லை.

“எங்க பையனுக்கு இவ்வளவு ரொக்கமும் நகையும் வரதட்சணையாகக் கிடைத்தன” என மணமகனின் பெற்றோர் பெருமைப்பட்டுக்கொள்வது ஒருபக்கம் என்றால், “எங்க பொண்ணுக்கு இத்தனை சவரன் போட்டோம்” எனப் பெருமை பேசிக்கொள்ளும் பெண் வீட்டாரும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதிலும் கல்வியறிவு பெற்றவர்கள் நிறைந்த கேரளத்தில், வரதட்சணைக் கொடுமை தலைவிரித்தாடுவது சமகால முரண்.

அதிர்ந்துபோன கேரளம்

கேரளத்தின் மோட்டார் வாகன போக்குவரத்துத் துறை அதிகாரியான கிரண்குமாரின் மனைவி விஸ்மயா, வரதட்சணைக் கொடுமையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு சமீபத்தில் பெரும் அதிர்வுகளைக் கிளப்பியது. பத்து லட்ச ரூபாயில் கார், ஒன்றே கால் ஏக்கர் நிலம், 100 பவுன் நகை என வரதட்சணையாக வாரியிறைத்திருந்தனர் விஸ்வமயாவின் பெற்றோர். எனினும், பேராசையால் கூடுதல் வரதட்சணை கேட்டு கிரண்குமார் வீட்டார் செய்த கொடுமைகளால் மனமுடைந்த விஸ்மயா, இறுதியில் தன் உயிரையே மாய்த்துக்கொண்டார்.

அதன்பின்னர், கேரளத்தில் வரதட்சணைக் கொடுமையால் அடுத்தடுத்து இளம்பெண்கள் மரணமடைந்த செய்திகள் அனலைக் கிளப்பின. எதிர்க்கட்சிகளான காங்கிரஸும் பாஜகவும் இடதுசாரி அரசுக்கு எதிராகக் களமிறங்கி காய்ச்சியெடுத்தன. வரதட்சணைக் கொடுமைக்கு எதிராக, கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் ஒருநாள் அடையாள உண்ணாவிரதமும் இருந்தார். ராஜ்பவனில், மகாத்மா காந்தி பற்றிய புத்தகத்தை வாசித்துக்கொண்டே அவர் உண்ணாநோன்பு இருந்தது, கேரளத்தில் வரதட்சணைக் கொடுமைக்கு எதிரான குரல்களுக்கு வலுசேர்ப்பதாக அமைந்தது.

அரசு போட்ட கிடுக்குப்பிடி

இப்படியான சூழலில், வரதட்சணை விஷயத்தில் அரசு ஊழியர்களுக்குப் பினராயி விஜயன் அரசு போட்டிருக்கும் இந்தக் கடிவாளம் பேசுபொருளாகி யிருக்கிறது. பொதுவாகவே கேரளத்தில் வரதட்சணை கலாச்சாரம் அதிகம். குறிப்பாக, அரசுப் பணியில் இருக்கும் அதிகாரிகள் என்றால் வரதட்சணை பேரங்கள் ‘ஜெட்’ வேகத்தில் பறக்கும். அதற்கு இளம்பெண் விஸ்மயா மரணத்தையே முன்னுதாரணமாக எடுத்துள்ள கேரள அரசு, அரசுப் பணியில் இருப்போர் வரதட்சணை வாங்கக்கூடாது என இப்படி ஒரு கிடுக்குப்பிடி போட்டுள்ளது.

இதுகுறித்து, கேரள பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறையின் தலைமைத் திட்ட அலுவலர் அனுபமாவிடம் பேசினோம். “அரசுப் பணியில் இருக்கும் ஆண்கள் தங்கள் திருமணத்தின்போது வரதட்சணை வாங்கவில்லை என்பது குறித்த சான்றிதழைச் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தச் சான்றிதழில் மணமகளும் மணமகளின் பெற்றோரும் கையெழுத்திட்டிருக்க வேண்டும். இதன்மூலம் அரசுப் பணியாளர்கள் மட்டத்தில் முதல்கட்டமாக வரதட்சணை ஒழிக்கப்படும். திருமணம் முடிந்த ஒரு மாதத்திற்குள் இந்தச் சான்றிதழைக் கொடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து அரசுத் துறைகளிலும் பணிசெய்பவர்கள் தத்தமது உயர் அதிகாரிகளிடம் இந்தச் சான்றிதழைக் கொடுப்பார்கள்” என்றார் அனுபமா.

மேலும், “ஒவ்வொரு மாவட்டத்திலும் வரதட்சணைத் தடுப்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அரசு உயரதிகாரிகள், தங்களுக்குக்கீழ் பணிசெய்வோரின் திருமண விவரத்தை வரதட்சணைத் தடுப்பு அலுவலரிடம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் சமர்ப்பிக்க வேண்டும். இதையெல்லாம் மீறியும் அரசு ஊழியர்கள் வரதட்சணை வாங்கிக்கொண்டு திருமணம் செய்தது தெரியவந்தால், 15 ஆயிரம் ரூபாய் குறைந்தபட்ச அபராதமாகவும், அவர் திருமணத்தின்போது பெற்ற மொத்த வரதட்சணையும் அதிகபட்ச அபராதமாகவும் விதிக்கப்படும். அதுமட்டுமல்ல, இதனால் அரசுப் பணியை இழக்கும் அபாயம் இருப்பதுடன் கைது செய்யப்படும் விதத்திலும் சட்டம் இயற்றப் பட்டுள்ளது. இதுகுறித்து சமூகநலத் துறையின் மூலம், கேரளத்தின் அனைத்து அரசுத் துறைகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார் அனுபமா.

முதல் விதை

இதுகுறித்து கேரள சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜிடம் பேசினோம். “வரதட்சணை என்பது முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டிய சமூகக் கொடுமை. அதற்கான மாற்றம் ஒவ்வொரு இல்லத்திலிருந்தும் தொடங்கப்பட வேண்டும். அரசும் அதை வலியுறுத்தி பலகட்ட நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன் ஒரு அங்கம்தான் அரசுப் பணியாளர்களிடையே முதலில் விதைக்கப்பட்டிருக்கும் இந்த விதை.

கேரள அரசு, வரதட்சணை சட்டத்தில் நடப்பு ஆண்டில் பல புதிய திருத்தங்களைக் கொண்டு வந்திருக்கிறது. அதேபோல் நடப்பு ஆண்டில் இருந்து, ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26-ம் தேதியை வரதட்சணை எதிர்ப்பு தினமாகக் கடைபிடிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளோம். அந்த நாளில் பள்ளி - கல்லூரி மாணவ - மாணவிகளும், அரசு அதிகாரிகளும், ‘வரதட்சணை கொடுக்கவோ, வாங்கவோ மாட்டோம்’ என உறுதிமொழி எடுப்பார்கள். கேரள அரசு இனி இந்தப் பணிகளில் தொடர்ந்து தீவிர கவனம் செலுத்தும்” என்றார் வீணா ஜார்ஜ்.

அரசு என்னதான் சட்டங்கள் போட்டு தடைசெய்தாலும், விழிப்புணர்வூட்டினாலும் மக்களிடம் ஏற்படும் இயல்பான மனமாற்றம் மட்டுமே இந்தக் கொடுமைக்கு நிரந்தர தீர்வுதரும். அந்த மனமாற்றம் இனி இளம் பெண் களின் வாழ்க்கையில் ஒளியேற்றட்டும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in