இந்தியன் நெ.1: இந்திய ராணுவத்தின் பிதாமகன்

இந்தியன் நெ.1: இந்திய ராணுவத்தின் பிதாமகன்

1965-ம் ஆண்டு, இந்தியா - பாகிஸ்தான் நாடுகளிடையே கடுமையான போர் நடந்துகொண்டு இருந்தது. அந்தப் போரின்போது பாகிஸ்தான் மீது குண்டுவீசச் சென்ற இந்திய விமானம் ஒன்று அந்நாட்டு ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதிலிருந்த விமானி, பாராசூட் மூலம் தரையிறங்க, பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் அவரைக் கைது செய்தனர். விசாரணையில், பிடிபட்ட விமானப்படை விமானியின் பெயர் கே.சி.கரியப்பா என்றும், அவர் இந்தியாவின் முன்னாள் ராணுவ தளபதியான கே.எம்.கரியப்பாவின் மகன் என்றும் தெரியவந்தது. இத்தகவல் உடனடியாக அப்போதைய பாகிஸ்தான் அதிபர் அயூப் கானுக்குத் தெரிவிக்கப்பட்டது.

சுதந்திரத்துக்கு முன் ஒருங்கிணைந்த இந்திய ராணுவத்தில் கே.எம்.கரியப்பாவின் கீழ் பணியாற்றியவர் அயூப் கான். அந்த விசுவாசத்தில் அவரது மகன் கே.சி. கரியப்பாவை விடுதலை செய்ய உத்தரவிட்டார் அயூப் கான். ஆனால், இந்தத் தகவல் கே.எம்.கரியப்பாவுக்குத் தெரியவந்ததும், தன் மகனை மட்டும் பாகிஸ்தான் விடுவிப்பதை எதிர்த்தார். “பாகிஸ்தானில் இப்போது போர்க் கைதிகளாக இருக்கும் அனைவரும் என் மகன்களைப் போன்றவர்கள்தான். அதனால் விடுதலை செய்தால் அனைவரையும் விடவேண்டும். மாறாக என் மகனை மட்டும் விடுதலை செய்வதை ஏற்க முடியாது” என்று திட்டவட்டமாக கூறினார்.

- இப்படி ராணுவ வீரர்கள் அனைவரையும் தன் மகனாக பாவித்தவர்தான் கோடன்டேர மாடப்ப கரியப்பா (Kodandera Madappa Cariappa) என்று அழைக்கப்படும் கே.எம்.கரியப்பா. சுதந்திரத்துக்குப் பிறகு நமது ராணுவத்தின் முதல் இந்தியத் தளபதியாகப் பொறுப்பேற்றவர். தனது செயலாற்றல் மூலமாக இந்திய இளைஞர்கள் பலரையும் ராணுவத்துக்கு ஈர்த்த பிதாமகரான ஃபீல்டு மார்ஷல் கே.எம்.கரியப்பாவைப் பற்றி இந்த வாரம் தெரிந்துகொள்வோம்.

1899-ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள கூர்க் பகுதியில் கரியப்பா பிறந்தார். ஆங்கிலேய அரசின் வருவாய்த் துறையில் பணியாற்றிய கரியப்பாவின் தந்தைக்கு, இவரையும் சேர்த்து 6 குழந்தைகள். அனைவருக்கும் தரமான கல்வியை கரியப்பாவின் தந்தை வழங்கினார். கரியப்பாவின் வீட்டைச் சுற்றிலும் ராணுவத்தில் பணியாற்றிய பலர் வசித்து வந்தனர். இளம் வயதில் அவர்கள் மூலமாக முதலாம் உலகப் போர் பற்றியும் அதில் பங்கேற்ற வீரர்களைப் பற்றியும் தெரிந்துகொண்ட கரியப்பாவுக்கு, தானும் ஒரு ராணுவ வீரராக வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.

கூர்க்கில் பள்ளிப் படிப்பை முடித்த கரியப்பா, சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரியில் சேர்ந்தார். அப்போது ராணுவத்தில் பணியாற்ற இந்தியர்களைத் தேர்வு செய்கிறார்கள் என்றும் அவர்களுக்கு இந்தூரில் உள்ள டாலி கேடட் கல்லூரியில் ராணுவப் பயிற்சி அளிக்கப்படுவதாகவும் கேள்விப்பட்ட கரியப்பா அதற்கு விண்ணப்பித்தார். இதைத்தொடர்ந்து அவர் இந்தூர் கல்லூரியில் சேரத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இளம் வயதில் மிகவும் துடிப்புடன் விளங்கிய கரியப்பா, இந்தக் கல்லூரியில் அனைத்துப் பயிற்சிகளையும் திறம்பட முடித்து, சிறந்த ராணுவ வீரராகத் தேர்வு பெற்றார். இதைத்தொடர்ந்து 1920-ம் ஆண்டில் லெப்டினென்டாக ராணுவத்தில் பணியில் சேர்ந்தார் கரியப்பா. தனது துடிப்பான செயலாற்றலால், அடுத்தடுத்து பதவி உயர்வுகளைப் பெற்ற கரியப்பா, 1938-ம் ஆண்டு மேஜராகப் பதவியேற்றார்.

இதைத்தொடர்ந்து 1942-ம் ஆண்டில் இந்திய ராணுவத்தில் லெப்டினென்ட் கர்னலாக கரியப்பா பொறுப்பேற்றார். அப்போது அவரது தலைமையின்கீழ் பல ஆங்கிலேய அதிகாரிகள் பணியாற்றினர். அந்த வகையில் ஆங்கிலேய ராணுவ அதிகாரிகளுக்கு மேலதிகாரியாக பணியாற்றிய முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார் கரியப்பா.
2-ம் உலகப் போரின்போது நேதாஜியால் தோற்றுவிக்கப்பட்ட இந்திய தேசிய ராணுவம், ஆங்கிலேய அரசுக்கு எதிராகப் போரில் ஈடுபட்டது. ஜப்பானுடன் இணைந்துகொண்டு இந்திய எல்லைப்பகுதிகளில் தாக்குதல் நடத்தியது. நேதாஜி படையிலிருந்த பலரும் போரின்போது கைது செய்யப்பட்டனர். அவர்கள் சிறைவைக்கப்பட்டிருந்த இடங்களை ஆங்கிலேயர் தரப்பு ராணுவத்தின் ராணுவ அதிகாரி என்ற முறையில் கரியப்பா பார்வையிட்டார். அப்போது, இந்திய தேசிய ராணுவத்தைச் சேர்ந்தவர்கள், சிறைச்சாலைகளில் மோசமாக நடத்தப்பட்டு வந்தது அவரை மிகவும் பாதித்தது.

இதைத்தொடர்ந்து அவர்களை சிறையில் இருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு, இங்கிலாந்தில் இருந்த தனது உயர் அதிகாரிகளுக்கு கரியப்பா கடிதம் எழுதினார். இந்திய மக்கள் மத்தியில் அவர்களுக்கு மிகுந்த மரியாதை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். கரியப்பாவின் இந்தச் செய்கை ராணுவ வீரர்கள் மத்தியில் மட்டுமின்றி, சுதந்திரப் போராட்ட தியாகிகள் மத்தியிலும் அவருக்கு நற்பெயரை பெற்றுத் தந்தது.

1947-ம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, சில காலத்துக்கு இங்கிலாந்தைச் சேர்ந்தவரான லெப்டினென்ட் ஜெனரல் சர் ராய் பவுச்சர் என்பவர் இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக இருந்தார். இக்காலகட்டத்தில் இந்திய ராணுவத்துக்குத் துணை தளபதியாக இருந்த கரியப்பா, 1947-ல் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற போரில் மிக முக்கியப் பங்காற்றினார். அவரது ஆற்றலாலும், திட்டமிடலாலும் காஷ்மீர் பகுதிகளான நவுஷேரா, ஜாங்கர், பூஞ்ச், சோஜி லா, டிராஸ், கார்கில் உள்ளிட்டவற்றில் பாகிஸ்தான் படைகளை விரட்டியடித்த இந்திய ராணுவம் அப்பகுதிகளை இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. இதற்காக மக்கள் மற்றும் தலைவர்களின் பாராட்டுகளைப் பெற்றார் கரியப்பா.

1949-ல் லெப்டினென்ட் ஜெனரல் சர் ராய் பவுச்சர் ஓய்வுபெற, அடுத்த தலைமை ராணுவத் தளபதியாக, ஒரு இந்தியரை நியமிக்க மத்திய அரசு முடிவெடுத்தது. அப்போது ஆட்சியில் இருந்தவர்களுக்கு முதலில் கரியப்பாவின் பெயர்தான் மனதில் உதித்தது. இதைத்தொடர்ந்து ராணுவத் தளபதியான முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார் கே.எம்.கரியப்பா.
இந்திய ராணுவத்தின் தளபதியாக பொறுப்பேற்ற பிறகு, ராணுவ வீரர்களின் மேம்பாட்டுக்காக பல நலத்திட்டங்களை கரியப்பா அறிவித்தார். இந்திய அரசுக்கும் ராணுவ வீரர்களுக்கும் இடையே பாலமாகத் திகழ்ந்தார். எல்லாவற்றுக்கும் மேலாக இந்திய ராணுவத்தில் அரசியல் நுழையாமல் அவர் பார்த்துக்கொண்டார். இந்தியாவில் இருந்து பிரிந்து சென்ற பாகிஸ்தானில் பல முறை ராணுவப் புரட்சிகள் ஏற்பட்டுள்ள நிலையில், இந்திய ராணுவம் இதுவரை எந்தப் புரட்சியிலும் ஈடுபடாமல் இருப்பதற்கு, கரியப்பா எடுத்த சில ஆரம்பகட்ட நடவடிக்கைகளே காரணமாகும்.

ஓய்வுக்குப் பிறகு

ராணுவத் தளபதி பொறுப்பில் இருந்து ஓய்வுபெற்ற பிறகும் நாட்டுக்காகப் பல்வேறு வழிகளில் பணியாற்றினார் கரியப்பா. குறிப்பாக, ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து நாடுகளுக்கான இந்தியாவின் தூதராக அவர் பணியாற்றினார். 1993-ம் ஆண்டு தனது 94-வது வயதில் பெங்களூருவில் கரியப்பா காலமானார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in