கண்ணான கண்ணே..! - 06: வைட்டமின்களைப் பெற ஏன் காய்கறிகள் அவசியமில்லை?

கண்ணான கண்ணே..! - 06: வைட்டமின்களைப் பெற ஏன் காய்கறிகள் அவசியமில்லை?

எல்லா நேரங்களிலும் இல்லாவிட்டாலும்  ஏதோ சில வேளைகளிலாவது தற்கால சினிமாப் பாடல்கள் கடினமான விஷயங்களை எளிமையாக உணர்த்திவிட்டுச் செல்கின்றன.

அண்மையில் வானொலி பண்பலையில் அப்படி ஒரு பாடலின் வரிகளைக் கேட்க நேர்ந்தது.

‘பிடித்ததை வாங்கச் சொல்லு

வெறுப்பதை நீங்கச் சொல்லு

புது வெள்ளம் புது ஆறு நீந்திப் பார்ப்போமே…’

தந்தை மகளுக்காகப் பாடும் வரிகள் அவை. கேட்பதற்கு எளிமையாக இருக்கிறது. இதையே நம் வீடுகளில் நம் பிள்ளைகளிடம் கடைப்பிடிப்போமேயானால் எல்லாக் குழந்தைகளும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் அல்லவா? மகிழ்ச்சியான குழந்தைகள்தான் நிச்சயமாக தேசத்தின் தூண்களாக இருக்க முடியும்.  அந்த  மகிழ்ச்சியை உணவிலிருந்தே நாம் அவர்களுக்குக் கொடுக்க முயல்வோம்.

வெறுப்பதை நீங்கச் சொல்லு…பள்ளிகளில் நான் சிறப்பு விருந்தினராகச் செல்லும்போது அவர்களிடம் நான் இப்படிச் சொல்வேன்; “குழந்தைகளுக்காக நான் ஒரு புத்தகம் எழுதுகிறேன்.அதில் நான் மூன்று முக்கியமான விஷயங்களைப் பேசியிருக்கிறேன். 1. புரதச் சத்துக்கு ஏன் பருப்பு சாப்பிடத் தேவையில்லை? 2. கால்சியம் சத்தைப் பெற ஏன் பால் குடிக்க வேண்டாம்? 3. வைட்டமின்களைப் பெற ஏன் காய்கறிகள் சாப்பிட அவசியமில்லை என்பதே அந்த மூன்று விஷயங்கள். இப்படி நான் சொன்னவுடன் குழந்தைகளின் முகங்களில் உற்சாகம் மின்னும்.

உண்மையில், குழந்தைகளைவிட பெற்றோர்கள் தான் இதை முக்கியமாகத் தெரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால் அவர்கள்தான் உணவுப் பொருட்கள் மீது முன் முடிவுகளை அதிகமாக வைத்திருக்கின்றனர். இந்த முன் முடிவுகளால் பெரும்பாலான இந்தியக் குழந்தைகள் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள்.

கால்சியத்துக்குப் பால் மட்டும்தான் ஆதாரமா?

பெற்றோராக இருப்பது எவ்வளவு கடினமானதோ அதை விடவும் கடினமானது குழந்தைகள் தங்களுக்கு விருப்பமே இல்லாமல் ஒரு குவளை பாலை அருந்துவது. அப்படிக் குடித்து முடித்தவுடன் உச்சி முகர்ந்து நல்ல பிள்ளை என்று நீங்கள் சொல்லும் ஒரு வார்த்தையால் அவர்கள் சமாதானம் அடைந்து விடுவார்கள் என நினைக்காதீர்கள். அடுத்த நாளும் அதே வெறுப்புடன்தான் பாலை அருந்துவார்கள்.

அப்படியென்றால், பால் உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையானது அல்லவா? குழந்தையின் உயரம் அதிகரிப்பதற்கு அவசியமானதுதானே! அப்புறம் எலும்புகளை வலுவாக்கவும் கால்சியம் வேண்டுமே! என்றெல்லாம் நீங்கள் அடுக்கடுக்காகக் கேட்கலாம். நானும் இல்லை என்று சொல்லப்போவதில்லை.ஆனால், பாலில் மட்டும்தான் கால்சியம் இருக்கிறதா என்ற கேள்வியை உங்கள் முன்னால் வைக்கிறேன்.

பாலுக்கு நிகராக எள்ளு மிட்டாய், கடலைமாவு லட்டு, கேழ்வரகுக் கஞ்சி, கேப்பை தோசை இவற்றிலெல்லாம் கூட கால்சியம் சத்து  நிறைந்து கிடக்கிறது. ஆனால், இவற்றையெல்லாம் கால்சியம் சத்துகளின் ஆதாரமாகப் பார்க்க நாம் பழக்கப்படுத்தப்படவில்லை.

இட்லி, முருங்கைக்காய் சாம்பாரும், ஒரு கை சுண்டலும்கூட கால்சியம் சத்தை உடலுக்குத் தரும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இவற்றைப் போல இந்தியப் பாரம்பரிய உணவுகளில், ஒவ்வொரு பருவத்திலும் கிடைக்கும் உணவுகளிலும் கால்சியம் சத்து செறிந்துள்ளது. ஒரே ஒரு உணவுப் பொருளுடன் ஒரு சத்தினைச் சுருக்கிவைப்பது தீங்கானது. அதற்காகப் பசும்பாலைக் குடிக்க மறுத்தால் பாதாமை அரைத்துப் பாலாக்கி கால்சியம் சத்துக்காகக் குடிக்கக் கொடுப்பது அதைவிட இன்னும் தீங்கானது.

அன்பைப் போன்றது ஊட்டச்சத்து...

உணவில் இருக்கும் ஊட்டச்சத்துகள் அன்பைப் போன்றவை. அன்பு நீங்கள் தேடாத இடத்தில்தான் நிறைவாக இருக்கும். அப்படி நீங்கள் தேடாத இரண்டு உணவுகளில் கால்சியம் நிறைவாக இருக்கிறது. 1.கேழ்வரகு, 2.முருங்கைக்காய்.

புராணக் கதைகளில் கேழ்வரகு, ஆஞ்சநேயரின் விருப்ப உணவாகக் கூறப்பட்டிருக்கும். ஆஞ்சநேயரை எப்போதும் வலிமையான உடற்கட்டமைப்புடன் தொடர்புபடுத்துகிறோம். சஞ்சீவி மலையைப் பெயர்த்துத் தூக்கியவராகக் கதைகள் கூறுகின்றன. அதை நிஜத்துடன் இப்படிப் பொருத்திப் பார்க்கலாம். அதாவது ஒரு நபரின் எலும்பில் அத்தியாவசியத் தாதுக்களின் அடர்த்தி (Bone Mineral density) வலுவாக இருந்தால் அவரால் அவரது நிகர எடைக்கு அதிகமான பளுவை லகுவாகச் சுமக்க இயலும். அதனால் வாரம் ஒரு முறையேனும் கேழ்வரகினால் ஆன கஞ்சி, லட்டு, கூழ், ரொட்டி என ஏதேனும் ஒரு வடிவில் அதை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

கால்சியம் நிறைந்த இரண்டாவது உணவு முருங்கைக்காய். அண்மையில், ஜெர்மனியில் ஒரு டயட் கோர்ஸ்  படித்தேன். அப்போது அங்கு  முருங்கைக்காயின் மகத்துவம் பற்றிப் பேசப்பட்டது. அவர்கள் முருங்கைக்காயை ஃபியூச்சர் ஃபுட் (Future Food) என்கின்றனர். அதாவது அன்றாடம் பெருகிவரும் உலக மக்கள்தொகைக்கு ஈடுகட்டும் வகையில் எவ்விதமான காலநிலை மாற்றத்தையும் சமாளித்து ஊட்டச்சத்து உள்ளடக்கத்தில் எந்தக்குறைவும் ஏற்படாமல் செழித்து வளரக்கூடிய தாவரம் என்று முருங்கையை அவர்கள் கணித்துக் கூறினார்கள். அத்தகைய முருங்கையை நாம் எளிதாகப் புறந்தள்ளிவிடுகிறோம். இனி சாம்பாரில் முருங்கைக்காய் இருந்தால் மறக்காமல் அதன் சதையைச் சாப்பிட்டுவிடுங்கள்.

கால்சியத்தைப் பெறும் முயற்சியில் தவிர்க்க வேண்டிய தவறுகள்…

பாலில் உள்ள கால்சியத்தைக் குழந்தைகளுக்குக் கொடுத்தே விடவேண்டும் என்ற அக்கறையில் பாலில் புரத பவுடர்களையும், ஆரோக்கியக் கலவைகளையும் சேர்த்துக் கொடுப்பதைத் தவிருங்கள். உண்மையில் சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான பவுடர்கள் சர்க்கரை பவுடர்கள் மட்டுமே. பாலைக் குடிக்க வைப்பதற்கான இந்த மெனக்கிடலைவிட எளிமையானது பால் பிடிக்கவில்லை என்றால் அதைக் குடிக்காமல் தவிர்க்கும் சுதந்திரத்தை ஒரு குழந்தைக்கு அளிப்பது. ஒருவேளை ஏதாவது ஃப்ளேவர் சேர்த்தால் பாலைக் குடிக்க உங்கள் குழந்தை விருப்பம் காட்டினால் பாதாம், முந்திரி, பிஸ்தா அல்லது குங்குமப்பூவைச் சேர்த்துக் கொடுங்கள். அதுவும் வீட்டில் அவ்வப்போது தயாரிப்பதாக இருக்கட்டும். ரெடிமேட் மிக்ஸ் வேண்டாம்.

கால்சியம் உள்ளீர்ப்பு… சில தகவல்கள்…

உண்மையில் உணவில் உள்ள கால்சியம் சத்து உள்ளீர்க்கப்பட்டு அது கிரகிக்கப்பட வேண்டுமேயானால் நமக்கு உடற்பயிற்சி தேவை. இதைத்தான் நாம் பள்ளிகளில் சொல்லித்தர வேண்டும். தினமும் மைதானத்தில் விளையாடும் குழந்தைகளுக்குத்தான் கால்சியம் உள்ளீர்க்கப்பட்டு வலுவான எலும்புகள் கிடைக்கும். விளையாட்டும் உடற்பயிற்சியும் இல்லாமல் வலுவான எலும்புகளைக் கட்டமைப்பதற்கான உந்துதல் உடலுக்குக் கிடைக்கவே கிடைக்காது. எனவே, குழந்தைகளுக்குப் பாலைவிட விளையாட்டு முக்கியம்.

புரதத்துக்குப் பருப்பு மட்டும்தானா?

குழந்தைகள் பாலுக்கு அடுத்தபடியாக வெறுப்பது பருப்பு. சில பெற்றோர்கள் என் குழந்தை சாப்பிடவே இல்லை என்று சொல்வதைக் கேட்கும்போது எனக்கு அதீத எரிச்சல் வரும். சாப்பிடாமலேயே ஒரு குழந்தையால் அன்றாடம் இயங்க முடியுமா? இப்படிப்பட்ட மிகை மொழிகளை நிறுத்துங்கள். பிரச்சினை குழந்தைகளிடம் இல்லை. நியூட்ரிஷனிஸம் எனப்படும் பாணியின்படி உண்ணும் உணவையெல்லாம் உணவாகப் பார்க்காமல் இது கொழுப்பு உணவு, புரத உணவு, நார்ச்சத்து உணவு, மாவுச்சத்து உணவு என்று நீங்கள் பேதம் காட்டுவதால் வரும் பிரச்சினை. குழந்தைகளை நம் பார்வை பேதத்துக்கு பலியாக்குகிறோம்.

பருப்பில் புரதம் இருக்கிறதா என்று கேட்டால் ஆம் என்பேன். ஆனால், பருப்பில் மட்டும்தான் புரதம் இருக்கிறதா எனக் கேட்டீர்கள் என்றால் இல்லை என்றே சொல்வேன்.

பொதுவாக இரண்டரை வயது வரை உள்ள குழந்தைகள் நாம் கொடுக்கும் பருப்புச்சோற்றைப் பிரச்சினை செய்யாமல் சாப்பிட்டுவிடுகிறார்கள். ஆனால், 3 வயதுமுதல் 7 அல்லது 8 வயதுவரை அவர்களுக்குப் பருப்பின் மீது ஒருவிதமான வெறுப்பு வந்துவிடுகிறது. துவரம் பருப்பில் இயற்கையாகவே ட்ரிப்ஸின், க்ரோம்ட்ரிப்ஸினைத் தடுக்கும் எதிர்ப்பு ஊட்டச்சத்துகள் (anti nutrients) இருக்கின்றன. ட்ரிப்ஸின், க்ரோம்ட்ரிப்ஸின் ஆகியவை புரதச்சத்தை செரிமானம் செய்ய உதவும் நொதிகள் (Enzymes).

இந்த நொதிகள் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு, திசுச் சிதைவைத் தடுப்பதற்கு, வலுவான எலும்புகளைக் கட்டமைப்பதற்கு, சளி கட்டுதலைத் தடுப்பதற்குத் தேவைப்படுகின்றன. சில நேரங்களில் புரதம் புரதம் என்று நீங்கள் வலுக்கட்டாயமாகக் குழந்தைகளுக்குத் திணிக்கும் பருப்பில் இருக்கும் எதிர்ப்பு ஊட்டச்சத்துகள் புரத சத்தை உடல் கிரகித்துக்கொள்வதில் முட்டுக்கட்டையும் போடலாம்.

துவரம் பருப்பைப் புறக்கணிக்கும் குழந்தைகள் கொண்டைக் கடலை, ராஜ்மா ஆகியவற்றைச் சாப்பிடுவதில் அதிக தயக்கம் காட்டுவதில்லை. காரணம், இந்த வகை பருப்புகளை முதல் நாள் இரவே ஊறவைத்து நொதிக்கச் செய்கிறோம். பின்னர் நன்றாக வேக வைக்கிறோம். இத்தகைய சமையல் முறையால் இவற்றிலுள்ள எதிர்ப்பு ஊட்டச்சத்துகள் அகற்றப்பட்டு விடுகின்றன.  இது உணவின் சுவையை அதிகரிப்பதோடு ஊட்டச்சத்தின் அளவையும் அதிகரிக்கிறது.

உங்கள் குழந்தைகளுக்குப் புரதத்தின் பலன் முழுமையாகக் கிடைக்க வேண்டுமென்றால் அவர்களுக்கு நேரத்துக்கு உணவு கொடுங்கள், அவர்களை வியர்க்கும் அளவுக்கு விளையாட அனுமதியுங்கள், தூங்கும் நேரத்தை ஒழுங்குபடுத்தி சீக்கிரம் உறங்க வையுங்கள். இந்த மூன்றும் இணைந்திருந்தால் அவர்கள் நோயற்றவர்களாக இருப்பார்கள்.

இன்னொரு குறிப்பும் சொல்கிறேன். சாதாரணமாக துவரம் பருப்பைச் சமைப்பதற்கு முன்னதாக நன்னீரில் அலசி அரைமணி நேரமாவது ஊற வையுங்கள். இப்படிச் செய்வதால் பருப்பில் இருக்கும் எதிர்ப்பு ஊட்டச்சத்துகள் குறைய வாய்ப்புள்ளது.

பச்சைக் கீரைகளில் மட்டும்தான் வைட்டமின்கள் இருக்கின்றனவா?

ஒருமுறை பெங்களூருவில் உள்ள ஒரு பிரபல கஃபேவில் எனது தோழி அவளது 8 மாதக் குழந்தைக்கு கீரை சாலட் புகட்டிக்கொண்டிருந்தார். பெயர் தெரியாத வெளிநாட்டுக் கீரைகள் அவை. என்னைப் பார்த்ததும் பெருமிதத்தோடு  "நான் இவனுக்கு எல்லாம் சாப்பிடக் கற்றுக்கொடுத்திருக்கிறேன்"என்றார். உண்மையில் எனக்கு என் தோழியின் கழுத்தை நெரிக்கலாம் போன்றிருந்தது. அதை மறைத்துப் புன்னகைத்தேன். பாவம் அந்தக் குழந்தை.

வைட்டமின் சத்துகளுக்குக் கீரை மட்டும்தான் உணவு என நினைத்திருப்பது எத்தகைய மடமை. ஒரு சப்பாத்தி, கொஞ்சம் வெல்லம் அத்துடன் நெய், தயிர்சாதம் - ஊறுகாய், கிச்சடி - அப்பளம், அவல்… இவற்றிலெல்லாம் கூட வைட்டமின்கள் இருக்கின்றன. நமக்கு நன்மை எதில் இருக்கிறது என்பதில் நிலவும் அறியாமையால் நன்மை சேர்க்கும் உணவே இல்லை என்று அர்த்தமில்லை. இந்த அறியாமையால்தான் மேற்கத்திய கீரைகளை வெந்தும் வேகாமலும் ருசிக்கு எதுவும் சேர்க்காமலும் திணித்துக்கொண்டிருக்கிறோம்.

பச்சைக் காய்கறிகள் மற்றும் கீரைகளிலும் எதிர்ப்பு ஊட்டச்சத்துகள் பிரச்சினை இருக்கிறது. அது தெரியாமல் வளரும் குழந்தைகளுக்குக் காயும் கீரையும் அவசியம் என்று அவற்றைப் பச்சையாக, சேலடாகக் கொடுப்பது ஒவ்வாமையையும், குடல் தொற்றுக்களையுமே ஏற்படுத்தும்.

பச்சைக் காய்கறிகள், கீரைகளைச் சமைக்கும் முறைதான் அவற்றின் சத்துக்களை உடலுக்குக் கொண்டு சேர்க்கும். இந்திய சமையலில் அதற்கு  ஆயிரம் வழிகள் இருக்கின்றன. சமையலில் நாம் செய்யும் தாளிப்புச் சுவையைக் கூட்ட மட்டுமல்ல; ஆரோக்கியம் பேணவும்தான். வாசனைப் பொருட்களைப் பயன்படுத்துவதும், சில நேரங்களில் நிலக்கடலையைப் பொடித்துப் போடுவதும் எதிர்ப்பு ஊட்டச்சத்துகளை மட்டுப்படுத்தும்.

அமெரிக்காவில் மஞ்சளின் மகத்துவம் உணரப்பட்டிருக்கிறது. லவங்கப்பட்டை தேநீர் குடிக்கின்றனர். மிளகாயின் மருந்துவ குணத்தைப் புரிந்துகொண்டுள்ளனர். ஆனால், இவற்றின் சொந்தக்காரர்களான நாம் பச்சையான, பாதி வேக வைத்த, எந்தவித தாளிதமும் செய்யப்படாத சுவையற்ற உணவின்  பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறோம்.

நமது நாட்டின் நறுமணம் தரும் உணவுப் பொருட்களால் ஈர்க்கப்பட்டுதான் கிழக்கு இந்திய கம்பெனி இங்கு நுழைந்தது என்பதை மறக்கக் கூடாது. உணவுக்கு மணமும் சுவையும் கூட்டும் இந்த வாசனைப் பொருட்கள் குடலுக்கும் அதில் இருக்கும் நட்பு நுண்ணுயிரிகளுக்கும் உகந்தது.

ஏதோ ஒரு பிரபல கஃபே தரும் சுவையற்ற சாலடைவிட உப்பும் மஞ்சளும் மிளகும் சேர்த்துக் கடைந்து, அதில் மிளகாய் வற்றலும் கடுகும் போட்டுத் தாளித்துக் கொடுக்கும் கீரைக் கடைசல் சிறப்பான அளவில் வைட்டமின்களைக் குழந்தைகள் உடலில் சேர்த்துவிடும்.

இதன் பின்னராவது உங்கள் வீட்டுக் குழந்தைகள் வெறுக்கும் உணவுகளை அவர்கள் நீங்கிச் செல்ல தாராளமாக அனுமதியுங்கள். அதற்கு மாற்றாக உள்ளூரில் கிடைக்கும் தரமான உணவைக் கொடுத்து ஊக்கப்படுத்துங்கள்.

(வளர்வோம்… வளர்ப்போம்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in