10% ஆச்சரியம் காட்டும் டைரிக் குறிப்புகள்

10% ஆச்சரியம் காட்டும் டைரிக் குறிப்புகள்

கணேசகுமாரன்

கவிதையிலிருந்து சிறுகதை வரை எல்லாமே காலத்துக்கேற்ப தன் நடையை மாற்றி புது வழியில் செல்ல, நாவலும் இப்போதுள்ள இளைய வாசிப்பாளர்களை முன்வைத்து தன் உருவத்தை மாற்றியிருக்கிறது. சாரு நிவேதிதா, எம். ஜி. ரமேஷ் போன்றவர்கள் தங்கள் எழுத்தில் அடையாளப்படுத்திய பின் நவீனத்துவம் என்ற மேலை நாட்டு இலக்கிய அறிமுகத்தை வாஸ்தோ என்ற நவீன காலத்து இளைஞர், தன் நாவலில் எவ்வாறு முன் வைக்கிறார் என்ற எதிர்பார்ப்பு இந்நாவலை வாசிக்கத் தூண்டும் ஒன்று என்பதில் மிகையில்லை. ஆனால் கதை என்ற ஒன்றின் மூலம் அவர்கள் சொன்னதையெல்லாம் வெறும் தகவல் களஞ்சியமாக வாஸ்தோ விவரிக்கும்போது நாவல் தோற்கிறது.

நாவலின் தலைப்பு, நாவலின் முன்னெடுப்பு , கதை நாயகனின் தொடக்க கதை விவரிப்பு என்று சுவாரசிய சினிமாவுக்கான ஆரம்பமெல்லாம் இப்போதைய பீட்சா வாசகர்களை வியப்பில் ஆழ்த்தும் ஒன்றுதான். ஆனால் அவர்களை மட்டுமே வியப்பில் ஆழ்த்துகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது .கதை ஆசிரியரே கதை நாயகனாக வரும் முதல் பாகம் கொஞ்சம் வாசிப்பு சுவாரசியத்தை உண்டு பண்ணுகிறது. ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் ஒவ்வொரு அனுபவம். கதை சொல்லி ஓரிடத்தில் பைக்கில் செல்லும்போது, தான் மரணம் வரை சென்று மீண்ட அனுபவத்தை விவரிக்கிறார்.  கூடவே வாசகரும் பைக்கை ஓட்டி அந்த மரணத்திலிருந்து  மீண்டது போல் எழுதியிருப்பதற்கு சபாஷ். இதுபோன்ற கதைக்களத்துக்கு அவசியத் தேவையான நகைச்சுவை என்பது நாவலில் எங்கும் தென்படாதது குறை மட்டுமல்ல; மைனஸும் கூட.

நாவலின் ஆரம்பத்தில் இந்நாவலானது ஒரு ரோட் ரைடருக்கான அனுபவக்கதை என்று தொடங்குகிறார்கள். சொன்னதுபோல எல்லாம் இருக்கிறது; கதையைத் தவிர. பகுதி இரண்டில் மட்டும் ஒரு காதல் வருகிறது. முகநூல் பதிவுகள் போல் அக்காதலைச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர். கதையாளர் வாசகருக்குப் புரியவேண்டும் என்பதற்காகச் சொல்லப்படும் உதாரணங்கள் சினிமா சார்ந்தே உள்ளது. தவிர்த்திருக்கலாம். சர்வம் படத்தில் ஆர்யா உபயோகப்படுத்தும் பைக் ஜாக்கெட், ஹேராம் படத்தில் கமல் உபயோகப்படுத்தும் பைக், அன்பே சிவம் ஆக்சிடெண்ட் பகுதி என்பதெல்லாம் இந்நாவலை வாசிக்கும் வாசகரின் சினிமா அறிவை சோதிப்பதாகவே உள்ளன. வாசகர், பைக் பிரியராகவும் மாநிலம் கடந்து லாங் ட்ரைவ் செல்பவராகவும் இருந்து ஒரு காதலையும் சந்தித்திருந்தால் இந்நாவல் பிடிக்கக்கூடும். எல்லோரும் அப்படியில்லையே என்பதும் இல்லாதவர்களையும் அந்த அனுபவத்துக்கு ஆளாக்காமல் விட்டதும் இந்நாவலின் தலைப்புக்கு நியாயம் செய்யவில்லை. பூடகமாய் பேசுவதை  ‘க்’ வைத்துப் பேசுவது என்று வழக்கத்தில் சொல்வார்கள். ஆசிரியர் தவறாகப் புரிந்துகொண்டார் போலும். பக்கத்துக்கு பத்து ‘க்’ வாசகரைத் தொந்தரவு செய்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in