இனி எல்லாமே ஏ.ஐ - 11: சட்டம் இனி வெளிச்ச அறை!

இனி எல்லாமே ஏ.ஐ - 11: சட்டம் இனி வெளிச்ச அறை!

கணினி என்பது அடிப்படையில் கணக்கிடும் இயந்திரம்தான். ஆனால், இன்றைக்கு அது சகலகலா சாதனமாக நம் வாழ்க்கையில் அங்கம் வகிக்கிறது. ஆரம்ப காலத்தில், போர்க்காலத் தேவையே கணினி உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றியிருக்கிறது. உலகின் முதல் மின்னணுக் கணினி எனக் கருதப்படும் ‘எனியாக்’ (ENIAC), இரண்டாம் உலகப்போர் காலத்தில், குண்டுகள் செல்லும் பாதையின் வேகத்தைத் துல்லியமாகக் கணக்கிடுவதற்காக உருவாக்கப்பட்டது.

இந்தத் தகவலை இங்கு குறிப்பிடுவதற்கான காரணம், கணினி எனும் இயந்திரம் வெகுஜனப் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன், அதன் ஆய்வுநிலை முயற்சிகளில் போர்க்காலப் பயன்பாடு என்பது முக்கியமாக இருந்தது என்பதை உணர்த்துவதற்காகத்தான். அதன் பிறகு, மெல்ல ஒவ்வொரு துறையிலும் கணினியின் பயன்பாடு தலைதூக்கலாயிற்று.

சட்டத்தின் சாதக அம்சங்கள்

ஏற்கெனவே பார்த்ததுபோல, செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு சட்டத் துறையில் மற்ற துறைகளுக்கு முன்னதாகவே தொடங்கிவிட்டது.

இந்தப் போக்குக்குச் சட்டத்தின் இரண்டு அடிப்படையான அம்சங்கள் காரணமாக அமைகின்றன. ஒன்று, சட்டம் என்பது வரையறுக்கப்பட்ட விதிகளைக் கொண்டதால், அவ்விதிகளை இயந்திரமயமாக்குவது என்பது சாத்தியமாகிறது. இரண்டாவது அம்சம், வழக்குகள் சட்டத்தின் அடிப்படையில் தீர்க்கப்பட்டாலும், அதற்கு ஆதாரமாக அமைவது வழக்கு தொடர்பான தரவுகள். முந்தைய வழக்குகள், முன்னுதாரண வழக்குகள், வரலாற்று வழக்குகள் என எண்ணற்ற வழக்குகளிலிருந்து கிடைக்கும் தரவுகளும், அவை உணர்த்தும் அம்சங்களும்தான் தீர்ப்புக்கு அடிப்படையாகின்றன.

கணினிச் செயல்பாட்டுக்கும், செயல்திறனுக்கும் தரவுகளே அடிப்படை என்பதால், சட்டத் துறை செயல்பாடு என்பது கணினிப் பயன்பாட்டுக்கு வெகு பொருத்தமாக அமைந்தது. கணினி எழுச்சி பெறத் தொடங்கிய 20-ம் நூற்றாண்டில், லீ லியோவிங்கர் (Lee Loevinger), லூசியன் மெஹல் (Lucien Mehl) உள்ளிட்ட சட்டத் துறை முன்னோடிகள் சட்டத்தைக் கணினிமயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதுவே கணக்கீட்டியல் சட்டம் (Computational law) எனும் தனிப்பிரிவாக உருவானது.

கணக்கீட்டியல் சட்டம் என்பது, சட்டத் தகவல் ஆய்வாக்கம் (legal informatics) எனும் துறையின் ஓர் அங்கமாக அமைகிறது. தகவல் சேகரிப்பு, செயலாக்கம் உள்ளிட்டவற்றில் தொழில்நுட்பப் பயன்பாடு தகவல் ஆய்வாக்கமாகக் கருதப்படுகிறது. எனில், சட்டத் துறையின் தகவல்களைக் கையாள்வதில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது சட்டத் தகவல் ஆய்வாக்கமாகக் கொள்ளப்படுகிறது.

முன்னோடி முயற்சிகள்

1956-ல்தான் செயற்கை நுண்ணறிவு எனும் பிரிவு அதிகாரபூர்வமாகத் தொடங்கியது. ஆனால், அதற்கு முன்னரே சட்டத்தில் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான அம்சங்களைப் பயன்படுத்துவதற்கான ஆய்வுகள் தொடங்கிவிட்டன. சட்டச் சிக்கல்களுக்குத் தீர்வு காண மின்னணு மற்றும் கணினி சார்ந்த நுட்பத்தைப் பயன்படுத்தும் நோக்கில் அமெரிக்க சட்ட அறிஞர்கள் உருவாக்கிய ‘ஜூரிமெட்ரிக்ஸ்’ (Jurimetrics) எனும் துறையை இதற்கான தொடக்கப்புள்ளிகளில் ஒன்றாகக் கருதலாம். சட்டத் துறைச் சிக்கல்களுக்குத் தீர்வு காண, தர்க்கத்தை முதன்மையாகப் பயன்படுத்தும் நோக்கில் இது வளர்ந்தது. இதன் விளைவாக 1959-ல், சட்டத்தின் தர்க்கத்தின் நவீனப் பயன்பாடுகள் (Modern Uses of Logic in Law) எனும் சஞ்சிகை உருவானது.

இதனிடையே 1958-ல், இந்தத் திசையில் அடுத்த கட்டப் பாய்ச்சலை பிரெஞ்சு சட்ட அறிஞரான லூசியன் மெஹல் நிகழ்த்தினார். மனித எண்ணத்தைத் தானியங்கிமயமாக்குவதை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட சர்வதேச மாநாட்டில், சட்டத்தில் கணக்கீட்டியல் முறையைப் பயன்படுத்துவதன் சாதகங்களையும், இந்த முறைகளைக் கொண்டு சட்ட செயல்பாடுகளைத் தானியங்கிமயமாக்கும் வாய்ப்புகளையும் விவரிக்கும் ஆய்வுக்கட்டுரையை அவர் அளித்தார். இந்த ஆய்வில் அவர் முன்வைத்த வாதங்களும், கருத்துகளும் சட்டத் துறையில் செயற்கை நுண்ணறிவு நிகழ்த்திவரும் பாய்ச்சல்களுக்கு அடிப்படை என்று சொல்லலாம்.

மெஹலின் தீர்க்கதரிசனம்

சட்டத்தைத் தானியங்கிமயமாக்க, இரண்டுவிதமான இயந்திரங்கள் தேவை என மெஹல் வலியுறுத்தினார். ஒன்று, வழக்கறிஞர்களுக்குத் தேவையான தகவல்களை உடனடியாகத் தேடித்தரும் தகவல் அல்லது ஆவண இயந்திரம். (இந்த வகைப் பயன்பாடு சட்டக் கண்டறிதல் எனக் கொள்ளப்படுகிறது). இரண்டாவது, சட்டம் தொடர்பான கேள்விகளுக்குப் பதில் அளிக்கக்கூடிய திறன் கொண்ட ஆலோசனை இயந்திரம்.

செயற்கை நுண்ணறிவு என்பது ஆய்வு நிலையில் இருந்த காலகட்டத்தில், இதெல்லாம் சாத்தியம் என்பதை ஏற்றுக்கொள்ளவே பலரும் தயங்கிய நிலையில், மெஹல் இந்த முன்னோடி எண்ணங்களை முன்வைத்ததைக் கவனிக்க வேண்டும்.
மெஹல் கனவுகண்டதைப் போல, சட்டத் தகவல்களைத் தேடித்தரக்கூடிய முதல் வகை கணினிப் பயன்பாடு 
1970-களில் சாத்தியமானது. தொடர்ந்து குறுகிய நோக்கில் சட்டச் செயல்பாடுகளைத் தானியங்கிமயமாக்கும் மென்பொருட்களும் உருவாக்கப்பட்டன. பயனாளிகள் அளிக்கும் தகவல்களைக் கொண்டு தானாக வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய உதவும் டேக்ஸ்மேன் (Taxman) மென்பொருளை இதற்கான உதாரணமாகச் சொல்லலாம்.

இதனிடையே மெஹல் குறிப்பிட்ட இரண்டாம் வகை ஆலோசனை இயந்திரங்களை உருவாக்கும் ஆய்வுகளும் தீவிரமாயின. 1979-ல், பிரிட்டனின் வேல்சில், சட்டத் துறையில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது தொடர்பான மாநாடு நடைபெற்றது. 1990-களில் இந்தத் திசையில் குறிப்பிடத்தக்க வெற்றிகளும் கிடைக்கத் தொடங்கின.

கணினிப் பயன்பாடு அசுர வளர்ச்சி அடைந்திருக்கும் நிலையில் சட்டத் துறையில் செயற்கை நுண்ணறிவு இரண்டறக் கலந்து, புதுமையான சேவைகள் உருவாகத் தொடங்கின. இதன் பயனாகத்தான் இன்று ‘லாபாட்’ எனப்படும் வாதாடும் இயந்திரங்களையும், வழக்குகளைக் கணிக்கும் திறன் கொண்ட கணிப்பு இயந்திரங்களையும் பயன்படுத்தும் நிலை வந்திருக்கிறது. ஆக, லீப்னிஸ் கணித்த பாதையில் சட்டம் தானியங்கிமயமாகிக் கொண்டிருக்கிறது.

இனி, சட்டத்துடன் நெருங்கிய தொடர்புகொண்ட காவல் துறையில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை அலசலாம்!

பின்சீட்டில் நட்பான காவலர்!

செயற்கை நுண்ணறிவின் சட்ட ஆற்றல், புதுமையான நடைமுறைத் தீர்வுகளை அளிக்கவல்லது. உதாரணமாக, நாம் காரோட்டிச் செல்லும்போது பின் இருக்கையில் நட்பான காவலர் ஒருவர் வேக அளவு, போக்குவரத்து மீறல் குறித்தெல்லாம் ஆலோசனை கூறினால் எப்படி இருக்கும்? இதற்கு நிகரான கணினி அல்லது மென்பொருளை உருவாக்குவது சாத்தியம். அதேபோல, ஸ்மார்ட்போன் செயலி மூலம், குறிப்பிட்ட செயலுக்கான சட்ட விதிகளையும் மக்களுக்கு நினைவூட்டிக்கொண்டே இருக்கலாம். ஒரு தோட்டத்தில் உள்ள பூவைப் படம் எடுக்கும்போது, அங்கு பூப்பறிப்பதற்குச் சட்டபூர்வ அனுமதி உள்ளதா என்பதையும் ஸ்மார்ட்போன் செயலி சொல்லிவிடும்!

(தொடரும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in