கட்டக்காளை - 11

கட்டக்காளை - 11

லச்சுமாயிக்கு இப்பயோ, பெறகோன்டுக்கு இருக்கு. எந்த நேரத்துலயும் வலி வந்திருமின்டு... பேறுகாலத்துக்கு தேவையான சாமானெல்லாம் தயாரா வச்சுருக்காக.

கட்டக்காளையும், தாம் பொண்டாட்டிக்கும், பெறக்கப் போற பிள்ளைக்கும் தேவையான சாமானெல்லாம், ஒச்சுக்காளை கூடசேந்து 
வாங்கிட்டு ஓனாப்பட்டிக்கு வந்திருந்தான்.

மருந்துக்களி குடுக்க வந்த கட்டக்காளை, அதுக்கப்பறம் இப்பத்தான் வந்திருக்கான். புருசன் வந்த பகுமானத்தில… லச்சுமாயி ஒரெடத்தில ஒக்கார மாட்டுறா... தாம் புருசனக் கவனிக்கணுமின்டு, எந்திரிக்கமாட்டாம எந்திரிச்சு, அங்கிட்டும் இங்கிட்டும் நடக்க மாட்டம நடக்கிறா.

கட்டக்காளையும், ஒச்சுக்காளையும் கையக் கழுவிட்டு, சம்மனங்காலுப் போட்டு திண்ணையில ஒக்காந்திருந்தாங்க.
ஆக்குப்பறையிலருந்த பெருமாயி, அவுக ரெண்டு பேத்துக்கும், பருப்பானமும் கஞ்சியும், வெங்கலக் கும்பால்ல ஊத்தி வச்சா.
அத எடுத்துக்காந்த லச்சுமாயி அவுங்க முன்னால குனிஞ்சி வச்சு, சாப்பிடச் சொல்லிட்டு நிமுந்தா. நிமுரமில்ல… மேமூச்சு, கீமூச்சு வாங்குறா.

வகுத்துப் பிள்ளைய சொமந்துக்கிட்டு லச்சுமாயி படுற அவஸ்தயும், தாம் மேல வச்சிருந்த பிரியத்தையும் நெனச்சுப் பாத்த கட்டக்காளைக்கு, கண்ணீரு முட்டிக்கி நிக்கிது...

ஆம்பள கண்கலங்கிறத, ஆரும்பாத்தா அசிங்கமின்டு நெனச்சவன், அத வெளிக்காட்டாம, “நீ பேசாம ஒரெடத்துல ஒக்காரு…”ன்டு சொன்னான். அங்கெனருந்த திருகையில ஒக்காந்த லச்சுமாயி, கட்டக்காளை மொகத்தயேப் பாத்துக்கிருந்தா…
கட்டக்காளையும், அவளையே பாத்துக்கிட்டு சோத்த ஒழப்பிக்கிருந்தான். கும்பாலயிருந்த சோத்த அவக்கவுக்கின்டு அள்ளிச் சாப்பிட்ட ஒச்சுக்காளை, கும்பாவில ஒட்டியிருந்த மிச்சம் மீதிய வழிச்சு வாய்க்குள்ள போட்டான்.

இதப் பாத்த பின்னத்தேவன், “அவருக்கு மறுகஞ்சி ஊத்தும்மா, பெறாக்குப் பாத்திட்டுருக்க…” மக லச்சுமாயச் சத்தம் போட்டு சொல்லிக்கிட்டே, மாட்டக்கழத்தி குழுதானியில தண்ணிக்கி விட்டான்.

மருமகன் முன்னாடி நிக்கிறதுக்கு சங்கடப்பட்டு ஆக்குப்பறையில நின்டுக்கிருந்தா பெருமாயி. பின்னத்தேவன் சொல்ற சத்தம் கேட்டு, சோத்தப் போட்டுக்குப் போயி லச்சுமாயிக்கிட்ட கொடுத்தா.

கஞ்சியக்குடிச்சிட்டு கைகழுவின கட்டக்காளை, கட்டுல்ல போயி ஒக்காந்துட்டு, தாம் பின்னாடியே வந்த லச்சுமாயப் பாத்துக்கிட்டேருந்தான்.

மாசமாறதுக்கு முன்னாடி, சிட்டுக்கெணக்கா அங்கிட்டும் இங்கிட்டும் ஓடிக்கித்திரிஞ்சவ, இப்ப வகுத்துப் பிள்ளைய சொமந்துக்கிட்டு பொத்துனாப்பில நடந்துவரா.

தாம் பக்கத்துல வந்த லச்சுமாயி கையப் புடிச்சு, ஒக்கார வச்சான்.

பக்கத்துல ஒக்காந்த லச்சுமாயி, கட்டக்காளை கையப் புடிச்சு, அவெ வகுத்துல வச்சா… வகுத்துக்குள்ளருந்த பிள்ள, அங்கிட்டும் இங்கிட்டும் துள்ளுறத காமிச்சா.

“பாரு... அப்பெனப்பாக்கணுமின்டு இப்பயே முண்டுறத”ன்டு சொல்லிச் சிரிச்சா…

பிள்ள முண்டுறப்ப… அவனுக்கு ரோமக்காலெல்லாம் நட்டமா நின்டுருச்சு. அவென் நெஞ்சு இப்பமாரி எப்பயும் துடிச்சதில்ல… அவனுக்குள்ள வந்த ஆனந்தத்த அடக்க முடியல.

மாமென் மாமியா எல்லாம் வீட்டுக்குள்ள இருக்காகின்றதனால தலையக் கவுந்துக்கிட்டு சிரிச்சான்.

ரெண்டு பேரும் ஒக்காந்து பேசுறதுக்கு எடைஞ்சலா இருக்கப்படாதின்டு, ஆக்குப்பறையில என்னமோ செஞ்சிட்டுருந்த பெருமாயி, அப்படியே போட்டுட்டு வெளிய போயிட்டா.

பின்னத்தேவனும், ஒழவு மாட்டக் கழத்திக்கிட்டு லாடம் கட்டணுமின்டு ஆலமரத்துக்குச்செவ, ஒச்சுக்காளையக் கூட்டிக்கிட்டுக் கெளம்பிட்டான்.

வீட்டுக்குள்ளருந்த எல்லாரும், வெளிய போயிட்டாங்கன்றத சுத்திமுத்திப் பாத்தா லச்சுமாயி.

கொல்லநாக் கழிச்சு கட்டக்காளைக்குப் பக்கத்தில ஒக்காந்த அவளுக்கு, மனசெல்லாம் பூவா பூத்து, மலந்து நிக்கிது அப்படியே அவன் தோள்ல சாஞ்சுக்கிட்டா…

மாசக் கணக்கில லச்சுமாயக் காணாம, ஏங்கிப்போயிருந்த கட்டக்காளைக்கு, அவபக்கத்திலயே ஒக்காந்து… தாம் வாரிசு, வகுத்துக்குள்ள துள்ளுரத தொட்டுப்பாக்குறப்ப, மனசுக்குள்ள அப்படி ஒரு சொகம்… அப்டியே செத்தநேரம் சொக்கிப் போயிக் கெடந்தான்.

மனசு நெறஞ்ச புருசன் பக்கத்திலருக்கப்ப, எத்தம் பெரிய சொமயும்,சொகமாத்தான் இருக்கும். லச்சுமாயும், இப்ப அந்த நெலமயிலதான் இருந்தா.

ஆக்குப்பறையிலிருந்து வந்த கருகல் வாட, லச்சுமாயி மூக்கத் தொளைக்க, ஒக்காந்த மேனிக்கே எட்டிப்பாத்தா லச்சுமாயி.
அடுப்பில வச்சிருந்த சட்டியிலருந்து, பொகையாப் போயிக்கிருந்துஞ்சு.

“அடுப்பில என்னத்த வச்சுட்டுப் போனாளோ…”ன்டு சத்தமாச் சொல்லிக்கிட்டே, வேகமா எந்திரிச்சு நடந்தா, படிக்கெட்டில ஏறுன லச்சுமாயி, காலுத்தடிக்கி ‘நங்கு’ன்னு படிக்கட்டுலயே விழுந்து… “யாத்தே…” ன்டு கத்துனா…

கட்டுல்ல ஒக்காந்துருந்த கட்டக்காளை, பதறியடிச்சு எந்திரிச்சு, ஓடிப்போயி அவள தூக்கினான். சத்தங்கேட்டு வெளிய ஒக்காந்து பேசிக்கிருந்த பெருமாயி, பேச்சியும் ஓடியாந்தாக…

படிக்கட்டுல விழுந்த லச்சுமாயிக்கு பெலத்த அடி பட்டுருச்சுபோல… “வலிக்குது…”ன்டு கதறுனா.

துடிச்சுப் போன கட்டக்காளை, “என்னான்டு பாருங்க”ன்டு மாமியா பெருமாயிகிட்ட சொன்னான். கூடருந்த பேச்சி, “மருத்துவச்சியக் கூட்டிக்காறேன்டு…” சொல்லிக்கிட்டே ஓடுனா…

மருத்துவச்சி பொன்னம்மா… ஒட்டிப்போன ஒடம்பு, கரேன்ட தேகம். பேரம் பேத்தி எடுத்த வயசு… இந்த ஊருல பெறந்த முக்காசி எளந்தாரிகளும், மினிக்கிக்கிட்டுத் திரியிற கொமரிகளும், இந்த ஒலகத்தப் பாக்கிறதுக்கு முன்னாடி பொன்னாம்மா மொகத்த பாத்ததுகதான்.

கொடி சுத்தியிருக்கிற பிள்ள கூட, பொன்னம்மா கை வச்சான்டா… படக்கின்டு கைக்கு வந்திரும். அம்புட்டுக் கைராசிக்காரி.
கையோட பொன்னம்மாள கூட்டிக்காந்துட்டா பேச்சி.

அடிவகுத்தப் புடிச்சுக்கிட்டு, பல்லக்கடிச்சு அழுகிறா லச்சுமாயி… கண்ணுலருந்து சாரை சாரையா கண்ணீரு.

லச்சுமாயி கைய ஆதரவாப் புடிச்ச பொன்னம்மா, கழுத்து நெத்தியில சூடு எப்பிடி இருக்கின்டு பாத்தா. “ஆம்பளைக எல்லாம் வெளிய போங்கப்பா…”ன்டு சொல்லிக்கிட்டு கண்ணப் பிதுக்கிப் பாத்தா.

நாடி புடிச்சு வாதம், பித்தம் நரம்பெல்லாம் எப்பிடி இருக்கின்டு பாத்தா. கட்டக்காளை எந்திரிச்சு வீட்டுக்குவெளியில வந்து நின்னான். லச்சுமாயி அழுகய நிப்பாட்டல… அழுதுக்கிட்டெ இருக்கா.

“வகுத்துப்பிள்ளக்காரி அழப்பிடாதுத்தே…” பெருமாயி சொன்னா.

ஆம்பளயாளுக ஆரும் இல்லன்றத தெரிஞ்சுக்கிட்டு, லச்சுமாயி சேலய வெலக்கிவிட்டா பொன்னம்மா…

“கொமரிப்புள்ள இதுக்குப் போயி அழுதுக்கிருக்க…நானுருக்கேன் தாயி, பயப்படாத…”ன்டு சொல்லிக்கிட்டே, தன்னோட எடதுகையில பொத்துனாப்பில சாச்சு, லச்சுமாயப் புடிச்சுக்கிட்டா.

வலது கைய வச்சு தண்டுவடத்தில ஒரேசீராத் தடவிக்கிட்டே போனா… புட்டானிக்கிட்ட வாரப்ப… இன்னமும் பெலக்கா கத்துனா லச்சுமாயி… ஆத்தா பெருமாயப் பாத்துக்கிட்டே அழுதா, பெத்தவளுக்கு மனசு தாங்கல...

“ஒண்ணுமில்லத்தே பொறுத்தக்க…”ன்டு மகளுக்கு தெம்பு சொன்ன பெருமாயி கண்ணுலயும், கண்ணீரு மெதக்குது…
லச்சுமாயிக்கு எங்க வலிக்குதுன்டு கண்டுபுடிச்சிட்டா பொன்னம்மா…

“அடிபட்ட எடத்தில ரத்தங்கட்டிருக்கே… கொஞ்சூண்டு வெளக்கெண்ணெய எடுத்துக்காத்தா...” பொன்னம்மா பெருமாயிகிட்ட சொன்னா.

“யாத்தே… ஏம்புள்ளைக்கு ரத்தங்கட்டிருக்கே…”ன்டு சொல்லி அழுதுக்கிட்டே போயி, வெளக்கெண்ணெய எடுத்துக்காந்து பொன்னம்மாகிட்ட கொடுத்தா பெருமாயி.

அடிபட்டுச் செவந்த எடத்தில வெளக்கெண்ணெய வச்சு நீவிவிட்டா… வலி கொறஞ்ச பாடில்ல.

லச்சுமாயி, கீழ விழுந்துட்டான்ற சேதி தெரிஞ்சு அக்கம்பக்கத்தாளுகளும் கூடிட்டாக…

பொன்னம்மா கையில சாஞ்சிருந்த லச்சுமாயத் தாங்கிப் புடிச்சிக்கிட்டே அழுகிறா பெருமாயி.

“செத்த அழுகாம இரு, நீயும் சின்னப்புள்ள கெணக்கா அழுதுக் கிருந்தா… என்னமோ, ஏதோன்டு பிள்ள பயந்திற மாட்டாளா… தெம்பு குடுக்கிறத விட்டுப்புட்டு மூக்கச் சிந்திக்கித்திரியிற…” பேச்சி, பெருமாய வஞ்சா.

மாட்டுக்கு லாடம் கட்டப்போன பின்னத்தேவனும் ஒச்சுக்காளையும் வந்துட்டாங்க.

“செத்த வெலகி நில்லுங்க ஆளுகளா… காத்துவரட்டும்…” கும்பலா நின்டுக்கிருந்த பொம்பளைகள, வெலகி நிக்கச் சொன்னா பொன்னம்மா.

உள்ள, லச்சுமாயி படுற வேதனைய, கட்டக்காளையால தாங்க முடியல, மனசு தவியாத் தவிக்குது… அவனால ஒரு எடத்தில நெலையா நிக்க முடியல. அங்கிட்டும் இங்கிட்டுமா நடந்திட்டுருந்தான்.

அப்டியே, தெசைய நோக்கி நின்டு, கையெடுத்துக் கும்பிட்டான்…

“ஆறு வருசத்துக்குப் பெறகு, பிள்ள வரம் குடுத்த கருப்பா… ஓம்புள்ளய ஏன், இப்படிச் சோதிக்கிற, அடுத்த வருசம் மொட்டயெடுத்து, ரெட்டக் கெடா வெட்டி நேத்திக்கடனச் செலுத்திப் பிடாலாமின்டுக்கிருக்கேன்… ஒனக்கு என்னா கொற வச்சிருக்கேன்… கையிகாலு சொகத்தக்குடுத்து ரெண்டு உசுரயும், காத்துக்குடுறா காளாஞ்சிக்கருப்பா…”ன்டு மனசார கும்புட்டான்.

லச்சுமாயிக்கு வலி இன்னமுங் கொறஞ்ச பாடில்ல. அடி வகுத்தப் புடிச்சுக்கிட்டு அழுதுக்கிட்டேருக்கா…

“புட்டானியல அடிபட்டுருக்கின்றீங்க... அடிவகுத்தப் புடிச்சுக்கிட்டு அழுகிறாளே… என்னான்டு நல்லா  பாருங்கடி…” கூட்டத்திலருந்த நல்லம்மா கெழவி சொன்னா.

அடிவகுத்துல தடவிப் பாத்த பொன்னம்மா… வலது பக்கத்திலருந்து எடது பக்கம் வரைக்கும் வெளைக்கண்ணெய வச்சு பொத்துனாப்பில நீவிப்பாத்தா… ஒண்ணுந்தெர்ல.

அடி வகுத்த தடவிப்பாத்தா… காலு கையில எங்கனயும் வீக்கமுமில்ல. புட்டானியத்தவர, வேறஎடத்தில அடிபட்டது
மாரித் தெர்ல.

லச்சுமாயிக்கு வலியும் கொறையமாட்டுது, எத்தனையோ பேத்துக்கு வைத்தியம் பாத்த கைராசிக்காரி பொன்னம்மாவுக்கு… வலிக்கான காரணம் இன்னும் புடிபடல…

பிள்ளைத் துடிப்புருக்கான்டு, திரும்ப வகுத்த தொட்டுப்பாத்தா... எந்த துடிப்பும் இல்லாம, கம்மின்டு கெடக்கு…
பொன்னம்மா மனசும், இப்ப நெகாத் தெரியாம தடுமாறி நிக்கிது!

(தொடரும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in