ரஜினி சரிதம் 11: ஆறிலிருந்து எழுபது வரை: கைவிட்டுப்போன வேலை...  கைகொடுத்த கே.பி!

ரஜினி சரிதம் 11: ஆறிலிருந்து எழுபது வரை: கைவிட்டுப்போன வேலை...  கைகொடுத்த கே.பி!

உடனே புறப்பட்டு வரும்படி அண்ணன் எழுதிய கடிதம், ரஜினியை ரொம்பவே தொந்தரவு செய்திருந்தது. ஆனால், மனதளவில் எதையும் தாங்கும் இதயம் கொண்டவராக இருந்தார் ரஜினி.

பெங்களூருவில் போய் இறங்கியதும் ரயில் நிலையத்தைவிட்டு வெளியே வந்தவர், வீட்டுக்குச் செல்வதற்காக 36-ம் எண் பேருந்தில் ஏறினார். அந்தப் பேருந்தின் நடத்துநர் புட்ராஜ் ரஜினியின் நல்ல நண்பர். “ஹேய்... சிவாஜி எப்படியப்பா இருக்கே... பார்த்து ரெண்டு வருஷம் ஆகிப்போச்சு” என்று ரஜினியை வரவேற்றார்.

புட்ராஜ் ஆவலுடன் நலம் விசாரித்தாலும் அடுத்தநொடியே அவரது முகமும் குரலும் வாடிப்போயின. “என்னப்பா டெப்போ ஆபீஸ் போனியா?” என்று கேட்டார் மெல்லிய குரலில். இதைக் கேட்ட ரஜினி சற்று பதற்றமாக, “ஏன்... என்ன ஆச்சு?” என்றார்.

“நீ இப்ப எங்கேயிருந்து வர்றே?” என்றார் புட்ராஜ். “சென்னையிலேர்ந்து இப்போத்தான் வந்து இறங்கினேன். வீட்டுக்குப் போயிட்டிருக்கேன்” என்றார் ரஜினி. “இதை நான் சொல்லும்படி ஆனதுக்கு ரொம்ப சாரி சிவாஜி... உன்னையும் சேர்த்து மொத்தம் 12 நடத்துநர்களை வேலையவிட்டு தூக்கிட்டாங்க. வீட்டுக்கு லெட்டர் வந்துருக்குமே” என்றார் புட்ராஜ்.

ரஜினிக்கு தலை சுற்றுவதுபோல் இருந்தது. நடிப்புப் பயிற்சி முடிந்து 2 மாதம் ஆகியிருந்த நிலையில், பாலசந்தரின் கலாகேந்திரா அலுவலகத்திலிருந்து தனக்கு அழைப்பு வரும் என்று கோபாலி சார் சொன்னதை நம்பி ஆவலுடன் காத்திருந்தார் ரஜினி. கலாகேந்திராவிலிருந்து தான் வரவில்லை. பயிற்சி முடித்ததும் நீ நான் என்று போட்டி போட்டுக் கூப்பிடுவார்கள் என்று இன்ஸ்டிடியூட்டில் சொன்னார்களே.... அதுவும் நடக்கவில்லையே. பாலசந்தர் சார் என்னைப்போல் ஒரு சிலருக்கு மட்டுமே நம்பிக்கைக் கொடுத்துச் சென்றார். அந்த அழைப்பும் இல்லை எனும்போது என்ன செய்வது, பேசாமல் கண்டக்டர் வேலைக்கே திரும்பிவிட்டால் என்ன என்று ரஜினி நினைக்கத் தொடங்கியிருந்த நேரத்தில்தான் அண்ணனிடமிருந்து கடிதம் வந்தது.

நடிக்க வாய்ப்பு வரும்போது வரட்டும். அதுவரை, கைநிறையச் சம்பளம் கிடைக்கும் கண்டக்டர் வேலையைப் பார்த்து குடும்பத்துக்கு உதவி செய்வோம் என்ற எண்ணத்துடன்தான் பெங்களூரு திரும்பினார் ரஜினி. ஆனால், வீட்டுக்குத் திரும்பும் வழியிலேயே தனது கண்டக்டர் வேலை கைவிட்டுப் போய்விட்டது என்பதை அறிந்தபோது திகைத்துப்போனார்.

வேலையைப் பறிகொடுத்த ரஜினி

சோர்வுடன் வீடு வந்து சேர்ந்தவரை, ஆசையுடன் ஓடி வந்து அணைத்துக்கொண்டார் அண்ணன் சத்யநாராயணா. அப்பா, அண்ணி என எல்லோரும் ஓடிவந்து ரஜினியை அரவணைத்துக் கொண்டார்கள். ரஜினியும் கலங்கித்தான் போனார். புட்ராஜை சந்தித்ததை அண்ணனிடம் ரஜினி சொல்ல, “அதற்காகத்தான் உன்னை வரச்சொல்லி கடிதம் போட்டேன்” என்று சொன்ன அண்ணன், அழுத்தம் திருத்தமாக ஒன்றைச் சொன்னார். “நீ திறமைசாலிடா... இதுக்கெல்லாம் கலங்கமாட்டேன்னு எனக்குத் தெரியும். 2 வருஷம் நடிப்புப் பயிற்சி எடுத்திருக்கே. அது உனக்கு கைகொடுக்கும். தைரியமா போய் சினிமால முயற்சி செய். ஒரு நாளைக் கூட பெங்களூரில் இருந்து வீண் செய்யாதே”என்றார் அண்ணன்.

இதைக்கேட்டு, நிஜமாகவே கண்கள் உடைந்து அண்ணனைக் கட்டிக்கொண்டார் ரஜினி. அண்ணன், தன்னை எத்தனைமுறை அடித்திருந்தாலும் அவை அனைத்துமே தனது நலனுக்கான அக்கறை என்பதை ரஜினி பால்யத்தில் விளங்கி வைத்திருந்தார். இம்முறை அண்ணன் தன் மீது எவ்வளவு பாசமும் நம்பிக்கையும் வைத்திருக்கிறார் என்பது தெரிந்தபோது, அது ரஜினியை பெருமிதம் கொள்ள வைத்தது. அப்பா தன் மீது வைக்காத நம்பிக்கையை அண்ணன் வைத்தது, அவரை கம்பீரமாக உணரவைத்தது.

அடுத்த நாளே சென்னைக்குப் புறப்பட ஆயத்தமானார். அதற்குமுன், போக்குவரத்துக் கழக அலுவலகத்தில் முறையாக பணியிலிருந்து விடுபடுவதற்கான நடைமுறைகளைச் செய்து முடிக்க அங்கே சென்றார். அங்கே அவரது நலம் விரும்பிகள் பலரும் ரஜினி சென்னைக்குச் சென்று வந்தது பற்றி அக்கறையுடன் விசாரித்தார்கள். சிலரோ, “இந்த மூஞ்சிக்கெல்லாம் சினிமால நடிக்க சான்ஸ் கிடைக்குமா? யார் யார் எதுக்கு ஆசைப்படுறதுன்னு இல்லையா..!” என்று ரஜினியின் காதுபட அவரைக் காயப்படுத்தினார்கள்.

கனவை நோக்கி பயணிப்பவர் மீது கல்லடிகள் விழாவிட்டாலும் சொல்லடிகள் விழாமல் இருக்குமா? இந்தக் குத்தல் பேச்சுகள் ரஜினிக்கு வலித்தது என்றாலும் அவர் கலங்கிவிடவில்லை. அன்றிரவே சென்னைக்கு ரயிலேறினார்.

சர்மா வந்தார்!

சென்னையில் மீண்டும் ஒருமாத காலம் உருண்டோடியது. ஒரு நாள் மாலை 5 மணி வாக்கில் ரஜினியின் அறைக்கதவைத் தட்டினார் அவரது நண்பரான சதீஷ். “சிவாஜி... சிக்கிரம் கிளம்பி ஓடிவா... பாலசந்தர் சாரோட அசோஷியேட் சர்மா வந்திருக்கார். உன்னைக் கையோட பாலசந்தர் சார் அழைச்சுக்கிட்டு வரச்சொன்னாராம். ஷேவ் பண்ணிட்டு நீட்டா வரச்சொன்னார்... வெயிட் பண்றாராம்” என்றார். ரஜினியின் உடலில் புது ரத்தம் பாய்வதுபோல் இருந்தது.

சிறுத்தை போல குளியலறைக்குள் பாய்ந்த ரஜினி, எக்ஸ்பிரஸ் குளியலை முடித்து க்ளீன் ஷேவ்வுடன் அடுத்த கால் மணி நேரத்தில் சர்மாவுக்கு எதிரில் போய் நின்றார்.

“குட்... போகலாம்” என்று சொல்லி, ரஜினியை காரில் ஏற்றிக்கொண்டார் சர்மா. அடுத்த 20-வது நிமிடம் கலாகேந்திரா அலுவலகத்தில் வந்து நின்றது கார். ரஜினியை வரவேற்பு அறையில் அமரவைத்த சர்மா, “சார் கூப்பிடுவார்... அதுவரைக்கும் இங்க வெயிட் பண்ணுங்க” என்றார்.

ரஜினிக்கு இதயம் இன்னும் வேகமாக துடிக்க ஆரம்பித்தது. பாலசந்தர் சார் என்ன கேட்பாரோ... எப்படிச் சோதனை வைப்பாரோ... அதுல நாம் தேறுவோமா... அல்லது சொதப்புவோமா... என்ற சிந்தனை ஓட்டம் ரஜினியின் ரத்த ஓட்டத்தை எகிற வைத்தது. உடனடியாக ஒரு சிகரெட் பிடித்தால்தான் தனது உணர்ச்சியைக் கட்டுக்குள் வைக்கமுடியும் என்ற நிலை. ஆனால், புகைக்க கீழே இறங்கிப் போகமுடியாதே... என்ன செய்துவது என்று யோசித்தார்.

அந்த வரவேற்புக் கூடத்தில் ‘அரங்கேற்றம்’, ‘அவள் ஒரு தொடர்கதை’, ‘இருகோடுகள்’ உள்ளிட்ட கே.பி. படங்களின் வெற்றி விழா ஷீல்டுகள் காட்சிக்கு இருந்தன. எழுந்து சென்று அவற்றை வரிசையாகப் பார்த்து தனது மனவோட்டத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டார். அப்போது அங்கு வந்த அலுவலக ஊழியர், “சார்… இந்தாங்க காபி” என்று சொல்லி டீபாயில் காபியை வைத்துவிட்டுப் போனார்.

ஆஹா... சிகரெட் புகைக்க வழியில்லாவிட்டாலும் காபி தனது உள்ளக் கொதிப்பைக் கொஞ்சம் குறைக்குமென்று ஆவலுடன் இருக்கையில் அமர்ந்து கோப்பையை கையில் எடுத்து முதல் மிடக்கை உறிஞ்ச உதடுகளைக் குவித்தார்…

அவ்வளவுதான்... “நீங்கதானே சிவாஜி… டைரக்டர் சார் உங்களை வரச்சொல்றார் உள்ளே போங்க” என்று சொல்லி கே.பி.யின் அறையைக் காட்டினார் ஊழியர். அப்படியே காபியை வைத்துவிட்டு உள்ளே போனார் ரஜினி. அதன்பிறகு நடந்தவற்றை ரஜினியே நொடி வாரியாக விவரிப்பதைப் பாருங்கள்:

தமிழ் கற்றுக்கொள்!

“கே.பி சார் நாற்காலியில் அமர்ந்திருந்தார். நான் கரங்களைக் கூப்பி அவரை வணங்கினேன். அவர் என்னோடு கை குலுக்கிவிட்டு, ‘உட்காருங்க சிவாஜி ராவ்’ என்று அழகான எனது பெயரை உச்சரித்து எனக்கு உத்தரவிட்டார். அவர் முன் அமர எனது மனம் இடம் தரவில்லை. பின்னர் வற்புறுத்தி உட்கார வைத்தவர், இன்ஸ்டிடியூட்டில் பார்த்ததுபோலவே எனது கண்களை கூர்ந்து நோக்கினார். அவரது பார்வையை எதிர்கொள்ள முடியாமல் எனக்கு உடல் நடுங்க ஆரம்பித்தது.

எனது நடுக்கத்தைக் குறைக்க நினைத்த கே.பி.சார், ‘என்ன படிச்சிருக்கீங்க?’ என்றார். நான், ‘எஸ்.எஸ்.எல்.சி. பாஸ் பண்ணியிருக்கேன்’ என்றேன். ‘உங்க நடிப்பைப் பார்க்க ஆசைப்படுறேன்... ஏதாவது பெர்ஃபாம் பண்ணுங்க’ என்றார். 2 வருடம் நடிப்புப் பயிற்சி எடுத்திருந்தாலும் இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது. ஏனோ சற்று தயங்கி ‘எனக்கு தமிழ் தெரியாதே சார்’ என்று ஆங்கிலத்தில் கூறினேன். ‘அதனால் என்ன கன்னடத்தில் நடித்துக்காட்டுங்கள் போதும்’ என்றார். இப்போது இதயத்துடிப்பு கட்டுக்குள் வருவதுபோல் ஒரு உணர்வு.

அதன்பின் கொஞ்சம் கூட யோசிக்காமல் ஒரு நீண்ட பெருமூச்சை இழுத்துவிட்டுக் கொண்டேன். கிரீஷ் கர்னாட் எழுதிய ‘துக்ளக்’ என்ற நாடகத்திலிருந்து துக்ளக்காக மாறி ஒரு வசனக் காட்சியைப் பேசி நடித்துக் காட்டினேன். பாலசந்தர் சாரின் முகத்தில் ஒரு வெளிச்சம் பரவியதைக் கண்டேன். ‘வெரிகுட்’ என்று பாராட்டியவர், ‘மூன்று படங்களை அடுத்தடுத்து இயக்கப் போகிறேன்.. மூன்றிலுமே உங்களுக்கு வாய்ப்புக் கொடுக்கிறேன். என்ன ரோல்... அது எவ்வளவு பெரிசு என்றெல்லாம் பார்க்காமல் நடிங்க. தமிழை நன்கு பேசக் கற்றுக்கொண்டால் உங்களை எங்கேயோ கொண்டுபோய்விடுவேன்.’ என்றார். எனக்கு உடம்பு சிலிர்த்துப் புல்லரித்தது. மீண்டும் கைகுலுக்கல். சர்மா சாரிடம் சொல்லிவிட்டு அறைக்குத் திரும்பினேன்.

அடுத்து வந்த 15 நாட்கள் யுகம்போல் நகர மறுத்தன. அன்று ஞாயிற்றுக் கிழமை. எனக்கு ஒரு போன் வந்தது. ‘அபூர்வ ராகங்கள்’ படத்தின் ஷூட்டிங் நாளைக்கு நடக்குது. நீங்கள் நடிக்கிற காட்சிகளை டைரக்டர் நாளை ஷூட் பண்றார். இன்னைக்கு கலாகேந்திரா ஆபீஸ் வந்து மேக்-அப் மேன் சுந்தரமூர்த்தியைப் பாருங்க’ என்றார் போனில் பேசியவர். இம்முறை கொஞ்சமும் பதற்றம் இல்லாமல் மேகம் போல் மனது இலகுவாக தெரிந்தது எனக்கு. கலாகேந்திராவுக்கு உடனே புறப்பட்டேன்.”

(சரிதம் பேசும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in