மஹுவா மொய்த்ரா: மக்களவையின் சூப்பர் ஸ்டார்!

மஹுவா மொய்த்ரா: மக்களவையின் சூப்பர் ஸ்டார்!

ம.சுசித்ரா
susithra.m@hindutamil.co.in

“விவசாயிகளின் போராட்டங்கள் மீது ஒடுக்குமுறை நடக்கிறது. இந்தியா அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையில் உள்ளது. அரசு தவறான தகவல்களை தொடர்ந்து பிரச்சாரமாக செய்துவருகிறது. நீதித் துறையும் ஊடகங்களும் தோல்வி அடைந்துவிட்டன. அதிகாரம், வெறுப்பு, பொய்யின் பின்னால் ஒளிந்துகொள்ளும் கோழைகள் அதைத் தைரியம் என்று அழைக்கத் துணிகிறார்கள்" - நாடாளுமன்றத்தில் அனல் கக்கிய திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர் மஹூவா மொய்த்ராவின் வார்த்தைகள் இவை!

அதிரவைக்கும் பேச்சு

‘அதிகாரத்துக்கு முன்பாக உண்மை விளம்புதல்’ என்ற தலைப்பில் மொய்த்ரா ஆற்றிய இந்த உரை, நாடாளுமன்ற அவை நாகரிகத்தை மீறிவிட்டதாகவும், இந்த உரை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்றும், இந்தப் பேச்சுக்காக மொய்த்ரா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் எம்பி-க்கள் சிலர் கூச்சலிட்டனர். சிலர் வாயடைத்துப் போய் உட்கார்ந்திருந்தனர். ராகுல் காந்தியும், அதிர் ரஞ்சன் சவுத்ரியும் உன்னிப்பாக அவருடைய உரையைக் கவனித்துக்கொண்டிருந்தனர்.

‘பாசிஸத்தின் ஏழு அறிகுறிகள்’ எனும் தன்னுடைய நாடாளுமன்றக் கன்னிப்பேச்சிலேயே, தூங்கிக்கொண்டிருந்த சக உறுப்பினர்களை மட்டுமல்ல தேசத்தையே தட்டியெழுப்பியவர் மஹூவா மொய்த்ரா. கடந்த ஒன்றரை ஆண்டில் நாடாளுமன்றத்தில் ஒலித்த அவருடைய கலகக்குரல், கருத்துரிமைக்கும் ஜனநாயகத்துக்கும் குரலெழுப்பும் அத்தனை இந்தியர்களுக்கும் டானிக் ஆனது. அவர் எது பேசினாலும் வைரலானது. காரணம், அவருடைய தங்குதடையற்ற பேச்சுத் திறன் மட்டுமல்ல. தான் பேச நினைப்பதையெல்லாம் ஆதாரங்களோடும் துணிச்சலோடும் நேர்கொண்ட பார்வையோடும் கட்டுக்கடங்கா மொழி ஆளுமையோடும் நாட்டின் தலைமைப் பீடத்தில் நின்று அவர் பேசியதே.

என் கேள்விக்கென்ன பதில்?

அண்மைக் காலத்தில், ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் உரைவீச்சுகள் பல்வேறு பிராந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு பத்திரிகை செய்தியாக மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களின் வழியாகவும் மக்களிடம் கொண்டு சேர்க்கப்படுகிறது என்றால் அது இவருடையதுதான்.

“நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், பொதுப் பிரச்சினைக்காக அதிகமான முறை உச்ச நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டி இருக்கிறார் என்றால், அதுவும் மொய்த்ராதான்” என்கிறார் மூத்த பத்திரிகையாளர் கரன் தாப்பர். ஆதார் அட்டைக்கு வங்கிக் கணக்கு கட்டாயம் என்று சொல்லப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து சட்டரீதியாக விலக்கு பெற்றார் மொய்த்ரா. இந்தியர்களின் சமூக ஊடகக் கணக்குகள் அரசாங்கத்தால் ரகசியமாகக் கண்காணிக்கப்படுகின்றன என்ற சர்ச்சை கிளம்பியதும், உச்ச நீதிமன்றத்திடம் நியாயம் கோரி நீதிமன்ற தடை உத்தரவை மக்களுக்குப் பெற்றுத் தந்தார்.

கரோனா தடுப்புப் பணிகளுக்காக, மக்களிடமிருந்து நிதி வசூலித்த ‘பிஎம் கேர்ஸ்’ கணக்கு வழக்கை கேள்விக்கு உள்ளாக்கி உச்ச நீதிமன்றத்தை அணுகினார். “வாக்களித்த மக்களின் குடியுரிமையைச் சந்தேகப்படுவது அநீதி” என்று குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகச் சட்டப் போர் தொடுத்தார். இப்படியான நடவடிக்கைகளால், அரசியலுக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று நம்பிக் கொண்டிருவர்களைக்கூட தேசிய அரசியலை உற்றுக் கவனிக்க வைத்திருக்கும் மஹூவா மொய்த்ராவைப் பற்றி பேச இன்னும் நிறைய இருக்கிறது.

சாமானியப் பின்னணியிலிருந்து...

மொய்த்ராவுக்குப் பூர்விகம் அசாம் மாநிலம். லபாக் என்ற மலைப்பகுதியில் நடுத்தரவர்க்க குடும்பத்தில் பிறந்தவர். தந்தை தேயிலை எஸ்டேட் ஊழியர். தாய் குடும்பத்தலைவி. ஒரு அக்காள். மொய்த்ராவின் பதின்பருவத்திலேயே இவரது குடும்பம் கொல்கத்தாவுக்குக் குடிபெயர்ந்தது. அப்போதே, தான் ஒரு இந்திரா காந்தியாகவோ அல்லது ஒரு மார்கிரட் தாட்சராகவோ உருவெடுக்க வேண்டும் என்ற உறுதிப்பாடு மொய்த்ராவுக்குள் வேர்விட்டது.

நிதி ஆலோசகர் டூ அரசியல்வாதி!

உயர்கல்விக்காக அமெரிக்காவுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. பொருளாதாரம் மற்றும் கணிதத்தில் இளநிலைப் பட்டப்படிப்பை அமெரிக்காவின் மவுன்ட் ஹோல்யோக் கல்லூரியில் முடித்தார். படிப்பில் படு சுட்டியாக இருந்தவருக்குக் கையோடு வங்கிப் பணி கிடைத்தது. வங்கி நிதி ஆலோசகராகப் பணி உயர்வு பெற்று 23 வயதிலேயே அமெரிக்காவில் சொந்த வீடு, சொகுசு கார் வாங்கும் நிலைக்குத் தன்னை உயர்த்திக்கொண்டார். லண்டன் ஜேபி மார்கன் வங்கியின் துணைத் தலைவரானார். நிதி ஆலோசகர் என்பதால், வங்கியின் தலைமைச் செயலதிகாரி உள்ளிட்ட உயரதிகாரிகளிடம் எதையும் ஆதாரத்துடன் நுட்பமாக, விலாவாரியாக விவாதிக்கும் திறனை வளர்த்துக்கொண்டார். அந்த வழக்கம்தான் இன்று நாடாளுமன்ற விவாதங்களுக்கும் தனக்குக் கைகொடுப்பதாகக் குறிப்பிடுகிறார்.

கவனிக்கத் தவறிய காங்கிரஸ்!

பணி வாழ்க்கையில் உச்சத்தை எட்டிப் பிடித்துக் கொண்டிருக்கும்போதே, அரசியலராவது என்று முடிவெடுத்து 2008-ல் தனது வேலையை ராஜினாமா செய்தார் மொய்த்ரா. லண்டனிலிருந்து நேராக டெல்லிக்குச் சென்றார். தன்னுடைய குடும்பத்தினர் பரம்பரையாகக் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள் என்பதால், 2009-ல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பஞ்சாயத்து வார்டுகள்தோறும் மக்கள் நலத்திட்டங்களைக் கொண்டு சேர்க்க ராகுல் காந்தி ‘ஆம் ஆத்மி கா சிப்பாஹி’ திட்டத்தைத் தொடங்கியபோது, 2010-ல் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினராக துடிப்புடன் ஈடுபட்டார் மொய்த்ரா. ஆனால், காங்கிரஸ் கட்சி அவருடைய ஆற்றலைப் பயன்படுத்திக்கொள்ளவே இல்லை.

மம்தாவுடனான விமானப் பயணம்!

நிதித் துறையில் பணிபுரிந்ததால், மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளின் அரசியல் குறித்து மொய்த்ராவுக்குக் கடுமையான விமர்சனம் இருந்தது. தொழில் வளர்ச்சித் திட்டங்கள் ஏதுமின்றி அம்மாநிலம் முடங்கிக்கிடப்பதாகக் கருதினார். காங்கிரஸ் கட்சியில் இருந்துகொண்டு சூழலைப் புரட்டிப்போடுவது சாத்தியமில்லை என்பதையும் உணர்ந்தார். மம்தா பானர்ஜி காங்கிரஸைவிட்டு வெளியேறியபோது, அவருடன் பெரும் எண்ணிக்கையிலான இளைஞர் காங்கிரஸார் கைகோத்தது மொய்த்ராவின் கண்முன் வந்து நின்றது. மம்தா பானர்ஜி அடாவடிக்காரர், படித்தவர்களை தன்னுடன் சேர்த்துக் கொள்ளமாட்டார் என்றனர் பலர். இந்த எண்ணத்தை, மம்தாவுடனான ஒரு விமானப் பயணம் தகர்த்தது. விமானத்தில், மம்தாவுக்கு அடுத்த இருக்கையில் உட்கார்ந்து பயணம் செல்லும் சந்தர்ப்பம் மொய்த்ராவுக்கு வாய்த்தது. அந்தப் பயணத்தில் இருவருக்கும் இடையில் நிகழ்ந்த உரையாடல், மம்தா எவ்வளவு இனிமையான மனுஷி, சிறந்த தலைவி என்பதை தனக்குத் தலையில் குட்டிப் புரியவைத்தது என்று நேர்காணல் ஒன்றில் கூறியிருக்கிறார் மொய்த்ரா.

நவநாகரிமான மொய்த்ரா அரசியலுக்கு ஒத்துவரமாட்டார் என்று மம்தா காதுபட கட்சியினர் முணுமுணுத்தனர். ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் 2016-ல் கரீம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் மொய்த்ராவைப் போட்டியிட வைத்தார் மம்தா. உடனடியாகக் கரீம்பூரில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்குத் தங்கி, அங்கு மக்களோடு மக்களாகப் பழகி தேர்தலிலும் வென்று காட்டினார் மொய்த்ரா. 2019 மக்களவைத் தேர்தலில், கிருஷ்ணா நகர் தொகுதியில் மொய்த்ராவைப் போட்டியிடவைத்தார் மம்தா. பாஜகவின் கல்யாண் செளபேவைவிடவும்  63 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகக் குவித்து, மக்களவை உறுப்பினராக நாடாளு
மன்றத்துக்குக் கம்பீரமாகப் புறப்பட்டார் மொய்த்ரா.

நாடாளுமன்றத்தில் தன்னுடைய இருக்கையில் இருந்து எழுந்து நின்று பேசத் தொடங்கும்போதெல்லாம், மத்திய அரசின் ஆட்சிப்பீடத்தை ஆட்டம் காணச் செய்கிறார் மொய்த்ரா. பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகள், பண மதிப்பு நீக்கம், சிறு வணிகர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், இளைஞர்களின் வேலைவாய்ப்பு என பலதரப்பு பிரச்சினைகளுக்கு ஒற்றைக் குரலாக ஓங்கி ஒலித்துவருகிறார்.

ரசனை மனம்

சுடச்சுடக் கேள்வி கேட்பதில் மட்டுமல்ல, சுடச்சுடச் சமைப்பதிலும் மொய்த்ராவுக்குப் பேரார்வம் உண்டு. பிரிட்டனில் வசித்த நாட்களில் வார இறுதிகளில் இத்தாலிக்குச் செல்லும் வழக்கம் மொய்த்ராவுக்கு இருந்தது. அப்போது கைதேர்ந்த சமையல்காரருடன் நட்பு மலரவே, இவரும் கிச்சன் கில்லாடி ஆனார். பெங்கால் காட்டன் சேலைகள் மொய்த்ராவின் அடையாளமாகிவிட்டன. அவற்றை அணிந்துகொள்ள பண்பாடு, கலாச்சாரத்தை உடன் அழைத்து வருவதில்லை இவர். மேற்கு வங்க நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மனதில் நிறுத்தியே, இந்த ஆடையை தன்னுடைய விருப்பத்தேர்வாக உடுத்துவதாகச் சொல்கிறார்.

மொய்த்ரா பற்றி இவ்வளவு சிலாகித்துப் பேசிக்கொண்டிருக்கையில், தமிழகத்திலிருந்து நாடாளுமன்றத்துக்குத் தேர்வாகிப்போன 38 எம்பி-க்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற கேள்வியும் எழாமல் இல்லை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in