காற்றில் கரைந்த கம்பீரக்குரல்: தா.பாண்டியன்- சில நினைவுகள்

காற்றில் கரைந்த கம்பீரக்குரல்: தா.பாண்டியன்- சில நினைவுகள்

கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

1991 மே 21. ஸ்ரீபெரும்புதூரில் நடந்த மனித வெடிகுண்டுத் தாக்குதலில் தா.பாண்டியனுக்கு வலதுபுறம் நின்ற ராஜீவ்காந்தி உட்பட சுற்றியிருந்த 19 பேர் கொல்லப்பட்டார்கள். ராஜீவ் காந்தியின் உடலோடு சேர்ந்து பறந்து அவரது அருகிலேயே கிடந்த தா.பாண்டியனை, சிவப்புத் துண்டை வைத்துத்தான் அடையாளம் கண்டார்கள். பத்திரிகை மற்றும் வானொலிச் செய்தியில் வெளியான இறந்தோர் பட்டியலில் தா.பாண்டியனும் இருந்தார். அவர் உயிர்த்தெழுந்த விஷயம் தாமதமாகத்தான் பலருக்கும் தெரிந்தது. பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சாட்சியாக நிறுத்தப்பட்ட அவரைப் பார்த்து அதிர்ச்சியடைந்து, “நீர் உண்மையிலேயே தா.பாண்டியன் தானா... அல்லது பொய் சாட்சியா?” என்று நீதிபதியே கேட்ட கதையெல்லாம் கூட உண்டு.

வெடிகுண்டாலேயே வீழ்த்த முடியாத தா.பாண்டியனை, வயோதிகத்தால் வந்த உடல்நலக் கோளாறுகள் வீழ்த்திவிட்டன. குண்டடிபட்ட இடத்திலிருந்து காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையை நோக்கி அழைத்துச் சென்ற தோழர்களிடம், “வண்டியை, சென்னை அரசினர் பொது மருத்துவமனைக்கு விடு” என்று சொன்னவர் தா.பாண்டியன். கடந்த 5 ஆண்டுகளாக அதே மருத்துவமனையில் டயாலிசிஸ் செய்துவந்த தா.பாண்டியன், மதுரைக்கு ஏதாவது நிகழ்ச்சிக்கு வந்தாலும் டயாலிசிஸ் செய்ய சென்னைக்குப் போய்விடுவார். அந்த மருத்துவமனைக்கு ராஜீவ்காந்தியின் பெயரைச் சூட்டக்காரணமானவர், அதே மருத்துவமனையில் தன் இன்னுயிரை ஈந்திருக்கிறார்.

பொதுவுடமை சிந்தனையாளர், கட்டுரையாளர், பத்திரிகை ஆசிரியர், ஆங்கிலப் பேராசிரியர், வழக்கறிஞர், தலைசிறந்த நாடாளுமன்றவாதி, மொழிபெயர்ப்பாளர் என்று நிறைய அடையாளங்கள் இருந்தாலும் ‘தா.பா.’ என்றதும் பாமரருக்கும் நினைவுக்கு வருவது அவரது பேச்சாற்றல் தான். எந்த விஷயத்தைப் பற்றியானாலும் தங்கு தடையில்லாமல், கவித்துவமாகவும், ஆணித்தரமாகவும் பேசும் ஆற்றல் பெற்றவர் அவர். இலக்கியம் பேசினாலும் சரி, அரசியல் பேசினாலும் சரி மாற்றுக்கருத்து கொண்டோரையும் கட்டிப்போட்டுவிடுவார். திமுக தலைவர் கருணாநிதி, தன்னுடைய மகன் ஸ்டாலினிடம் பொதுமேடையிலேயே, தா.பாண்டியன் போன்றோரின் பேச்சுகளை கவனித்து, பேசக் கற்றுக்கொள்ளுமாறு அறிவுரை சொன்னது நினைவிருக்கலாம்.

தா.பா.வின் எழுத்தாள முகம் அதிகம் கொண்டாடப்பட்டதில்லை. ஆனால், அவரது ஒரு புத்தகத்தைப் படித்தவர்கள், அத்தனை புத்தகங்களையும் தேடிப்பிடித்து வாங்கிவிடுவார்கள். ‘ராஜீவ்காந்தியின் கடைசி மணித்துளிகள்', ‘பாரதியும் சாதி ஒழிப்பும்', ‘இயக்கத்தை இசைத்த புலவன் பட்டுக்கோட்டை', ‘படுகுழிக்குள் பாரததேவி', ‘மதமா அரசியலா?’ என 25-க்கும் அதிகமான நூல்களை எழுதியிருக்கிறார் தா.பாண்டியன். கரோனா காலத்தில் கூட, ‘கொரோனாவா முதலாளித்துவமா?' என்ற நூலை கைப்பட எழுதி, வெளியிட்டார்.

மற்ற கம்யூனிஸ்ட்களிடம் இல்லாத ஒரு அருங்குணம் தா.பாண்டியனிடம் உண்டு. நாங்கள் எல்லாம் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என்றோ, கட்சியின் பொலிட் பீரோ ஒரு முடிவெடுத்துவிட்டால் ஒரு அடிமையைப் போல அதை அப்படியே ஒப்புக்கொள்ள வேண்டும் என்றோ எண்ணுபவர் அல்ல அவர். சொந்தக் கட்சியே தவறு செய்தாலும் அதை விமர்சிக்கத் தயங்காதவர். அதற்காக கட்சியை விட்டு நீக்கப்பட்டிருந்தாலும்கூட, அந்த குணத்தை மாற்றிக்கொள்ளவில்லை. அவரது ‘பொதுவுடமையரின் வருங்காலம்' நூல், கம்யூனிஸ்ட்கள் செய்த தவறையும், அதில் இருந்து பெறவேண்டிய பாடத்தையும் புட்டுப் புட்டு வைத்தது.

அதேபோல, மாற்றுக் கட்சிகள், தலைவர்களின் கொள்கைகளையும் மதிப்பவர் தா.பா. ஆரம்பகால கம்யூனிஸ்ட் கட்சியினர், திகவை ‘திராவிடர் கலகம்’ என்று இழிவுபடுத்திய காலத்திலேயே பெரியாரைப் புகழ்ந்துபேசி கட்சியின் கண்டனத்துக்கு உள்ளானவர். பிற்காலத்தில் அதே கம்யூனிஸ்ட்கள் பெரியாரைப் புகழ்ந்தபோது, “இன்று பெரியாரையும், அம்பேத்கரையும் போற்றிப்புகழும் நீங்கள் அவர்கள் களத்தில் நின்ற காலத்தில் சேர்ந்து போராடாதது ஏன்?” என்று கேள்வி கேட்கவும் தயங்கியதில்லை.

கம்யூனிஸ்ட்களுக்கு ஒவ்வாத கருத்தொன்றை தா.பா தன்னுடைய பேட்டியில் சொல்லிவிடுவார். அதைப் படித்துவிட்டு கம்யூனிஸ்ட்கள் குதியாய் குதிப்பார்கள். ஆனால், 5 ஆண்டுகள் கழித்து தா.பா. எதைச் சொன்னாரே அதையே தான் செய்வார்கள் கம்யூனிஸ்ட்கள்.

2019 ஏப்ரலில் அவரை பேட்டி கண்டபோது, “தேசிய ஜனநாயகக் கூட்டணி மோடிதான் பிரதமர் வேட்பாளர் என்று தெளிவாகச் சொல்லிவிட்டது. திமுக முன்மொழிந்தும்கூட ராகுலை பிரதமர் வேட்பாளராக இடதுசாரிகள் ஏற்கவில்லையே?” என்று கேட்டேன்.

அதற்கு, “இன்றைய சூழலில் எங்கள் அணியில் எந்தக் கட்சியும் தனிப்பெரும்பான்மை பெறமுடியாது. காங்கிரஸ் கட்சிக்கும்கூட தனிப்பெரும்பான்மை கிடைக்காது என்றாலும், மற்ற கட்சிகளைவிட சற்று கூடுதலான இடங்களைப் பெறுவதன் மூலம் அந்த வாய்ப்பு காங்கிரஸ் கட்சிக்குத்தான் கிடைக்கும். எனவே, வீண் விவாதம் செய்யாமல், இப்போதே ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்று சொல்வது ஆண்மையுள்ளது; அறிவுக்குப் பொருத்தமானது” என்று துணிந்து சொன்னார் தா.பாண்டியன்.

ராஜீவ்காந்தியின் குடும்ப நண்பர், அவரது குழந்தைகளை மடியில் வைத்துக் கொஞ்சியவர் என்கிற முறையில் பிரியங்காவுடன் ஒப்பிட்டால் ராகுல் காந்தி தலைமைப் பண்பு இல்லாதவர், கூச்ச சுபாவம் உள்ளவர் என்று வெளிப்படையாகச் சொன்னவர்தான் தா.பாண்டியன். “காலம் கடந்து இப்போது மேற்கு வங்கத்தில் காங்கிரஸோடு கூட்டணி வைக்கிறார்கள் கம்யூனிஸ்ட்கள். அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் அவர்கள் நிச்சயம் ராகுல்தான் பிரதமர் வேட்பாளர் என்று அறிவிப்பார்கள் என்றே நானும் அவதானிக்கிறேன்”. இப்படி 5 ஆண்டுகளுக்கு முன்பே சொன்ன தா.பாண்டியன் எவ்வளவு பெரிய தீர்க்கத்தரிசி?

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள வெள்ளைமலைப்பட்டியில் பிறந்தவர் தா.பாண்டியன். நல்ல கிராமத்து உடல்வாகு அவருக்கு. குண்டு வெடிப்புச் சம்பவத்துக்கு முன்புவரையில் ராணுவ வீரரைப்போல கம்பீரமாக காட்சியளித்தவர், பிறகு கொஞ்சம் மெலிந்துபோனார். சிறுநீரக கோளாறு ஏற்பட்டு டயாலிஸிஸ் செய்யத் தொடங்கிய பின்னர் குச்சிபோல மெலிந்துவிட்டார். ஆனால், யானை இளைத்தாலும் தந்தம் இளைக்காது என்பதுபோல, அவரது கம்பீரமான குரல் அப்படியே இருந்தது. கம்பீர நடைபோட்ட தா.பா., கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஊன்றுகோல் உதவியுடன் நடக்கத் தொடங்கினார். கடந்த ஆண்டு இறுதியில் சக்கர நாற்காலியில் உட்கார வேண்டியதாகிவிட்டது.

பிப்ரவரி 18-ம் தேதி மதுரையில் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில், அதிக கைதட்டல் பெற்றது தா.பாண்டியனின் பேச்சுதான். அந்த மாநாட்டில் தா.பா. பேசும்போது சொன்னார், “நான் நின்று பேசிய காலமும் உண்டு, இப்போது உட்கார்ந்து பேசுகிறேன். ஆனால், என்னுடைய காலிலும், இடுப்பிலும் எலும்புகள் ஒத்துழைக்கவில்லையே தவிர, மண்டை ஒழுங்காகத்தான் இன்றைக்கும் இருக்கிறது. என் நாவால், சாகும் வரையில் இந்த நாட்டைத் தட்டி எழுப்புவேன். என்னை மட்டுமல்ல என்னுடைய செம்படையை எந்தக் கொம்பனாலும் அடக்க முடியாது. வகுப்புவாதத்தை இந்த மண்ணில் கால் மிதிக்க விட மாட்டோம்” என்று சூளுரைத்தார்.

எப்படி பெரியாரின் தடியும், எம்ஜிஆரின் தொப்பியும், கலைஞரின் கருப்புக் கண்ணாடியும் தமிழ் மண்ணின் அரசியல் அடையாளங்களாக நீடிக்கின்றனவோ, அப்படியே தா.பாண்டியனின் சிவப்புத் துண்டும் தனித்த அடையாளமாக நிலைக்கும்.

படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in