ஒன்பது வயதில் கண்ட கனவு: விண்கலத்துக்கு வழிகாட்டிய சுவாதி!

ஒன்பது வயதில் கண்ட கனவு: விண்கலத்துக்கு வழிகாட்டிய சுவாதி!

சாதனா
readers@kamadenu.in

‘ஏலியன்’, ‘கிராவிட்டி’, ‘இன்டர்ஸ்டெல்லார்’… என அறிவியல் புனை கதைத் திரைப்படங்களை நம்மில் பலரும் பார்த்திருப்போம். வியப்பூட்டும் காட்சிகளை வாய்பிளக்கப் பார்த்துவிட்டு அன்றாட வாழ்க்கைக்குத் திரும்பிவிடுவோம். ஆனால், சுவாதி மோகன் தன்னுடைய ஒன்பதாவது வயதில், ‘ஸ்டார் டிரெக்’ சயின்ஸ் ஃபிக்‌ஷன் டிவி தொடரைப் பார்த்துவிட்டு என்ன செய்தார் தெரியுமா? “விண்வெளியை ஆராய்ந்து புதிய உலகைக் கண்டடைவதே என் லட்சியம்” என்று தீர்மானித்துக் கொண்ட இவர், அந்தக் கனவு மெய்ப்பட அடுத்த நாள் முதல் பள்ளியில் இயற்பியல் பாடத்தை ஊன்றிப் படிக்க ஆரம்பித்தார். அவர் கண்ட கனவு இன்று பலித்துவிட்டது!

ஆம், சிவப்புக் கோளான செவ்வாய்க் கிரகத்தின் மேற்பரப்பில் நாசாவின் ‘பெர்சிவரன்ஸ் ரோவர்’ விண்கலம், பிப்ரவரி 18-ல் வெற்றிகரமாகத் தரையிறங்கிய செய்தி உலகையே உற்சாகம் கொள்ளச் செய்திருக்கிறது. இந்த வரலாற்றுச் சாதனைக்குப் பெரும் தூணாக இருந்தவர் சுவாதி மோகன். இந்த விண்கலத்தை வழிநடத்தும் குழுவின் தலைவரும் அவர்தான்.

கல்வியில் சிறந்தவர்

இந்தியாவில் பிறந்த சுவாதி ஒரு வயது குழந்தையாக இருந்தபோதே, அவருடைய பெற்றோர் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தனர். வடக்கு வெர்ஜினியா மற்றும் வாஷிங்டன் டிசி மாகாணங்களில் சுவாதி வளர்ந்தார். கார்னெல் பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் மற்றும் ஏரோஸ்பேஸ் பொறியியல் படிப்பை முடித்தார். மேற்கொண்டு, கல்வியில் பிரசித்தி பெற்ற மாசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் முதுநிலை மற்றும் பிஎச்.டி பட்டங்களையும் பெற்றார்.

அதன் பின்னர் தான், அவரது கனவின் முதல்கட்டம் தொடங்கியது. நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் நிலவுக்கு விண்கலத்தை அனுப்பும் ஆய்வுக் குழுவில் பணியில் சேர்ந்தார் சுவாதி. பின்னர் ‘மார்ஸ் 2020’ திட்டத்தில் முழுவீச்சில் ஈடுபடலானார். இத்திட்டத்தின் வழிகாட்டுதல், வழிசெலுத்துதல் மற்றும் கட்டுப்படுத்துதல் பிரிவுக்குத் தலைமையேற்றார். பெர்சிவரன்ஸ் ரோவர் விண்கலத்தின் உயிர்நாடிப் பிரிவு இது. வகுக்கப்பட்ட பாதையில் விண்கலத்தை துல்லியமாகப் பயணிக்க வைத்து, செவ்வாய்க் கிரகத்தில் தரையிறங்க வைக்கும் பொறுப்பு சுவாதிக்குத் தரப்பட்டது. அதை மனமுவந்து ஏற்று ஏழாண்டுகள் கடின உழைப்பைச் செலுத்தினார்.

திக்.. திக்.. 7 நிமிடங்கள்!

அறிவியல் புனை கதைப் பட க்ளைமேக்ஸ் காட்சிபோல, பெர்சிவரன்ஸ் ரோவர் விண்கலம் செவ்வாய்க் கிரகத்தில் தரையிறங்கிய கடைசி மணித்துளிகளை நாசா வெளியிட்டிருக்கிறது. அந்தக் காணொலிப் பதிவில் இவ்வாறு சுவாதி விவரித்தார்: “பூமிக்கான ஆன்டெனா, சூரியனை நோக்கிய சோலார் பேனல் ஆகியன திட்டமிட்டதுபோல மிகச்சரியாக செயல்படுகின்றனவா என்பதைக் கண்காணித்துக் கொண்டே விண்கலத்தைச் செவ்வாய்க் கிரகத்தை நோக்கிச் செலுத்தினோம். கடைசி ஏழு நிமிடங்கள் திக்.. திக்.. நொடிகளாகக் கடந்தன” என்கிறார் சுவாதி.

ஏழு ஆண்டுகள் செலுத்திய கடின உழைப்புக்கான வெற்றியை அந்த ஏழு நிமிடங்கள் உறுதிப்படுத்தியதும் உற்சாகம் கொப்பளிக்க, “டச்டவுன் கன்ஃபர்ம்டு” (Touchdown Confirmed) என்று அறிவித்தார் சுவாதி.

சுவாதியின் சாதனையை உலகமே கொண்டாடி வருகிறது. லட்சியக் கனவை எட்டிப் பிடித்திருக்கும் இந்திய வம்சாவளியின் சுவாதியை வாழ்த்துவதில் நாமும் பெருமைகொள்வோம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in