ரஜினி சரிதம் 07: ஆறிலிருந்து எழுபது வரை: ரஜினி நடித்த ‘நெருப்பு’ நாடகம்!

ரஜினி சரிதம் 07: ஆறிலிருந்து எழுபது வரை: ரஜினி நடித்த ‘நெருப்பு’ நாடகம்!

பூங்காவிலிருந்து கேட்ட பெண்ணின் அபயக் குரலுக்கு ஆபத்பாந்தவனாக ஓடினார் ரஜினி. ஆனால், அங்கே நடந்தது நாடக ஒத்திகை என்பதை அறிந்து ஆச்சரியப்பட்டுப் போனார். உண்மையறிந்து சிரித்த ரஜினி, தனது தோளில் யார் கைவைப்பது என்று திரும்பிப் பார்த்தார். அவரது தோளில் கை வைத்தவர் அந்த நாடகக் குழுவிலிருந்த இளைஞர்களில் ஒருவர் என்பதுடன், ரஜினிக்குத் தெரிந்த முகமாகவும் இருந்தார்.  

அவரைப் பார்த்து,  “உங்களை எங்கேயோ பார்த்திருக்கிறேன்” என்றார் ரஜினி. அந்த மாணவரோ..  “எங்கேயோ இல்லை சிவாஜி... பசவனகுடியில் உள்ள ஏ.பி.எஸ் பள்ளியில் நீங்க ஒன்பதாம் வகுப்பு படிச்சீங்க... நான் பத்தாம் வகுப்பு. நான் உங்க சீனியர் ராகவன். நாம ரெண்டுபேரும் ‘ஹிருத்தய ஸ்பரிசா’ நாடகத்தில் நடிச்சிருக்கோம் மறந்துட்டீங்களா?” என்றார். சட்டென்று ரஜினிக்கு நினைவுக்கு வந்துவிட்டது. மறக்கக் கூடிய நாடகமா அது!  

ரஜினியின் 8-ம் வகுப்பு ஆசியரான பி.எஸ்.சந்திரசேகர உபாத்தியாயா கன்னடத்தில் எழுதி, பெங்களூரு மண்டல ஆங்கிலப் பள்ளிகளுக்கு இடையிலான நாடகப் போட்டியில் அரங்கேறிய நாடகம் அது. பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர் பகைவனுக்கும் அருளும் கருணையுடன் எப்படி வாழ்ந்தார் என்பதை எடுத்துக்காட்டும் நாடகம். அந்த நாடகத்தில், பரமஹம்சர் தனது வீட்டிலிருந்து புறப்பட்டு காட்டின் வழியாக கல்கத்தா காளி கோயிலுக்குச் செல்வார். அப்போது அவரைக் கூட்டமாக வந்து வழிமறிக்கும் கொள்ளைக் கூட்டத்தின் தலைவனாக 9-ம் வகுப்பு படித்துவந்த ரஜினியை நடிக்க வைத்தார் ஆசிரியர்.  

அந்த நாடகத்தில் பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர் கதாநாயகன் என்றால் ரஜினி ஏற்றது வில்லன் வேடம். திருடர்களின் தலைவன் திருந்தி அவரிடம் சீடனாகச் சேர்வதுபோன்ற வேடம். ரஜினி தனது துடிப்புமிக்க நடிப்பால் அசத்தினார். அதுமட்டுமல்ல... அந்த நாடகத்தில் இலக்கியக் கன்னட வழக்கில், அவையோர் பாராட்டும் விதமாக திருத்தமான கன்னட உச்சரிப்பில் பேசி சிறந்த நடிகருக்கான கோப்பையைப் பரிசாகப் பெற்றார் ரஜினி. ராமகிருஷ்ண மடத்தின் ஆண்டுவிழா நாடகத்தில் 11 வயதில் விவசாயியாக நடித்து பாராட்டுப் பெற்ற ரஜினி, அதன்பின் 15 வயதில் சிறந்த நடிப்புக்காக வாங்கிய முதல் விருது இதுதான். ரஜினிக்கு மட்டுமல்ல... அந்த நாடகத்துக்கும் முதல் பரிசு கிடைத்தது.  

வில்லன் வேடத்துக்காக பிடிவாதம்!

தனது சீனியர் ராகவனைச் சந்தித்துவிட்டு வீடு திரும்பிய ரஜினிக்கு, பூங்காவில் நடந்த சம்பவம் மீண்டும் நாடகத்தின் மீது ஆர்வத்தைத் தூண்டியது. அந்தக் காலகட்டத்தில் அரசு அலுவலங்கள் தொடங்கி எங்கு திரும்பினாலும் அமெச்சூர் நாடகக் குழுக்கள். ரஜினி பணியில் சேர்ந்திருந்த கர்நாடக போக்குவரத்துக் கழகத்தின் பெங்களூரு தலைமை அலுவலகத்திலும் ஒரு நாடகக் குழு இயங்கி வந்தது. அந்தக் குழுவின் சார்பில் ஆண்டுதோறும் ஆண்டு விழா நாடகம் நடக்கும். அதை அறிந்த ரஜினி, நாடக ஒருங்கிணைப் பாளரைப் போய் பார்த்தார். ரஜினி வேலைக்குச் சேர்ந்த முதலாவது ஆண்டு அது. அந்த ஆண்டு ‘குருஷேத்ரா’ என்கிற நாடகத்தை நடத்த  சனிக்கிழமை தோறும் ஒத்திகை நடப்பதாகச் சொன்னார் நாடக ஒருங்கிணைப்பாளர்.  

அந்த வாரத்தின் இறுதியில் நாடக ஒத்திகையில் என்ன நடக்கிறது என்பதை காணும் ஆவலுடன்  ஒத்திகை நடந்த இடத்துக்குச் சென்றார் ரஜினி. அப்போது துரியோதனனாக நடித்துக்கொண்டிருந்தவரிடம் வலியச் சென்ற ரஜினி, அவருக்கு வசனங்களைத் திருத்தமாகச் சொல்லிக்கொடுத்தார். இதைக் கண்டு நாடக இயக்குநருக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது.  “எங்கே... நீ நடித்துக்காட்டு” என்ற ரஜினியை அவர் தூண்டப்போய், கொஞ்சமும் யோசிக்காமல் கனீர் குரலில் கம்பீரம் தொனிக்க வசனங்களைப் பேசி நடித்தார் ரஜினி. குழுவினர் மிரண்டார்கள். சிவாஜியையே துரியோதனனாக நடிக்க வைக்கலாம் என்றார்கள். இயக்குநரோ, “உடம்பு இருந்தாலும் இவருக்கு வயது போதாது” என்று தட்டிக் கழித்தார். ரஜினி அதை ஏற்றுக்கொண்டு விலகிவிட்டாலும் தனது அலுவலகக் குழுவினரின் அரங்கேற்றத்தைக் காண ஆவலுடன் காத்திருந்தார்.  

ஆண்டு விழாவுக்கு ஒரு வாரமே இருந்த நிலையில், துரியோதனனாக நடிக்க இருந்தவருக்கு கடுமையான காய்ச்சல். இதனால் வீமன் வேடத்தில் நடித்தவர் துரியோதனாக நடிக்க, வீமன் வேடத்தை நடிக்க வரும்படி ரஜினியை அழைத்தார் நாடக இயக்குநர். ஆனால் ரஜினியோ, “நான் நடித்தால் துரியோதனனாகத் தான் நடிப்பேன். இல்லையென்றால் எனக்கு எந்த வேடமும் வேண்டாம்” என்று ஒரே போடாகப் போட்டார். குழுவிலுள்ள பலரும் கெஞ்சிப் பார்த்தும் ரஜினி மசியவில்லை. வேறு வழியில்லாமல் ரஜினியின் கைக்கு துரியோதனன் கேரக்டர் வந்து சேர... ஆண்டு விழாவுக்கு முதல் நாள் நடந்த ஒத்திகையில் ரஜினியின் நடிப்பைப் பார்த்து மீண்டும் மிரண்டுபோனார்கள் நாடகக் குழுவினர்.  

அதிகாரியின் பாராட்டு  

ரஜினியின் அண்ணன் குடும்பங்கள், அக்காள் குடும்பம், அப்பா என்று எல்லோரும் கூட்டமாக ரஜினியின் நாடகத்தைப் பார்க்க ஆண்டு விழாவுக்கு திரண்டு வந்துவிட்டார்கள். நாடகத்தில் ரஜினியின் நடையும் குரலும் நடிப்பும் பார்வையாளர்களை ஆராவாரம் செய்ய வைக்க, நெகிழ்ந்து போனது ரஜினியின் குடும்பம். கதாயுதத்தை தோளில் ஸ்டைலாக சுமந்துவந்து, பின்னர் அதைத் தரையில் ஸ்டைலாக ஊன்றிக் கொண்டு, பேசும் வசனத்துக்கு ஏற்ப அதை இடக்கை  வலக்கை என இடம் மாற்றியும் ரஜினி செய்த ஸ்டைலுக்கு அரங்கில் விசில் பறந்தது.  

நாடகம் முடிந்ததும் போக்குவரத்துக் கழகத்தின் தலைமை அதிகாரி மேடையேறிப் பேசினார்: “சிவாஜி ராவை நம்முடைய ஊழியர் என்று சொல்லவே பெருமையாக இருக்கிறது. அவர் இந்த மேடையில் துரியோதனனை உயிருடன் நடமாட வைத்துக் காட்டினார். இதுதான் நடிப்புக்கு இலக்கணம். வெகுவிரைவில் சினிமாவிலும் நடித்து அவர் புகழ்பெற்றால் நமக்கெல்லாம் பெருமை. நிச்சயம் அது நடக்கும்” என்று பாராட்டினார்.

ரஜினியின் அப்பாவைத் தவிர, இதைக் கேட்ட ரஜினியின் அண்ணன்கள், அண்ணிகள் என அனைவரும் கண் கலங்கிப்போனார்கள். ரஜினியின் அக்காள் கணவர் ஓடோடிப்போய் ஒரு மாலையை வாங்கி வந்து, ஆண்டு விழாவுக்குத் தலைமை வகித்த அதிகாரியின் கையில் கொடுத்து ரஜினிக்குப் போடச் சொன்னர். அப்போது ரஜினியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. நாடகம் முடிந்து வீட்டுக்கு வந்ததும்,  “மாமா... நம்மை நாமே புகழ்ந்துகொள்வது தற்பெருமை, நம்மை மற்றவர்கள் பாராட்டும்படி நடந்துகொள்ள வேண்டும்”என்று தனது அக்காள் கணவரிடம் சண்டைபோட்டார் ரஜினி.  

தீப்பற்றிய திரைச் சீலை!

குருஷேத்ரா நாடகத்துக்குப் பிறகு,  “நீ சினிமாவுக்குப் போ... வெற்றி நிச்சயம்” என்று ரஜினியைப் பார்த்து சொல்லாத ஊழியர்களே கிடையாது. இந்த ஊக்குவிப்பு தான், தனியாக நாடகக் குழு ஒன்றை உடனே தொடங்கும் தைரியத்தை ரஜினிக்குக் கொடுத்தது. அது 1970-ம் வருடம். பெங்களூருவில், நடிகர் திலகத்தின் ‘ராமன் எத்தனை ராமனடி’ திரைப்படம் வெளியாகியிருந்தது. பள்ளி நாட்களில் சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கைக் கதையை அப்பாவும் அண்ணன் சத்யநாராயணாவும் ரஜினிக்குப் பலமுறைச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், சத்ரபதி சிவாஜியை அந்தப் படத்தில் தனது நடிப்பின் மூலம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வெளிப்படித்தியிருந்த விதம் பார்த்து ரஜினி பெரும் தாக்கம் பெற்றார். நடிகர் திலகத்தை தனது குருவாக மனதில் வரித்துக் கொண்டார்.  

தனது குழுவுக்காக சத்ரபதி சிவாஜியின் போராட்ட வாழ்க்கையை மையமாக வைத்து ‘ஜூவலை’ என்கிற நாடகத்தை எழுதி, போக்குவரத்துக் கழக நண்பர்களையே சக நடிகர்களாக வைத்துக்கொண்டு ஒத்திகை செய்தார் ரஜினி. அந்த ஆண்டு நடந்த ஆண்டு விழாவில் ’ஜூவாலை’யை அரங்கேற்றினார். நாடகத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்பு பாணியின் தாக்கத்துடன் மேடையில் சத்ரபதி சிவாஜியைக் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தினார் ரஜினி.

ஒரு காட்சியில், ரஜினி கையில் தீப்பந்தம் பிடித்தபடி நீண்ட வீரவசனம் பேசி நடிக்க வேண்டும். அந்தக் காட்சியில் தன்னை மறந்து தீப்பந்தத்தை மேலும் உயரமாக ரஜினி தூக்கிப் பிடித்து வசனம் பேசினார். அதைக் கண்டு பார்வையாளர் கூட்டம் பெரும் ஆராவாரம் செய்தது. அந்த ஊற்சாகத்தில் மேலும் அவர்ப் தீப்பந்தத்தை உயர்த்திப் பிடிக்க... அந்தத் தற்காலிக நாடக அரங்கின் துணிக் கூரையில் தீப்பற்றி விட்டது. பார்வையாளர்கள்,  “தீ... தீ...” என்று எழுந்து நின்று கத்தினார்கள். ரஜினியோ தீப்பற்றியதை சுத்தமாக கவனிக்கவில்லை. அவர் சத்ரபதி சிவாஜியாகவே மாறியிப் போயிருந்தார்.

(சரிதம் பேசும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in