காதல் ஸ்கொயர் 31

காதல் ஸ்கொயர் 31

மறுநாளும் கௌதமின் மனம் நிலைகொள்ளாமல் தவித்தது. முந்தைய நாள் இரவு பாரில் அருண், “இப்போதைக்கி லவ் மேட்டர எல்லாம் தூக்கி ஓரத்துல வச்சிடு” என்று கூறியிருந்தாலும், மனதின் மையத்தில் நந்தினி, பூஜாவின் நினைவே முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தது. இரவு படுத்தபோது, கடந்த வாரம்போல் சுத்தமாகத் தூக்கம் வரவேயில்லை. ஆனால், அன்றுபோல் தலைவலி இல்லை. இரவு ஒரு மணியாகியும் தூக்கம் வருவதற்கான அறிகுறியே தெரியவில்லை. நேரம் செல்ல… செல்ல… தூக்கமின்றி பைத்தியம் பிடிப்பதுபோல் இருந்தது. எங்காவது வெளியில் செல்லலாம் என்று தோன்றியது.

மொபைலை கட்டிலிலேயே வைத்துவிட்டு எழுந்தான். படியிறங்கி வந்து, சத்தமில்லாமல் கதவைத் திறந்து வெளியே வந்தான். பைக் வேண்டாம். நடந்தே செல்லலாம் என்று நடந்தான். இன்று வாட்ச்மேன் வரவில்லை. சத்தமின்றி கேட்டைத் திறந்து சாலைக்கு வந்தான் கௌதம். வானம் நன்கு இருட்டிக் கொண்டு, எப்போது வேண்டுமானாலும் மழை பெய்யலாம் போல் இருந்தது.
மழையோடு வீசிய காற்றில் ஜன்னல் கதவு படாரென்று அடிக்க... ரேணுகா கண் விழித்தார். மணியைப் பார்த்தார். இரண்டு. எழுந்து ஜன்னலைச் சாத்திவிட்டு தண்ணீர் குடிப்பதற்காக ஹாலுக்கு வந்தார். அப்போது மாடியில் கௌதமின் அறையில் விளக்கெரிவதைப் பார்த்தவுடன், “இன்னும் இவன் தூங்கலையா?” என்று மாடியேறிச் சென்றார். அறைக்குள் நுழைந்து, கௌதமைக் காணாமல் ரேணுகாவிற்கு சொரேரென்றது. கட்டிலில் கௌதமின் மொபைல் போன் இருந்தது. கௌதமின் அறையிலிருந்து மொட்டை மாடிக்குச் செல்லும் கதவும் தாழ்ப்பாள் போட்டிருந்தது.

சட்டென்று நெற்றியில் வியர்த்த ரேணுகா, “கௌதம்…என்னங்க…என்னங்க…” என்று பதற்றத்துடன் கத்தியபடி படிகளில் இறங்கினார். கீழேயிருந்த அறைகளில் கௌதம் இருக்கிறானா என்று பார்த்தார். இல்லை.

பெட்ரூமை விட்டு தூக்கக் கலக்கத்துடன் வெளியே வந்த மூர்த்தியிடம், “என்னங்க…கௌதமக் காணோம்ங்க” என்றவுடன் மூர்த்தியையும் பதற்றம் தொற்றிக்கொண்டது. வேகமாகச் சென்று வாசலருகில் இருந்த செருப்பு ஸ்டாண்டைப் பார்த்தார். கௌதமின் செருப்பு இல்லை. மூர்த்தி, “எங்கயோ வெளிய போயிருக்கான்” என்று கதவைத் திறக்க…சடசடவென்று மழைத் துளிகள் போர்டிகோவில் விழுந்துகொண்டிருக்க… அவர்கள் காருக்கருகில் கௌதமின் பைக் நின்றிருந்தது.

“பைக்கையும் எடுத்துட்டுப் போகல. மொபைலும் எடுத்துட்டுப் போகல. எங்கங்க போயிருப்பான்?” என்ற ரேணுகா சட்டென்று அழ ஆரம்பித்தார். மூர்த்தி, “ஏய்… நீ வேற டென்ஷன் ஏத்தாத. தூக்கம் வந்துருக்காது. அருண் வீட்டுக்கு ஏதும் போயிருப்பான்” என்று தனது மொபைலை எடுத்து அருணுக்கு போன் செய்தார். அருண், “இங்க வரல அங்கிள். நான் இப்ப உடனே அங்க வரேன்” என்று பதற்றத்துடன் போனை கட் செய்தான். யோசனையுடன் மூர்த்தி, “ரேணுகா… இன்னைக்கி நந்தினி, பூஜா…யாராச்சும் அவன்கிட்ட மொபைல்ல பேசினாங்களா?” என்றார்.

“இல்லங்க… நான் சாயங்காலம் ஆஸ்பிட்டல்லருந்து வந்தவுடனே கவனிச்சேன். அவன் முகம் டல்லா இருந்துச்சு. நந்தினி… இல்ல பூஜா கால் பண்ணாங்களான்னு கேட்டேன். இல்லன்னு சொன்னான்.”

“நந்தினி ஹாஸ்டல் அடையாறுலதான் இருக்கு. ராத்திரி தூக்கம் வராம… குழப்பத்துல நந்தினியப் பாக்க போயிருப்பானா?” என்றபடி மூர்த்தி நந்தினிக்குக் கால் செய்ய, “இங்க வரல அங்கிள்…” என்ற நந்தினி அழ ஆரம்பித்துவிட்டாள். அடுத்து பூஜாவுக்கு போன் செய்ய… அவளும் அங்கு கெளதம் வரவில்லை என்று கூறிவிட்டு, உடனே தான் அங்கு வருவதாகக் கூறினாள். அப்போது பரபரப்புடன் வீட்டிற்குள் நுழைந்தான் அருண். அவனைப் பார்த்தவுடன் கண்கலங்கிய ரேணுகாவிடம், “பயப்படாதீங்க ஆன்ட்டி. ராத்திரி தூக்கம் வந்துருக்காது. சும்மா வெளிய போயிருப்பான். மழைல மாட்டிகிட்டு எங்கயாச்சும் நிப்பான்” என்று ஆறுதல் சொன்னாலும் அருணின் கண்களில் பயம் தெரிந்தது. தனது மொபைலை எடுத்து கௌதமின் வேறு சில நண்பர்களுக்குக் கால் செய்து விசாரித்தான். அவர்களும் வரவில்லை என்றார்கள்.

மூர்த்தி, “ரோட்டுல எங்கயாச்சும் மழைல மாட்டிகிட்டு நிக்கப்போறான்… போய்ப் பாக்கலாம்” என்று கார் சாவியை எடுத்துக்கொண்டு வெளியே வந்தார். அப்போது அங்கு வேகமாக வந்து நின்ற டிவிஎஸ் ஸ்கூட்டியிலிருந்து நந்தினி இறங்கினாள். அருணைப் பார்த்தவுடன், “கௌதம் வந்துட்டானா?” என்றாள் முகத்தில் வழிந்த மழைநீரைத் துடைத்தபடி. குரலில் பயம். அருண் கார் கதவைத் திறந்தபடி, “இன்னும் வரல. அவன தேடித்தான் போறோம். கம்” என்று கூற… அனைவரும் ஏறிக்கொண்டனர்.
கார் சாலைக்கு வந்தவுடன், “மெதுவா போங்க அங்கிள்” என்று அருண் கூற… மூர்த்தி வேகத்தைக் குறைத்தார். அனைவரும் பதற்றத்துடன் சாலை ஓரங்களைக் கவனித்துக்கொண்டு வந்தனர். பின் இருக்கையில் தன் அருகில் அமர்ந்திருந்த அருணிடம் நந்தினி, “அருண்… கௌதமுக்கு ஒண்ணும் ஆயிருக்காதுல்ல?” என்றாள் அழுகையுடன். அருண், “அதெல்லாம் ஒண்ணும் ஆயிருக்காது” என்றபடி வெளியே பார்த்தான்.

அருண், “லஸ் சிக்னல்ல, செலக்ட் ஹோட்டல் ஒரு மணி வரைக்கும் திறந்திருக்கும். நாங்க அடிக்கடி நைட்டு அங்க டீ குடிக்கப் போயிருக்கோம்” என்றான். அவர்கள் செலக்ட் ஹோட்டல் வந்தபோது கடை சாத்தியிருந்தது. மழையில் நனைந்தபடி லஸ் சிக்னலைச் சுற்றிப் பார்த்தனர். கௌதம் கண்ணில் படவில்லை. அருண், “ஸிட்டி சென்டர்கிட்ட பாக்கலாம். அங்க நைட்டு சைக்கிள்ல டீ விப்பாங்க” என்றான்.

ஸிட்டி சென்டர் வாசலில், அந்த சைக்கிள் டீக்கடைக்காரன், மழைக்காக எதிரேயிருந்த கடை ஓரம் ஒதுங்கியிருந்தான். அவனிடம் கௌதம் அணிந்திருந்த டீசர்ட் நிறத்தைக் கூறி விசாரிக்க… அவன், “ஆமாம்… அந்தப் பையன் வந்தான். டீ குடிச்சுட்டு பீச் ரோடு பக்கமா போனான்” என்றவுடன் அனைவரும் அதிர்ச்சியுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். வேகமாகக் காரில் ஏறினர்.
காந்தி சிலையருகில் காரை நிறுத்திவிட்டு வேகமாகக் கடல் மணலை நோக்கி ஓடினர். யாருமற்ற கடற்கரையில் வேகமாக மழை பெய்துகொண்டிருக்க… நந்தினி, “அங்கிள்… அங்க அந்த போட் பக்கத்துல யாரோ உக்காந்துருக்காங்க” என்றாள் சத்தமாக. வேகமாக அவர்கள் நடந்தனர். நடந்துகொண்டே நந்தினி, “கௌதம்…” என்று சத்தமாகக் கத்தினாள். படகருகில் அமர்ந்திருந்த அந்த உருவம் திரும்பிப் பார்த்தது. மெல்ல எழுந்த அந்த உருவம் அவர்களை நோக்கி வர… அது…கௌதம்தான். ரேணுகா வேகமாகப் பாய்ந்து சென்று கௌதமைக் கட்டிப்பிடித்துக்கொண்டு அழத்தொடங்கினார்.

“இந்நேரத்துல எதுக்கு கௌதம் இங்க வந்த?” என்றான் அருண்.

“மனசே சரியில்ல. தூக்கமும் வரல. அதான் வந்தேன். மழைல நனைஞ்சுட்டிருந்தப்ப, மனசுல இருக்கிற பாரம்ல்லாம் இறங்குற மாதிரி இருந்துச்சு. அப்படியே உக்காந்துட்டேன்.” என்ற கௌதம், ரேணுகாவின் தோளை ஆறுதலாக அழுத்தினான். மேற்கொண்டு ஒன்றும் பேசாமல் அவர்கள் சாலையை நோக்கி நடக்க ஆரம்பித்தனர். அப்போது நந்தினி, “நீங்க போங்க… நானும் கௌதமும் ஒரு விஷயம் பேசிட்டு வர்றோம்” என்றவுடன் மூர்த்தி, “இரும்மா… இப்பதான் ஒரு பிரச்சினை முடிஞ்சுது” என்றார்.

“இல்ல அங்கிள்… நான் பேசின பிறகு, இந்த பிரச்சினை கம்ப்ளீட்டா ஸால்வ் ஆயிடும்” என்றாள் நந்தினி. மற்றவர்கள் செல்ல… கௌதமும் நந்தினியும் மட்டும் அங்கேயே மழைத்தூறலில் நனைந்தபடி நின்றனர்.

தொப்பலாக நனைந்திருந்த கௌதமிடம், “எங்க பிரச்சினைதான் இதுக்கெல்லாம் காரணமா?” என்றாள். கௌதம் பதில் ஒன்றும் சொல்லாமல் தூரத்தில் தெரிந்த கடல் அலைகளையே பார்த்துக்கொண்டிருந்தான். தொடர்ந்து நந்தினி, “நேத்து நீ பார்ல அழுதன்னு அருண் சொன்னவுடனேயே, நான் யோசிக்க ஆரம்பிச்சுட்டேன். இப்பதான் குணமாகி வந்துருக்க…இந்தக் காதல் பிரச்சினையால, மறுபடியும் உனக்கு ஏதும் பாதிப்பு வருமோன்னு எனக்கு பயம் வந்துடுச்சு. போதும் கௌதம். இன்னையோட இந்தப் பிரச்சினைய முடிச்சுக்கலாம்” என்றாள்.

“எப்படி?” என்று கௌதம் கேட்டவுடன் நந்தினி பதில் ஒன்றும் சொல்லாமல் கடல் அலைகளையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் தொண்டை நரம்புகள் வேகமாக ஏறி இறங்கின. அவள் அழுகையைக் கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டிருப்பது தெரிந்தது. பின்னர் சமாளித்துக்கொண்டு, “அடையாறுலருந்து கிளம்பி இங்க பீச்ல உன்னப் பாக்குற வரைக்கும், என் உயிர் என் கைல இல்ல கௌதம். அப்ப என்ன தோணுச்சுன்னா… கௌதம கல்யாணம் பண்ணலன்னாகூட பரவாயில்ல. அவன் எங்கயாச்சும் நல்லா இருந்தா போதும்னு தோணுச்சு. அதான் இப்பவும் தோணுது.”

“என்ன தோணுது?”

“பாலகுமாரன் பல கதைகள்ல அடிக்கடிச் சொல்வாரு. காதல்ல ரொம்ப பெருசு, காதலுக்காகக் காதலையே விட்டுக்கொடுக்கிறதுன்னு. நானும் விட்டுக்கொடுக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டேன்” என்ற நந்தினி, தன் கண்ணோரம் வழிந்த நீரை வேகமாகத் துடைத்துக்கொண்டாள். தொடர்ந்து நந்தினி, “நான் உன்ன… நீ நார்மலான மனுஷனா இருந்தப்ப காதலிச்சேன். அப்ப யாரு வேணும்னாலும் உன்னக் காதலிக்கலாம். ஆனா பூஜா… நீ அம்னீஷியாவுல இருந்தாலும் உன்னை மனப்பூர்வமா காதலிச்சா. அந்த வகைல என் காதல விட, அவ காதல்தான் பெருசுன்னு தோணுது. அதனால… நீ அவ கூட வாழறதுதான் நியாயம்” என்றாள். ஆச்சரியத்துடன் அவளைப் பார்த்த கௌதம், “நந்தினி…” என்று ஆரம்பித்தான். வேகமாக அவனைத் தடுத்த நந்தினி, “நீ எதுவும் சொல்ல வேண்டாம். இந்த விஷயத்துல கடைசி வரைக்கும் உன்னால எந்த முடிவும் எடுக்க முடியாது. ஏன்னா நாங்க ரெண்டு பேரும் சரிசமமா உன் மனசுல இருக்கோம். அதனால நாங்கதான் ஒரு முடிவு எடுத்தாகணும். நான் எடுத்துட்டேன். போலாம்” என்றாள்.

“நந்தினி…” என்று கௌதம் அவளைத் தவிப்புடன் பார்த்தான்.

“கௌதம்… காதலிச்சு…கல்யாணம் பண்ணிக்கிட்டாதான், காதல் ஜெயிச்சதா அர்த்தமா? காதலன் நல்லா இருக்கணும்னு, காதல கைவிட்டாக் கூட, அந்தக் காதல் ஜெயிச்ச மாதிரிதான். வீணா போட்டுக் குழப்பிக்காத. நீ பூஜாவையே கல்யாணம் பண்ணிக்க. போலாமா?” என்ற நந்தினியின் குரலில் தெரிந்த உறுதியைப் பார்த்து கௌதம் அசந்துவிட்டான். நெருக்கடியான சந்தர்ப்பங்களில், ஆண்களைவிட, பெண்கள்தான் மிகவும் மன உறுதியுடன் சட்டென்று ஒரு முடிவுக்கு வருகிறார்கள்.

அவர்கள் மூர்த்தியை நோக்கிச் சென்றபோது, பூஜாவும் அங்கிருந்தாள். பூஜா, மூர்த்திக்கு போன் போட்டு விசாரித்துவிட்டு அவளும் கடற்கரைக்கு வந்திருந்தாள். “நாம போலாம் அருண்” என்ற நந்தினி அருணை அழைத்துக்கொண்டு சென்றாள். அவர்கள் சென்றவுடன் ரேணுகா, “நந்தினி என்ன சொன்னா?” என்றார். சில வினாடிகள் அவர்களை உற்றுப் பார்த்த கௌதம், “அவ… அவ…பூஜாவோட நான் வாழ்றதுதான் நியாயம். அதனால… என் லைஃப்லருந்து விலகிக்கிறேன்னு சொல்லிட்டா…” என்று சொல்ல… பூஜா சந்தோஷத்துடன் அவனைப் பார்த்தாள்.

(அடுத்த இதழில் நிறைவுபெறும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in