இணையச் சிறையின் பணயக் கைதிகள் 31: விடுதலையாவோம்..!

இணையச் சிறையின் பணயக் கைதிகள் 31:  விடுதலையாவோம்..!

நாளொரு ஆச்சரியமும், பொழுதொரு அதிசயமுமாய் வளர்ந்து கொண்டு வருவது தான் அறிவியல் தொழில்நுட்பம். அதற்கேற்ப நம்மை நாமே தயார்படுத்திக்கொள்ள வேண்டிய சூழலில்தான் இருக்கிறோம்.

மெய்நிகர் உண்மை எனப்படும் ‘விர்ச்சுவல் ரியாலிட்டி’ (virtual reality) மற்றும் ‘செயற்கை நுண்ணறிவு’ என்று சொல்லப்படும் ‘ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்’ (artificial intelligence) போன்ற விஷயங்கள் எல்லாம் மனித சமூகத்தை வேறு கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நவீன அறிவியலின் வரப்பிரசாதங்கள்.

வி.ஆர் எனப்படும் அந்த மெய்நிகர் உண்மை அதி ஆச்சரியமான ஒரு தொழில்நுட்பமாகும். உண்மையைப் போலவே இருக்கும். ஆனால், உண்மையில்லை. அதனால்தான் மெய்நிகர்.

முகத்தில் கண்ணாடி போன்ற ஒரு கருவியை மாட்டிக்கொள்ள வேண்டும். அருகே இருப்பவரிடம் என்ன மாதிரியான சூழலில் சஞ்சரிக்க விரும்புகிறீர்கள் என்று சொல்லி விட்டால் போதும். அது கடலுக்கு அடியில் பயணிப்பதானாலும் சரி... வான்வெளியில் விமானத்தில் பறந்து எதிரி விமானங்களைத் தாக்குவதானாலும் சரி… அந்தச் சூழலில் அப்படியே உங்களைக் கொண்டுபோய் விட்டுவிடும். அந்த அதிசயம்தான் வி.ஆர்.எனப்படுவது. முப்பரிமாணப்படம்(3D) பார்த்திருப்பீர்கள். அதன் உச்சக்கட்ட அனுபவம் எப்படி இருக்குமோ அதுதான் வி.ஆர்.

காதும் கண்ணும் அச்சூழலில் அப்படியே மூழ்கி விடும். அதை ‘இம்மெர்ஷன்’ (immersion) என்றே சொல்கின்றனர். விளையாட்டுகள் என்ற அளவில் நிறைய பேருக்குத் தெரிந்த இந்த வி.ஆர் டெக்னிக் என்பது இன்று பள்ளிக்கூடம் முதல் மருத்துவமனை வரை எல்லா இடங்களிலும் பயன்படுகிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில் மாணவர்கள் சாதாரணமாக வி.ஆர் தொழில்நுட்பத்துக்கு அறிமுகமாகி இருக்கிறார்கள்.

அரிதான சில சுற்றுலாத்தலங்களுக்குப் போய்ப் பார்க்க வேண்டுமா? முகத்தில் யூனிட்டை (headgear) மாட்டிக்கொண்டு சீட்டில் உட்காருங்கள். அரை மணி நேரத்தில் அந்த இடத்துக்கே சென்று வந்த உணர்வுடன் ஆச்சரியம் அகலாதவர்களாக யூனிட்டைக் கழற்றி வைப்பீர்கள்.

மன நல மருத்துவத்திலும் வி.ஆர் முக்கியப் பங்கு வகிக்கிறது. மனப்பதற்ற நோய்களில் (anxiety disorder) மருந்து மாத்திரைகளோடு சேர்த்து வி.ஆர் மூலமாக நடத்தை மாற்று சிகிச்சை என்பது நல்ல ரிசல்ட் கொடுக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

உதாரணமாக மலை உச்சியை நினைத்தாலே பயங்கரமாகப் பயப்படும் ஒருவருக்கு வி.ஆர் மூலம் சிகிச்சை அளிப்பதாக வைத்துக்கொள்வோம். கருவியை மாட்டி அவரை செயற்கை மலை உச்சிக்கு செயற்கையாக அழைத்துச் செல்கிறோம். மெல்ல மிக மெல்ல அவரை அச்சூழ்நிலையில் இருத்துகிறோம். அவருக்கு ஏற்படும் இன்னபிற உடலியங்குவியல் ரீதியான மாற்றங்களைக் கவனிக்க ஒரு வல்லுநர் அருகிலேயே இருப்பார். பயம் அதிகமானால் கொஞ்சம் இடைவெளி விட்டு மீண்டும் அதே மலையுச்சிக்கு அழைத்துச்செல்வார். தொடர்ந்து சில குறிப்பிட்ட கால இடைவெளியில் இதையே செய்யும்போது அவருக்கு ‘அடப்போய்யா இப்பல்லாம் எனக்கு அந்த பயமே வருவதில்லை’ என்று சொல்ல வைத்து விடும்.

புற்றுநோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட பிணியாளர்களின் வலியைக் குறைப்பதற்கும் வி.ஆர் பயன்படுகிறது.

வி.ஆர் என்றவுடன் விளையாட்டுகள்தான் ‘டக்’கென்று நினைவுக்கு வருகின்றன. இதிலுமே நாம் முன்பே பார்த்தது போல் மணிக்கணக்கில் விளையாடினால் சிந்திக்கும் திறன், கவனக்குவிப்புத் திறன், சமூக ரீதியாக இயைந்திருத்தல் போன்றவற்றில் பாதிப்புகள் ஏற்படுவதாகத் தான் ஆய்வுகள் சொல்கின்றன.

இதே போன்று வளர்ந்து வரும் இன்னொரு துறை ‘செயற்கை நுண்ணறிவு’ என்னும் அதிசயிக்கத்தக்க துறை. மனிதனுக்கு இருக்கும் மேல்மட்ட சிந்தனாசக்தி, முடிவெடுக்கும் திறன், சுற்றுப்புறத்தை ஆய்வு செய்து உள்வாங்கி முடிவுகள் எடுக்கும் திறன் போன்றவற்றைக் கொண்ட கணினி மற்றும் அது தொடர்பான கருவிகளைப் பற்றிய ஒரு தொழில்நுட்பம் தான் ‘செயற்கை நுண்ணறிவு’ எனப்படுவது.

எதிர்காலத்தில் ஓட்டுநர் இல்லாத கார்கள் வரப்போகின்றன. மருத்துவர்கள் செய்யும் சிக்கலான அறுவைசிகிச்சைக்கு ‘ரோபோட்கள்’ உதவுகின்றன. இன்னாருக்கு லோன் தரலாமா வேண்டாமா, கொடுத்தால் திருப்பிக் கட்டுவாரா என்ற முடிவை எடுக்க வங்கி மேலாளருக்கு கம்ப்யூட்டர் உதவுகிறது என்பன போன்ற செய்திகளைக் கேட்டிருப்பீர்கள். இது வரை கேள்விப்படாதவர்கள் வருங்காலத்தில் நிச்சயம் கேள்விப்படுவீர்கள். அப்படியான ஒரு மாபெரும் தொழில்நுட்ப வரம் தான் இந்தச் செயற்கை நுண்ணறிவு.

சைபர் சைக்காலஜி பற்றிப் பேசும்போது இது பற்றியும் குறிப்பிட்டாக வேண்டும். முன்பு தகவல்களைக் கம்ப்யூட்டரிடம் கொடுத்து பல கோணங்களில் அலசி முடிவுகளை நாம் எடுத்தோம். தற்போது தனக்கு அளிக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் தானே முடிவு எடுப்பேன் என்ற அளவுக்கு மனிதனுக்கும் கணினிக்குமான பரிமாற்றம் வளர்ந்திருப்பது ஆச்சரியானது. அற்புதமானது.

தொழில்நுட்பம் வளர வளர நம் வாழ்க்கையை எளிதாக்கும் பலவற்றை மனிதன் கண்டு பிடித்துக் கொண்டே தான் வருகிறான். ஆனால், அவற்றை முறையாகப் பயன்படுத்துவது தான் உடல் மற்றும் மனநலனுக்கு நன்மை பயக்கும் என்பதைத் தான் வலியுறுத்த வேண்டி இருக்கிறது.
அதேபோல முறையாகப் பயன்படுத்தினால் நல்ல பலன்களைத் தரக்கூடியவை தான் சமூக வலைதளங்கள் முதலான பல தளங்கள்.
செய்யும் தொழிலுக்கு விளம்பரம் செய்து கொள்வதில் இருந்து காணாமல் போனவர்களைக் கண்டு பிடிப்பது வரை பல வகைகளில் நாம் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த முடியும்.

துண்டுப்பிரசுரங்கள் அச்சடிப்பதோ, செய்தித் தாள்களில் விளம்பரம் கொடுப்பதோ கணிசமாக செலவு பிடிக்கும் என்பது நாம் அறிந்ததே. ஆனால், சமூக வலைதளங்களைச் சரியாகப் பயன்படுத்தினால் நம் இலக்கு யார் என்பதை முடிவு செய்து அவர்களை அழகாகச் சென்றடையலாம். அதற்கான செலவும் மிக மிகக் குறைவு.

அதே போல் ‘யூ- டியூப்’பில் வீடியோ வெளியிடுவது முதல் பல தரப்பட்ட வலைதளங்கள் வழியாகவும் கணிசமான வருமானம் ஈட்டுகின்றனர் பலர். கருத்துகளைப் பகிர ‘ட்விட்டர்’ போன்றவை மிகச் சிறந்த களம். பல ஆயிரம் பேர் பின் தொடரும் இதில் நம் கருத்து வெகுஜன ரீதியாகப் பலரையும் சென்றடைய மிக ஏதுவாக இருக்கிறது.

எல்லாவற்றையும் விட என்றோ தொலைத்த நட்புகளை மீட்டெடுப்பதிலும், உறவுகளைப் புதுப்பித்து அளவளாவி மகிழ்வதிலும் இன்றைய சமூக வலைதளங்களின் பங்கு அளப்பரியது என்றால் அது மிகையில்லை.

முன் எப்போதும் இல்லாத அளவு பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்தவர்களின் சங்கம நிகழ்வுகள் (batch reunion) எல்லாம் மிகச் சிறப்பாக இப்போது நடந்தேறுகிறது என்றால் வாட்ஸ் - அப் மற்றும் முகநூல் போன்றவைதான் முக்கியக் காரணம். அத்தனை பேரையும் பல மூலைகளிலிருந்து ஒன்றிணைக்கும் மாபெரும் பணியைச் செலவில்லாமல் செய்கின்றன சமூக வலைதளங்கள்.
அதே நேரம் இணையத்தில் அளவுக்கு அதிகமாகப் புழங்குவதாலும், தவறாக உபயோகிப்பதாலும் வரும் பிரச்சினைகளைப் பற்றிக் கடந்த அத்தியாயங்களில் முடிந்த அளவு அலசியிருக்கிறோம்.

ஆணோ பெண்ணோ, தம்மைப் பற்றிய எல்லா விஷயங்களையும் பட்டவர்த்தனமாக இணைய வெளியில் பகிர்ந்து கொள்ள வேண்டாம். குறிப்பாகப் பெண்கள் தம் புகைப்படங்கள், தொடர்பு எண்கள், பணியிடம் மற்றும் வீட்டு முகவரி போன்றவற்றைப் பகிர்வதிலும், முகம் தெரியாதவர்களிடத்தில் நட்பு பாராட்டுவதிலும் மிகுந்த எச்சரிக்கையோடு இருங்கள்.

‘உங்கள் அந்தரங்க வீடியோ என்னிடம் இருக்கிறது’, ‘நீங்கள் விரசமாகப் பேசிய ஆடியோவை வைத்திருக்கிறேன்’ என்று பெண்களை மிரட்டிப் பணிய வைப்பது அல்லது பணம் பறிப்பதை வேலையாகவே வைத்திருக்கும் குற்றவாளிகளைப் பற்றி அனுதினமும் செய்தித்தாள்களில் படிக்கிறோம்.

‘நாங்கள் சாதாரணமாக ‘டிக்டாக்’கில் போட்ட வீடியோவை இணையத்தில் பிரபலமான ஆபாசப் படங்கள் இருக்கும் தளத்தில் பதிவேற்றி விட்டார்கள்’ என்ற புலம்பலுடன் அண்மையில் சேலத்தில் சைபர்கிரைம் போலீஸில் புகார் கொடுத்திருக்கின்றனர் இருபதுக்கும் மேற்பட்ட பெண்கள்.

மகளிருக்கு இப்படிப் பிரச்சினை என்றால் தொழில் முனைவோரும், இணையவழிப் பணப்பரிவர்த்தனை செய்வோரும் மிகப் பாதுகாப்பாக அப்பரிமாற்றங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியம். பாஸ்வேர்டுகளைத் திருடுவது, ‘ஹாக்’ (hack) செய்வது போன்றவை சர்வ சாதாரணமாக நடப்பதால் முழு எச்சரிக்கையுடன் இருங்கள் நண்பர்களே.

பிசினஸில் தான் என்றில்லை... வெறுமனே உங்கள் சமூக வலைதளக் கணக்குகளை ஊடுருவி (hacking) நீங்கள் பதிவிடாத மேட்டரையெல்லாம் சகட்டு மேனிக்கு ‘அப்லோட்’ செய்து ஒரே இரவில் உங்கள் அபிமானத்தைக் குலைத்து விடுவார்கள். ஜாக்கிரதை.
தவறான தகவல்களைப் பரப்பி இளைஞர்களைத் திசை திருப்பி மூளைச்சலவை செய்து தீய வழிக்கு இழுப்பதற்கும் சமூக விரோதிகளால் இணையம் தற்போது மிகத் தீவிரமாகப் பயன்படுத்தப்படுகிறது. அதற்கெல்லாம் பலியாகி விடாமல் இருக்க வேண்டும் இளைஞர்கள்.
தற்காலங்களில் சட்ட விரோதச் செயல்களைச் செய்பவர்கள் எளிதில் மாட்டுவதற்கும், அடையாளம் கண்டறியப்படுவதற்கும் கூட சமூக வலைதளங்கள் உதவுகின்றன என்பதும் மறுக்க முடியாத உண்மையே.

ஆனால் அதே நேரம், தெருவில் கொள்ளை நடந்தாலும் சரி, கொலையே நடந்தாலும் சரி அதைத் தடுக்கவோ ஒரு உயிரைக் காப்பாற்றவோ முற்படுவதை விட அந்நிகழ்வைத் தன் செல்போனில் படம் பிடித்து அதை உடனே ‘ஷேர்’ செய்வதில் மட்டுமே பலரும் குறியாக இருக்கும் மனப்பான்மை ஆபத்தானது. நியாமற்றது. மனித நேயமற்றது. தவிர்க்கப்பட வேண்டியது.

நாம் நல்லவரா கெட்டவரா என்ற கேள்வியை நம்மை நாமே கேட்டுக்கொள்ள வைக்கிறது இணையத் தொழில் நுட்பத்தின் அசுர வளர்ச்சி. நமக்குள் இருக்கும் பல வித குணாதிசயங்களை நமக்கே அடையாளம் காட்டும் நவீனக் கண்ணாடி தான் இணையம்.
நம்முள் இருக்கும் அரக்கனை அழித்துவிட்டு மனிதனை வெளிக்கொணர்ந்து இணையம் மற்றும் இதர தொழில் நுட்பத்துடன் கைகோத்து நடந்தால் மனித இனம் சொல்லொணா சாதனைகளைப் படைக்கும்.

இணையம் என்னும் புதுமைச் சிறையில் நம்மை யாரும் கைது செய்து உள்ளே வைப்பதில்லை. நாமே தான் போய் சிக்கிக் கொள்கிறோம். ஆக விடுதலை செய்து கொள்வதும் நாமே தான். முயல்வோம். வெல்வோம்!
(நிறைவுற்றது)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in