பேசும் படம் - 40: நேருவின் நேசமான தோழி

பேசும் படம் - 40: நேருவின் நேசமான தோழி

நாடுபோற்றும் பிரபலங்களின்  சரித்திரத்தில், சில சமயங்களில் திருஷ்டிப் பரிகாரங்களாக  அவர்களைப் பற்றிய வதந்திகளும் கலந்
திருப்பது வழக்கம். நாட்டின்  முதல் பிரதமராக, இந்தியா ஒரு வலுவான நாடாக உருவெடுக்க முக்கியக் காரணமாக இருந்த ஜவஹர்லால் நேருவின் வாழ்க்கையும் அதற்கு விதிவிலக்கல்ல.  

சுதந்திரப்  போராட்டத்தில் பங்கேற்று சுமார் 9 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவித்தவர் நேரு. அவர் நீண்டநாள் சிறைக்குச் 
சென்றதால் நோயுற்ற மனைவியைக்கூட அருகில் இருந்து கவனிக்க முடியவில்லை. இப்படி நாட்டுக்காகத் தனது சுக துக்கங்களை  விட்டுக் கொடுத்த நேருவைப் பற்றி, அக்காலத்தில் ஒரு வதந்தி பரவியது.

மவுண்ட்பேட்டனின் மனைவியான எட்வினாவும், நேருவும் காதலர்களாக இருந்தனர் என்பதே அந்த வதந்தியாகும்.  அக்காலகட்டத்
தில் சில பொது நிகழ்ச்சிகளின்போது நேருவும், எட்வினாவும் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களும் இந்த வதந்திகளுக்கு வலு சேர்த்தன. அப்படி அந்த வதந்திகளுக்கு வலு சேர்த்த படங்களில் ஒன்றைத்தான் இங்கே பார்க்கிறீர்கள். பொது நிகழ்ச்சியொன்றில் எடுக்கப்பட்ட இப்படத்தில் மவுண்ட்பேட்டன் சற்று ஓரமாய் ஒதுங்கியிருக்க, எட்வினாவுடன் ஜோக் அடித்து சிரித்துக்கொண்டிருக்கிறார் நேரு. இப்படத்தை எடுத்தவர் ஹென்றி கார்டியர் பிரசென் (Henri Cartier-Bresson).

இந்தியாவுக்கு சுதந்திரம் அளிக்க  பிரிட்டிஷ் அரசு முடிவெடுத்துவிட்ட நிலையில் அமைதியான, சீரான வழியில் அதிகாரத்தை கைமாற்றி விடும் பிரதிநிதியாக, பிரிட்டிஷ் அரசின் கடைசி வைஸ்ராயாக இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டவர் லார்ட் மவுண்ட்பேட்டன். தனது மனைவி எட்வினா மற்றும் குழந்தைகளுடன் 1947-ம் ஆண்டு இந்தியா வந்த மவுண்ட்பேட்டன், இந்தியா வுக்கு சுதந்திரம் அளிப்பது தொடர்பாகவும், இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை தொடர்பாகவும் விவாதிக்க இந்தியத் தலைவர்களை பலமுறை சந்திக்கவேண்டி இருந்தது. மவுண்ட்பேட்டனின் இந்தச் சந்திப்புகளில் அவரது மனைவி எட்வினாவும் உடன் இருந்தார்.

இந்தியாவுக்கு சுதந்திரம் அளிப்பது, புதிய இந்தியாவைக் கட்டமைப்பது பற்றிய விவாதங்களின்போது, மற்ற தலைவர்களுக்கு இணையாக எட்வினாவும் சில விவாதங்களில் பங்கேற்க, அவர் மீது நேருவுக்கு தனி மதிப்பு ஏற்பட்டுள்ளது. அவரது புத்திகூர்மையைப் பற்றி தனது நண்பர்களிடம் நேரு பலமுறை புகழ்ந்துள்ளார். அதேபோல் பெண் விடுதலை பற்றிய கருத்துகள், பிறருக்கு உதவும் குணம், விவாதத் திறமை ஆகியவற்றால் எட்வினாவுக்கும் நேரு மீது நன்மதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நன்மதிப்பின் காரணமாக அவர்களிடையே ஏற்பட்ட நட்பு, நீண்ட காலம் நீடித்தது.

ஆணும் பெண்ணும் பேசினாலே அது காதலாகத்தான் இருக்கும் என்று கருதிய காலகட்டத்தில் மேல்நாட்டில் படித்த நேருவும், மேற்கத்திய கலாச்சாரத்தைக் கொண்டிருந்த எட்வினாவும், அதை முற்றிலும் உடைத்தனர். காதலையும் தாண்டி ஒரு ஆணும், பெண்ணும் பரஸ்பரம் நல்ல நட்புடன் பழக முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அவர்கள் பழகினர். இந்தியாவில்  இருந்து பிரிட்டிஷ் அரசு வெளியேறிய பிறகும் இவர்கள்  இருவருக்கும் இடையிலான நட்பு நீடித்தது.

மற்றவர்களிடம் தான் பகிராத  தனிப்பட்ட விஷயங்களைக்கூட நேருவிடம் எட்வினா கடிதம் மூலம் பகிர்ந்தார். ஆரம்பத்தில் இவர்களிடையே தினசரி கடிதப் போக்குவரத்து இருந்த நிலையில், பின்னர் அது வாரத்துக்கு ஒன்றாகவும், மாதத்துக்கு ஒன்றாகவும் குறைந்தது.

 இப்படி நேருவுக்கும் எட்வினாவுக்கும்  இடையில் இருந்த நட்பை, காதல் என்று சிலர் சொல்லிக்கொண்டிருந்த நிலையில், அவர்களுக்கு இடையில் இருந்தது தூய நட்புதான் என்று அடித்துச் சொல்கிறார்  மவுண்ட்பேட்டன் - எட்வினா தம்பதியின் மகளான பமீலா ஹிக்ஸ். 2012-ம் ஆண்டில் அவர் வெளியிட்டுள்ள ‘டாட்டர் ஆஃப் எம்பயர்: லைஃப் ஆஸ் ஏ மவுண்ட்பேட்டன்’ (Daughter of Empire: Life as a Mountbatten) என்ற புத்தகத்தில் நேருவுக்கும் எட்வினா மவுண்ட்பேட்டனுக்கும் இடையிலான நட்பைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

“ஜவஹர்லால் நேருவும், என் அம்மாவும் ஒருவர் மீது ஒருவர் மிகவும் மதிப்பு கொண்டிருந்தனர். மிகச்சிறந்த நண்பர்களாக அவர்கள் இருந்தனர். ஒரு சிலர் கருதுவதைப் போல அவர்களுக்குள் உடல் ரீதியான கவர்ச்சியோ, அல்லது காதலோ கிடையாது. மிகவும் மரியாதைக்குரிய தோழமையாகவே அவர்களின் நட்பு இருந்தது. இந்தியாவை விட்டு வெளியேறியபோது, என் தாயார், நேருவுக்கு மரகத கல் மோதிரத்தை பரிசளிக்க விரும்பினார். ஆனால், அதை நேரு ஏற்றுக்கொள்ள மாட்டார் என்று உணர்ந்து, அவருடைய மகள் இந்திரா காந்தியிடம் கொடுத்தார். அப்போது,  “தனது செல்வத்தை எல்லாம் பிறருக்கு  வாரிக்கொடுக்கும் நேரு, எப்போதாவது பொருளாதார நெருக்கடியில் சிக்கினால், அவருக்காக இந்த மோதிரத்தை விற்று பணத்தைக் கொடு” என்று இந்திரா காந்தியிடம் கூறியுள்ளார்.

மவுண்ட் பேட்டனுக்கு நடத்தப்பட்ட பிரிவு உபசார விழாவில் பேசிய நேரு, என் தாயாரை நோக்கி, ‘நீங்கள் எங்கே சென்றாலும், மன 
அமைதியையும், நம்பிக்கையையும், ஊக்கத்தையும் அளிக்கிறீர்கள்’ என்று பேசினார்.  இந்தியாவை விட்டு இங்கிலாந்துக்கு குடி
பெயர்ந்த போதிலும், நேரு எங்களின் அம்மாவுக்குத் தொடர்ந்து கடிதங்களை எழுதிவந்தார். அந்தக் கடிதங்களில்கூட ஒரு சிறந்த 
நண்பரின் அக்கறையையே பார்க்க முடிந்தது. 

மற்றபடி அவர்களிடையே காதல் இருந்ததா என்று சந்தேகப்படக்கூடிய ஒரு விஷயம்கூட அந்த கடிதங்களில் இல்லை” என்று குறிப்
பிட்டுள்ளார் பமீலா ஹிக்ஸ்.  இந்தியாவுக்கு மவுண்ட்பேட்டனும் எட்வினாவும் வந்த காலத்தில் 17 வயது பெண்ணாக அவர்களுடன் பமீலாவும்  வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹென்ரி கார்டியர் - பிரசன்

1908-ம் ஆண்டு பிரான்ஸில் உள்ள  சண்டிலோப்  என்ற ஊரில் பிறந்தவர்  பிரசன். இவரது தந்தை மிகப்பெரிய ஜவுளி உற்பத்தியாளராக இருந்தார். வசதியான குடும்பத்தில் பிறந்த பிரசனுக்கு சிறு வயதில் ஓவியங்களை வரைவதில்தான் ஆர்வம் இருந்தது. ஆனால், பின்னாளில் இவருக்குப் புகைப்படங்களை எடுப்பதில் ஈடுபாடு ஏற்பட்டது.  தந்தையார் பரிசாகக் கொடுத்த கேமராவில் பொழுதுபோக்காக படங்களை எடுக்கத் தொடங்கிய பிரசன், பின்னர் அதிலேயே முழு கவனம் செலுத்தத் தொடங்கினார்.  1937-ம் ஆண்டு முதல் இவர் எடுத்த புகைப்படங்கள், சர்வதேச அளவில்  பல்வேறு பத்திரிகைகளில் வெளியாகி உள்ளன.  

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in