ஹாட் லீக்ஸ்: களத்தில் நிற்கும் காந்தி

ஹாட் லீக்ஸ்: களத்தில் நிற்கும் காந்தி

தீதிக்கு திகில் கொடுக்குமா பாஜக?

மேற்கு வங்கத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ள மம்தா பானர்ஜி, தான் போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் தோற்றுப் போனதால் இப்போது எம்எல்ஏ-வாக இல்லாமலேயே முதல்வராக நீடிக்கிறார். அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதற்காக அவரது பழைய தொகுதியான பவானிபூரில் வென்ற ஷோபன் தேவ் சட்டோபாத்யாய் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அடுத்த ஆறு மாதங்களுக்குள் இங்கே இடைத் தேர்தல் நடத்தப்பட்டு இங்கிருந்து மம்தா எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால், வங்கத்தில் எட்டு கட்டமாக நடந்த தேர்தல்களால் தான் கரோனா இரண்டாவது அலை அங்கே தீவிரமாக பரவிவிட்டது என்ற குற்றச்சாட்டு இருப்பதால் உடனடியாக இடைத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராகாது என்கிறார்கள். தீதிக்கு பாஜக திகில் கொடுக்க நினைத்தால், கரோனாவை காரணம் காட்டி அங்கே இடைத் தேர்தல் நடத்தும் நடவடிக்கைகளையும் கிடப்பில் போடலாம் என்கிறார்கள்.

கார்த்தியுடன் மல்லுக்கட்டும் கே.ஆர்.ராமசாமி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை விட்டு ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானைக்குப் போய்விட்டாலும் காரைக்குடி தொகுதியை தனது கட்டுக்குள் வைத்திருக்க நினைக்கிறாராம் முன்னாள் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி. இதனால் அடிக்கடி, தனது மகனும் திருவாடானை எம்எல்ஏ-வுமான கருமாணிக்கத்தை அழைத்துக் கொண்டு தேவகோட்டையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்துக்கு வந்துவிடுகிறாராம். ஆனால், அவர் மீண்டும் காரைக்குடி தொகுதிக்குள் அரசியல் செய்ய வருவதை கார்த்தி சிதம்பரம் தரப்பு விரும்பவில்லையாம். ராமசாமிக்கு செக் வைக்கும் விதமாக தேவகோட்டை நகர, வட்டார பொறுப்பாளர்களை மாற்றும் முனைப்பில் இருக்கிறாராம் கார்த்தி. இதனிடையே, மே 21-ம் தேதி ராஜீவ் நினைவு நாளுக்கு தேவகோட்டை காங்கிரஸ் அலுவலகத்தில் அஞ்சலிக் கூட்டம் நடத்தினார் ராமசாமி. கார்த்தி ஆதரவாளர்களோ இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் தியாகிகள் பூங்கா அருகே தனியாக அஞ்சலி கூட்டம் நடத்தி ராமசாமி தரப்புக்கு ஷாக் கொடுத்திருக்கிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in