மண்... மனம்... மனிதர்கள்! - 9

மண்... மனம்... மனிதர்கள்! - 9

பதின் பருவத்துக்கு ஈடானதொரு லாகிரி வஸ்து உண்டா ? அதன் மயக்கத்துக்குத் தப்பிய மனிதருண்டா ?

நாடி நரம்பெல்லாம் வாசனை வீசும் அந்தப் பதின் பருவத்துக்குள் பைய நுழைந்தான் நம்சு. முழு பெயர் நமச்சிவாயம்.

எப்படியாவது அவனை டாக்டராக்கிப் பார்த்து விட வேண்டும் என்று திருவல்லிக்கேணியில் பிரபலமான அவனது கான்ட்ராக்டர் குடும்பம் ஒட்டுமொத்தமாய் டக்கரடித்துக்கொண்டிருக்க, நம்சுவுக்கு லைட் மியூஸிக் போதை தலைக்கேறியிருந்தது.

காரணம், பிந்து !

திருவல்லிக்கேணி ஹைரோட்டில் ஜுவல்லரி ஷாப் வைத்திருந்த ஜெயின் குடும்பத்துக்கு ராஜஸ்தானிலிருந்து வந்து இறங்கியிருந்தவள் பிந்து.

கோதுமை செழிப்போடு வலம் வந்த பிந்து

வருஷம் 16 குஷ்பு போல ஐஸ் ஹவுஸையே அழகாக்கிக் கொண்டிருந்தாள்.

“எல்லாரும் ஒண்ணாதானடா போறோம். அது எப்படி நம்சு, உன்னை மட்டும் பாக்குறா ?” என்று உசுப்பேற்றிக்கொண்டிருந்தான் ஒல்லி ரகு.

பிந்துவும் அநியாயத்துக்குப் வெட்கப்பட, நம்சுவின் திருவல்லிக்கேணி, பூமிக்கு ரெண்டடி மேலே மிதந்து கொண்டிருந்தது.

ஒருநாள் சுரானா ஸ்போர்ட்ஸில் டென்னிஸ் பால் வாங்கிக்கொண்டு இறங்கும் சமயம் எதிர் வீட்டுப் பால்கனியில் இவனைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள் பிந்து.

சப்த நாடியும் ஒடுங்க நின்றான் நம்சு.

அவள் வீட்டு டேப்ரிக்கார்டரில் இளையராஜாவின்  ‘கவிக்குயில்’ படப் பாடலான  ‘சின்னக் கண்ணன் அழைக்கிறான்’ ஓடிக்கொண்டிருந்தது.

‘இந்தப் பாட்டு சூப்பர்...’ என்பது போல சைகை காட்டிவிட்டு ஸ்பிரிங் வைத்ததுபோல துள்ளி உள்ளோடிப் போனாள் பிந்து.

நம்சு வெறியேறிப் போனான்.

ஒவ்வொரு வருடமும் ஆடி மாசம் சரியாக பிந்து வீட்டுக்கு நேர் எதிரேதான் டபுள் ஸ்டேஜ் அடித்து 

‘நவராக்ஸ் கச்சேரி’ செய்வார்கள்.

சீக்கிரம் இசை பழகி நினைத்தாலே இனிக்கும் ரஜினி போல நவராக்ஸ் மேடையேறி பிந்துவைக் கவர்ந்துவிட முடிவெடுத்தான்.

எந்த இன்ஸ்ட்ரூமென்ட்டைக் கற்றுக்கொள்வது ?

இளையராஜாவின் பெரும்பாலான பாடல்களில் ஃப்ளூட் நிச்சயமாக இருக்கும். அதுவும், பிந்துவுக்குப் பிடித்த ‘சின்னக் கண்ணன்’ பாடலில் ஃப்ளூட்தான் பிரதானம். “அங்க பிடிடா ரூட்ட...”

ஒல்லி ரகு கொடுத்த ஐடியாவில் பெரிய தெரு பிள்ளையார் கோயிலுக்கு எதிரே ராகமாலிகா மியூஸிக் ஸ்கூல் நடத்திக்கொண்டிருந்த சுந்தரமையங்காரிடம் ஃப்ளூட் கற்றுக்கொள்ளப் போனான் நம்சு.

நிறைந்த அமாவாசை தினத்தில் வெற்றிலைப்பாக்கும் பதினோரு ரூபாவும் வாங்கிக்கொண்டு பாடமெடுக்க ஆரம்பித்த சுந்தரமையங்கார், அடுத்த அஞ்சாவது நிமிஷத்திலேயே சொல்லிவிட்டார்...

“கண்ணா நமச்சிவாயம், நீ டாக்டருக்கே படிச்சிக்கோடா செல்லம்...”

“அதெல்லாம் முடியாது. சின்னக் கண்ணன் அழைக்கிறான் சொல்லிக் குடுங்க...விட்டுர்றேன்...” என்று நம்சு அடம் பிடிக்க சுந்தரமையங்கார் தலையிலடித்துக் கொண்டார்.

சும்மா சொல்லக் கூடாது. பேய் வெயில் காயும் மொட்டை மாடியே கதி என்று கிடந்து அசுர சாதகம் செய்தான் நம்சு. சின்னக் கண்ணன் செத்துச் செத்துப் பிழைத்துக்கொண்டிருந்தான்.

நம்சு வீட்டுக்கு எதிரே இருந்த சுதா ஃபேன்ஸி ஸ்டோருக்கு அடிக்கடி வருவாள் பிந்து. கண்ணாடி பார்ப்பது போல் குனிந்து நைஸாக மொட்டை மாடிக்கு லுக் விடுவாள். அந்த நேரம் பார்த்து

நம்சுவின் ஃப்ளூட் பிசிறடித்துத் தொலைக்கும்.

எங்களுக்கு விவேகா ஓட்டல் பிரிஞ்சி குருமா, பூரி கிழங்கு நினைப்பு வரும்போதெல்லாம் நம்சுவிடம் பிந்து கதைகளை எடுத்து விடுவோம்.

“நெஜம்மாவாடா..?” என்று முகம் சிவக்க ஓடி அம்மாவிடம் காசைப் பிடுங்கிவந்து விவேகா ஹோட்டல் கல்லாவில் போட்டுவிட்டுப் போவான் நம்சு.

அப்படி இப்படி ஒருநாள் “பரவா யில்லையே, உனக்கு ஃப்ளூட் வந்துடுத்தே”  என்று சுந்தரமையங் கார் பாராட்டிச் சொல்லிவிட, நம்சு பரபரத்தான்.

அடுத்தது, நவராக்ஸ் ட்ரூப்பில் சான்ஸ்.

நவராக்ஸுக்கு மைக் செட் போட்டுக்கொண்டிருந்த ராஜாமணி எக்ஸ்ட்ரா வருமானத்துக்காக சுங்கு வார் தெரு முனையில் ஒரு சின்ன ஹோட்டலை நடத்திக் கொண்டிருந்தார்.

ஒல்லி ரகுவின் அப்பாதான் அந்த ஏரியாவின் ஹெல்த் இன்ஸ்பெக்டர். போதாதா ?

“ஓகே தம்பி, எல்லா கச்சேரிக்கும் வா. கண்ணுலயே இரு. டகால்ன்னு தர் சார்கிட்ட சொல்லி முடிச்சு றலாம்...”

சிட்டியில் நடக்கும் எல்லா நவராக்ஸ்ஸுக்கும் ஒல்லி ரகுவோடு ஆஜராக ஆரம்பித்தான். நம்சுவின் போக்கு அவனது அப்பாவுக்கு சுத்த மாகப் பிடிக்கவில்லை.

மூடு கெட்டுப்போன ஒரு நாளில் பெல்டை எடுத்து சரமாரியாக விளாசி பத்து நாள் வீட்டுக் காவல் போட்டு விட்டார்.

ஆடி மாசம் நெருங்கும் நேரம் பார்த்து இப்படியாகி விட்டதே என்று அழுத நம்சுவை இன்னும் இரண்டு பிந்து கதைகள் சொல்லி தேற்றி வைத்தோம்.

அப்பாவின் கோபம் மெல்லத் தணிய மறுபடியும் மொட்டை மாடிக் குப் போய் சின்னக் கண்ணனை அழைக்க ஆரம்பித்தான்.

ஒருவழியாக ஆடி மாதம் வந்து சேர்ந்தது. நம்சுவின் அதிர்ஷ்டம் அந்த நேரம் பார்த்து நவராக்ஸில் ஃப்ளூட் வாசித்துக்கொண்டிருந்த பீமாராவுக்கு ஆந்திராவில் நிச்சய தார்த்தம்.

“அமோகமா இரு...” என்று வாழ்த்தி வழி அனுப்பிய கையோடு மைக் செட் ராஜாமணியை அழைத் தார் நவராக்ஸ் தர்.

“ராஜாமணி, ஃப்ளூட்டுக்கு ஒரு பையனைச் சொல்லியிருந்தியே. அடுத்த மாச டேட்ஸ் எல்லாம் அவனுக்கு சொல்லிடுப்பா.

நாளைக்கு எல்லையம்மன் கோயில் கச்சேரி. நம்ம ஃபேவரைட் ப்ளேஸ். தூள் கிளப்பிடணும். எதுக் கும் காலைல அந்தப் பையனை என்னை வந்து பாக்கச் சொல்லிடு.”

பரவசத்தோடு ஆஜர் ஆனான் நம்சு.

“வாப்பா...உன் பேரென்ன..?”

“நம்சு”

“என்னாது ?”

“நமச்சிவாயம் சார்“

“வெரிகுட். நல்ல பேர். என்ன வாசிச்சிக் காட்டப் போற ?”

“சார், சின்னக் கண்ணன் பிரமாதமா வாசிப்பேன் சார்”

“எக்ஸலன்ட். ஐ லைக் யுவர் டேஸ்ட். எங்க வாசி பார்ப்போம். ”

நம்சு, சின்னக் கண்ணன் பல்லவியை ஆரம்பித்தான்.

“நிறுத்துப்பா. பிஜிஎம் மட்டும் வாசி போதும்.”

“இல்ல சார். மொத்தப் பாட்டையும் வாசிச்சுக் காட்றேன் சார்”

“எதுக்கு ?”

“நான் அப்படித்தானே வாசிக்கப் போறேன்...”

தருக்கு பீபி எகிறியது.

“அதெல்லாம் அப்புறம்ப்பா.மொதல்ல 30 பாட்டுக்கு பிஜிஎம்ஸ் வாசி போதும் ”

“அதெல்லாம் எனக்கு எதுக்கு சார்...சின்னக் கண்ணன் மட்டும் வாசிச்சுட்டுக் கிளம்பிடுறேன் ?”

தருக்கு தலை சுற்றிக்கொண்டு வந்தது.

“என்னடா கண்ணா சொல்ற... அப்ப மத்த பாட்டெல்லாம்..?”

“அட, சின்னக் கண்ணன் ஒண்ணே போதும் சார். சும்மா இளையராஜாவுக்கு ஈக்வலா உருகிக் காட்றேன் பாருங்க...”

வாறியடித்துக் கொண்டு உள்ளே ஓடிய தர் கீ போர்ட் பன்னீருக்கு போன் போட்டு அலறினார்.

“பன்னீர், ராஜாமணி அனுப்புன பையன் சோலோ கேக்குறான்ப்பா. மண்ட காயுது எனக்கு. நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ தெரியாது. சாயந்தரம் கச்சேரிக்கு ஃப்ளூட் பிட் மொத்தத்தையும் கீபோர்ட்ஸ்லயே எடுத்துரு. நமக்குன்னு ஒரு பேரு இருக்கு பன்னீர். ப்ளீஸ் காப்பாத்திரு...”

அழாத குறையாக போனை வைத்த தர் படபடப்பு அடங்கி வராண்டாவுக்கு வந்து நம்ஸைப் பார்த்துப் புன்னகைத்தார்.

“சார், உங்க திருப்திக்கு வேணும் னா ஒரு தடவை வாசிச்சிக் காட்டிறவா?”

“அதெல்லாம் எதுக்குப்பா? சாயந் தரம் ஃப்ளூட் பாக்ஸ் எடுத்துக்கிட்டு நேரா ஸ்டேஜுக்கே வந்துரு. பாத்துக் கலாம்...”

சரியாக 7 மணி.

டிராஃபிக் திருப்பிவிடப்பட்டு ட்ரிப்ளிகேன் ஹைரோடு நடுவே பெரிய மேடை போடப்பட்டிருக்க, சுற்றிலும் ட்யூப் லைட், ஜிகினா அலங்காரம். செம கூட்டம்.

ஷாம்பு போட்டு குளித்து பூ சொக்கா, பெல்ஸ் பேன்ட், அப்பா வின் ஃபாரின் சென்ட், கூலிங் கிளாஸ் சகிதம் ஃப்ளூட் பாக்ஸும் பெருங் கனவுமாக கச்சேரி மேடை ஏறினான் நம்சு.

கீ போர்ட் பன்னீருக்குப் பக்கத்து சேரில் உட்கார வைக்கப்பட்டான் .

ஹைரோட்டில் ஒல்லி ரகு பெரும் கும்பலைச் சேர்த்து விட்டிருந்தான்.

“கேட்டுங்கங்கடா... நம்சு வாசிக்

கும்போது விஸில் சத்தம் சும்மா

ரத்னா கேஃப் வரைக்கும் கேக்கணும். பிந்து மெரண்டு போறா மாதிரி கூச்சல் போடணும். எல்லாருக் கும் வைத்தா ஹோட்டல்ல மசால் தோசை சொல்லி வெச்சிருக்கு...”

“ஹலோ...செக்...செக்....” என்று தரின் பேஸ் குரல் வரவேற்கத் துவங்க...

பால்கனியில் பிரசன்னமானாள் பிந்து.

நம்சுக்கு வேர்த்து ஊற்ற ஆரம் பித்தது. சின்னக்கண்ணனின் மொத்த நோட்ஸுகளையும் மனசுக்குள் ஒரு முறை ஓட்டிக்கொண்டான். நோட் ஸுக்கு நடுநடுவே பிந்து வந்து வந்து படபடத்துப் போனாள்.

“புல்லாங்குழல் கொடுத்த மூங் கில்களே...” பாடலோடு ஜிவ்வெனத் துவங்கியது கச்சேரி. பன்னீர் பின் னிக் கொண்டிருந்தார்.

சின்னக் கண்ணனை உக்காந்தே வாசிக்கலாமா? இல்லை, சைடா நின்றபடி ஸ்டைலாக வாசிக்கலாமா? கவலை கலந்த யோசனைகளில் பிஸியாக இருந்தான் நம்சு.

ஒருபுறம் எம்ஜியார், சிவாஜி பாடலுக்கு சண்டை. மறுபுறம் ரஜினி, கமல் பாடல்களுக்கு சண்டை. நடுவே இளையராஜாவுக்காக தனியே வந்து குவியும் ரிக்வஸ்ட் சீட்டுகள் எனப் படிப்படியாக கேளிக்கையின் உச்சத்துக்கு சென்று கொண்டிருந்தது கச்சேரி.

“அடுத்தது நாம்தான்...இதற் கடுத்தது நாமேதான்...” என்று காத் திருந்து காத்திருந்து குழம்பிப் போனான் நம்சு.

நேரம் 9.30 கடக்க பிந்து கொட்டாவி விட ஆரம்பித்தாள்.

மணி பத்தாகி விட பால்கனி காலியானது.

சரியாக 10.30 மணிக்கு ஏரியா இன்ஸ்பெக்டரை மேடைக்கு அழைத்த தர் அவருக்கு நன்றி சொல்லி மாலை போட்ட கையோடு,

கடைசிப் பாடலாக “நாளை நமதே” படத்திலிருந்து  “அன்பு மலர் களே...” பாடல் பாடப்படும் என்று அறிவித்தபோதுதான் நம்சுக்கு முழுசாக உரைத்தது.

அதாவது, கச்சேரியைத் தெருவில் இருந்து பார்ப்பதற்குப் பதிலாக மேடையில் இருந்து பார்க்க வைத்து விட்டார்கள். அவனுக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்தது டம்மி மைக்.

கலங்கிய கண்களோடு மேடையை விட்டு இறங்கி நடந்தான்.

பின்னால் மைக் ராஜாமணியின் குரல் கேட்டது...

“தம்பி, ஃப்ளூட் பாக்ஸை அப்ப டியே வெச்சிட்டுப் போறியே..?”

 ‘சோ’ வென்று மழை பொழிந்து கொண்டிருந்த ஒரு நாளில் பிந்து ராஜஸ்தானுக்கு ரெயிலேறி விட வீட்டுக்குளேயே முடங்கிப் போனான் நம்சு.

எப்போதாவது பால்கனிக்கு வரு வான். சுதா ஃபேன்ஸி ஸ்டோரையே வெறித்துக்கொண்டிருந்துவிட்டு உள்ளே போய்விடுவான்.

காலப்போக்கில் ஒருவழியாக உழைத்துப் படித்து டாக்டராகி விட்டான் நம்சு. இன்று பெங்களூரு வில் அவன் பிரபலமான டாக்டர். அங்கே இரண்டு பெரிய ஹாஸ்பிட் டல்களைக் கட்டிவிட்ட தாகத் தகவல்.

போன வாரம் வருஷப்பிறப்புக்கு நரசிம்மரை தரிசித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்த சமயம் ஆச்சரியமாக எதிரே வந்தான் ஒல்லி ரகு. மொத் தமாக நரைத்திருந்தான்.

“என்ன ரகு, அமேரிக்காவிலேயே செட்டிலாயிட்டியா ?”

“இல்லடா, சீக்கிரத்துல இங்கயே வந்துறலாம்னு இருக்கேன்”

“நம்சு எப்படிடா இருக்கான் ?”

ரகுவின் முகம் ஒரு செகண்ட் இறுகி விரக்தியாக சிரித்தான்.

“ஏன், என்னடா ஆச்சு ?”

“நம்பர் தரேன். பேசிப் பாரு...”

இரவு டின்னர் முடிக்கும்போது நம்சுவின் ஃப்ளாஷ் பேக்கை ஓட்டிப் பார்த்துக்கொண்டேன். எவ்வளவு வண்ணமயமான காலம் அது.

பயங்கர எதிர்பார்ப்போடு நம்சு நம்பருக்கு அழைத்தேன்.

சர்ப்பரைஸாக காலர் ட்யூனில் “சின்னக் கண்ணன் அழைக்கிறான்”

சடக்கென லைனுக்கு வந்தது ஒரு பெண் குரல்.

“ஹாய்...”

“நம்சு இருக்கானா..?”

“.................”

“ஹலோ... நம்சு ப்ளீஸ்....”

“ஆர் யூ காவ்லிங் ஃப்ரம் ட்ரிப்ளிக்கான்..?”

“யெஸ்... அண்ட் யூ..?”

“ஐ யாம் மிஸஸ் நமச்சிவாய்ம்...”

பதிலுக்கே காத்திருக்காமல் படக்கென போன் துண்டிக்கப்பட அந்த உடைந்த ஆங்கிலம் மட்டும் உறுத்திக்கொண்டே இருந்தது.

பிந்து ?

(சந்திப்போம்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in