யானையை யானெ என்றும் சொல்லலாம்

யானையை யானெ என்றும் சொல்லலாம்

கணேசகுமாரன்

தொகுப்பின் தலைப்புக்கு அர்த்தம் கண்டுபிடிப்பதிலிருந்து ஆரம்பமாகிறது வாசகருக்கும், ஆசிரியருக்கும், ஒரு குழந்தைக்குமான கண்ணாமூச்சி விளையாட்டு. தொகுப்பு முழுவதும் அவ்விளையாட்டு நடக்கிறது. விளையாட்டு நிகழாத கவிதைகளில் நிஜ உலகுக்கு வந்து தலையில் கை வைத்துக்கொண்டு உட்கார்ந்து விடுகிறோம். ஆம், நிஜம் செவிளில் அறைய முகுந்தின் குழந்தை உலகமோ வாசகரை உயிர்ப்புடன் சிரிக்கவும் அழவும் வைக்கிறது. வாசகர் இழந்த அல்லது வாழாமல் போன குழந்தைமை உலகத்தை ஈரம் சொட்டச்சொட்ட கண்ணில் நிறுத்துகிறார் ஆசிரியர். கடவுளிடம் வேண்டுகோளாக இதுவரை நாம் வைத்த நல்ல புத்தி, படிப்பு, ஆரோக்கியம், வாழ்வு கேட்டுக் கேட்டு கடவுளுக்கே சலிப்பு வந்திருக்கும்.

அது மட்டுமா... அது கடவுளுக்கே பழகிப்போன ஒன்றாயிருந்திருக்கும். திடீரென்று அவரிடம் நல்ல ரெட் பலூன் கொடு என்றால் முகுந்தின் நல்ல பலூன் கவிதையின் கடைசி வரியைப் போல் கடவுள் திடுக்கிட்டுத்தான் போவார் இல்லையா?

எட்டுவழிச்சாலையில் வேண்டுமானால் அரசியல் இருக்கலாம். தொகுப்பின் ஆசிரியர் காட்டும் அம்மாவழிச்சாலையில் அழகியல் மட்டுமே மின்னுகிறது. பெரியவர்களான நமக்குப் பேசவே தெரியவில்லை என்பதைப் பெரும்பாலான கவிதைகள் சுட்டிக்காட்டுகின்றன. அல்லது குற்றம் சாட்டுகின்றன. இனிமேலாவது எங்கள் வீட்டில் பூனை வளர்க்கிறோமே என்று யாராவது கூறினால் என்ன கலர் பூனை என்று கேட்டு நம் குற்ற உணர்வைக் குறைத்துக்கொள்வோம்.முதல் பிறந்த நாளுக்கு ரெயின் கோட்டையும் அடுத்த பிறந்த நாளுக்கு மழையையும் பரிசளிக்கும் காதலை என்னவென்று சொல்வது? ஒரு பூனையை பூனை என்றுதான் சொல்ல வேண்டுமா என்ன? பூநை என்றால் இன்னும் மெத்து மெத்து என்றாகி விடுகிறதல்லவா... யானையும் கூட யானெ என்றால் தன் எடையைக் குறைத்து விடுகிறது முகுந்த் நாகராஜன் கவிதைகளில். குழந்தைமை வகையில் வராத  ‘உத்தரவாதம்’ கவிதை வாசித்து முடித்ததும் மனசை ஏதோ செய்வது நிஜம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in