ஹாட் லீக்ஸ்: காங்கிரஸின் சங்கராபுரம் சடுகுடு

ஹாட் லீக்ஸ்: காங்கிரஸின் சங்கராபுரம் சடுகுடு

கடுப்பு மணியன் காட்டமாய் கடிதம்!

உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்துக்காக மயிலாடுதுறை அருகே நீடூருக்கு வந்த அமைச்சர் ஓ.எஸ்.மணியனை மக்கள் முற்றுகையிட்டு திரும்பிப்போக வைத்தது கடந்த வாரத்தின் ஹாட் டாப்பிக். மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரி அமையத் தடையாய் இருக்கிறார், மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க முட்டுக்கட்டை போடுகிறார் என்று சொல்லியே மக்கள் மணியனை முற்றுகையிட்டதாகச் சொல்லப்பட்டது. இந்த நிலையில், ‘மாவட்டச் செயலாளர் பதவிக்கு ஆசைப்பட்டு முன்னாள் அமைச்சர் ஜெயபால் தான் எனக்கு எதிராக ஆட்களைத் தூண்டிவிட்டு இப்படி யெல்லாம் ரகளை செய்கிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்தாக வேண்டும்’ என்று கட்சித் தலைமைக்கு காட்டமாக கடிதம் எழுதியிருக்கிறாராம் ஓ.எஸ்.மணியன்

காங்கிரஸின் சங்கராபுரம் சடுகுடு

காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக், அகில இந்தியச் செயலாளர் சஞ்சய் தத், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, எம்பி-க்களான ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் - ஒரு ஊராட்சி மன்றத் தலைவருக்காக இத்தனை பேர் வந்து வாக்குக் கேட்டிருக்கிறார்கள். காரைக்குடியை ஒட்டியுள்ள சங்கராபுரம் ஊராட்சியில்தான் இந்த அமர்க்களம் நடந்திருக்கிறது. கோடிகளில் பணம் புரளும் பசையான ஊராட்சி இது. இதுவரை இந்த ஊராட்சியை காங்கிரஸும் திமுகவும் மட்டுமே தக்கவைத்துள்ளது. இம்முறை இது பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு விட்டுத்தரப்பட்டது. இதையடுத்து, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரான மாங்குடியின் மனைவி தேவியை வேட்பாளராக நிறுத்தினார் ப.சிதம்பரம். தேவியை எதிர்த்து ஐயப்பன் என்பவர் அதிமுக கூட்டுடன் தனது மனைவி பிரியதர்ஷினியை நிறுத்தினார். சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவரான கே.ஆர்.ராமசாமியின் உறவினர் ஐயப்பன். ஆனாலும் தேவிக்கே ராமசாமி வாக்கு சேகரித்தார். ப.சிதம்பரத்தின் முன்னாள் உதவியாளரும் முன்னாள் எம்எல்ஏ-வுமான சுந்தரம் ஐயப்பனுக்காக பகிரங்கமாக வாக்குக்கேட்டார். இதனால், கட்சிக்கு துரோகம் செய்யும் சுந்தரத்தை கட்சியைவிட்டு நீக்க வேண்டும் என்று அழகிரியிடம் புகார் செய்தார்கள். ஆனால், சுந்தரம் ப.சிதம்பரத்துக்கு வேண்டியவர் என்பதால் அமைதி காத்தார் அழகிரி. இந்த நிலையில்தான் கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் வரைக்கும் வந்து தேவிக்காக வாக்குச் சேகரித்திருக்கிறார்கள். அப்போது சுந்தரமும் அங்கு வர, அவருடன் தனக்கே உரிய பாணியில் பேசிய சிதம்பரம், “நீங்க போய் உங்க நண்பருக்கு வேலை பாருங்க சார்... நாங்க எங்க வேலையப் பார்க்கிறோம்” என்று சொல்லி அனுப்பினாராம். தேர்தல் முடிவுகள் எப்படி வந்தாலும் சங்கராபுரத்தை வைத்து காங்கிரஸுக்குள்ளேயே களேபரம் நடக்கலாம் என்கிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in