ஏழைகளின் மருத்துவக் கனவு நனவாகட்டும்!

ஏழைகளின் மருத்துவக் கனவு நனவாகட்டும்!

தமிழகத்தில் ‘நீட்’ நுழைவுத் தேர்வுக்கான இலவசப் பயிற்சி மையங்கள் ஆகஸ்ட் முதல் வாரம் தொடங்கும் எனப் பள்ளிக் கல்வி இயக்குநரகம் தெரிவித்திருக்கிறது. இந்த முறை கூடுதலாக 94 மையங்கள் திறக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

அரசு, அரசு உதவிப் பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தி இது.  அதேசமயம், கடந்த ஆண்டு அரசுப் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற 19,000-க்கும் மேற்பட்ட மாணவர்களில் ஒருவருக்குக்கூட மருத்துவக் கல்லூரியில் சேரும் வாய்ப்புக் கிடைக்கவில்லை எனும் செய்தி மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. இதுகுறித்து விளக்கமளித்திருக்கும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், “அரசுப் பள்ளி மாணவர்கள் பாடங்களைப் படித்துக்கொண்டே இதற்காகத் தயாராக வேண்டியிருக்கிறது. தனியார் பள்ளிகளிலோ, வகுப்பறைகளுக்கு வராமல் பயிற்சி வகுப்புகளுக்கே மாணவர்கள் செல்கிறார்கள்” என்று கூறியிருப்பது விமர்சனங்களுக்கு வழிவகுத்திருக்கிறது.
“ஆண்டுக்கு 500 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்க வழிவகை செய்யப்படும்” என்று நம்பிக்கையுடன் பேசியதும் இதே அமைச்சர்தான். ஆனால், அந்த நம்பிக்கை பொய்த்துப்போய்விடுமோ எனும் அச்சம் இப்போது எழுந்திருக்கிறது. கடந்த முறைகூட எப்போது பயிற்சி வகுப்புகள் தொடங்கும் என்று முறையான அறிவிப்புகள் வராததால் மாணவர்கள் குழப்பமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருளாதாரப் பின்னணி கொண்ட மாணவர்கள் தனியார் பயிற்சி மையங்களுக்குச் சென்று வெற்றி பெற்றுவரும் நிலையில், கிராமப்புற, ஏழை மாணவர்கள் நம்பியிருப்பது இலவசப் பயிற்சி மையங்களைத்தான். இவ்விஷயத்தில் அனைத்துத் தரப்பினருக்கும் சம வாய்ப்பு அளிக்கப்படுவதை உறுதிசெய்யும் பொறுப்பு அரசுக்குத்தான் இருக்கிறது. பயிற்சி மையங்களின் தரத்தை உயர்த்தும் நடவடிக்கை களில் அரசு இறங்கினால் மட்டுமே ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவு நொறுங்கிவிடாமல் இருக்கும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in