உலகம் சுற்றும் சினிமா - 14: இனப்படுகொலை களத்தில் ஓர் இரக்க உள்ளம்!

ஹோட்டல் ருவாண்டா (2004)
உலகம் சுற்றும் சினிமா - 14: இனப்படுகொலை களத்தில் ஓர் இரக்க உள்ளம்!

மனிதன் மட்டுமல்ல, இவ்வுலகில் பிறந்த எந்த ஒரு உயிரினமும் உலகில் ஜீவித்திருப்பது என்பது அதன் அடிப்படை உரிமை. அதேசமயம், வாழ்க்கைப் போராட்டங்களை எதிர்கொள்ளாமல் ஜீவித்திருக்கும் பாக்கியம் உலகின் எந்த உயிரினத்துக்கும் அவ்வளவு எளிதில் வாய்ப்பதில்லை – மனிதன் உட்பட!

மதம், இனம், மொழி, நிறம் என்று பல்வேறு பிரிவினைகளின் காரணமாக மனிதக் கூட்டம் தங்களுக்குள் அடித்துக்கொள்வதென்பது மனித இனத்துக்கு ஏற்பட்ட அவலத்தின் உச்சம். அப்படிப்பட்ட அவலமான உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம்தான் ‘ஹோட்டல் ருவாண்டா’ (2004).

மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள ருவாண்டா நாட்டில் 1994-ல், டூட்ஸி இன மக்களுக்கு எதிராக ஹூட்டு இனத்தவர் நடத்திய இனப்படுகொலைதான் படத்தின் களம். பல இன்னல்களுக்கு நடுவே, ஆயிரக்கணக்கான டூட்ஸி இன மக்களைக் காப்பாற்றிய பால் ருசெசேபெகினா என்ற ஹூட்டு இன மனிதரின் அனுபவங்களைத் தழுவி எடுக்கப்பட்ட படம் இது.

‘சம் மதர்ஸ் சன்’(1996), ‘தி ப்ராமிஸ்’(2016) போன்ற படங்களை இயக்கிய டெர்ரி ஜார்ஜ் இயக்கத்தில், டான் சீடில், ஜாக்வின் ஃபீனிக்ஸ் உள்ளிட்டோர் நடித்து வெளியான இப்படம், உலக அரங்கில் பெரிதும் கவனிக்கப்பட்டது.

ரத்தத்தில் மூழ்கிய ருவாண்டா

ருவாண்டா நாட்டின் தலைநகரமான கிகலி நகரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலான மில்லி கொல்லின்ஸின் மேலாளராக வேலை பார்ப்பவர் பால் ருசெசேபெகினா. ஹூட்டு இனத்தைச் சேர்ந்த பால், டூட்ஸி இனத்தைச் சேர்ந்த பெண்ணை மணம் முடித்தவர். பல ஆண்டுகளாக இரண்டு இனத்தவர்களுக்கும் மோதல்கள் இருந்துவந்த நிலையில், ஹூட்டு இனத்தைச் சேர்ந்த அதிபர் ஜுவீனல் ஹபியரிமானாவின் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டு அவர் இறந்த பின்பு, இடையே புகைந்துகொண்டிருந்த பகை, பெரும் கலவரமாக வெடித்தது.

இந்தச் சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்த ஹுட்டு இனத்தவர்கள், சிறுபான்மையினரான டூட்ஸி இன மக்களைக் கொன்று குவிக்க ஆரம்பித்தனர். ஏராளமானோர் கொல்லப்பட்ட நிலையில், சிலர் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஐநா படைகளின் பாதுகாப்பில் உள்ள மில்லி கொலின் ஹோட்டலில் டூட்ஸி மக்கள் தஞ்சம் அடைந்தனர். ஏற்கெனவே தன் குடும்பம் மற்றும் அண்டை வீட்டில் இருந்த டூட்ஸி குடும்பங்களை ஹோட்டலில் தங்கவைத்திருக்கும் பால், அகதியாக வந்தவர்களுக்கும் இடமளித்தார். நாட்கள் போகப்போகத் தஞ்சம் அடைபவர்களின் எண்ணிக்கை அதிகமானது. இதில் ஹூட்டு இன அகதிகளும் அடக்கம்.

கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு மேல் நடந்த கலவரத்தில் பல முறை ஹோட்டலில் உள்ளவர்களைக் கொல்ல ஹுட்டு இனவெறிக் கும்பல்கள் முயன்றன. ஆனால், அவர்களுக்கு லஞ்சம் கொடுத்து, நைச்சியமாகப் பேசி அல்லது நாசூக்காக மிரட்டி ஹோட்டலில் இருந்த 1,268 மக்களைக் காப்பாற்றி, கடைசியில் அவர்களைப் பத்திரமான இடத்தில் சேர்த்தார் பால்.

இந்த நிஜ சம்பவத்தை ரத்தமும் சதையுமாகத் திரையில் இப்படம் சித்தரிக்கிறது. படம் முழுக்க சாமானிய மனிதர்களின் வாழ்க்கையில் அரசியலும் அதிகாரமும் ஏற்படுத்தும் அடக்குமுறையை அப்பட்டமாகக் காட்டியிருப்பார் இயக்குநர் டெர்ரி ஜார்ஜ். “வரலாற்றில் நடந்த வன்முறைகளை மீண்டும் உருவாக்கிக் காட்டுவதைவிட அந்த வன்முறையின் தாக்கத்தைப் பார்வையாளர்களை உணரச்செய்வதுதான் என்னைப் பொறுத்தவரைக்கும் வெற்றி. அதனால்தான் என்னுடைய படங்களில் வன்முறைக் காட்சிகள் மறைமுகமாக உள்ளன” என்று ஒரு நேர்காணலில் கூறியிருப்பார் டெர்ரி.

ஒரு காட்சியில், ஹோட்டலில் தங்கியிருக்கும் வெள்ளையர்களை மட்டும் காப்பாற்ற வரும் பிரெஞ்சு படைகளின் வாகனத்தில், வெள்ளைக்கார பெண்மணி பாதுகாப்பாக ஏறி அமர்ந்துகொள்வார். அவரது வளர்ப்பு நாய், அவரது மடியில் வசதியாக அமர்ந்துகொண்டு வெளியில் நிர்க்கதியாக நிற்கும் கறுப்பினத்தவர்களைப் பார்க்கும். அந்தப் பார்வையைவிட வேறு என்ன பெரிய வன்முறை இருந்துவிட முடியும்!?

மாற்றியமைக்கப்பட்ட முடிவு

இறுதிக் காட்சியில் ஹோட்டலில் இருந்த அனைவரையும் ஐநா-வின் அமைதிப்படையினர், கபூகா என்னும் இடத்தில் உள்ள பாதுகாப்பான அகதிகள் முகாமுக்கு அழைத்துச் செல்வதாகப் படம் முடியும். ஆனால், தன் அனுபவங்களைப் பற்றி ‘அன் ஆர்டினரி மேன் : தி ட்ரூ ஸ்டோரி பிஹைண்ட் ஹோட்டல் ருவாண்டா’ என்னும் புத்தகத்தில் பால், வேறு விதமாகக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது ருவாண்டாவில் ஆட்சியில் உள்ள ‘ருவாண்டன் பேட்ரியாடிக் ஃப்ரன்ட்’ (FPR) ஆயுதக் குழுவால் அனைவரும் காப்பாற்றப்பட்டு அகதிகள் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார் பால். “நாங்கள் அந்த முகாமுக்குச் சென்றபோது, அது கூச்சலும் குழப்பமும் நிறைந்த போர்க்களம் போல் இருந்தது. உணவுப் பற்றாக்குறை காரணமாக அடிதடிகள் நடந்தன. என் குடும்பத்துக்கான உணவைப் பெறவே பலருடன் நான் சண்டை போட வேண்டியிருந்தது” என்று அந்தப் புத்தகத்தில் கூறியுள்ளார் பால்.

பார்வையாளர்களுக்கு மனநிறைவு தர வேண்டும் என்பதற்காக இந்த மாற்றம் செய்யப்பட்டது என்று படக்குழு கூறினாலும், ருவாண்டாவில் நடந்த இனப்படுகொலையில் உலக நாடுகள் காட்டிய மெத்தனப் போக்கை மூடி மறைக்கவே இப்படிச் செய்யப்பட்டுள்ளது என்ற விமர்சனம் எழுந்தது.

தற்போது ‘ஜோக்கர்’ படத்தில் நடித்துப் புகழ்பெற்றிருக்கும் ஜாக்வின் ஃபீனிக்ஸ், ‘ஹோட்டல் ருவாண்டா’ படத்தில் செய்தி சேனலின் கேமராமேனாக நடித்திருப்பார். ஹுட்டு இனவெறியர்கள் செய்த படுகொலைகளைப் படமெடுத்து உலகுக்குக் காட்டியதற்காக அவருக்கு நன்றி சொல்லும் பாலிடம், “இதனால் என்ன பயன் ஏற்படும் என்று நினைக்கிறாய்? இதைப் பார்த்ததும் உலக மக்கள் உங்களுக்கு உதவ ஓடி வருவார்கள் என்று நினைக்கிறாயா? பரிதாபத்தில் உச்சு கொட்டிவிட்டு அவர்களின் இரவு உணவை உண்ணப் போய்விடுவார்கள்” என்று விரக்தியாகக் கூறுவார் ஃபீனிக்ஸ். கொஞ்சம் கொஞ்சமாக மனிதாபிமானத்தை இழந்துகொண்டிருக்கும் ஒட்டுமொத்த மனித இனத்துக்கும் கொடுக்கப்பட்ட சாட்டையடி வசனம் அது.

இனவெறியர்களிடமிருந்து புத்திசாலித்தனமாகப் பலரைக் காப்பாற்றிய கறுப்பினத்தவரைப் பற்றி இந்தவாரம் பார்த்தோம். தன் காதல் மனைவியை மீட்டெடுக்க இனவெறியர்களை வேட்டையாடக் கிளம்பிய கறுப்பினத்தவரைப் பற்றிய திரை ஓவியத்தை பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in