பாப்லோ தி பாஸ் 26: லா கதீட்ரல்..!

பாப்லோ தி பாஸ் 26: லா கதீட்ரல்..!

“இ ன்று மெதஜின் நகரத்தின் மீது ஒரு பறவைகூடப் பறக்காது” என்று ரஃபேல் பர்தோ தன் டைரியில் எழுதி வைத்தார். ரஃபேல் பர்தோ, கொலம்பியாவின் அன்றைய பாதுகாப்புத் துறை அமைச்சர். அவர் அப்படி எழுதி வைத்ததற்குக் காரணம், அன்றுதான் பாப்லோ சரணடைவதாக இருந்தது.

‘தானே கட்டிய தனிச் சிறையில் சிறை வைக்கப்பட வேண்டும்’ என்ற

பாப்லோவின் கோரிக்கை ஏற்கப்பட்ட பிறகு, அதற்கான பணிகள் வேக வேகமாக நடந்தன. சிறையைச் சுற்றிப் பெரிய மதில் சுவர் எழுப்புவது, அந்தச் சுவற்றின் மீது மின்சார வேலிகள் பதிப்பது போன்ற வெளிப்புற வேலைகளை போலீஸ் பார்த்துக்கொள்ள, சிறையின் உள் அலங்காரம் பாப்லோவின் மேற்பார்வையில் நடந்தது.

சிறைக்குள்ளே நீச்சல்குளம், கால்பந்து மைதானம், நட்சத்திர விடுதி அறையைப் போன்று தன்னுடன் தங்கும் தன் கூட்டாளிகள் ஒவ்வொருவருக்கும் தனி அறை எனப் பிரமாதப்படுத்தினான். இவை ஒரு பக்கம் நடக்க, இன்னொரு பக்கம் அவன் கடத்தி வைத்திருந்த நபர்கள் ஒவ்வொருவராக விடுவிக்கப்பட்டார்கள்.

1991 ஜூன் 19.

‘லா கதீட்ரல்’ எனும் பெயர்கொண்ட அந்தச் சிறை அமைந்திருக்கும் என்விகடோ பகுதியின் மீது ஹெலிகாப்டர் ஒன்று பறந்தது. மெல்ல மெல்ல அது கீழிறங்க, சுற்றிலும் தூசி பறந்தது. உயரத்திலிருந்து பார்க்கும்போது பாப்லோவின் கண்களுக்கு எறும்பு போலத் தெரிந்தவர்கள், ஹெலிகாப்டர் இறங்கியவுடன் மனிதர்களாக வளர்ந்திருந்தார்கள். பாப்லோ சிரித்துக் கொண்டே இறங்கினான். அவனது வருகைக்காக அன்று மெதஜின் வழியாகப் பறக்க இருந்த அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.

வெளிர் நீல நிறத்தின் ஜாக்கெட், இத்தாலியத் தயாரிப்பில் வெள்ளைச் சட்டை, நீல நிற ஜீன்ஸ், கண் களுக்கு சன் கிளாஸ், காலில் வெள்ளை நிற டென்னிஸ் ஷூ, கையில் ஒரு ‘ஃபோர்ட்டபிள் போன்’ என ஒரு பிசினஸ் எக்ஸிகியூட்டிவ் தோரணையில் வந்து நின்ற பாப்லோவைப் பார்த்து, அரசு அதிகாரிகள், காவல் துறையினர், கொலம்பியாவின் முக்கியப் பத்திரிகை ஆசிரியர்கள் எனப் பலரும் வாயடைத்துப் போனார்கள். பயங்கரவாதி என்றால், அழுக்குச் சட்டையுடன், கைகளில் துப்பாக்கியுடன் அலைபவன் என்ற பரவலான எண்ணம் அன்று அவர்கள் பாப்லோவைப் பார்த்ததும் உடைந்தது.

அங்கிருந்தவர்களில் முதல் நபரைக் கண்டுகொண்டான் பாப்லோ.

“எப்படியிருக்கீங்க டாக்டர் வில்லமிசார்..?” என்று கேட்டு கை குலுக்கினான் பாப்லோ.

“நல்லாருக்கேன் பாப்லோ. நீங்க..?”

புன்னகையைப் பதிலாகத் தந்துவிட்டு, சிறைக்குள் நுழைந்தான். சிறையைச் சுற்றி ஆயுதமேந்திய காவலர் கள் இருந்தனர். சிறையில் உள்ள வசதிகளை ஒரு முறை பார்த்துவிட்டு, மீண்டும் வில்லமிசாரிடம் வந்தான் பாப்லோ.

“நாம போட்டுக்கிட்டிருந்த சண்டையில, உங்களைக் கொல்றதுக்கு ஒரு புரளி போதும். நல்லவேளை, உங்களுக்கு அப்படி எதுவும் ஆகவில்லைன்னு சந்தோஷப்படுறேன் வில்லமிசார்.”

“ம்ம்…”

“இனி உங்களுக்கு என் பக்கத்திலிருந்து எந்தப் பிரச்சினையும் வராது…”

தன் கூட்டாளிகள், தன் சிகாரியோக்கள் ஆகியோர் தங்களுக்குத் தேவையான பொருட்களை எல்லாம் மூட்டை கட்டிக்கொண்டு  சிறைக்கு வர, பாப்லோ மட்டும் ஒரே ஒரு சூட்கேஸுடன் வந்தான். அந்த சூட்கேஸ் முழுவதும் ‘கிங் ஆஃப் ராக்’ என்று அழைக்கப்படும் எல்விஸ் பிரெஸ்லி எனும் அமெரிக்கப் பாடகரின் பாடல் கேஸட்டுகள்தான் இருந்தன. பாப்லோவுக்கு எல்விஸ் என்றால் அவ்வளவு உயிர்..!

அதிகாரபூர்வமாகச் சிறையில் இருப்பது என்னவோ 14 பேர்தான், ஆனால், அதிகாரத்துக்கு அப்பாற்பட்டு பலர் சிறைக்குள் இருந்தனர். சிறையில் உள்ள வசதிகளைக் கூட்டுவது, காவலர்களுக்குத் தெரியாமல் தொலைத்தொடர்பு வசதிகளை ஏற்படுத்துவது என சிறைக்குள் சென்ற முதல் சில நாட்கள் பிஸியாக இருந்தான் பாப்லோ.

அடுத்தடுத்த நாட்களில் அவனைப் பார்க்க அவன் குடும்பத்தினர், அவன் நண்பர்கள், வேறு நாடுகளில் இருக்கும் கூட்டாளிகள் எனப் பலர் வந்தனர். வந்தவர்களை உற்சாகப்படுத்த அங்கே 24 மணி நேர மதுபானக் கூடம், வகைவகையாக உணவு செய்து தர சமையல் கலைஞர்கள், ஜக்கூஸி, மசாஜ், ஆறுதல் மகளிர் எனச் சகல வசதிகளும் அங்கு இருந்தன.

பாப்லோ உள்ளே இருக்கும் தைரியத்தில் அவனது போட்டியாளர் கள் தங்களுடைய பிசினஸை விரிவுபடுத்த, தங்களுடைய பிசினஸை உள்ளிருந்து நடத்தத் தேவையான பணத்தை வெளியிலிருந்து கொண்டு வருவதே பாப்லோவுக்குச் சவாலாக இருந்தது. அந்தப் பணம் எல்லாம் பால் பாட்டில்கள், உப்பு, சர்க்கரை, அரிசி, மீன் ஆகியவற்றில் மறைத்துக் கொண்டுவரப்பட்டது. கொண்டு வரப்படும் அந்த வழி ‘டனல்’ (குகைப் பாதை) என்ற சங்கேத வார்த்தையால் அழைக்கப்பட்டது.

பாப்லோவின் ரேடியோ தொடர்புகளை  ஒட்டுக்கேட்ட போலீஸார் அந்தச் சிறையில் குகை எங்கே இருக்கிறது என்று பின்னாளில் தேடித் தேடிக் களைத்துப் போனார்கள். இப்படி எல்லாம் ஒட்டுக் கேட்பார்கள் என்று தெரிந்துதான் பாப்லோ பெரும்பாலான நேரம் புறாக்கள் மூலம் செய்தி அனுப்பப் பழகியிருந்தான்.

அப்படிக் கொண்டு வருவதற்கான தேவை என்ன? அரசுடன் பாப்லோ செய்துகொண்ட டீல் படி, சிறைக்குள் பணம், ஆயுதங்கள் போன்றவை வைத்திருக்கக் கூடாது. அப்படி வைத்திருப்பது தெரிந்தால், அந்த டீல் உடனே முடிவுக்கு வந்துவிடும், பாப்லோ கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படுவான்.

பாப்லோவுக்குக் கால்பந்தில் ஆர்வம் இருந்ததால், சிறைக்குள் அவ்வப்போது கால்பந்து போட்டிகள் நடத்துவான். அவனும் கலந்துகொள்வான். இதற்காக, கொலம்பி யாவின் ரெனே ஹிக்விட்டா போன்ற பிரபல கால்பந்து வீரர்களைக் கூட்டி வந்து அவர்களுடன் விளையாடுவான். அந்தப் போட்டிகளில் நேர விதிகள் எல்லாம் கிடையாது. பாப்லோவின் அணி ஜெயிக்கும் வரை போட்டி நடக்கும். இதுதான் சமயம் என்று விளையாடுவது போல பாப்லோவின் மீது அவனது சிகாரியோக்கள் சிலர் வந்து வேண்டுமென்றே மோதுவார்கள். அவனைத் தள்ளிவிடுவார்கள். அவர்களைப் பார்த்து ஒரே ஒரு முறைப்புதான். அதன் பிறகு, அவர்கள் விளையாடவே வர மாட்டார்கள்.

சுருக்கமாகச் சொல்வதென்றால், தன்னு டைய ‘ஹசியெண்டா நேப்போல்ஸ்’ பண்ணை வீட்டில் பாப்லோ எப்படி சுகவாசியாக வாழ்ந் தானோ, அதே போல ‘லா கதீட்ரல்’ சிறையிலும் நாட்களைக் கடத்தினான் பாப்லோ. கதீட்ரல் என்றால் தேவாலயம் என்றொரு பொருளும் உண்டு. ஆனால் இங்கு பாவங்கள் கழுவப் படவில்லை, சிந்தப்பட்டன..!

(திகில் நீளும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in