நிழற்சாலை

நிழற்சாலை

இறக்கைகள் அர்த்தம் பெறட்டும்

கிளிகள் வேடிக்கையானவை
சன்னலில் நம் நிழலாடினால்
சட்டெனப் பறக்கும் கிளி
கொய்யாக் கனிகளைக்
கொத்தியுண்ணும்போது மட்டும்
எவரையும் சட்டை செய்யாது.
முருங்கை மரத்தின்
மேல் கிளைகளில்
பறிக்காமல் விட்டுப்போன
உலர்ந்த காய்களைப் பிளந்து
ஒவ்வொரு விதையாகச் சுவைக்கும்.
இன்றும் கிளிகளின்
கூக்குரலில் ஆரம்பமாயின
வேடிக்கையும் வித்தைகளும்.
ஒவ்வொரு கிளியின் கீச்சொலியிலும்
நிரம்பித் ததும்பிய சுதந்திரத்தின் வீச்சு
வான் எழும்பி
மேகங்களை முட்டித் தள்ளுகிறது.
வாய்க்கட்டும்
மற்றுமோர் ஜென்மத்திலாவது
முருங்கை மர வாசம்,
கரணமிட்டு வித்தை காட்டும்
சிறகொடிக்கப்பட்ட
வளர்ப்புக் கிளிக்கும்,
வருவோர் போவோருக்கு
வருங்காலத்தைச் சொல்ல
கடவுளர் சீட்டுகளை
எடுத்துப் போடும்
சீக்குக் கிளிக்கும்!
- ராமலக்ஷ்மி

அரித்மோபோபியா

பதினைந்து காசு மிட்டாய்க்கு
கால் ரூபாய் கொடுத்து மீதம் பெற
குழம்பிய நாளில்
தொடங்கியது எண்கள் மீதான
என் வெறுப்பு.
வகுப்பில் எண் அழைத்து
மதிப்பெண் அறிவிக்கும்போதெல்லாம்
காதுகளைக் கடிக்கத் தொடங்கிவிடும்
எண்களின் கூர் பற்கள்.
கிழமைகள் பிடிப்பதுபோல்
தேதிகள் பிடிப்பதில்லை.
என் மீதான
எண்களின் இம்சை
என்றைக்குமாகத் தொடர்கிறது.
கடவுச்சொற்களில்
எண்ணிடச் சொல்லி
வற்புறுத்துகிறது கணினி.
செழித்து வளர்ந்த மரக்கிளையின்
வெட்டுக்காயங்களாகின்றன
எழுத்துகளோடு சேர்க்கப்படும்
எண்கள்.
எண்ணங்கள் சுழியம் ஆனாலும்
எண்ணற்ற இடத்தில்
வாழ்தல் இயலாது எனும்போது
அழுத்தமின்றி உச்சரித்தும்
வடிவமற்று எழுதியும் தீர்க்கிறேன்
எண்களின் மீதான தீரா வெறுப்பை.
- சுசித்ரா மாறன்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in