மாற்றுத்திறனாளி மாணவர்கள் வளம் பெறட்டும்!

மாற்றுத்திறனாளி மாணவர்கள் வளம் பெறட்டும்!

தமிழகத்தின் அனைத்துப் பள்ளிகளிலும் மாற்றுத்திறனாளி மாணவர்கள், சிரமங்கள் இல்லாத சூழலில் பயிலும் வகையிலான அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் என்று தமிழகத் தகவல் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது. மாடிப்படிகளில் கைப்பிடிகள் தொடங்கி, சிறப்பு வசதிகளுடன் கூடிய கழிப்பறைகள் வரை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தத்தக்க கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் தனியார் பள்ளிகளும் அடக்கம்.

சிறப்புப் பள்ளிகளில் மட்டுமல்லாமல், உள்ளடங்கிய கல்வியின் அடிப்படையில், உடல் குறைபாடுகளற்ற மாணவர்கள் பயிலும் பொதுப் பள்ளிகளிலும் கணிசமான எண்ணிக்கையில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் பயில்கிறார்கள். ஆனால், அங்கு அவர்களுக்கு போதுமான சிறப்பு வசதிகள் செய்து தரப்படுவதில்லை. அதுமட்டுமல்ல, அவர்களுக்குப் பாடம் சொல்லித்தர போதுமான ஆசிரியர்களும் நியமிக்கப்படுவதில்லை என்று கல்வியாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். குறைந்த எண்ணிக்கையிலான ஆசிரியர்கள், வெவ்வேறு பள்ளிகளுக்கும் சென்று மாற்றுத்திறனாளி மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டிய நிலை இருக்கிறது என்றும் புகார்கள் உண்டு. அவர்களுக்கு மிகக் குறைவான ஊதியமே வழங்கப்படுகிறது என்பது மற்றொரு துயரம்.

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின்கீழ், எல்லாப் பள்ளிகளிலும் இதுபோன்ற சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பெயரளவுக்குச் சம்பிரதாயமாகச் சில கட்டமைப்புகள் மட்டும் செய்துதரப்படுகின்றன. இத்தனைக்கும், இதற்காகச் சிறப்பு 
நிதிகள் ஒதுக்கப்படுகின்றன, கல்வி உதவித் தொகைகள் வழங்கப்படுகின்றன. இத்தனைக்குப் பிறகும் இவ்விஷயத்தில் திருப்திகரமான சூழல் உருவாகவில்லை என்பது வருத்தத்துக்குரிய விஷயம். உண்மையில், மற்ற குழந்தைகளுடன் பயிலும் மாற்றுத்திறனாளிக் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவதற்கான நிரூபணங்கள் ஏராளம்.

ஆகவே, அவர்களை ஊக்கப்படுத்தும் நடவடிக்கைகளை எடுப்பது மிக முக்கியமானது. தமிழகத் தகவல் ஆணையத்தின் இந்த உத்தரவு அதற்கான உத்தரவாதமாக அமையட்டும்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in