பேசும் படம் - 35: உயிரைக் கொடுத்து எடுத்த படம்!

பேசும் படம் - 35: உயிரைக் கொடுத்து எடுத்த படம்!

பொதுவாக ஒரு புகைப்படக்காரர், மிகவும் கஷ்டப்பட்டு ஒரு படத்தை எடுத்தால், “என் உயிரைக் கொடுத்து இப்படத்தை எடுத்திருக்கிறேன்” என்று கூறுவார். ஆனால், ஒரு புகைப்படக்காரர் நிஜமாகவே தன் உயிரைக் கொடுத்து எடுத்த கடைசிப் புகைப்படம்தான் இங்கே நீங்கள் பார்ப்பது. அமெரிக்காவில் இரட்டைக் கோபுரம் மீது நடந்த தாக்குதலின்போது எடுக்கப்பட்ட இப்படத்தை எடுத்தவர் வில்லியம் ஜி.பிக்கார்ட் (William G. Biggart) என்ற அமெரிக்க புகைப்படக்காரர்.

உலகில் இதுவரை நிகழ்ந்த தீவிரவாத தாக்குதல்களிலேயே அதி பயங்கரமான தாக்குதல் என்று உலக வர்த்தக மையம் அமைந்திருந்த இரட்டை கோபுரம் மீதான தாக்குதலைக் கூறலாம். அமெரிக்காவின் இதயப் பகுதியாக கருதப்படும் நியூயார்க் நகரத்தில் அமைந்திருந்த மிக பிரம்மாண்டமான கட்டிடம்தான் ‘ட்வின் டவர்ஸ்’ என்று அழைக்கப்பட்ட இரட்டை கோபுரம். முறையே 1,368 மற்றும் 1,362 அடிகள் உயரம் கொண்ட இந்த இரட்டை கோபுரம், அமெரிக்கப் பொருளாதாரத்தின் முக்கிய அங்கமாக இருந்து வந்தது. 1973-ம் ஆண்டுமுதல் செயல்பட்டு வந்த இந்த இரட்டை கோபுரத்தில் முக்கியத் தொழில் நிறுவனங்கள், வங்கிகள் போன்றவற்றின் அலுவலகங்கள் இயங்கி வந்ததால், இங்கு பணியாற்றுவதை மிகப்பெரிய கவுரவமாக அமெரிக்க மக்கள் கருதினர்.
அமெரிக்கப் பொருளாதாரத்தின் தலையெழுத்தையே நிர்ணயிக்கக்கூடிய சக்திமிகுந்த அலுவலகங்களைக் கொண்ட இந்த இரட்டை கோபுரம் எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும்.

2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி, தனக்கு நேரக்கூடிய ஆபத்தை உணராமல் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது இரட்டை கோபுரம். காலை நேரம் என்பதால் இரட்டை கோபுரத்தின் 104 தளங்களில் உள்ள அலுவலகங்களும் அன்றைய பணிகளுக்கான தயாரெடுப்பில் இருந்தன. அதே நேரத்தில், தீவிரவாத அமைப்பான அல்கொய்தாவைச் சேர்ந்த 19 தீவிரவாதிகள், அமெரிக்கா மீது மிகப்பெரிய தாக்குதலை நடத்தும் திட்டத்துடன் அந்நாட்டின் விமான நிலையங்களில் ஊடுருவி 4 விமானங்களுக்குள் நுழைந்தனர். இந்த 4 விமானங்களிலும் தாக்குதலுக்கு அனுப்பப்பட்ட தீவிரவாதிகள், விமானம் ஓட்டும் பயிற்சியைப் பெற்றவர்களாக 
இருந்தனர்.

அமெரிக்க விமானப் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்றதாகக் கூறப்படும் இவர்கள், விமானம் கிளம்பிய சில நிமிடங்களில் விமானியின் அறைக்குச் சென்று விமானத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். 4 விமானங்களையும் கைப்பற்றிய தீவிரவாதிகள் அதில் இரண்டை உலக வர்த்தக மையம் இயங்கும் இரட்டை கோபுரத்தை நோக்கித் திருப்பி விட்டனர். இதுபோன்ற தாக்குதல் முறை இதற்கு முன் நடக்காததால், நேரவிருக்கும் பெரும் பிரச்சினையைப் பற்றி ஏதும் அறியாமல் அமெரிக்கா இயங்கிக்
கொண்டிருந்தது.

மிகச்சரியாக காலை 8.45 மணிக்கு 20,000 காலன் எரிபொருள் நிரப்பப்பட்டிருந்த பிரம்மாண்டமான அமெரிக்கன் ஏர்லைன்ஸ் போயிங் 767 விமானம் உலக வர்த்தக மையத்தின் வடக்கு கோபுரத்தின் 80-வது தளத்தில் மோதியது.

நெருப்புப் பறவை போன்று வடக்கு கோபுரத்தை ஒரு விமானம் தாக்கியதையும், அதனால் அக்கட்டிடம் சடசடவென்று சரிந்துகொண்டு இருப்பதையும் பார்த்த அமெரிக்கர்கள் செய்வதறியாமல் பதைத்து நின்றனர். அந்த நேரத்தில் கட்டிடத்துக்கு மிக அருகில்தான் வில்லியம் ஜி.பிக்கார்ட் நின்றிருந்தார். எதையும் உடனடியாக படமெடுக்கும் ஆர்வம் கொண்ட அவருக்கு இந்தச் சம்பவத்தையும் படமெடுக்கும் ஆவல் எழுந்தது. உடனடியாக அருகில் உள்ள தனது அலுவலகத்துக்குச் சென்றவர், கேமராவுடன் கட்டிட இடிபாடுகளுக்கு நடுவே நுழைந்து க்ளிக்கத் தொடங்கினார். ஒருகையில் கேமராவை இயக்கிக்கொண்டே, மறு கையால் செல்போனை எடுத்தவர், தனது மனைவியுடன் பேசினார்.

“இரட்டை கோபுரம் மீது விமானம் மோதி விட்டது. அந்தக் கட்டிட இடிபாடுகளை படமெடுத்துக் கொண்டு இருக்கிறேன். என்னுடன் தீயணைப்புத் துறை ஊழியர்களும் இருக்கிறார்கள். கவலைப்படாதே” என்று  மனைவியிடம் போனில் சொன்னவர், இடிபாடுகளை மேலும் நெருக்கமாகப் படமெடுக்க கட்டிடத்தின் அருகில் சென்றார். அந்தச் சமயத்தில், முதல் விமானம் மோதி சரியாக 18 நிமிடங்கள் கழித்துமற்றொரு போயிங் 767 விமானம் உலக வர்த்தக மையத்தின் தென்பகுதி கோபுரத்தில் உள்ள 60-வது தளத்தைக் குறிவைத்து தாக்கியது. அடுத்தடுத்து நடந்த 2 விமானங்களின் தாக்குதலால் உலக வர்த்தக மையம் அமைந்திருந்த இரட்டை கோபுரம் சுக்கல் சுக்கலாகிப் போனது. இடிபாடுகளைப் படமெடுக்கச் சென்ற பிக்கார்டுக்கு என்ன நேர்ந்தது என்று உடனடியாக யாருக்கும் தெரியவில்லை.

மீட்புப் பணிகளின் முடிவில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியானது தெரியவந்தது. தொடர்ந்து பல நாட்கள் நடந்த மீட்புப் பணிகளுக்கு பிறகு, பிக்கார்டின் அடையாள அட்டையும், அவரது கேமராவும் மீட்கப்பட்டது. அதிலிருந்த நெகட்டிவ்கள் பிரின்ட் எடுக்கப்பட்டு 2001-ம் ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி வெளியான நியூஸ்வீக் இதழில் வெளியிடப்பட்டன.

வில்லியம் ஜி பிக்கார்ட்

ஜெர்மனியின் பெர்லின் நகரில்1947-ம் ஆண்டு பிறந்த பிக்கார்ட், அவரது பெற்றோரின் 12 குழந்தைகளில் ஒருவராவார். இவரது பெற்
றோர்கள் இருவரும் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்பதால் 1970-ம் ஆண்டு நியூயார்க் நகரில் பிக்கார்ட் குடியேறினார். 

பிக்கார்டுக்கு இரண்டு மனைவிகள்; மூன்று குழந்தைகள். 1985-ம் ஆண்டு முதல் புகைப்படத்துறையில் தீவிர கவனம் செலுத்திய இவரது புகைப்படங்கள் பல்வேறு பத்திரிகைகளிலும் வெளியாகியுள்ளன. வளைகுடா போர், இஸ்ரேல் மேற்குக் கரை பிரச்சினை, வடக்கு அயர்லாந்து பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் சார்ந்த படங்களை இவர் எடுத்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in