நிழற்சாலை

நிழற்சாலை

துயில்

ஒரு முதியவர் வலை வீசுகிறார்
பதின்மவயது இளைஞன் தூண்டிலிடுகிறான்
பள்ளிச் சிறுவர்கள் சிலர்
கல்லைக் கொண்டு எறிகிறார்கள்
போதாத குறைக்கு
கரையோரத்து மரங்கள்
தங்கள் இலைகளை உதிர்க்கின்றன
பாவம் உறக்கம் கலைந்து
தவிக்கிறது குளம்.

-வெ.தமிழ்க்கனல்

***

அவரவர் பாடு

பாலில் வேகவைத்த
கேரட்டுகளை
ஊறவைத்த பாதாம் பருப்புகளோடு
தேன் கலந்து
சேர்த்தரைத்து
அழகிய பீங்கான் கிண்ணத்திலிட்டு
பன்னீர் சிறிதூற்றிக்
கலந்து எஜமானியின்
ஃபேஸ் பேக்குக்காகக்
கொடுத்துவிட்டு
கொண்டுவந்த பழைய சோற்றை
உண்ணத் தொடங்குகிறாள்
பணிப் பெண்

- கி.சரஸ்வதி

***

சுயவிசாரணை

எதிர்வரும் காலம் கணித்து
ஒவ்வொரு முறையும்
நல்லதொரு
பக்கத்தைக்
கிழித்தெறிகிறீர்கள்
பிறகு
ஒவ்வொரு கிழிந்த தாளையும்
சிற்சில பிசின் சேர்த்து
ஒட்டவைக்க முயல்கிறீர்கள்
எத்தனை வண்ணங்கள்
எத்தனை சத்தங்கள்
கிழிந்து கலந்திருக்கக்கூடும்
அக்கணம்
இறந்தவை
அப்படியே சென்று தொலையட்டும்
கையில் மீண்டுமொரு
புத்தகம் இருக்கிறது
படிப்பதிலும் கிழிப்பதிலும் இருக்கிறது
உங்களின் சுயவிசாரணை.

- கருவை ந.ஸ்டாலின்

***

மீண்டெழுதல்

ட்ராவல்ஸ் தொழில்
முடங்கியதும்
கந்தசாமியை ரொம்ப நாளாக
பார்க்க முடியவில்லை கடைவீதியில்
இரண்டு நாட்களுக்கு
முன்னர்
அதே கட்டிடத்தில்
ஒரு மளிகைக் கடை
திறந்திருப்பதைப் பார்க்க முடிந்தது
மெலிதாகச் சிரித்தார்
என்னைப் பார்த்து

இழப்பின் வலியை சுமந்தபடியே
சில மாதங்களில்
சகஜ நிலைக்குத் திரும்பிவிட்டது
மரணம் நிகழ்ந்த அந்த வீடு

ஏமாற்றிய காதலன் புகைப்படத்தை
எரித்துவிட்டு
புது வாழ்க்கைக்குத் தயாராகிறாள்
மாடி வீட்டு மீனாக்கா

குடித்துச் செத்த கணவனை
நினைக்கவும் முடியாமல்
வெறுக்கவும் முடியாமல்
துவண்டிருந்த குலுமாயி
மீண்டும் புறப்பட்டுவிட்டாள் கூலிவேலைக்கு

வீழ்ந்த இடத்திலேயே
நிரந்தரமாகத்
தங்கிவிடுவதில்லை
மழைத்துளிகள்!

- ப்ரணா

***

ஈதல் தவறிய நாணயங்கள்!

தெரு இடும்
அவ்வளவு இரைச்சலிலும்
என் காதில் வந்து இழைகிறது
கையேந்தி வரும் பார்வையற்ற
வயோதிகத் தம்பதிகளின் பாடல்

எனக்கிருந்த அவசரத்தில்
தர்ம சிந்தனை அற்று  
விரைந்து கடந்துவந்து
எனக்கான வேலையில்
மூழ்குகிறேன்

ஈதல் தவறிய
சில்லறை நாணயங்கள்
அதன் ஒவ்வொரு குலுங்கல்களிலும்
அவர்கள் பாடிய பாடலை
இசைத்துக்கொண்டே இருக்கின்றன
என் பாக்கெட்டில்!

- கிணத்துக்கடவு ரவி

***

வரங்களின் பட்டியல்

அவ்வளவு மேகத்திலும்
என் மேல் விழும்
மழை துளி போல
அவ்வளவு கூட்டத்திலும்
என்னைப் பார்த்து
புன்னகைத்தது
ஒரு குழந்தை!

* * *
பொம்மைகள் கலங்கின
தங்களைக் கேட்டு அழும்
குழந்தையைப் பார்த்து...

* * *
குழந்தையின் கனவில்
மரங்கள் வளர்கின்றன
பென்சில்களாக!
- கி.ரவிக்குமார்
வீடுபேறு!
நடைபாதை ஓரத்தில்
கவசகுண்டலத்
துணிப் பையில்
தலை வைத்து
உடல் கிடத்தும்
வீடில்லா நாடோடி
மனிதருக்கு
முதுகில் வீட்டை
சுமந்துச் செல்லும்
நத்தையின் சாயல்!

-பா.சிவகுமார்

***

பழைய புத்தகங்கள்

குட்டிக் கதைகளும்
நீள் கதைகளும்
ஆலோசனைகளும்
அறிவுரைகளும்
நிறைந்த
பழைய புத்தகங்கள்
ஒன்றையொன்று
படித்துக்கொள்கின்றன
முதியோர் இல்லங்களில்!

- சசிந்திரன்

***

ஒரு மரியின் மாலை நேர வானம்

தீவனம் மேய்ந்துவிட்டு
அடைக்கப்பட்டிருந்த
பட்டியில்
இருந்தபடி
அண்ணாந்து பார்த்த
மரிக்கு
ஆகாயத்தில்
மிதந்த பிறை
அரிவாளாய்
தெரிந்திருக்கலாம்!

-வீ.விஷ்ணுகுமார்

***

நாட்குறிப்பு

ஏழாம் தேதி கட்ட வேண்டும்
வீட்டுக் கடன் ஈஎம்ஐ
பத்தாம் தேதி
எல்ஐசி பிரீமியம் காத்திருக்கிறது
பதினைந்தாம் தேதிக்குள்
கட்டாவிட்டால்
டெலிபோன்
கட் ஆகிவிடும்
பதினாறாம் தேதி
செலுத்த வேண்டும்
கார் கடன் வேறு இருக்கிறது
மாதம் முடிந்ததுமே
கொண்டுபோய்
விட்டுவிட வேண்டும்
தம்பி வீட்டில் அம்மாவை
சோற்றுக்கு.

- வல்லம் தாஜுபால்

***

உங்கள் கற்பனை வளத்துக்குக் களம் அமைக்கும் பகுதி இது. நீங்களும் இங்கே கவிபாட வேண்டுமா... உடனே, உங்கள் கவிதைகளை kavithai@kamadenu.in என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தட்டிவிடுங்கள். கூடவே, ‘எனது இந்தக் கவிதை இதுவரை வேறெங்கும் பிரசுரமாகவில்லை’ என்ற உறுதிமொழியையும் இணைத்து அனுப்ப வேண்டும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in