சட்டம் தன் கடமையை சரியாகச் செய்யட்டும்!

சட்டம் தன் கடமையை சரியாகச் செய்யட்டும்!

தமிழக அரசியலில் மீண்டும் ‘சோதனைக் காலம்’ தொடங்கியிருக்கிறது. அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடுகள், நிதிநிறுவனங்கள் எனப் பல்வேறு இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தியிருக்கின்றனர். அமைச்சராக இருந்தபோது போக்குவரத்துக் கழகங்களில் ஊழல் நடந்ததாக அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதன் அடிப்படையிலேயே இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டிருக்கின்றன.

தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளில் சிலர், அதிகாரத்தைப் பயன்படுத்தி தவறு செய்வது என்பது ஜனநாயகத்தில் ஓர் அவலம். அப்படிப்பட்டவர்கள் உரிய விசாரணையின் அடிப்படையில் தண்டிக்கப்பட வேண்டியது நியாயம்தான். ஆனால், அரசியலில் குறிப்பாக, தமிழக அரசியலில் இவ்விஷயத்தில் எல்லாமே முறைப்படி நடக்கிறதா என்பதுதான் முக்கியமான கேள்வி. கடந்த காலங்களில் இப்படி சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்களில் பலர், குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாமல் விடுதலையாகி இருக்கிறார்கள். அவர்களில் சிலர் கட்சி மாறி புதிய அரசில் அமைச்சர்களாகவும் பதவி வகித்திருக்கிறார்கள். தற்போதைய திமுக அரசிலும் அப்படியான உதாரணர்களைக் காட்ட முடியும்.

கடந்த அதிமுக ஆட்சியில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் வீடு வரை வருமான வரித் துறை சோதனைகள் நடந்திருக்கின்றன. ஏன், தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகன் ராவ் அலுவலகம் வரை வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினார்கள். ஆனால், இவ்விஷயத்தில் விசாரணை நடைமுறைகள் எந்த நிலையில் உள்ளன, எத்தனை பேர் சட்டப்படி தண்டிக்கப்பட்டிருக்கின்றனர் எனும் கேள்வி இன்றுவரை தொடர்கிறது.

இந்நிலையில், அரசியல் காரணங்களுக்காக மட்டும் வழக்குகளைப் பயன்படுத்தாமல் தவறு செய்தவர்களைச் சட்டப்படி தண்டிக்கத் தேவையான அழுத்தமான நடவடிக்கைகளைத் திமுக அரசு எடுக்க வேண்டும். அதேநேரம், அரசியலுக்காக வழக்குத் தொடுக்கும் முந்தைய போக்குகளையும் கைவிட வேண்டும். இல்லையெனில், வெறும் அரசியல் பழிவாங்கல் என்று கருதப்பட்டு மக்கள் மத்தியில் இத்தகைய நடவடிக்கைகள் மதிப்பிழந்துவிடும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in