எதிரியைத் தாக்கணும்னா எட்டடி எட்டி நின்னுக்கிடணும்!- போரடிக்காமல் இருக்க போர்த்தொழில் பழ(க்)கும் சீமான்

எதிரியைத் தாக்கணும்னா எட்டடி எட்டி நின்னுக்கிடணும்!- போரடிக்காமல் இருக்க போர்த்தொழில் பழ(க்)கும் சீமான்

சானா
readers@kamadenu.in

அன்றைக்குக் காலையில் பாச்சா பதற்றமாக இருந்தான் (‘வழக்கம்போல’ எனும் வார்த்தையை வாசகர்களே இட்டுநிரப்பிக்கொள்ளலாம்). என்ன ஒன்று... ஆள் கொஞ்சம் கூடுதலாகவே பதற்றத்தில் இருந்தான். எல்லாம் பெகாசஸ் பீதிதான். எங்கோ ஒரு மூலையில், யாரோ ஒரு முகம் தெரியாத ஆசாமி கண்ணை மட்டும் விட்டு கர்ச்சீப் கட்டிக்கொண்டு (அப்புறம் எப்படி முகம் தெரியுமாம்?) கம்ப்யூட்டர் முன் அமர்ந்து கண்காணித்துக்கொண்டே இருப்பதாக அவன் மனதில் பட்ட கணம் முதல் இப்படித்தான். “யோவ் உளவுத் துறை அளவுக்கே நீ வொர்த் இல்லை. இதுல பெகாசஸையெல்லாம் வச்சு உன்னை வேவு பார்க்கிறாங்கன்னு பீலா வுடுறியே, நியாயமா?” என்று பறக்கும் பைக் அவனைக் கலாய்த்தது (இதுவும் வழக்கமானதுதான் என்பதை வாசகர்களுக்குச் சுட்டிக்காட்ட வேண்டியதில்லை!).

இதனால் ரோசமான பாக்ஸர் போல் உக்கிரமான பாச்சா, உடனே பிரஷ்ஷை எடுத்து ஆவேசமாகப் பல்விளக்கியபடி ஆயில் பாத் எடுக்கச் சென்றான்.

அன்றைய பட்டியலில் முதலாமவர் சீமான்.

‘சாப்பிட்டார்’ பரம்பரையில் வந்த குத்துச்சண்டை வீரர் எனும் முறையில், தம்பி ஒருவருக்குத் தம்பிள்ஸ் முதல் தண்டால் வரையிலான பயிற்சிகளைச் சீமான் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருந்தார்.

“எதிரியைத் தாக்கணும்னா முதல்ல எட்டடி எட்டி நின்னுக்கிடணும். வாய்க்கு வந்தபடி வையணும். அவன் கேட்டுக் கேட்டு டயர்டாகும்போது கிட்டக்கப்போய் கிச்சுக்கிச்சு மூட்டணும். அவன் சிரிச்சிட்டு இருக்கும்போதே படீர்னு ஒரு பஞ்ச் குடுத்து பஞ்சராக்கிடணும். முக்கியமா சண்டை செய்யப்போகும்போது சந்தனக் கலர்ல சட்டை போடக்கூடாது” என்று சர்வதேச அளவில் தான் கற்றுக்கொண்ட போர்ப் பயிற்சிகளை ஒவ்வொன்றாகச் சொல்லிக்கொண்டே வந்தார் சீமான்.

அப்போது அங்கு ஆஜரான பாச்சா, “எதிரிகளை நீங்க டீல் பண்ற விதமே இனிமையானதுதானே? முதல்ல ஊருக்கு எதிரி மாதிரி காட்டி ஒரேதா ஒரண்டை இழுப்பீங்க. எதிராளி கொஞ்சம் இறங்கிவந்ததும் இளகிப்போய் இன்முகம் காட்டுவீங்க...” என்றான்.
‘இவெ(ன்) பாராட்டுறானா பகடி பண்றானான்னே தெரியலையே’ என்று சிடுசிடுவென சிந்தித்த சீமான், “ஆகட்டும்… நீ வந்த வேலையைக் கவனிப்பா!” என்றார்.

“ரைட்டு சார்! திமுக ஆட்சியை ஆறு மாசம் கழிச்சுதான் விமர்சிப்பேன்னு காமராஜர் பாணியில சொல்லியிருக்கீங்களே? அதுவரைக்கும் யாரையுமே திட்டாம இருந்தா போரடிக்காதா?” என்று கேட்டான் பாச்சா.

“போரடிக்கக்கூடாதுன்னுதான் போர்ப் பயிற்சிகளை நடத்திட்டு இருக்கேன். என்கிட்ட இருக்கிற போர்க்குணத்தைப் பொடியன்களுக்குக் கத்துத் தர்றதுதானே நியாயம்” என்று சிரித்த சீமான் திடீரென சீரியஸாகி, “ஆறு மாசம் போகட்டும். அதுக்கு மேல நேரத்தை எக்ஸ்டன்ட் பண்ண மாட்டேன். ரெம்ப(!) உக்கிரமா இருப்பேன்” என்றபடி சிவந்த கண்களை உருட்டினார்.
“ஒரு காலத்துல ரஜினியையும் அவர் ரசிகர்களையும் ரவுண்டு கட்டி ராக்கிங் பண்ணுவீங்க. இப்ப ‘வாங்க பழகலாம்’ங்கிற ரேஞ்சுக்கு வாஞ்சையா அவர் ரசிகர்களுக்கு அழைப்பு விடுறீங்களே ஏன்?” என்று கேட்ட பாச்சாவை ஏறிட்டுப் பார்த்த சீமான், “மூணாவது பெரிய கட்சின்னு பேர் வாங்கிட்டாலும் வெளிநடப்பு பண்றதுக்காச்சும் என் தம்பிங்க யாராச்சும் ஜெயிச்சிருக்கணும். மிஸ்ஸாகிடுச்சு. எங்களுக்கு வாக்கு வங்கி கொஞ்சம் இருக்குன்னா, ரஜினிக்கு வாக்கு ரிசர்வ் வங்கியே இருக்கு. அதையெல்லாம் அப்படியே நம்ம பக்கம் ஈர்த்துட்டா இனி அடுத்த முதல்வர் நான்தான்! அதுக்காண்டிதான் அப்படி ஒரு ப்ளான்... ஐ மீன் திட்டம்” என்றார்.

“சரி, பாஜகவைப் பல விதங்கள்ல பயங்கரமா திட்டுன ஒரே தலைவர் நீங்க மட்டும்தான்ங்கிற ரேஞ்சுக்குப் அள்ளி விடுறீங்களே? இதையெல்லாம் அமித் ஷா ‘கண்காணிப்பார்’ங்கிற கவலையே இல்லையா?” என்றதும், கண்களைச் சுருக்கி கடுகடுவான சீமான், “பேட்டி முடிஞ்சுச்சு. இனி போட்டிதான். தம்பி, அந்த பாக்ஸிங் க்ளவுஸை எடு” என்று அருகில் இருந்த தம்பிக்கு ஆணையிட, பாச்சா, “ஆளை விடுங்க!” என்று அங்கிருந்து அப்ஸ்காண்ட் ஆனான்.

அடுத்து சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

மருத்துவமனைகளைச் சோதனை செய்ய, மாரத்தான் பயிற்சி வீரர் போல மாறுவேடமிட்டு ரகசியமாகச் சென்றுகொண்டிருந்தார் மா.சு. மாஸ்க்கும் ஷார்ட்ஸுமாக அவர் வருவதைப் பார்த்ததும், “மினிஸ்டர் வர்றார் மினிஸ்டர் வர்றார்” என அங்கிருந்த பலரும் பரபரப்பானார்கள். அதைக் கண்டு ஆச்சரியமடைந்த அமைச்சர், “எப்படித்தான் கண்டுபிடிக்கிறாங்கன்னே தெரியலையே?” என்று எண்ணிக்கொண்டிருந்தபோது பாச்சா அவர் முன்னே சென்றான்.

“இப்பதான் சார். முதல் முறையா உங்களை இன்டர்வியூ பண்றேன்” என்றதும், “நல்லது. நான் இப்ப என்ன செய்யணும்?” என்றார் அமைச்சர்.

“பதில் சொல்லுங்க சார்… மக்கள் சார்பா கேள்வி கேட்கிற எனக்குப் பதில் சொல்லுங்க…” என்ற பாச்சா, “அதெப்படி சார், ஆக்சிஜன் பற்றாக்குறையால தமிழ்நாட்டுல யாருமே சாகலைன்னு அடிச்சு வுடுறீங்க? அப்ப செங்கல்பட்டுல செத்தவங்கள்லாம் உங்க கண்ணுக்குத் தெரியலையா?” என்று ஆவேசமானான்.

ஆத்திரம் கொள்ளாமல் அமைதி காத்த அமைச்சர், “ஆட்சிக்கு வந்த ஒரு வாரத்துக்கு அப்புறம் யாரும் சாகலைல்ல? அதிமுக ஆட்சியில...” என்று அடுத்துப் பேச வாயெடுத்ததும் அவசர அவசரமாகக் குறுக்கிட்ட பாச்சா, “அதையே எத்தனைக் காலத்துக்கு சார் சொல்வீங்க? நீட் விஷயத்தையே நீக்குப்போக்கா பேசி நீட்டா காலம் தள்ளுறவங்கதானே நீங்கள்லாம்? அப்புறம் சி.எம்மா எம்கேஎஸ் இருந்தா என்ன, எடப்பாடி இருந்தா என்ன?” என்றான்.

“இது இந்த வருசம். நாங்க சொன்னது அடுத்த வருசம்” என்று வருத்தப்படாமல் அமைச்சர் பேசியதும் அதற்கு மேல் எதுவும் கேட்காமல் அங்கிருந்து அகன்றான் பாச்சா.

அடுத்து அதிமுகவின் இரட்டைக்குழல் துப்பாக்கியான (சிங்குலர்தான்!) ஈபிஎஸ்ஸும் ஓபிஎஸ்ஸும்!

‘முகாந்திரம்’ உள்ள முன்னாள் அமைச்சர்களின் பட்டியலை எடுத்து, அவர்களைக் காபந்து பண்ணுவதற்கான கடமைகளைச் செய்ய ஏற்பாடு செய்துகொண்டிருந்தார்கள் இருவரும்.

“என்ன சார், சசிகலா தர்ற சவாலைச் சமாளிக்கிறதா சட்ட நடவடிக்கைகளைச் சமாளிக்கிறதான்னு ஒரே சவாலா இருக்கா?” என்று கேள்வியை இருவருக்கும் பொதுவில் வைத்தான் பாச்சா.

“தவறாகத் திட்டமிட்டுத் தவறான கருத்துகளைப் பரப்பிவருகிறார் சசிகலா அம்மையார். முதல்வராக மாட்டார் என்று நாங்கள் மலைபோல் நம்பிய மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் என்றும் பாராமல் நேர்மைச் சிகரமான எங்கள் சகோதரர்கள் மீது சட்ட நடவடிக்கைகளை எடுக்கிறார். இரு தரப்பில் இருந்தும் ஆயிரம் சவால்கள் வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது” என்று கோரஸாகக் கொந்தளித்தார்கள் இருவரும்.

“ரொம்ப சரியாச் சொன்னீங்க! பக்கத்துலேயே பாஜக இருக்கும்போது இன்னொருத்தரால அதிமுகவை அழிக்க முடியுமா?” என்று பேசி ரத்தத்தின் ரத்தங்களுக்கு ரத்தக் கொதிப்பேற்றிவிட்டு எஸ்கேப்பானான் பாச்சா!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in