‘சார்பட்டா பரம்பரை’யில் நடிக்க சான்ஸ் கேட்டேன்!- ஆனந்தம் பகிரும் ஆர்யா

‘சார்பட்டா பரம்பரை’யில் நடிக்க சான்ஸ் கேட்டேன்!- ஆனந்தம் பகிரும் ஆர்யா

விக்கி
readers@kamadenu.in

‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் பாக்ஸர் கதாபாத்திரத்தில் கலக்கியிருக்கும் ஆர்யா, ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனைந்துகொண்டிருக்கிறார். ‘அமேசான் ப்ரைம் வீடியோ’ ஓடிடி தளத்தில் படம் வெளியான சில மணி நேரத்திலேயே, அதில் உள்ள அரசியல் குறியீடுகளை வைத்து சமூக வலைதளத்தில் விவாதங்களும் தொடங்கிவிட்டன. மகிழ்ச்சியான அந்தத் தருணத்தில் பேட்டி என்றதும் உடனே சம்மதித்த ஆர்யா, பாக்ஸிங் ரிங்கில் உறுமும் அதே உற்சாகத்துடன் பதிலளிக்க ஆரம்பித்தார்.

பொதுவாக ஆர்யா என்றாலே ஜாலியான கதாபாத்திரங்களில் நடிப்பவர்னு ஒரு பிம்பம் இருக்கு. ஒரு சில படங்களில்தான் சீரியஸான கதாபாத்திரங்களில் நடிக்கிறீங்க. சீரியஸ் கதைகளைத் தேர்ந்தெடுக்கும்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?

பொதுவாக என்னைத் தேடி வந்து கதை சொல்லும் இயக்குநர்களின் கதைகளில் எனக்குள்ளே ‘ஸ்பார்க்’ ஆகும் படங்களைத்தான் நான் தேர்ந்தெடுப்பேன். ஆனா, ‘சார்பட்டா பரம்பரை’ படம் என்னைத் தேடி வரலை. நானா தேடிப் போனேன். நான் ‘சென்னை மிக்ஸ்டு மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி’யின் சந்தோஷ் மாஸ்டரிடம் நாலு வருஷம் பாக்ஸிங் பழகிட்டு இருந்தேன். டைரக்டர் ரஞ்சித் சார் கிட்ட ஒரு பாக்ஸிங் கதை இருக்குன்னு கேள்விப்பட்டதும் உடனே உற்சாகமாகிட்டேன். நடிகர் கலையரசன் மூலமா ரஞ்சித்கிட்ட பேசி,  “எனக்கு பாக்ஸிங் நல்லா தெரியும். இந்தப் படத்தில் நான் நடிக்கிறேன்”னு வாய்ப்பு கேட்டேன். அவரும் கதையை முழுசா ரெடி பண்ணிட்டு என்னைக் கூப்பிட்டார். இடைப்பட்ட ஆறு மாசத்துல அவரும் பாக்ஸிங் கிளாஸ் போய் பாக்ஸிங் பழகிட்டுதான் வந்தார். இப்படி இயக்குநரும் நடிகர்களும் பாக்ஸிங் பற்றிப் படிச்சுட்டு வந்ததால்தான் படத்தில் பாக்ஸிங் காட்சிகள் அவ்வளோ தத்ரூபமா வந்திருக்கு.

தொடர்ந்து சைக்கிளிங் பயிற்சியில் ஈடுபடுவீங்க. ‘சார்பட்டா பரம்பரை’ படத்துக்குத் தயாராக அது உதவியா இருந்துச்சா?

தொடர்ந்து ஃபிட்னஸில் கவனமா இருக்கிறது, உடலை நாம் நினைச்ச மாதிரி மாற்றி அமைக்க உதவியா இருந்தது. ‘சார்பட்டா பரம்பரை’ படத்துக்குத் தயாராகும்போது நான் சைக்கிளிங் போகலை. பாக்ஸிங் பயிற்சிகளே ரொம்ப தீவிரமான கார்டியோ வகை பயிற்சியா இருக்கிறதால சைக்கிளிங்கும் போனா, உடம்பின் எடையைக் கூட்ட முடியாது. என் கேரக்டருக்கு உடம்பு எடையையும் கூட்டி கட்டுமஸ்தாகணும். அதே நேரத்தில் வேகமா பாக்ஸிங்கும் பண்ணணும். அதுக்காக என்னோட உணவுப் பழக்கம், உடற்பயிற்சினு எல்லாத்தையும் மாற்றி அமைச்சேன். என்னைப் பொறுத்தவரைக்கும், ஹீரோக்கள் மட்டுமில்ல... சினிமாவில் இருக்கிற எல்லாரும் தங்கள் ஃபிட்னஸைக் கவனிக்கிறது நல்லது. ஏன்னா இந்த வேலையில் பல மணி நேரம் தொடர்ந்து நிற்க வேண்டி இருக்கும். வேலைப் பளு, அது கொடுக்கும் மன அழுத்தம் இப்படி எல்லாத்தையும் எதிர்கொள்ள ஃபிட்னஸ் உங்களுக்குப் பெரிய உதவியா இருக்கும்!

வடசென்னை களம், 70-களில் நடக்கும் கதை. இது மாதிரி ஒரு பீரியட் படத்துக்குத் தயாராக, ஒரு நடிகரா என்ன தயாரிப்புகள் தேவையா இருந்துச்சு?

இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி, நடிகர்கள் எல்லாருக்கும் நாற்பத்தைந்து நாள் ஒரு வொர்க் ஷாப் நடத்தினார் ரஞ்சித். கதை நடக்கும் காலகட்டத்தில் இருந்தவங்க எப்படிப் பேசினாங்கன்னு அந்த வட்டார வழக்கைப் பேசிப் பழகினோம். பல காட்சிகளை நடித்து ஒத்திகை பார்த்தோம். என்னுடைய பாக்ஸிங் ஸ்டைல் முகமது அலி போலவும், வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கோக்கேனின் பாக்ஸிங் ஸ்டைல் மைக் டைசன் போலவும் இருக்கணும்ங்கிறது வரை ரஞ்சித் நுணுக்கமா கவனம் செலுத்தினார்.

படத்துல சினிமா சண்டை போல் இல்லாமல் நிஜ பாக்ஸிங் போல் இருக்கணும்னு பிடிவாதமா இருந்தார். அவருக்கும் பாக்ஸிங் தெரியும்ங்கிறதால, தன்னோட எதிர்பார்ப்புக்கு ஏற்றமாதிரி நாங்கள் நடிப்பை வெளிப்படுத்தும் வரைக்கும் டேக் போய்க்கிட்டே இருந்தார். படத்தில் நீங்கள் பார்க்கும் அடி எல்லாம் உண்மையில் விழுந்த அடிகள்தான்!

இந்தப் படத்தில் பல அரசியல் குறியீடுகள் இருக்கே?

ஒரு காலத்தில் இந்த ஊரில் வாழ்ந்த மக்களோட வாழ்க்கையைப் பற்றிய படம் இது. அந்தக் காலத்தில் அவங்க வாழ்க்கையோட அரசியல் எப்படி கலந்து இருந்ததுன்னு சொன்னாதான் பார்க்க உண்மையா இருக்கும். மத்தபடி எந்தக் காரணமும் இருக்கிறதா எனக்குத் தெரியலை. படத்தில் அரசியலைவிட மனித உணர்வுகள்தான் அதிகமாக விவாதிக்கப்படுது!

உங்கள் நண்பர் இயக்குநர் விஷ்ணுவர்தன் தமிழிலிருந்து பாலிவுட்டுக்குப் போயிருக்கார். அவரோட முதல் படமும் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் வெளியாகவுள்ளது. அவரது வளர்ச்சியை எப்படிப் பார்க்கிறீங்க?

விஷ்ணுவர்தனின் இந்த வெற்றிக்குப் பின்னாடி இருக்கும் அசுர உழைப்பு எனக்குத் தெரியும். ஒரு பெரிய பட்ஜெட் படம் பண்ணணும்னு ரொம்ப நாள் ஆசை. ரெண்டு பேரும் ஒன்றாகத்தான் சினிமா பயணத்தை ஆரம்பிச்சோம். அவனுடைய இயக்கம் ரொம்ப ஸ்டைலா இருக்கும். விஷ்ணுவுக்கு பாலிவுட் கண்டிப்பா சரியான இடமா இருக்கும். இன்னும் நிறைய படங்கள் பண்ணுவான் பாருங்க!

மல்ட்டி ஹீரோ சப்ஜெக்ட், கெஸ்ட் ரோல், வில்லன்னு விதவிதமான கதாபாத்திரங்களில் நடிக்கிறீங்க... உங்கள் எதிர்கால திரைப் பயணம் எப்படி இருக்கணும்னு நினைக்கிறீங்க?

கதாநாயகன், காமெடியன், வில்லன் இது எல்லாம் என்னைப் பொறுத்தவரைக்கும் கதாபாத்திரங்கள் மட்டுமே. என் நடிப்பு மூலமா இந்தக் கதாபாத்திரத்தில் நான் என்ன பண்ண முடியும்னு யோசிப்பேன். இந்தப் படத்துக்கு நாம பண்ணா நல்லா இருக்குமான்னு என்னை நானே கேட்டுப்பேன். நல்லா இருக்கும்னு தோணுச்சுனா படத்தில் சில காட்சிகள் வரும் கதாபாத்திரமா இருந்தாலும் நடிப்பேன். ஸ்டாரா இருக்க வேண்டாம் ஆர்டிஸ்ட்டா இருந்தா போதும்னு சொல்லுற மாதிரி இல்லை இது. எல்லா ஆர்டிஸ்ட்டும் ஸ்டார்தான். நாமதான் தேவையில்லாம போட்டுக் குழப்பிட்டு இருக்கோம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in