இழிவைச் சந்திக்காமல் யாரும் உயர முடியாது!  - கைதாவதற்கு முன் தேஜஸ் சுவாமிகள் அளித்த பேட்டி

இழிவைச் சந்திக்காமல் யாரும் உயர முடியாது!  - கைதாவதற்கு முன் தேஜஸ் சுவாமிகள் அளித்த பேட்டி

கரு.முத்து
muthu.k@kamadenu.in

சாமியார்கள் பலர் வீடியோவால் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்கள். ஆனால், திருச்சியில் சாமியார் ஒருவர் ஆடியோ சர்ச்சையில் சிக்கி கைது செய்யப்பட்டிருக்கிறார்.

கேரளத்தைப் பூர்விகமாகக் கொண்ட பாலசுப்பிரமணியன் நம்பூதிரி என்ற அந்த 31 வயது இளைஞர், திருச்சி அல்லித்துறையில் சாமியாராக அவதாரமெடுத்து கால ஓட்டத்தில் தேஜஸ் சுவாமிகளாகப் பரிணாம வளர்ச்சி பெற்றவர். அரசியல்வாதிகள், காவல் அதிகாரிகளின் தொடர்பும் இருப்பதால் திருச்சி வட்டாரத்தில் ஆள் ரொம்பவே பிரபலம்.

அண்மையில் தேஜஸ் சாமியார் பேசியதாகச் சொல்லப்படும் ஆடியோ ஒன்று வைரலானது. தமிழக முதல்வர் குடும்பம் வரைக்கும் தனக்குச் செல்வாக்கு இருப்பதாகவும், அமைச்சர் நேருவை வெற்றிபெற வைத்ததே தான்தான் என்றும் அவர் சொன்னதாக அந்த ஆடியோவில் பதிவாகியிருக்கிறது. கூடவே, தமிழ்நாட்டில் என்கவுன்டர் செய்யப்பட வேண்டிய 42 ரவுடிகள் பட்டியல் தனக்குக் கிடைத்திருப்பதாகவும், அதில் சிலரின் பெயர்களைத் தானே நீக்கிவிட்டதாகவும் சுவாமிகள் அடித்துவிட்டிருக்கிறார். இதையடுத்து திருச்சி போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில், “அப்படிப் பேசியது நான் அல்ல” என்று ஜகா வாங்கியவர், கண்ணுக்குத் தெரியாத எதிரிகள் செய்த வேலை அது என்று ஒரு புகாரும் கொடுத்தார். ஆனால், பேசியது தேஜஸ் சுவாமிகள்தான் என உறுதியாக இருந்த போலீஸார் ஜூலை 21-ல் அவரையும், வழக்கறிஞர் கார்த்தி, ரவுடி கொட்டப்பட்டு ஜெய் ஆகியோரையும் கைது செய்தனர். கைதுக்கு சில மணி நேரங்கள் முன்பாக தேஜஸ் சுவாமிகளிடம் பேசினோம்.

முதலில், உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்...

கேரள மாநிலம், பாலக்காடு அருகே ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தேன். நான் வளர்ந்தது, படித்தது எல்லாம் திருச்சியில்தான். ஆன்மிகம், ஜோதிடம் உள்ளிட்டவற்றை குருமார்களிடம் கற்றுத் தேறினேன். ஜாதகம், பரிகாரம், இறை வழிகாட்டல் இதெல்லாவற்றையும் வசதி உள்ளவர்கள் மட்டுமே பயன்படுத்திக்கொள்கிறார்கள். ஏழைகள் புலம்பிக்கொண்டு சும்மா இருந்துவிடுகிறார்கள். அவர்களுக்கும் இந்தக் கலை பயன்பட வேண்டும். அவர்களுக்கும் பரிகாரங்கள் இருக்கிறது. அவர்களுக்காகவும் கடவுள் இருக்கிறார். ஏழைகளின் துயர்களையும் இறைவன் தீர்ப்பார் என்பதை மக்களுக்கு உணர்த்திக்கொண்டிருக்கிறேன்.

ஆன்மிகத்தில் நாட்டம் எப்படி வந்தது?

சிறுவயதில் என் தந்தை என்னைக் காஞ்சிபுரத்துக்கு அழைத்துச்சென்றார். மகாபெரியவா என்னை அருகில் அழைத்து காமாட்சியம்மன் டாலர் கொடுத்து ஆசீர்வதித்தார். அப்போதிருந்தே எனக்கு ஆன்மிக நாட்டம் வந்துவிட்டது.

உங்களுக்கு எதிராகக் கிளம்பி இருக்கும் ஆடியோ விவகாரத்தின் பின்னணி என்ன?

அது நான் பேசியது இல்லை என்பதைப் போலீஸாரிடம் உறுதியாகச் சொல்லியிருக்கிறேன். ஒருவன் வளரும்போது
இதுமாதிரியான விஷயங்களும் கூடவே சேர்ந்து வளர்ந்துவிடும். ரத்தம் சிந்தாத போர்க்களம் ஒரு முடிவுக்கு வராது. இழிவைச் சந்திக்காமல் யாரும் உயர முடியாது. ராமர், கிருஷ்ணர் போன்றவர்களே இழிவுக்கு ஆளாகியிருக்கிறார்கள். இயேசு நாதரும் இழிவுபடுத்தப்பட்டிருக்கிறார். அதனால் இது என்னை உணர்ந்துகொள்ளவும், மனிதர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளவும் இறைவன் எனக்கு உணர்த்திய பாடம் என்றே கருதுகிறேன்.

20 ஆண்டு காலத்துக்கும் மேலாக ஆன்மிகப் பணி செய்துவரும் நீங்கள், இதுவரையிலும் மனிதர்களை உணர்ந்துகொள்ளாமல்தான் இருந்தீர்களா?

தாய் தன் பிள்ளைகள் அனைவரையும் சமமாகப் பாவிப்பது போல ஏழை, பணக்காரன், நல்லவன் கெட்டவன் என்றில்லாமல் அனைவரையும் சமமாகப் பாவித்தேன். அவர்களில் சில வஞ்சகர்கள் இப்படி செய்திருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது என்றால், அது எனக்கும் மகிழ்ச்சிதான்.

இறைவன் உங்களுக்குப் பாடம் கொடுத்தார் என்றீர்களே... பாடம் கொடுக்கும் அளவுக்கு அப்படியென்ன தவறு செய்தீர்கள்?

இறைவன் எனக்குக் கட்டளையிட்டதை நிறைவேற்றாததுதான் நான் செய்த தவறு. கடந்த ஓராண்டு காலமாகவே, ‘ஜாதகம் உள்ளிட்ட சேவைகள் செய்தது போதும். இனி மவுனமாகவே இருந்து தவம் செய்’ என்று எனக்கு உத்தரவு கிடைத்தது. ஆனால், அதையும் மீறிநான் அவற்றையெல்லாம் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறேன். அதற்கான பாடம் இது என்று கருதுகிறேன்.

இறைவனின் உத்தரவை மீறி நடக்கலாமா?

துன்பப்படுகிறவர்கள், துயரப்படுகிறவர்கள் என்னிடம் வந்து தங்கள் துயரத்தைச் சொல்லி அழும்போது அதைப் பார்த்துக்கொண்டு நான் எப்படி மவுனமாக இருக்க முடியும்? அவர்களுக்கான தீர்வையும், பரிகாரத்தையும் சொல்லித்தானே ஆக வேண்டும். அதை என்னுடைய கடமையாகவும் கருதுகிறேன். இனி அதை மெல்ல மெல்ல குறைத்துக்கொண்டு மவுனத்தில் ஈடுபடப் போகிறேன். தேவையான விஷயங்களுக்கு மட்டும் வாய் திறக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.

உங்களைத் தேடி பல முக்கிய அரசியல்வாதிகள் எல்லாம் வருகிறார்களாமே?

ஆமாம், அனைத்துக் கட்சிகளின் பிரபலங்களும் வந்துசெல்கிறார்கள். அவர்களுக்கும் கஷ்டநஷ்டம், பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன! அதற்கான தீர்வுகளை தேடி என்னிடம் வருகிறார்கள்.

அந்த அரசியல் தொடர்புகளை நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்களா?

அரசியல் தொடர்புகளை எந்த வகையிலும் நான் பயன்படுத்திக்கொள்வதில்லை. நான் வசிக்கும் வீடு,எனது கார், மொபைல் போன் அனைத்துமே கடனில் வாங்கியதுதான். எல்லாவற்றுக்கும் இஎம்ஐ கட்டிக் கொண்டிருக்கிறேன். முக்கிய அரசியல் பிரமுகர்களைத் தெரியும் என்றாலும், அவர்களிடம் எந்த விதமான சிபாரிசுகளையும் நான் செய்ததில்லை. எனக்காகவும் எதையும் கேட்டதில்லை.

அரசியலில் ஈடுபடும் யோசனை இருக்கிறதா?

அப்படி எந்தத் திட்டமும் இல்லை. ஆன்மிகமும் அரசியலும் ஒன்றுதான். இரண்டுமே மக்களுடைய துன்பத்தை, துயரத்தைத் தீர்க்கும் பணியைத்தான் செய்கின்றன. அவர்கள் கோட்டையில் இருந்து அதைச் செய்கிறார்கள். நான், என்னுடைய மண் குடிசையில் அமர்ந்துகொண்டு அதைச் செய்கிறேன்.

கரோனாவை ஒழிக்க உங்கள் வழியில் ஏதாவது செய்தீர்களா?

கரோனா ஒழிய வேண்டும் என்று ஒன்றரை மாதங்கள் உண்ணாமல் தவம் செய்தேன்.

என்னது, ஒன்றரை மாதங்கள் உண்ணாமல் இருந்தீர்களா?

உணவு உண்ணவில்லை. பழச்சாறுகள், தண்ணீர் மட்டும் அருந்தி கரோனாவிலிருந்து உலகம் மீண்டு வர வேண்டும் என்று வேண்டிக்கொண்டேன்.

எப்போதுதான் கரோனாவிலிருந்து இந்த உலகம் மீளும் என்று நினைக்கிறீர்கள்?

இந்த ஆகஸ்ட் மாதத்தில் முடிவுக்கு வரும். நவம்பரில் இயற்கைச் சீற்றங்கள், நோய்நொடிகள் இருக்கலாம்.  2022 மார்ச் மாதத்திலிருந்து எல்லா நிலைகளும் மாறி உலகம் பழைய நிலைக்குத் திரும்பும்.

மக்கள் சாமியார்களை நோக்கிச் செல்வது இப்போது அதிகமாகியிருக்கிறதே?

அதுகுறித்து நான் எதுவும் சொல்ல முடியாது. யாரும் கடவுள் இல்லை. கடவுளாகவும் ஆக முடியாது. மக்களின் துயரங்களைப் போக்குவதற்காக கடவுளால் அனுப்பப்பட்டவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பற்றற்ற நிலையில் இருப்பார்கள். புகழ், பொருள், ஆடை, ஆபரணம், மனை, சொத்து என்று எதற்கும் ஆசைப்படாதவர்களாக, எதன் மேலும் பற்றற்றவர்களாக இருப்பார்கள். மக்கள் அவர்களை உணர்ந்து ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படி இல்லாதவர்களைப் பற்றி தெரிந்துகொண்டு, அவர்களிடமிருந்து விலகியிருக்க வேண்டும். 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in