இந்தியன் நெ.1: தடுத்தாலும் ஜெயித்த கார்னீலா சொராப்ஜி!

இந்தியன் நெ.1: தடுத்தாலும் ஜெயித்த கார்னீலா சொராப்ஜி!

பாம்பே பல்கலைக்கழகத்தில் படித்த முதல் இந்தியப் பெண், பிரிட்டிஷ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண், இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர் என ஏராளமான விஷயங்களில் முதலாமவராக வந்து சரித்திரம் படைத்தவர் கார்னீலா சொராப்ஜி (Cornelia Sorabji). எளிதில் அல்ல... வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் கடுமையான போராட்டங்களைச் சந்தித்துதான் இந்தச் சாதனைகளைப் படைத்துள்ளார் கார்னீலா சொராப்ஜி.

1866-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி நாசிக் நகரில் கார்னீலா சொராப்ஜி பிறந்தார். 7 பெண் குழந்தைகளையும், ஒரு ஆண்
குழந்தையையும் கொண்ட மிகப்பெரிய குடும்பத்தின் 5-வது பிள்ளை கார்னீலா. இவரது தந்தை ரெவரெண்ட் சொராப்ஜி கார்செட்ஜி. பார்சி இனத்தில் பிறந்த இவர், பின்னர் கிறிஸ்தவராக மதம் மாறியவர்.

பெண் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும் வழக்கம் அக்காலகட்டத்தில் இல்லாததால், கார்னீலாவின் தந்தை அவருக்கு வீட்டிலேயே மெட்ரிக்குலேஷன் பாடத்தை போதித்து பத்தாம் வகுப்புவரை படிக்கவைத்தார். பின்னர் , பாம்பே பல்கலைக்கழகத்தில் மெட்ரிகுலேஷன் தேர்வு எழுத வைக்க அழைத்துச் சென்றார். ஆனால், ஒரு பெண் என்பதால் அவரை தேர்வு எழுதவைக்க பாம்பே பல்கலைக்கழகம் முதலில் மறுத்தது. பின்னர், பல்வேறு தரப்பினரும் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து அவர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார்.

அதன் பின், புணேயில் உள்ள டெக்கான் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்தார். அக்கல்லூரியில் படித்த 300 மாணவர்களுக்கு மத்தியில், கார்னீலா சொராப்ஜி ஒருவர்தான் மாணவியாக இருந்தார். இதனால் மாணவர்கள் அவருக்குப் பல்வேறு வழிகளில் தொல்லை கொடுத்தனர். ஆனால், கல்விக்காக எல்லாவற்றையும் சகித்துக்கொண்டார் கார்னீலா. இறுதியில் அந்தக் கல்லூரியிலேயே அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார். இதன்மூலம் புணே கல்லூரி இடம்பெற்றிருந்த பாம்பே பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்ற முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார்.

பல்கலைக்கழகத்தில் முதலிடத்தைப் பெறுபவர்களுக்கு அப்போதெல்லாம் அரசாங்கமே ஸ்காலர்ஷிப் வழங்கி வந்தது. ஆனால், பெண் என்ற காரணத்தால், அங்கும் கார்னீலா சொராப்ஜி புறக்கணிக்கப்பட்டார். ஆனால், அவர் தனது முயற்சிகளைக் கைவிடவில்லை. இங்கிலாந்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தனது நிலையைப் பற்றி கடிதம் எழுதினார். இதைத்தொடர்ந்து அவருக்கு ஆதரவாக இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் குரல் கொடுத்தனர். அதேநேரத்தில் பிரபல செவிலியரான ப்ளாரன்ஸ் நைட்டிங்கேல், அவருக்காக நிதி திரட்ட முன்வந்தார். அவரது உதவியால் 1889-ம் ஆண்டு செப்டம்பர் 19-ம் தேதி கார்னீலா சொராப்ஜி இங்கிலாந்துக்குப் புறப்பட்டார். அங்கும் அவருக்கு சவால்கள் காத்திருந்தன.

ஆக்ஸ்போர்டில் உள்ள சோமர்வில்லி கல்லூரியில் சட்டம் படிக்க கார்னீலா விரும்பினார். ஆனால், அது பெண்களுக்கான படிப்பல்ல என்று கூறி அவருக்கு சீட் மறுக்கப்பட்டது. மாறாக, ஆங்கில இலக்கியத்தை படிக்குமாறு அவர் கட்டாயப்படுத்தப்பட்டார். அதனால் வேறு வழியின்றி ஆங்கில இலக்கிய படிப்பில் கார்னீலா சேர்ந்தார். அங்கு படிக்கும் காலத்தில் அவரது புத்திசாலித்தனம் பலரையும் கவர்ந்தது. கார்னீலாவும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் பல்வேறு நிபுணர்களுடன் நல்லுறவை வளர்த்தார். அவர்கள் அனைவரும் சேர்ந்து கார்னீலாவுக்கு சட்டம் படிக்க வாய்ப்பு வழங்குமாறு ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சிபாரிசு செய்தனர்.

இதைத்தொடர்ந்து 1890-ல், கார்னீலாவுக்கு பொது சிவில் சட்டம் படிக்க அனுமதி வழங்கப்பட்டது. 1892-ல், படிப்பை முடித்த அவர், இந்தியா திரும்பினார். அதன் பிறகும் அன்றைய ஆணாதிக்க சமுதாயம் அவருக்கு தொடர்ந்து இன்னல்களைக் கொடுத்தது. பாம்பே நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதியான சர் சார்லஸ் சார்ஜெண்ட், ஒரு பெண்ணான கார்னீலா சொராப்ஜியை யாரும் வேலைக்கு வைத்துக்கொள்ளக் கூடாது என்று வழக்கறிஞர்களுக்கு ஒரு தனி உத்தரவையே வழங்கினார்.

இதனால் வழக்கறிஞர்கள் யாரும் அவரை ஜூனியராக சேர்த்துக்கொள்ளவில்லை. இதுபற்றி அவர் கேட்டதற்கு, “நீ ஒரு பெண். சட்டத்தில் தலையிட பெண்களை அனுமதிக்க முடியாது” என்று அவர்கள் கூசாமல் சொன்னார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தியாவின் அப்போதைய வைஸ்ராயான லார்ட் கர்சன், சட்டம் சார்ந்த பணிகளில் ஒரு பெண்ணான கார்னீலா சொராப்ஜி தலையிடுவதை வெறுத்தார். அதனால் கார்னீலாவுக்காக வந்த சிபாரிசுகளைப் புறம்தள்ளினார். இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத கார்னீலா, தன் படிப்பை மேலும் தொடர்ந்தார். 1895-ல், எல்எல்பி படிக்க அவர் திட்டமிட்டார். இதைப் படித்தால் யாரிடமும் ஜூனியராக சேராமல் நேரடியாக பார் கவுன்சிலில் நுழைந்துவிடலாம் என்பதே இதற்குக் காரணம். அதற்கும் பல்வேறு தடைகள் வந்தன.

சட்டத்தில் பட்டம் பெற்றிருந்தாலும் பெண் என்ற ஒரே காரணத்தால் பல இடங்களிலும் பந்தாடப்பட்டார் கார்னீலா. ஆனாலும் முயற்சிகளைக் கைவிடாமல் தனது உரிமைகளைப் பெறுவதற்காக கடுமையாகப் போராடினார் கார்னீலா. வெள்ளைய அரசாங்கம் தன்னை நிராகரித்த நிலையில் இந்திய மகாராஜாக்களின் வழக்கறிஞராக அவர் புதிய பரிமாணம் எடுத்தார். அவர்களுக்காக வழக்குகளில் வாதாடினார்.

கார்னீலாவின் விஷயத்தில் கடைசியில் கொஞ்சம் இறங்கிவந்த ஆங்கிலேய அரசாங்கம், 1904-ல், வங்கத்தில் உள்ள கோர்ட் ஆஃப் வார்ட்ஸில் (Court of Wards ) அவரைப் பெண்களுக்கான சட்ட ஆலோசகராக நியமித்தது. அதைத்தொடர்ந்து அடுத்த 20 ஆண்டுகளில் வங்கம், பிஹார், ஒடிசா, அஸ்ஸாம் ஆகிய பகுதிகளில் உள்ள பெண்களின் மேம்பாட்டுக்காக பல்வேறு வழிகளில் போராடினார் கார்னீலா. 1929-ல், ஓய்வுபெற்ற இவர், தனது கடைசிக் காலத்தை லண்டனில் கழித்தார். வாழ்க்கை முழுவதும் பல்வேறு போராட்டங்களைச் சந்தித்த கார்னீலா, 1954-ல் காலமானார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in